நாய்களுக்கும் நீரழிவு நோய் வரும்

கவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர்.
அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி – முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் – வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?’’ – என்றும் வைரமுத்து இந்த கவிதை நூலில் சொல்கிறார்.

அப்படிச் சொன்ன கவிஞருக்கும் – கவிஞரின் கவித்திறனுக்கும் ஆய்வுரை வழங்கிய கருணாநிதிக்கும் வாசகர்களுக்கும் – இது சமர்ப்பணம்.

காலைநேரம். கிளினிக்கை திறக்கச் சற்றுத் தாமதமாகிவிட்டது. பரபரப்புடன் பாதுகாப்பு அலாரத்தை நிறுத்திவிட்டு திரும்பினால் எதிர்ப்பட்டவர்கள் ‘சென்’ தம்பதிகள். சென் தங்களது செல்ல நாயை அணைத்தபடி உள்ளே வந்தனர்.

‘Good Morning; ; நீங்கள் சொன்னவாறு நாங்கள் ‘மமி’க்கு தண்ணீரோ, சாப்பாடோ எதுவும் கொடுக்கவில்லை’’ என்றார் திருமதி சென்.

அவர்களை அமரச் செய்துவிட்டு, எனது வெள்ளை அங்கியை அணிந்துகொண்டு வந்தேன். சென், ஏற்கனவே என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தங்கள் ‘மமி’ அதிகளவு தண்ணீர் குடிக்கிறது என்றும் பலமுறை சிறுநீர் கழிப்பதாகவும் – வழக்கத்துக்கு மாறாக சிலதடவைகள் வீட்டினுள்ளேயே சிறுநீர் கழித்துவிட்டதாகவும் கவலையுடன் சொல்லியிருந்தார்.

‘சிறுநீரக வியாதியாக அல்லது ‘டயபட்டீஸ்’ எனப்படும் சலரோகமாக இருக்கலாம் எனக்கருதி, தண்ணீர், ஆகாரம் எதுவும் கொடாமல் வெறும் வயிற்றோடு அழைத்துவருமாறு சொல்லியிருந்தேன்.

சென்தம்பதிகள் பலவருடங்களுக்கு முன்பே சீனாவிலிருந்து வந்தவர்கள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அந்தப்பாக்கியம் இல்லாதமையாலோ என்னவோ – அக்குறையை இந்த ‘மமி’ மூலம் போக்குகிறார்கள் என நினைத்துக் கொண்டேன். ‘Poodle  இனத்தைச் சேர்ந்த இந்த நாய் -இத் தம்பதியரின் செல்லப்பிராணி என்பதையும் எப்போதோ புரிந்துகொண்டேன்.

எனது கிளினிக்கிற்கு வரும்போதும் அது நடந்து வராது. அதன் எஜமானர்களில் ஒருவர் தூக்கிக் கொண்டுதான் வருவார்கள். அதற்கு எப்போதாவது ‘தடுப்ப+சி’ ஏற்றும்போதும் – தங்கள் ‘அங்கத்தை ஊசிகுத்தும் உணர்வுடன்’ – முகம் சுழிப்பார்கள்.

அந்த நாய்க்குரிய பரிசோதனைகளை நான் ஆரம்பித்தவேளையில் எனது நேர்ஸ் பிளிண்டாவும் வந்து சேர்ந்தாள்.

‘உங்களில் ஒருவர் மாத்திரம் மமியை பிடித்துக் கொண்டால், இரத்தம் எடுக்க முடியும்’ – என்றேன்.

இரத்தம் எடுக்காமல் பரிசோதிக்க முடியாதா?’ என்று மிகுந்த கவலையுடன் கேட்டார் திருமதி சென்.

‘இரத்தம் எடுத்து பரிசோதித்தால்தானே அதில் சீனியின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய முடியும்’ – என்றேன்.

இருவரதும் அன்பு அரவணைப்பிலிருந்து வெளிவர முடியாமலும், வெளிவர விரும்பாமலும், ‘மமி’ இரு முன்னங்கால்களையும் திருமதி சென்னின் கழுத்தில் வைத்துக்கொண்டு என்னை, விநோதப்பிராணியை பார்ப்பது போல கண்களை இமைக்காமல் பார்த்தது. அந்த இறுக்கமான நிலைமையை தளர்த்துவதற்காக ‘மமி’ என்று செல்லமாக அழைத்து அதன் தலையைத் தடவினேன். சிறிதுநேர தலைதடவலுக்குப் பின்பு – எனது நட்பான குரலுக்கு மசிந்த மமி எனது கையை தனது நாக்கினால்; தீண்டியது.

அதன் இடதுகாலைப் பிடித்து மயிரை ‘சேவ்’ செய்துவிட்டு நீலநிற கோடாக புடைத்துத் தெரிந்த இரத்தநாளத்தில் ஒருதுளி இரத்தம் எடுத்து குளுக்கோஸ் மீட்டரில் விட்டேன்.

அந்த ஊசியை குத்தும்போது தமது முகங்களை வேறுபக்கம் திருப்பிய சென் தம்பதிகள் சங்கடத்துடன் என்னை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தனர்.

‘இன்னும் இரண்டு நிமிடங்களில் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு தெரியவரும் என்றேன். நான் எதிர்பார்த்தவாறே குளுக்கோசின் அளவு கூடியிருந்தது.

‘மமிக்கு டயபட்டீஸ்’ – என்றேன்

‘அதற்கு என்ன செய்யலாம்’ – என்று சென் கேட்டார்.

‘நாய்களுக்கு வரும் டயபட்டீஸ், மனிதர்களிடமிருந்து வேறுபட்டது. மனிதர்களில் இன்சுலின் சுரக்கும் கலங்கள் படிப்படியாகத்தான் குறையும். மனிதர்கள் அதற்காக மாத்திரைகளை எடுத்தனர். இன்சுலின் சுரக்கும் கலங்களின் தொழிற்பாட்டை அதிகரிக்கச் செய்யலாம். ஆனால் நாய்களைப் பொறுத்தமட்டில் இன்சுலின் சுரக்கும் கலங்கள் மொத்தமாகவே அழிந்தபின்புதான் டயபட்டீஸ் நோய் தோன்றுகிறது. இதனால் இன்சுலின் ஊசிமூலம் கொடுப்பதே சிறந்த பரிகாரம். தினமும் இந்த ஊசி ஏற்றவேண்டும். சிலசமயங்களில் இரண்டுவேளைகளில் செலுத்தவும் நேரலாம். ஆரம்பத்தில் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை ஸ்திர நிலைக்கு கொண்டுவர சிலநாட்கள் செல்லலாம். அதற்காக மமியை சிலநாட்களுக்கு கிளினிக்கில் வைத்திருக்க வேண்டும். விசேட உணவு, வழங்க வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள் சம்மதித்தால் இன்றே சிகிச்சையை ஆரம்பிக்க முடியும்’’ – என்றேன்.

தம்பதிகள் சீனமொழியில் ஏதோ பேசிக்கொண்டனர். எனக்கு அந்தமொழி புரியாவிட்டாலும் நாகரீகம் கருதி அறையைவிட்டு வெளியே வந்தேன்.

நீரிழிவு என இலங்கையிலும் சர்க்கரை வியாதி என தமிழகத்திலும் சொல்லப்படும் டயபட்டீஸ் நாய், பூனைகளில் மட்டும் அல்ல, நான் எனது சொந்த வாழ்விலும் பார்த்திருக்கிறேன்.

எனது அம்மா இந்த உபாதையால் பலஆண்டுகள் வருந்தினார். அம்மாவுக்கு நாற்பது வயதில் வந்த இந்தநோய் – சுமார் 15வருடங்கள் அவர்கள் மறையும் வரையில் உடலோடு ஒட்டி உறவாடியது. நான் ஆரம்பத்தில் அம்மாவுக்கு தொடக்கிவைத்த ‘இன்சுலின்’ ஏற்றும் பழக்கத்தை பின்னாளில் அம்மாவுடன் இருந்த கடைசித் தம்பியும் உடனிருந்து தொடரச் செய்தான்.

இலங்கையின் இனப்பிரச்சினையால் அம்மாவின் பிள்ளைகள், அம்மாவை விட்டுப் பிரிந்து பூமிப்பந்தில் சிதறி புலம்பெயர்ந்த போதும் – அம்மாவைப் பிரியாதிருந்தது டயபட்டீஸ். அம்மாவின் உடலைத் தீண்டிய இன்சுலின் ஊசியின் தடயங்கள்-கரும்புள்ளிகளாக அந்த வெள்ளைத்தோலை அலங்கரித்தது, அப்பாவின் குத்தல், நக்கல் மொழிகளையும் அம்மா பொறுத்துக் கொண்டதற்கு இந்த ஊசிகுத்தலினால் கிடைத்த சகிப்புத்தன்மையும் காரணமாக இருக்கலாம்.

அம்மா டயபட்டீஸினால் வாழ்ந்த காலம் சுவாரஸ்யமானது, வீட்டுக்கு வருபவர்களெல்லாம் வைத்தியர்களாகிவிடுவர்.
ஆயுர்வேதம், சித்தவைத்தியம், யுனானி எனக் கூறிக்கொண்டு இலை, குழை, தண்டு, வேர், பூ என தாவரவியலையும் அம்மா கரைத்துக் குடித்ததுண்டு. அம்மா அரைத்துக் குடித்த பாகற்காய்களுக்குக் கணக்கில்லை.

உலகத்தில் தோன்றிய பெரிய தெய்வங்கள், சிறிய தெய்வங்கள், பிறசமயத் தெய்வங்கள் என மதநல்லிணக்கணத்துடன் அம்மா விரதம் இருந்தும் இந்த உபாதையை போக்க முயன்றார்கள். ஒருதடவை அம்மா நாற்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து அதிகாலையில் குளித்துவிட்டு, தெய்வதரிசனத்துக்குச் சென்றதனால் கிணற்றில்தான் நீர் வற்றியதே தவிர-நீரிழிவு வற்றவில்லை.

பூசாரிகள், மந்திரவாதிகள், சூனியம் எடுப்பவர்கள் எனச் சொல்லிக்கொண்டும் சிலர் வந்து போனார்கள். கேரளாப் பக்கமிருந்து வந்த மலையாள மாந்திரீகர் ஒருவர் வந்து அம்மாவிடம் ‘உங்களுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் சூனியம் செய்திருப்பதாகவும் சொல்லி உறவுக்குள் பகைநெருப்பை மூட்டிச் சென்றார். இவர்கள் எல்லோரையும் விட அம்மாவின் உயிரை பிடித்து வைத்திருந்தது இன்சுலின் ஊசி மருந்துதான்.

மிருகவைத்தியராக அவுஸ்திரேலியாவில் வேலை செய்யும்போது, என்னிடம் வரும் நாய், பூனைகளுக்கு ‘டயபட்டீஸ்’ இருப்பதைக் கண்டு பிடித்தவுடன், சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு – அவற்றின் எஜமானர்களின் குடும்பவிபரத்தை கேட்டறிவேன். டயபட்டீஸ் நோயினால் பாதிப்புற்ற பிராணிகளை நேரம் எடுத்து பராமரிக்க வேண்டும். ‘பிஸி’யாக இருப்பவர்களினால் இது முடியாத காரியம்.

இன்சுலினை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த தாமதித்தால் பிராணிகள் மயங்கும். உணவு பிந்தினால் சோர்வுடன் முடங்கும். இது விடயத்தில் அனுபவத்தில் நான்கண்டு கொண்ட உண்மையும் உண்டு. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நாய்களைப் பராமரிப்பதில் பெண்கள் மிகுந்த சிரமத்தை அடைவர்கள். என்பதுதான் அந்த உண்மை.

எனக்குத் தெரிந்த பெண் ஒருவர், டயபட்டீஸினால் பீடிக்கப்பட்ட நாயொன்றை கடந்த ஐந்து ஆண்டுகளாக நன்கு பராமரிக்கிறார். இது மானுட வயதில் ஐம்பத்தைந்து வருடத்துக்கு சமனாகும். அடிக்கடி ஊசிபோடுவதற்கு நாய்க்கும் பொறுமை வேண்டும். டயபட்டீஸ் வந்த நாய்கள்-கருணைக்கொலை மூலம் பரலோகம் அனுப்பப்படுவதுமுண்டு. இது சோகம்தான். ஆனால் தவிர்க்க முடியாதது.

எனது உள்மன யாத்திரையை முடித்துக்கொண்டு பரிசோதனை அறைக்கு மீண்டேன்.

சென், என்னைப்பார்த்து ‘சீன வைத்திய முறைப்படி சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம்’ – என்றார்.

‘நல்லது, நானும் சீன மருத்துமுறையில் அக்கிய+பஞ்சர் படித்திருக்கிறேன். பெரிய அளவில் எதிர்பார்க்காமல் முயற்சிசெய்யுங்கள். மமிக்கு சுகம் வருவதற்கு எனது வாழ்த்துக்கள்.
அவர்கள் தமது செல்லப்பிராணியுடன் விடைபெற்றனர்.

சிலநாட்களின் பின்பு சென் தொலைபேசி மூலம் மமியை கருணைக்கொலை செய்ததாக கூறினார். முன்பு மாட்டிலிருந்தும் பன்றியிலிருந்தும் தயாரிக்கப்பட்ட இன்சுலின் இப்பொழுது – சைவமுறைப்படி பக்டீரியாவுக்குள் இன்சுலின் ‘ஜீனை’ செலுத்தி பிராமணர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறது.

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to நாய்களுக்கும் நீரழிவு நோய் வரும்

  1. vijay சொல்கிறார்:

    இலங்கையின் இனப்பிரச்சினையால் அம்மாவின் பிள்ளைகள், அம்மாவை விட்டுப் பிரிந்து பூமிப்பந்தில் சிதறி புலம்பெயர்ந்த போதும் – அம்மாவைப் பிரியாதிருந்தது டயபட்டீஸ். அம்மாவின் உடலைத் தீண்டிய இன்சுலின் ஊசியின் தடயங்கள்-கரும்புள்ளிகளாக அந்த வெள்ளைத்தோலை அலங்கரித்தது, அப்பாவின் குத்தல், நக்கல் மொழிகளையும் அம்மா பொறுத்துக் கொண்டதற்கு இந்த ஊசிகுத்தலினால் கிடைத்த சகிப்புத்தன்மையும் காரணமாக இருக்கலாம்//அன்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.