குற்றமும் தண்டனையும் சிறுகதை – நடேசன்

இந்த சிறுகதை  பல வருடங்களுக்கு முன்பாக எழுதியது .எந்த அரசியல் கலப்பும் இல்லாதது

மெல்பேர்ண் பல்கலைக்கழகத்திற்கும், றோயல் பெண்கள் மருத்துவமனைக்கும் சமீபமாக அமைந்துள்ள ‘ரெட்பார்க்’ மதுச்சாலையில் எனக்குப் பிடித்தமான யன்னல் ஓரம் அமர்ந்தேன்.
வழக்கமாக இங்கே வந்தால் – குறிப்பிட்ட மேசையைத்தான் கண்கள் நாடும். அங்கிருந்து யன்னலூடாக வெளிப்பிரதேசத்தை தரிசிக்கலாம். இன்று திங்கட்கிழமை என்பதனாலோ என்னவோ இங்கு கூட்டம் குறைவு.
வெள்ளிக்கிழமைகளில் இங்கு காலடி வைப்பது கடினம். நின்றுகொண்டுதான் அருந்தவேண்டும், உண்ணவேண்டும்.

“என்ன… இன்று தனியே…..?” – அடிக்கடி அங்கே பார்த்து பழகிய மது பரிமாறும் பெண் கேட்டாள். அறிமுகமற்ற முகப்பழக்கம். பகுதிநேர வேலை செய்பவளாக இருக்கலாம். முழுநேர பல்கலைக்கழக மாணவியாகவும் இருக்கலாம்.

எப்படி இருந்தால்தான் எனக்கென்ன?
“பொட்டில் விக்ரோரியா பிட்டர்” – என்றேன். வாரத்தில் ஒரு நாளாவது வேலைத்தல நண்பர்களுடன் மதிய உணவுக்காக இங்கே வருவதுண்டு.
எனது வேலைத்தலத்துக்கு சமீபமாக – உணவும் மதுவகைகளும் கொண்ட ரெஸ்ரோரண்தான் இது.

தனியாக வந்தாலும் – யன்னலோரமாக அமர்ந்து வெளிப்பிரதேசத்தை ரசிக்கலாம். இதமான காற்று யன்னலூடாக வந்து முகத்தை வருடும். வெளியே நடமாடுவோரைப் பார்க்கலாம். அலுப்பின்றி மதிய உணவு நேரத்தை கழிக்கலாம்.

நீண்ட காலத்திற்குப் பின்பு ஊரிலிருந்து வந்த கடிதம் – சேர்ட் பொக்கட்டில் துருத்திக்கொண்டிருந்தது.

எனது மச்சான் நந்தன் அனுப்பியிருந்த கடிதம்.
நந்தனின் தாயார் – எனது மாமி 70 வயதில் இறந்துவிட்டதாக கடிதம் தகவல் சொல்கிறது.

இலங்கையில் தமிழர்கள் 70 வயதில் இயற்கை மரணம் மகிழ்ச்சிக்குரியது என்பது எனது சிந்தனை. இளம் சிறுவர்கள் களத்தில் மடிந்து கொண்டிருக்கும் சமூகத்தில் – எதற்காக எழுபது வயது வரையும் வாழ்ந்த மாமிக்காக கலங்க வேண்டும்?

நந்தனுக்கு பதில் எழுதலாம். அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.

நந்தனின் கடிதம் மாமியின் நினைவுகளை இரை மீட்டித்தான் விட்டது. என்னை நானே சுயவிமர்சனம் செய்ய வைத்துவிட்டது.
மாமிக்கு வேசிப்பட்டம் சூட்டி வழக்குத்தொடர்ந்து தண்டனையும் கொடுத்து அகம் மகிழ்ந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து தொல்லைப்படுத்துகிறது. ஒருவகையில் நான் வழங்கிய தண்டனை ஈரானியர்களின் கொடூரச் செயலைவிட மோசமானதுதான்.

ஒரு மாதகாலம் மாமி வீட்டு கூரைக்கு இரவில் கல்லெறிந்தேன். இரவில் மாமி உறங்கியிருக்கமாட்டார்கள். மறுநாள் காலையில் கண் சிவந்த நிலையில் நடமாடும் மாமியைப் பார்க்கும் இனசனத்தினர், “மாமா இறந்த துயரத்தில் அழுதுதான் மாமியின் கண்கள் சிவந்திருக்கலாம்.” என நினைத்திருப்பர்.
மாமியின் தனிமனித ஒழுக்கத்தில் தவறு கண்டு பிடித்து சமூகப்பார்வையில் தண்டனை கொடுத்தேன். மாமாவுக்கு துரோகமிழைத்த பெண் – என்ற வெஞ்சினம்தான் அந்த நாள் பருவத்தில் எனக்குள் ஊறிக்கிடந்தது.

பின்னாளில் சமூகத்தின் குறைபாடுகள் பூதாகரமாக தோன்றியபொழுது மாமியின் மீது அனுதாபம் தோன்றியது.

மாமாவின் குறைகள் யாருக்குத் தெரியும்? அவரது பக்கம் தெரிந்ததா??
தனிமனித் குறைபாடுகள் மறைக்கப்படும்போது ஒழுக்கமானவர்களாக தெரிவதும், மறைக்க வசதியோ அதிகாரமோ அற்றவர்கள் வெளிச்சமாக்கப்படுவதும்தானே காலம் காலமாக நடந்து வருகிறது.
அது ஒரு ‘துன்பியல் சம்பவம்’ எனக்கூறி ஆறுதல் தேட முடியாதமையால் – மாமியைப் பற்றிய அந்த நாள் ஞாபகம், நந்தனின் கடிதம் பார்த்தது முதல் மனதைக் குடைகிறது.

மாமாவின் மரணவீடு.
“தம்பி எனக்கும் ஒரு புகையிலை தாடா?” சாம்பசிவம் சித்தப்பாவின் குரல் கேட்டது.
சாம்பசிவம் சித்தப்பா – மரணவீட்டிலிருந்து திடீரென்று சுமார் அரைமணிநேரம் காணாமல் போயிருந்தார்.
அவர் தனது கருப்பு சாராய போத்தலை தேடிப்போயிருப்பார். சிறிது தூரம் நடந்து சென்று, சிறுநீர் கழிக்கும் பாவனை செய்துவிட்டு அரைகிளாஸ் கருப்புச்சாராயம் ஏறவிட்டிருப்பார்.
வழக்கமாக ‘தண்ணி’யில் மிதக்கும் ஆசாமிதான்.
கல்யாணம், சாமத்தியச்சடங்கு, மரணவீடு இப்படி எங்கே அவர் வர நேர்ந்தாலும் அவருடன் ஒரு கருப்புச் சாராயப்போத்தலும் மறைவாக வந்துவிடும். எங்காவது பூச்செடி பற்றைக்குள் மறைத்து வைத்துவிட்டு – தேவைப்பட்ட வேளைகளில் தாகசாந்தி செய்து கொள்ளுவார்.

இந்த தாகசாந்தி விவகாரம் ஏதோ தனக்கு மட்டுமே தெரிந்ததாகவும் அவர் நம்பிக்கொண்டிருப்பதுதான் சுவாரஸ்யம்.
இப்பொழுதும் – அதனை அருந்திவிட்டு வந்து அதன் கசப்பைத் தீர்க்க என்னிடம் புகையிலை கேட்கிறார்.
அவரோடு மேலும் எட்டுப்பேர் இருந்து அமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்பியதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பலாமரத்து நிழலில் அமர்ந்து ஆம்ஸ்ரோங்கைப் பற்றி உரையாடும் இவர்களுக்கு பரலோகம் சென்ற மாமாவின் நினைப்பே இல்லை.
மாமாவின் சடலம் வீட்டு வராந்தாவில் கிடத்தப்பட்டு இருக்கிறது.இரண்டு படுக்கை அறைகளும் குசினியும் கொண்ட ‘ட’ வடிவமான அந்த வீட்டில் மாமாவின் சடலம் பட்டு வேட்டிசால்வையுடன்அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.தலைமாட்டில் இரண்டு குத்துவிளக்குகள், சந்தன குச்சிகள். எந்த மரண வீட்டுக்குப் போனாலும் அதே சந்தனக்குச்சி வாசம்தான்.

மாமி தலைவிரி கோலமாக மாமாவின் சடலத்தின் தலைப்பக்கமாக இருக்கிறார்.

மாமியும் மாமாவைப் போன்று வெள்ளை நிறமும் இலட்சணமான தோற்றமும் கொண்டவர். மாமாவும் மாமியும் பொருத்தமான சோடிகள் என்று எனது காதுபடப் பேசியவர்கள் ஊரில் பலர்.
மாமியைச் சுற்றி இருந்து பல பெண்கள் ஒப்பாரிவிட்டு அழுதார்கள். அந்த ஒப்பாரி ஒலி அவ்வப்போது தாழ்ந்தும் ஓங்கியும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. சில பெண்களின் கண்களில் கண்ணீர். சிலரது அழுகை பாவனையாகத் தெரிகிறது. மூக்கைச் சிந்தி சேலைத்தலைப்பில் துடைத்துக் கொள்ளுகிறார்கள்.
முற்றத்தில் கிளை பரப்பியிருந்த செம்பட்டான் மாமரத்தின் கீழே நான்குபேர் பறைமேளம் அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் உடம்பு தசைகள் விம்மிப்புடைப்பதை அவதானித்தேன்.
அவர்களுக்கும் புகையிலை கொடுத்தேன்.
பலாமரத்தின் கீழிருந்து ஒரு குரல் வந்தது.
“அம்மாவிட்ட தேத்தண்ணிக்குச் சொல்லடா?”
மரண வீட்டில் எனக்குத் தரப்பட்ட வேலை வருபவர்களுக்கு வெற்றிலை, புகையிலை கொடுப்பதுதான். ‘தேத்தண்ணிக்கு’ நான் பொறுப்பில்லை என்று வெடுக்கென சொல்ல நினைத்தேன். தயக்கம் தடுத்தது.
வந்திருப்பவர்களுக்கு அமெரிக்காவும், ஆம்ஸ்ரோங்கும், வெற்றிலையும், புகையிலையும், தேத்தண்ணியும் தேவைப்படுகிறது. ஆனால் – மாமாவைப் பற்றி பெரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

ஒப்பாரி வைத்து அழும் பெண்கள் கவலையால்தான் அழுகிறார்களா? இன்னுமொரு வகையில் பார்த்தால் வந்திருப்பவர்களையும் குறை சொல்ல முடியாது.

மாமா சிறுவயதிலேயே பட்டணம் சென்று படித்தவர். படிப்பு முடிய குருநாகல் பக்கமாக அவருக்கு ஆசிரிய நியமனமும் கிடைத்துவிட்டது.
விடுமுறைக்காலத்தில் மாத்திரம் ஊர்ப்பக்கம் வருவார். வந்தாலும் ஊரவர்களுடன் நட்பைப் பேணியவர் அல்ல.

வீட்டின் பின்வளவுக்குச் செல்கிறேன். அங்கே மாமாவின் மகன் நந்தன் விளையாடிக்கொண்டு நின்றான். இவனுக்கு ஐந்து வயதிருக்கும். இவனைக் கண்டால் எனக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வரும்.
இவனால்தானே எல்லா வினையும் வந்தது.
இந்தப் பயலில் மாமாவின் சாயலே இல்லை. மாமா வெள்ளை நிறம். இவனோ அட்டைக்கரி.

“ஆட்களுக்கு தேத்தண்ணியும் கொடுக்க வேண்டிக்கிடக்கு… நீ புகையிலையை பிடிடா.. இந்தா…”

“எனக்கு ஏலாது….” அவன் உடம்பை நெளித்தான்.
இவனுக்கு உதைப்பதற்கு இதுதான் தருணம். ஒரு உதைவிட்டேன்.

“அம்மா” என கத்தியபடி நகராமல் நின்றான்.
அங்கிருந்து நகர்ந்து, சற்று அப்பால் வெள்ளை கட்டுவதற்கு தேவையான துணிகளை அடுக்கிக்கொண்டு நின்ற சின்னப்புவிடம் சென்றேன். சின்னப்புவுக்கு எப்போதும் என்மீது வாரப்பாடு. ஆறடி உயரமான அவரது தோள் மீது ஏறி இருந்தால் உலகத்தையே பார்க்கலாம் என்ற நப்பாசை எனக்கு.

“என்ன தம்பி. தாய்மாமா போட்டார் எண்டு கவலைப்படுறாயா?” என்னை அணைத்தபடி சொல்கிறார்.

அவரது அணைப்பில் நின்றுகொண்டு சற்று அப்பால் – எனது உதையால் அழுதுகொண்டிருக்கும் நந்தனைப் பார்த்தேன். மரணவீடு என்றபடியால் அவன் தனக்குள் அழுதுகொண்டு நிற்கிறான். இல்லையேல் தாயிடம் சென்று கோள் மூட்டியிருப்பான்.

இப்போது மாமியின் அழுகையும் ஓய்ந்து விட்டது. மற்றவர்களும் இத்தருணத்தில் இடைவேளைவிட்டார்கள்.
ஒப்பாரிக்கு தலைமை தாங்கிய பொன்னம்மா ஆச்சிக்கு வெற்றிலை போட வேண்டும் என்ற உணர்வு வந்திருக்க வேண்டும்.
பொன்னம்மா ஆச்சிக்கு ஊரில் தனி மவுசு. அவரைப் போன்று சுயமாக பாட்டியற்றி ஒப்பாரி வைத்து அழுவதற்கு வேறு எவருக்கும் தெரியாது.
மாலை நான்கு மணியாகிவிட்டது. பலாமரத்தின் கீழிருந்து வானவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் இப்போது பாடை கட்டத் தொடங்கிவிட்டார்கள். மாமா வீட்டு வளவில் பூவரசு மரங்களும் தென்னை மரங்களும் மா, பலா, வாழையும் நின்றன. பாடை கட்டுவதற்குத் தேவையான பூவரசந்தடிகளும் தென்னோலையும், குருத்தோலையும் மாமா வீட்டிலே கிடைத்தன. சாம்பசிவம் சித்தப்பாவின் தலைமையில் பாடைகட்டும் வேலைகள் துரிதமாக நடந்துகொண்டிருந்தது. பாடை கட்டுபவர்களின் நிழல்கள் அந்த நான்குமணி வெய்யிலில் ராட்சத உருவமாக அசைந்தன. அந்த நிழல்களின் பயங்கரத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.

“டேய்… அம்மாவிடம் – எல்லோருக்கும் தேத்தண்ணி கொண்டுவரச் சொல்லடா…” – மாமா மீண்டும் நினைவுபடுத்துகிறார்.
இந்த மரணவீட்டை நிர்வகிப்பது தற்போது அம்மாதான். மாமா மீது அம்மாவுக்கு பாசம் அதிகம். மாமாவின் படிப்பைப் பற்றி பெருமையோடு பேசுவார். மாமியை அம்மாவுக்கும் பிடிக்காது. மாமி, மாமாவை கஷ்டப்படுத்துவதாக பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். பல தடவைகள் மாமா எங்கள் வீட்டில் சாப்பிடுவதைக் கண்டுள்ளேன். ஒரு தடவை சேர்ந்தாற்போல் இரண்டு வாரங்கள் எங்கள் வீட்டில் மாமா தங்கியிருந்தார்.
ஒரு தடவை, குருநாகலில் இருந்து மாமா வந்திருக்கும் தகவல் அறிந்து ஐந்தாம் வகுப்பு வருடாந்த பரீட்சை அறிக்கையை மாமாவிடம் காண்பிக்க ஓடினேன்.
மாமா வீட்டு வளவின் பின்புற படலையூடாக விரைவில் செல்லலாம். வழக்கம்போல் சைக்கிள் ரிம்மை உருட்டியபடி சென்றேன்.
வீட்டினுள்ளிருந்து ஒலித்த குரல்களால் தயங்கி நின்றேன்.

“நீர் தொடர்ந்தும் இப்படித்தான் இருப்பதென்றால் நான் இனி இங்கே வரப் போவதில்லை.” – இது மாமாவின் குரல்.

“கல்யாணம் செய்துபோட்டு குருநாகலில் இருந்தால் நான் எப்படி இங்கே சீவிப்பது…” – இது மாமியின் குரல்.

“யாருக்குப் பிள்ளை பெத்தீரோ….. அவனோடு சீவி. நான் இங்கே வரவில்லை.”

“நீர் ஆம்பிளையாக இருந்தால் நான் ஏன் மற்றவனோடு போறன்?”

“நீ பொம்பிளையாக இல்லாமல் இருப்பதால் நான் உன்னை ஆறு வருடமாகத் தொடவில்லை.”

“என்னடா சொன்னாய் இந்த விதானையின் மகளைப் பார்த்து….”
மாமியிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டதும் நான் உள்ளே செல்லாமல் திரும்பிவிட்டேன். வீட்டில் அம்மாவிடம் மூச்சும் காட்டவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வர சில நாட்கள் சென்றது.

அந்த வாக்குவாதம் நடந்த மறுதினமே மாமா குருநாகல் திரும்பிவிட்டார்.

இரண்டு வாரத்தில் மாமாவின் சடலம் வார்னிஷ் பூசிய சவப்பெட்டியில் வேனொன்றில் வந்திறங்கியது. மாமா கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்திருப்பதாக டொக்டர் சான்றிதழ் கொடுத்திருந்தார்.
நந்தனை இருத்தி இறுதிக்கிரியைகள் செய்தார்கள். எனக்குப் பொறுக்கவில்லை. அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.
ஆறுமணியளவில் மாமாவின் சடலம் பாடையில் பயணமாகியது. சிறுவர்கள் சுடலைப்பக்கம் செல்லக் கூடாது என்று பெரியவர்கள் தடுத்தார்கள்.
மனம் கேட்கவில்லை. பனை, தென்னை, கற்பாறைகளின் பின்னே பதுங்கிப் பதுங்கிச் சென்றேன். மயானத்தை அடைந்தபோது மாமா எரிந்துகொண்டிருந்தார்.
சாம்பசிவம் சித்தப்பாவும் சின்னப்புவும்தான் கடைசிவரையும் – மாமா சாம்பலாகும் வரையில் நன்று எரித்தார்கள்.
அடுத்த நாள் மாமி – எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம், “எடி ராணி… இரவெல்லாம் ஏதோ கூரையில் வந்து விழுந்தது… உங்கண்ணன் செத்த பிறகும் எங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டார் போல… நானும் பெடியனும் இரவு முழுவதும் விழித்திருந்தோம்.
“அண்ணி, அண்ணனுக்கு உங்கள்மேல் விருப்பம்தானே.. அதுதான் ஆவியாக வந்து போகிறார் போல.. முப்பத்து ஒன்று முடிய ஐயரைக் கூப்பிட்டு சாந்தி செய்தால் சரியாகப் போய்விடும்.” என்றார் அம்மா.
படிக்க பட்டணம் போகும்வரையில் மாமி வீட்டு கூரைக்கு நான் கல்லெறிந்தது அம்மாவுக்குத் தெரியாது.
எனது தலையணைக்குக் கீழே இருக்கும் கற்கள் மாமி வீட்டுக் கூரைக்குப் போய்விடும். ஒவ்வொரு இரவும் புதிய புதிய கற்கள் என் தலையணைக்கு வந்து அந்த கூரைக்குப் போகும்.
“என்ன.. இன்னுமொரு ‘பொட்’ கொண்டு வரவா?” மது பரிமாறும்

பெண்ணின் குரல் என்னை மீண்டும் மெல்பேர்னுக்கு அழைத்து வந்தது.
புழைய நினைவுகளிலிருந்து மீளும்போது மதிய உணவு இடைவேளையும் முடிந்திருந்தது. ஏனோ அன்று சாப்பிட மனம் வரவில்லை. பசிக்கவில்லை. கல்லெறிந்த குற்றவுணர்வு பசியை மறக்கச் செய்துவிட்டதோ?
பணத்தைக் கொடுத்துவிட்டு அந்த மதுச்சாலையை விட்டு வெளியே வந்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: