யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள கல்வியங்காட்டில் அரிசிக்கார ஆறுமுகம் தெருவில் சிறுவயதில் எங்கள் குடும்பம் வசித்தது. சிறியதெரு என்று சொல்ல இயலாது. யாழ்ப்பாணம் மொழியில் ஒழுங்கை எனலாம். பத்து வீடுகள் மட்டும்தான் அந்த ஒழுங்கையில் இருக்கும். ஒழுங்கையின் இரண்டு பக்கமும் உள்ள கிடுகு வேலிக்கு உட்புறமாக பூவரசமரங்கள் மிகவும் தழைத்து கிளைவிட்டு ஒழுங்கைக்கு பந்தல் போட்டு நிழல் கொடுக்கும். கோடை வெயில் ஒழுங்கையில் ஊடுருவ முடியாது. ஆனாலும் குறிப்பிட்டகாலத்தில் அந்த ஒழுங்கையில் சைக்கிளில் போவது இளம் காலை வேளையில் பயத்தை கொடுக்கும். எங்களது காலத்தில் புலிகளோ இராணுவமோ இல்லை.
பயத்திற்கு காரணம் மயிர்கொட்டி புழுக்கள் பூவரசக்கிளைகளில் இருந்து தொடர்ச்சியாக நூலேணி வழியாக இறங்கும் . ஏதாவது ஒன்று கையில் காலில் பட்டால் அந்த அரிப்பு நிற்க பல மணித்தியாலங்;கள் செல்லும். சுணையை நீக்குவதற்கு எண்ணெய் போடுவதும், சவர அலகால் தோலை சுரண்டுவதும் என பல சிசுருசைகள் செய்யவேண்டியதாக இருக்கும்
இந்த அருவருக்கத்த மயிர்கொட்டிகள் திடீரென சிலகாலத்தில் மறைந்து விடும். அந்த ஒழுங்கை எங்கும் அழகான பட்டாம்பூச்சிகள் சிறகடித்து அந்த ஒழுங்கையை வண்ணமயமாக்கும் .
யாராவது இந்த வண்ணத்து பூச்சிகளில் குறை சொல்வார்களா? இல்லை வெறுப்பார்களா? மயிர்கொட்டிகளோடு தொடர்புபடுத்தி பார்ப்பார்களா?
ஜெனிவாவில் நடந்த 19 ஆவது மனித உரிமை கூட்டத்தொடரில் அந்த ஐக்கிய நாடுகள் மண்டபத்தின் கொரிடோர்கள் எங்கும் இப்படியான மயிர்கொட்டிகள் மாறி பட்டாம்பூச்சிகளாக பறந்ததைப் பார்த்தேன்;.
ஜெனிவாவில் நான் சந்தித்த வெளிநாட்டு தமிழ்ர்கள் என்னிடம் பேசிய போது தாங்கள் முழு இலங்கையின் மனித உரிமைக்காக பேசுவதாக சொன்னார்கள். இலங்கை சிங்கள மனித உரிமையாளர்களை இலங்கையில் இருந்து வெளியேற அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்றார்கள். எனக்கு மிகவும் வியப்பாகி விட்டது. எவ்வளவு நல்ல விடயம் இவர்கள் பேசுவது. சிலகாலத்துக்கு முன்பு விடுதலைப்புலி ஆதரவாளர்களாக அவர்களது கட்டளையின் பேரில் புலிக்கொடி பிடித்தவர்கள் இவ்வளவு விரைவில் மனம் மாறி மனித உரிமைவாதிகளாக மாறிவிட்டார்களா?
கசாப்பு கடைக்காரர்கள் ஜீவகாரூண்யம் பேசுவதை நம்ப முடிகிறதா?
புலிகள் மானாவதும் கழுகுகள் மயிலாவதும் நான் கேள்விப்படாத விடயம்.
ஆனாலும் எனது வியப்பை வெளிக்காட்டாது, கடந்த முப்பது வருடமாக இரண்டு தரப்புகளும் மனித உரிமையை மீறியது உங்களுக்கு தெரியாதா? இல்லை கேள்விப்பட்டீர்களா? என்றேன்
எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் மீறிய இரண்டு தரப்பினரையும் மேலும் விசாரித்து தண்டிக்கவேண்டும் என்றார்கள். இதைத்தான் அவுஸ்திரேலிய டாக்டர் சாம் பரிமளநாதனும் அவுஸ்திரேலிய தேசிய தொலைக்காடசியில் கூறி இருந்தார்
இவர்களின் கூற்றின்படி யார் மீது வழக்குப் போடுவது?
இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்கச் சொல்லும்படி கேட்பது நியாயமானது. அதையாரும் குறை சொல்ல முடியாது.
ஆனால் விடுதலைப்புலிகளில் கொலைகளின் காரணகர்த்தாக்கள் மற்றும் முக்கிய தளபதிகள் இறந்து விட்டனர் என்பது எவருக்கும் தெரிந்த விடயம்
விசாரிப்பது என ஆரம்பித்தால் இவர்களது அரசியல்கட்சியாக தொழிற்பட்ட அரசியல் குழுவினரையா ?
மாங்குளத்தில் ஆயுதத்தைப் போட்டு விட்டு ஓடிய போது புலிகளால் பங்கருக்குள் அடைத்து தண்டிக்கப்பட்ட தற்போதைய பாராளுமன்ற அங்கத்தவரையா?
பொங்கு தமிழ் நிகழ்ச்சி மூலம் அப்பாவி மாணவர்களை உசுப்பி கொலைக்களத்திற்கு அனுப்பிய முன்னாள் பாராளுமன்ற அங்கத்தவரையா?
தற்பொழுது மக்கள் சேவையில் ஈடுபடும் கே.பி. போன்றவர்களையா?
கடைசி வரையும் ஆயுதம், பணம் அனுப்பிய வெளிநாட்டுத் தமிழரையா?
தமிழ் இளஞர்கள் குழு எனக் கூறிக்கொண்டு வன்னியில் ஆயுதப்பயிற்சி எடுத்துவிட்டு தற்போது வெளிநாட்டில் மனித உரிமைவாதிகளாகிய பட்டாம்பூச்சிகளையா?
அமெரிக்காவில் இருந்தபடி விடுதலைப்புலிகளை பிழையாக வழி நடத்தியவர்களையும் அதன் ஊடாக மக்களையும் காவு கொடுத்த அமெரிக்க தமிழ் சட்டவல்லுனர்களையா?
தொடர்ச்சியாக சண்டை பிடியுங்கள் நாங்கள் இந்தியாவில் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றி விடுவோம் என்ற கோபாலசாமி போன்றவர்களையா?
பொய்த்தகவல்களை உலகுக்கு அறிவித்து அதில் பிழைக்கும் தமிழ் நெற் போன்ற அவலத்தில் உயிர் வாழும் ஊடகம் நடத்துபவர்களையா?
கிளிநொச்சி ஒரு லெனின்கிராட். அங்கு இலங்கைப் படைகள் அழிந்துவிடும், விடுதலைப்புலிகள் விருச்சிக வியூகத்தில் இராணுவத்தை காவு எடுக்க இருக்கிறார்கள் என பொய்யுரைத்து மக்களை நம்பவைத்த அரசியல் ஆராய்ச்சியாளர்களையும் அவர்கள் எழுத்துக்களை பொதி சுமந்த கழுதைபோல் சுமந்து பத்திரிகை விபச்சாரம் செய்த இலங்கை தமிழ் ஊடகங்களையா?
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் கடந்த முப்பது வருடங்களாக நடந்தது. இதை இரண்டு பக்கத்தினரும் செய்தார்கள். தற்போது மனித உரிமையை ஒரு தந்திர உபாயமாக பாவிக்கிறார்கள் என்பதுதான் வெளிப்படையான உண்மை.
மனித உரிமை என்ற ஆயுதத்தை இலங்கைக்கு எதிராகப் பாவித்து எதை வெற்றி கொள்ளமுடியம்? குதிரை வெளியே சென்ற பின்பு தொழுவத்தை மூடியது மாதிரியான செயல்.
2001 இறுதிக்காலத்தில் உதயத்தில் புனை பெயரில் உருவகக் கதை எழுதினேன்.
அதன் சுருக்கம்
“கந்தன் என்ற இளைஞன் தனது குடும்பம் வறுமையில் வாடுவதை சகிக்கமுடியாமல் உணவு தேடி காட்டு வழியாக பலதூரம் போனான். காட்டில் ஒரு மரத்தின் அடியில் தங்கப் புதையலைக் கண்டதும் தங்கத்தை எடுத்தான். மேலும் மேலும் தோண்டிய போது அதிக தங்கம் வந்தது. கிடைத்த தங்கம் விற்று உணவாக்கி குடும்பத்தினருக்கு உதவுவதை விட்டுவிட்டு தொடர்ச்சியாக நிலத்தை தோண்டிக் கொண்டு இருந்தான். நாட்கள் வாரங்களாக கடந்து சென்றது.அதே நேரத்தில் இவனது குடும்பத்தினர் ஊரில் உணவற்று பட்டினியால் மரணமடைந்தனர்.”
புலிகள் தங்களுக்கு கிடைத்த இராணுவ வெற்றிகளை அரசியல் வெற்றிகளாக மாற்றவேண்டும் என்ற சிறிய நப்பாசையில் சமாதானம் வந்த காலத்தில் எழுதிய கதையது. அந்தக்காலத்தில் இங்கு இருந்த புலி ஆதரவாளர்கள் உதயத்தில் ஒரு பிரதியை வன்னிக்கு அனுப்புவார்கள்.
திம்புவிலும் பின்பு இலங்கை இந்திய ஒப்பந்தத்திலும் இந்தியா பாதுகாவலனக இருந்தது. இலங்கை அரசாங்கத்திற்கு சமனாக பேச்சுவார்த்தை நடத்தியது.
சந்திரிகா பண்டாரநாயக்கா தந்த பொதியில் ஈழத்தைத் தவிர எல்லாம் அந்த ஒப்பந்தத்தில் இருந்தது. பத்து வருடங்களுக்கு வடமாகாணத்தை தேர்தல் இல்லாமல் புலிகளின் கைகளில் கொடுக்க தயாராக இருந்தார்
அமெரிக்கா ஜப்பானுடன் நோர்வே வந்து உதவியது
இப்படி சகல விடயத்தையும் விட்டுவிட்டு சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டு இலங்கை மக்களின் மனித உரிமைக்காக பாடுபடுகிறோம் என்று சொல்வது எவ்வளவு புலுடா என்பது நமக்குத் தெரியும். மற்றவர்கள் தங்கள் அளவுதான் அரசியல் தெரிந்தவர்கள் என்பது இந்த பட்டாம் பூச்சிகளின் எண்ணம், கணிப்பு.
வரலாற்றைச் சொல்லி சொல்லி நிகழ்காலத்தை இல்லாமல் செய்து அறுபது வருடங்கள் தமிழர்களை போராடும் நிலையில் வைத்திருந்த தமிழ் அரசியல்வாதிகளும் விடுதலைப்புலிகளும் சாதித்தது என்ன? பலரது உயிரை அழித்தார்கள். அத்துடன் மக்களின் வாக்குகளில் பாராளுமன்ற கதிரைகளை தக்கவைக்கவும் மட்டுமே இந்த போராட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு தங்களது ஈகோவை திருப்திப்படுத்த ஒரு நித்திய போராட்ட மனநிலையை சாதாரண தமிழர்களின் தலையில் சுமத்தப் பார்க்கிறீர்கள்.
எனது அருமை பட்டாம்பூச்சிகளே.
அமைதி சிலகாலம் நிலவுவதற்கு அனுமதியுங்கள். தமிழ்சமூகத்திற்கு வரலாற்றை சுமையாக்கி அவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர்கள்.
—0—