இலங்கைக்கு இரண்டு தீபாவளி

நடேசன்
விடுதலைப்புலிகளைப் பற்றி தொடர்ந்தும் விமர்சிக்க வேண்டுமா? என்பது பலர் என்னிடம் கேட்கும் கேள்வி. கடந்த முப்பது வருடத்தின் கசப்பையும் சமூகத்தின் அவலங்களையும் கடந்து போய்விட விரும்புபவர்களின் மனநிலை அதில் தெரிகிறது.
இதற்குப் பதில் நேரடியாக சொல்லி எனக்கு அலுத்துவிட்டது. இலங்கை அரசியல் இப்பொழுது எந்த முட்டாளும் பேசலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஏழாம் உலகத்து முத்தம்மையின் மகன் ரஜனிகாந்த் வளர்ந்து வந்தால் அவனும் தமிழ்நாட்டில் இருந்தபடி இலங்கை அரசியல் பேசுவான்
தனி மனிதராக கசப்புகளை மறக்கலாம். அது ஒரு விதத்தில் நல்லது கூட. ஆனால் சமூகம் மறக்கக் கூடாது. சமுகவியலாளர்களது முக்கிய கடமை இதை சமூகத்தின் நினைவில் வைத்திருக்கவேண்டும் என்பதே. இதனாலே சமூகம் தனது ஓட்டத்திற்கு புத்திஜீவிகள் கல்விமான்களில் நம்பி இருக்கிறது. எமது சமூகத்தில் பல புத்திஜீவிகள் வரலாற்றாசிரியர்கள் குறுகிய நோக்கங்களுடன், சின்னச் சின்ன ஆசைகளுக்கும் அடிமையாகி உண்மையை எடுத்துரைக்க கடந்த காலத்தில் மறுத்துவிட்டார்கள். .பத்திரிகைகள் வானொலிகள் இனவாத அரசியல் ஓட்டத்தில் யார் அதிகமாக இனவாதம் செய்யமுடியும் என பந்தயம் கட்டி ஒலிம்பிக்கில் ஈடுபட்டார்கள். ஆனால் இப்படி ஒரு விளையாட்டு ஒரு ஒலிம்பிக்கில் சேர்க்கவில்லை. இல்லாவிடில் தங்கப் பதக்கம் எம்மவர்களுக்கு நிச்சயம்.

இனி இதைப்பற்றி ஏன் பேசவேண்டும் என்பதற்கு பதில்?;

இலங்கையில் தொடர்ச்சியாக தமிழர் வாழப்போகிறார்கள். மலையகத்தமிழர் இஸ்லாமியர் என்போர் தொடர்ந்து சிறுபான்மை இனங்களாக வாழும்போது பெரும்பான்மை சிங்கள மக்களோடும் வாழவேண்டும். சிங்கள இனவாதத்திற்கு தமிழ் இனவாதமே மருந்தல்ல. வன்முறையை தூண்டும் பேச்சுக்கள் வன்முறையைத்தான் தூண்டும். இதைத்தான் நம் தலைமைகள் தொடர்ந்து செய்கிறார்கள். தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவர் கிளிநொச்சி பாடசாலை பரிசளிப்பு விழாவில் இதைத்தான் செய்தார்.
திருட்டு போன பின்பு திருட்டைப் பற்றி பேசுவது தேவையில்லைத்தான். ஆனால் நான் இனி வர விருக்கும் திருட்டுக்களுக்கு எதிராக – பாதிக்கப்படப் போகின்றவர்களுக்காக காப்புறுதி சம்பந்தமாக பேசவருகிறேன்.

கீழ் வரும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது?

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் ஐக்கிய நாடுகள் சபையில் வைக்கப்படும் காலத்தில் விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களை பேச வேண்டுமா?

அழிந்து மண்ணோடு மண்ணாகியவர்களைப் பற்றி ஏன் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறாய்?

இலங்கை அரசாங்கமே தற்கொலைப் போரளிகளை விடுவித்த பின்பு உங்களுக்கு என்ன?

இப்பொழுது அரசாங்கம் செய்யும் தமிழ் விரோத விடயங்களுக்கு நீங்கள் ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள்? இப்படி தொடரும் கேள்விகள்.

தொடர்ச்சியாக மணியம் அவர்கள் தேனி இணையத்தில் எழுதும் கட்டுரையை வாசித்து வருகிறேன் பலர் நினைக்கலாம் விடுதலைப்புலிகளும் போய் காந்தியும் போன பின்பு இது தேவைதானா? என்று சிலர் எண்ணலாம்.

மணியண்ணைக்கு எனது நன்றியுடன் மேலும் தொடர்கிறேன்

பலவாறான கேள்விகள் எழுகின்றன. இதை எப்படி எதிர் கொள்வது என்பதுதான் பல விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களுக்கு உள்ள பிரச்சினை. அதனால் பலர் அடுத்த பக்கம் போய் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கூச்சல் போடுகிறர்கள். தாங்கள் நேர்மையானவர்கள் என காட்டிக் கொள்ள முயல்கிறார்கள்.

தற்போது இலங்கை நாட்டில் ஜனநாயகமற்ற நிலையோ அல்லது ஜனநாயக பற்றாக்குறையோ நிலவுகிறது என்பது தெரிந்த விடயம். இதை சொல்ல மேற்கு நாட்டவர் நமக்கு தேவையில்லை

இதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?

போரை நடத்துவதற்கு அதிகாரங்களை ஒருமுகப்படுத்த வேண்டும். ஜனநாயக முறையில் போர் நடத்தமுடியாது. மக்களிடமும்,  மக்கள் பிரதிநிதிகளிடமும் இருந்த அதிகாரம் இராணுவத்திடமும் அதை நடத்துபவரிடமும் கொடுக்கப்படும். இந்த முறையில் எடுக்கப்பட்ட அதிகாரம் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படுவது போரின் பின் விளைவுகளையும் பொறுத்து இருக்கிறது.
பல நாடுகள் போரின் போது பாராளுமன்றத்தை கலைத்திருக்கிறர்கள். தேர்தல்களை நிறுத்தி இருக்கிறார்கள். இதற்கு பல நாடுகள் உதாரணம். அதில் ஒன்று தென் கொரியா. அந்த விதத்தில் இலங்கையராக நாம் பெருமை கொள்ளலாம்.

இனி நம்மை சுயவிசாரணை செய்வோம்.

தமிழர்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தது உண்மை. அதற்காக பிரிவினை வேண்டும். இலங்கையில் பிரிவினை பேசியவர்கள் தமிழர்கள். அதன் பின்பு தென்னாசியாவிலேயே மிகப் பெரிய யுத்தத்தை நடத்திய நாங்கள் வெற்றியடைந்திருந்தால் தமிழ் ஈழம் எப்படி இருக்கும் என நினைத்துப்பார்போம்.

நான் நினைக்கிறேன் மனைவியுடன் உடலுறவு வைப்பதென்றாலும் கூட புலிகளிடம் வரி செலுத்த நேர்ந்திருக்கும் தமிழ் ஈழ மக்களுக்கு. அதை ஆதரித்து வெளிநாட்டுத்தமிழர் மற்றும் தமிழ் ஒருங்கிணைப்பு குழுவினர்,  போராளிகள் அப்படி இருக்கும் போது நீங்களும் இருக்கலாம் என சொல்லி இருப்பார்கள். இதை சிரிப்புக்காக சொல்லவில்லை. விடுதலைப்புலிகளின் சேலம் பயிற்சி முகாமில் பத்தாவது அதாவது கடைசி அணியில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது. அதைப்பற்றி விளக்கமாக எதிர்காலத்தில் சொல்வேன்.
இப்படியான சர்வாதிகாரத் தன்மைகள் விடுதலைப்புலிகள் மட்டுமல்ல வேறு ஒரு இயக்கம் அந்த நிலைக்கு வந்திருந்தாலும்; செய்திருக்கும். காரணம் ஆயுதத்தால் அதிகாரத்தை வைத்திருக்கும் போது அவர்கள் சிந்தனை அப்படித்தான் இருக்கும். ஓரத்தநாட்டில் உமாமகேஸ்வரன் செய்த கொலைகள், ஏற்கனவே கொலைகாரனான பிரபாகரனுக்கு குளிர் விட்டுப் போக வைத்திருக்கும்

இதற்கு பல உதாரணங்கள் உண்டு. ஆயுதத்தால் பலநாடுகள் புரட்சி என்ற பெயரில் அரசு அமைத்த போதும் அந்த அதிகாரங்களை மக்களுக்கு கொடுக்காமல் தாங்கள் வைத்திருப்பது காலம்காலமாக நடந்தது. ஆபிரிக்காவில் பல நாடுகளில் இப்படித்தான் இன்னும் நடக்கின்றன.
70 ஆண்டுகளில் இலங்கையில் சிறிய இராணுவம் சுதந்திர தினத்திற்கு தன் அணிவகுப்பு நடத்தும். பிறகு தன்பாட்டை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்ப் பிரதேசங்களில் நாம் சிறுவயதில் இராணுவத்தை காணவே முடியாது. வல்வெட்டித்துறையில் நடந்த கள்ளக்கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும், இந்தியாலில் இருந்து சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்கவும் பலாலி ஆனையிறவு ஆகிய இடங்களுக்கு இராணுவம் வந்து சேர்ந்தது.
இதே போன்று தென் இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனையினர் தொடக்கி வைத்த கிளர்ச்சியின்போது அதை அடக்க இலங்கையால் முடியாமல் இந்தியாவில் இருந்தும் இராணுவம் வரவழைக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம், ஜனதாவிமுக்தி பெரமுனை தலைவர்களை கொல்லாமல் பாதுகாப்பாக வெளியே ஜனநாயகப்பாதையில் வருவதற்கு வசதி செய்தது.

ஆனால் நடந்தது என்ன?

87 இல் அதே தலைவர்கள் மீண்டும் கிளர்ச்;சி செய்து இலங்கையை ஸ்தம்பிக்க வைத்தார்கள். வன்முறையான கிளர்ச்சி மொத்த இலங்கையின் முன்னேற்றத்தை பலகாலம் பின்னோக்கித் தள்ளியது மட்டுமல்ல, இராணுவ பலத்தையும் அதிகரிக்க வைத்தது. அரசியல்வாதிகள் அதிகாரங்களை மீண்டும் மக்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளவும்; வழி வகுத்தது. அந்த அதிகாரத்தை தாங்கள் நாட்டை பாதுகாப்பதற்காக வைத்திருப்பதாக இராணுவம் சொல்கிறது. இதில் பொய் துளியும் இல்லை என்பது நமக்கு தெரிகிறது.

மகாத்மா நடத்தியது போன்று சத்தியாக்கிரகம் இலங்கையில் நடந்திருந்தால் இந்தளவு பெரிய இராணுவம் தேவையா என கேட்பதில் நியாயம் உண்டு. இதிலும் தமிழ்தரப்பில் போரிட்ட விடுதலைப்புலிகள் இருபத்தைந்தாயிரம் இராணுவத்தினரை கொன்றும் , அதற்கு மேற்பட்டவர்களை காயப்படுத்தியும்விட்டு, வடக்கில் இராணுவம் தேவையில்லை என வாய் கிழிய கத்தினால் யார் சட்டை செய்வார்கள். நாங்கள் கேட்கும் விடயத்தில குறைந்த பட்ச நேர்மை உண்மை இருக்கவேண்டும். இலங்கை இராணுவத்தில் 25 வீதம் தமிழ் பேசுபவர்கள் இருக்கவேண்டும் அவர்கள் வடக்கு கிழக்கில் நிலை கொள்ள வேண்டும் எனக் கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. சம்பந்தன் விஸ்கி குடித்தால் உண்மையை பேசுவார் என கேள்விபட்டிருக்கிறேன். முடிந்தால் அப்படி ஒரு கோரிக்கையை வைக்கட்டும் பார்ப்பம்.

அந்த கோரிக்கையை வைக்கமாட்டார். அதன்மூலம் இலங்கை ஒரு நாடு என்ற நிலைக்கு வந்தால் அவரது வியாபாரம் படுத்துவிடும்.

இதற்கு அப்பால் நடந்த ஒரு விடயத்தை பார்ப்போம்

இலங்கையில் நல்ல தலைவர்கள் சிங்களவர்கள் தமிழர்கள் மத்தியிலும் உருவாகுவதையும் தடுத்தது யார்? முக்கியமாக ஜெயமோகனின் ஏழாவது உலகத்தில் முத்தம்மையின் வாரிசுகள் போல் தழிழ் தலைமைகள் உருவாக யார் காரணம்?

அரசியல்வாதிகளும் சமூகத்தலைவர்களும் கொலை செய்யப்பட்டது.
பயங்கரவாதத்தின் மூலம் அரசியல்வாதிகளை கொன்றதனால் ரோகண விஜயவீரவும் பிரபாகரனும் என்ன செய்தியை இலங்கை மக்களுக்குத் தெரிவித்தார்கள்?

உங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என டாக்டர்களுக்கோ பொறியியலாளருக்கு தெரிவித்தால் யாராவது அந்த வேலைக்குப் போவார்களா? மிருக வைத்தியர்களை தீர்த்து கட்ட வேண்டும் என்றால் நிட்சயமாக நான் சினிமா ஒபரேட்டராகத்தான் வேலை பார்த்திருப்பேன். சிறுவயதில் இரண்டாவது விருப்பமான தொழிலாக நினைத்துக்கொண்டிருந்தேன்

71 ஆம் ஆண்டுக்கு பின்பு,  படித்த நேர்மையான சிங்களவர்கள் அரசியலில் இறங்குவதற்கு தயங்கியதற்குக் காரணம் விஜயவீராவும் பிரபாகரனும்தான். இவர்கள் கையால் இறந்த அரசியல்வாதிகளின் கணக்கு பல நூறுக்கு மேல் இருக்கும்.இப்பொழுது பலர், நல்ல அரசியல் வாதிகள் இல்லை என கவலைப்படுவார்கள். இதே இவர்கள்தான் அரசியல்வாதிகள் கொலையாகும் போது சந்தோசப்பட்டார்கள்.

எந்த இனத்து அரசியல்வாதியும் எந்த கருத்தியலை கொண்டு இயங்கும் அரசியல்வாதியாக இருந்தாலும் மக்களின் அபிலாசைகளையே பிரதிபலிக்கிறார்கள. அப்படியானவர்களை கொல்வது அத்தனை மக்களினதும் விருப்பத்தை கொல்லுவதற்கு சமனாகும். இந்தியத்தலைவர் ராஜீவ் காந்தி எத்தனை குடிமக்களின் அபிலாசையை பிரதிபலித்திருப்பார்?.

உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவு அரசியல்வாதிகளை இலங்கையில் இருதரப்பிலும் கொன்றார்கள். இது எதில் முடியும் என சிந்தித்தார்களா?

நல்லவர்கள் அரசியலில் இறங்கத் துணியாமல் வெளிநாட்டுக்குச் செல்ல அல்லது உள்நாட்டில் வேறுதுறைகளுக்கு செல்வார்கள். யார் நாட்டை ஆள வருவார்கள்?

பாராளுமன்றம் மாகாணசபை பிரதேசசபை முதலானவற்றில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு வேறு விதமாக தொழில் செய்ய தகுதியற்றவர்களும் சமூக விரோத தீய சக்திகளும்தான்; அரசியலில் ஈடுபட வருவார்கள்

குறைந்த பட்சம் சிங்கள மக்களில் சிறிய அளவிலாவது நல்ல அரசியல் வாதிகளை பார்க்க முடியும். காரணம் அவர்களின் ஜனத்தொகையுடன் இரண்டாயிரம் வருடங்கள் தேசபாலனம் செய்த வரலாறும் இருக்கிறது.
நம்மைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் வறுமை சூடான் பஞ்சத்தை விடக் கொடியது.

இப்பொழுது இலங்கைப் பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் பலர் தழிழ்ச்செல்வனால் நியமிக்கப்பட்டவர்கள். நீரளவே ஆகுமாம் நீராம்பல் என கூறிவிட்டு இவர்களைப் பற்றி நான் எழுதாமல் மீண்டும் எனது கேள்விக்கு வருகிறேன்.

இந்த நாட்டில் யுத்தத்தை விதைத்து பயிரிட்ட இருவரும் இலங்கையின் தற்போதைய நிலைக்கு காரணமானவர்கள்.இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் இலங்கையின் அரசியல் சமூக பொருளாதாரத்தை பின் தள்ளியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் முக்கியமாக தமிழர்களது மோசமான நிலைக்கு காரணமானவர்களை நாங்கள் நினைவு படுத்தாவிடில் மீண்டும் இதே போல் ஒரு நிலையை இன்னுமொரு பிரபாகரனும் பொட்டுவும் உருவாக்கிவிடுவார்கள்.

சிங்களமக்களும் விஜயவீரா போன்றவர்களின் அழிவை நினைவு கூர்வது அவசியமகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை இரண்டு நரகாசுரன்கள். இரண்டு தீபாவளி மூலம் இரு இனமும் நினைவு கொள்ளவேண்டும். ஒரு விதத்தில் நரகாசுரனை விட கேவலமானவர்கள். ஏனென்றால் நரகாசுரன் தான் வரமாக பெற்ற தனது பலத்தை மட்டும் கவசமாக்கி சண்டையிட்டான். ஆனால் இவர்கள் சாதாரணமக்களை தங்களது கவசமாக்கினார்கள்.

“இலங்கைக்கு இரண்டு தீபாவளி” அதற்கு 3 மறுமொழிகள்

 1. Dear Nadesan,
  Those who wish to forget the past is actually repeating their activities…then How can you justify the activities of transnational tamil eelam government.

  //நான் நினைக்கிறேன் மனைவியுடன் உடலுறவு வைப்பதென்றாலும் கூட புலிகளிடம் வரி; செலுத்த நேர்ந்திருக்கும் தமிழ் ஈழ மக்களுக்கு.//

  Absolutely ……….normally in tamil society they never rspected others’ personal life..Such bloody barbaric scondrals are these tamil mass groups especially middle class elitist groups. (Sorry to these words) If tamil eelam were born I have to get written approval from our democratic tamil government(?) to have sex with my wife or lover every day and Then I have to explain what was happen in bed room every day… LTTE represented these mentality that is why, Tamils supported to themAs I mentioned earlier We have escaped from a raise of new tamil Saudi arabia…I thank to god…

  For my experience, general singala public are most decent and very democratic rather than these bloody Tamil groups. If any one denunciate 83 riots I can also remember the mass murders conducted by Tamil groups.

  Regards,
  Balasinham

 2. Looking forward to see the third one…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: