வீணாகிப்போன வேண்டுகோள்
முருகபூபதி – அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் கோயில்களில் அவ்வப்போது ஒரு காட்சியை காணலாம். கோயில் வீதிகளில் நசுங்குண்ட எலுமிச்சைகள் சிதறிக்கிடக்கும். எம்மவர்கள் புதிதாக வாகனம் வாங்கினால் தம்முடன் தமது வாகனத்தையும் கோயிலுக்கு அழைத்துச்சென்று ஐயரிடம் தமது காருக்கு ஒரு அர்ச்சனையும் செய்து ஐயர் தரும் அர்ச்சனைத்தட்டில் இருக்கும் எலுமிச்சம்பழங்களை வாகனத்தின் நான்கு சில்லுகளுக்கும் கீழே வைத்து அதன்மீது வாகனத்தை செலுத்தி அதற்கு சாந்தி செய்வார்கள்.
தனிநபர்களுக்கு அர்ச்சனை செய்யும்போது ராசி, நட்சத்திரம் கேட்பதுபோன்று வாகனங்களுக்கு அர்ச்சனை செய்யும் ஐயர், வாகனத்தின் ராசி, நட்சத்திரம் கேட்காவிட்டாலும் வாகனத்தின் தயாரிப்பு ஆண்டு அதன் ‘மொடல்’ பற்றிகேட்கக்கூடும் என நம்புகின்றேன்.
இந்துப்பெருங்குடி மக்களுக்குத்தான் இந்த நம்பிக்கையென்றால் ஏனைய மதத்தவர்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல.
நானறிந்தவரையில் இலங்கையில் கத்தோலிக்கர்களும் புதிதாக வாகனம் வாங்கினால் தங்கள் நம்பிக்கைக்குரிய தேவாலயம் சென்று பிரார்த்தனை நடத்தி மெழுகுவர்த்தி கொளுத்தி தேவாலய மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வார்கள்.
1984 ஆம் ஆண்டளவில் நீர்கொழும்பில் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் வசித்த ஒரு குடும்பத்தினர் சொந்தமாக ஒரு பேக்கரி நடத்திக்கொண்டிருந்தாரகள்;. அவர்கள் ஒரு புதிய ஹைஏஸ் வேன் வாங்கினார்கள். தங்களது சொந்தப்பாவனைக்கும் பாண் விநியோகத்திற்கும் வாங்கியிருக்கவேண்டும்.
அதன் உரிமையாளருக்கும் தனது புதிய வாகனத்திற்கு தேவாலயத்தின் ஆசிர்வாதம் பெறவேண்டும் என்ற நேர்த்திக்கடன் இருந்திருக்கவேண்டும். அவர் சிங்களம் பேசும் கத்தோலிக்கர். அவர் வருடாந்தம் புனித யாத்திரை செல்லும் மன்னார் மடுத்திருப்பதிக்குச்சென்று தனது புதிய வாகனத்திற்கு ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ள தீர்மானித்து தனது மூன்று நண்பர்களுடன் மன்னார் நோக்கி அந்த வாகனத்தில் புறப்பட்டார்.
அவர்கள் செல்லும் பாதையில் வவுனியாவுக்கு அப்பால் இயக்கத்தின் நடமாட்டம் இருந்தமையால். பீதியின் காரணத்தினால் தம்முடன் உறவினர்களான பெண்களை அழைத்துச்செல்லவில்லை.
நீர்கொழும்பில் நூற்றுக்கணக்கான பெரிய தேவாலயங்கள், சிறுதேவாலயங்கள் இருக்கின்றன. அத்துடன் சந்திக்குச்சந்தி கத்தோலிக்க சமயக்கடவுளரின் திருச்சொரூபங்களும் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பான்மையான தமிழ், சிங்களம் பேசும் கத்தோலிக்கர்கள் செறிந்துவாழும் இந்த கடல்சார்ந்த ஊரை ‘சின்னரோமாபுரி’ என்றும் அழைப்பார்கள்.
அத்தனை தேவாலயங்கள் இருந்தும் அந்த பேக்கரி உரிமையாளர் தனது அபிமானத்துக்கும் நம்பிக்கைக்கும் உரிய மடுமாதா திருப்பதியையே தனது வாகனத்தின் ஆசிர்வாதத்திற்காக தேர்ந்தெடுத்திருந்தார்.
அவரும் நண்பர்களும் மடுத்திருப்பதி சென்று பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பியது உண்மை. ஆனால் அவர்கள் இன்றுவரையில் நீர்கொழும்பு திரும்பவிலை.
அவர்கள் மடுவுக்கு வந்ததை பங்குத்தந்தை ஊர்ஜிதப்படுத்தியிருந்தார். அத்துடன் அவர்கள் பிரார்த்தனை முடிந்து ஊர்திரும்பிய தகவலையும் உறுதிசெய்தார்.
ஆனால் அவர்கள் நால்வரும் வீடுதிரும்பவில்லை.
நீர்கொழும்பில் அவர்களின் வீடுகளில் அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது. ஊர் கத்தோலிக்க பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கத்தோலிக்க மதகுருமார் தினமும் வந்து அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். இதனால் அவர்களின் வீடுகள் அமைந்த பகுதிகளில் பரபரப்பும் பதட்டமும் தேன்றியது.
அவர்களை மன்னார் – வவுனியா வீதியில் இயக்கம்தான் கடத்திவிட்டது என்று ஊர் நம்பத்தொடங்கிவிட்டது. அந்தப்பதட்டம் நீருபூத்த நெருப்பாக பரவிக்கொண்டிருந்தது.
ஏற்கனவே 1977, 1981, 1983 காலப்பகுதி கலவரங்களில் நீர்கொழும்பும் தப்பவில்லை.
கோயில்களிலும் எமது இந்து இளைஞர் மன்ற மண்டபத்திற்கும் பயத்தினாலும் பாதிக்கப்பட்டும் வந்துசேர்ந்த தமிழ் மக்களின் தேவைகளை கவனிக்கும் பணிகளில் நண்பர்களுடன் ஈடுபட்ட அனுபவம் இருந்தது. அத்துடன் தமிழ்மக்கள் செறிந்து வாழும் கடற்கரை வீதியில் 1977 இல் தாக்குதலுக்கு வந்த இனவாத தீய சக்திகளை விரட்டியடித்துமிருக்கிறோம்.
1981 இல் டியூப்லற்றுகள், மண்நிரப்பிய போத்தல்கள், முதலானவற்றை ஆயுதங்களாக்கிக்கொண்டு அந்த தீயசக்திகளை எதிர்கொண்டு, பின்னர் பொலிசாரின் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகியிருக்கிறோம்.
நீர்கொழும்பு கத்தோலிக்க சிங்கள இளைஞர்கள் மடுவுக்குச்சென்று கடத்தப்பட்டதனால் தோன்றியிருந்த பத்தட்டத்தை தணிக்க எங்கள் ஊர் கத்தோலிக்க மதகுருமார் மேற்கொண்ட செயற்பாடுகள் விதந்து போற்றத்தக்கவை. மடுச்சம்பவத்தினல் நீர்கொழும்பில் எவரும் இரத்தம் சிந்திவிடக்கூடாது என்பதில் அந்த மதகுருமார் மிகுந்த அக்கறை காண்பித்து செயற்பட்டனர்.
தினமும் தேவாலங்களில் பிரார்த்தனைகளின்போது மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்த ஊரில் காலம்காலமாக நிரந்தரமாக வாழந்துகொண்டிருந்த எம்போன்ற இந்து தமிழர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடமாடிய காலம் அது.
கடத்தப்பட்ட ஒரு இளைஞரின் வீடு எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்தது. அந்த வீட்டிலிருந்து தினமும் அழுகுரல் கேட்டவண்ணமிருக்கிறது. அதனால் எங்கள் வீடும் துக்கம் அனுட்டித்தது. வானொலி, தொலைக்காட்சி முற்றாக தவிர்க்கப்பட்டதுடன், வீட்டின் முன்புறம் இரவில் மின்விளக்கு அணைக்கப்பட்டது.
வீட்டுக்குள்ளே மயான அமைதி நிலவியது.
ஒரு நாள் நான் கொழும்பிலிருந்து வேலைமுடிந்து தாமதமின்றி வீடுதிரும்பிவிட்டேன். என்னிடம் வந்து புதினம் கேட்கும் அம்மா,” என்ன தம்பி…. அவர்களை இயக்கம் விட்டுவிட்டதா? ஏதும் செய்தி தெரியுமா? என்று கேட்டார்கள்.
நான் வீடுதிரும்புவதை வெளியே தெருவில் யாரோ கண்டிருக்கவேண்டும். நான் உடைமாற்றுவதற்குள், வாசல்கதவு தட்டப்படும் சத்தம்.
திறந்தேன். வாசலில் எனக்குத்தெரிந்த ஒரு கத்தோலிக்க இளைஞரும் மேலும் சிலரும். அவர்களின் கைகளில் ஏதும் இல்லை என்பது ஆறுதலாக இருந்தாலும் ஏதும் ஆயுதங்களை மறைத்துவைத்துக்கொண்டு வந்திருப்பார்கள் என்ற சந்தேகமும் வலுத்தது. அவர்களை உள்ளே அழைத்தேன். எனது குழந்தைகள் பயப்பிராந்தியுடன் என்னை அணைத்துக்கொண்டு நின்றார்கள். அம்மாவும் மனைவியும் பின்பக்க கதவுக்கு அருகிலேயே முன்னெச்சரிக்கையுடன் நின்றுகொண்டார்கள்.
வந்தவர்களின் முகம் இறுக்கமாக இருந்தது.
ஒரு இளைஞர் முதலில் வாயைத்திறந்தார்.
“நீங்கள் வீரகேசரியில்தானே வேலை செய்கிறீர்கள்?”
“ ஓம்” என்றேன்.
“எங்கட ஆட்களை உங்கட ஆட்கள் கடத்திட்டாங்க… அவர்களை விடுவிக்கவேண்டும் என்று ஒரு செய்தி உங்கட பேப்பரில் போடுவதற்கு எவ்வளவு காசு வேண்டும்?”
“ செய்தி போடுவதற்கு காசு இல்லை. விளம்பரங்களுக்குத்தான் காசு கொடுக்கவேண்டும். கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை மனிதாபிமானத்துடன் விடுவிக்கவேண்டும் என்று செய்தி வெளியாகிவிட்டது. இதோ இன்றைய வீரகேசரியிலும் செய்தி வந்திருக்கிறது” என்று சொல்லிக்கொண்டு கையிலிருந்த பத்திரிகையை காண்பித்தேன். அத்துடன் அதனை வாசித்தும் காட்டினேன்.
தங்களுக்கு அந்தப்பேப்பர் வேண்டும் என்றார்கள். கொடுத்தேன்.
என்னிடம் வந்தவர்கள் அன்று காலை, நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் சென்று பொலிஸ் நிலைய முன்றலில் கடத்தப்பட்டவர்களுக்காக துக்கம் அனுட்டிக்கும் வகையில் கறுப்புக்கொடி ஏற்றச்சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு மறுப்புத்தெரிவித்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, சிரித்துக்கொண்டு” எங்கட பொலிஸ், இராணுவத்தையும் இயக்கம் சுட்டுக்கொலை செய்துகொண்டுதானிருக்கிறது. அதற்காக நாங்கள் கறுப்புக்கொடி ஏற்றிக்கொண்டிருக்க முடியாது. ஊரில் பதட்டம் ஏற்படுத்தும் வேலைகளை செய்யாமல் அமைதியாக போய்விடுங்கள்.” என்று சொல்லி எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.
அதானாலும் அந்த சிங்கள் கத்தோலிக்க இளைஞர்கள் கோபத்திலிருந்தார்கள். நகரில் பஜார் வீதியில் கறுப்புக்கொடிகளை கட்டுவதற்கு பொலிஸ் அனுமதி வழங்கவில்லை. கத்தோலிக்க மதகுருமார் தொடர்ச்சியாக பதட்டத்தை தணிக்கும் பணிகளில் அர்ப்பணிப்புடன் இயங்கினார்கள்.
வீரகேசரியில் மட்டுமல்ல ஏனைய தமிழ், சிங்கள, ஆங்கில ஏடுகளிலும் ‘மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யுங்கள்” என்ற வேண்டுகோள் தினமும் வெளியாகிக்கொண்டுதானிருந்தது.
நாட்களும் சக்கரம் பூட்டாமலேயே விரைந்து ஓடிவிட்டன. மடுவுக்குச்சென்றவர்கள் தமது வாகனத்திற்கு ஆசி பெற்றார்கள். அவர்களுக்கு பரலோகத்தில் ஆசி கிடைப்பதற்காக இயக்கம் அவர்களை மேல் உலகம் அனுப்பிவிட்டது.
‘காணாமல் போனவர்கள்’ என்ற மரபை ஆயுதப்படைகளும் இயக்கங்களும் உருவாக்கி அந்த மரபில் இணைந்து வந்தார்கள்.
எனது வீட்டுக்கு முன்னாலிருந்து தினமும் கேட்டுக்கொண்டிருந்த அழுகுரல் படிப்படியாக குறைந்துவிட்டது.
கிணற்றில் கல் விழுந்தால் தோன்றி நகரும் நீர் வளையங்கள் படிப்படியாக அமைதி அடைவது போன்று, துயரங்களும் இழப்பின் சோகங்களும் மறைந்துவிட்டாலும் காயங்கள் ஆறுவதில்லை.
கிணற்றின் அடியில் கிடக்கும் கல்லைப்போன்று மனதின் அடியாழத்தில் காயங்கள் தழும்பாகியிருக்கும்.
அயல்வீட்டின் இழப்பையும் சோகத்தையும் நாமும் சிறிது காலம் அனுட்டித்து அவ்வப்போது ஆறுதல் சொல்லிவந்தோம். சில மாதங்களில் நாமும் வேறு வீடு பார்த்துக்கொண்டு சென்றுவிட்டோம்.
எனினும் குடும்பத்தலைவனை இழந்துவிட்ட அயல்வீட்டு விதவைத்தாயும் அந்தக்குழந்தைகளும் எனது நினைவில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் அவர்களின் நினைவுகள் தொடருகின்றன.
அவர்கள் தமது புதிய வாகனத்திற்கு ஆசி பெறுவதற்கு சென்றவர்கள். சிங்களவர்கள் என்பதனால் கடத்தப்பட்டார்கள். இதுபோன்று தமிழர் என்பதற்காக கொல்லப்பட்டவர்கள், கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை தொடருகிறது.
இந்த பாதகச்செயல்களை “கண்டிக்கும்” அத்துடன்“மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கவும்” முதலான கோரிக்கைகள் வேண்டுகோள்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
1984 இல் நடந்த மேற்படி சம்பவத்தை பகைப்புலமாகக்கொண்டு அவுஸ்திரேலியா வந்த பின்பு ‘மனப்புண்கள்’ என்ற சிறுகதையை எழுதி ஒரு பிரபல பத்திரிகைக்கு அனுப்பினேன். ஆனால் பிரசுரமாகவில்லை. வேறு இதழ்களுக்கும் அனுப்பினேன். பிரசுரமாகவில்லை. பின்னர் எனது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பில் ‘மனப்புண்கள்’ இடம்பெற்றது.
குறிப்பிட்ட தொகுப்பை தமிழ் நாடு தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டது. அதன் பதிப்பாளர் அகிலன் கண்ணன், தமது பதிப்புரையில,; ‘அந்தத் தொகுப்பின் மகுடக்கதைதான் மனப்புண்கள்’ என்று விதந்து குறிப்பிட்டிருந்தார்.
கடத்தப்பட்டு காணாமல் போனவரின் குடும்பத்தினர் ஒரு வருடகாலம் துக்கம் அனுட்டித்துவிட்டு, அவர் காணாமல்போன தினத்தன்று தேவாலயத்தில் ஆத்மசாந்தி பூசை செய்துவிட்டு தானம் வழங்கிய கதைதான் மனப்புண்கள். அந்த அயல் வீட்டுக்குழந்தை எங்கள் குழந்தைகளுடன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தது. தந்தை காணாமல் போனபின்னர் எங்கள் வீட்டுக்கு விளையாட வருவதில்லை. இதனால் எனது குழந்தைகளுக்கும் ஏமாற்றம்.
ஒருவருடம் கழிந்து ஆத்மசாந்தி பூசை நடந்தன்று அந்த அயல்வீட்டுக்குழந்தை ஒரு தட்டிலே பலகாரம் எடுத்துவந்து, எங்கள் வீட்டில் கொடுத்து தங்கள் தந்தையின் நினைவாக தானம் கொடுத்ததாக சொன்னபோது எங்கள் குடும்பம் விம்மியது.
அந்தக்குழந்தை மீண்டும் வந்ததைப்பார்த்து எனது குழந்தைகள் மகிழ்ச்சியால் குதூகளித்தனர்.
இந்தப்பின்னணியில்தான் ‘மனப்புண்கள்’ சிறுகதையை படைத்திருந்தேன். ஆனால் இதழ்கள் யாருக்கோ பயந்து சூழ்நிலைகளின் கைதிகளாக அதனை பிரசுரிக்கவில்லை.
எனினும் பலவருடங்களுக்குப்பின்னர் அச்சிறுகதையை இலக்கிய நண்பர் தெனகம ஸ்ரீவர்த்தன என்பவர் சிங்களத்தில் மொழிபெயர்த்து சிலுமின பத்திரிகையில் வெளியிட்டார்.
ஆயுதங்கள் மக்களையும் ஊடகங்களையும் மௌனிகளாக்கலாம். ஆனால் மனிதநேயம் மௌனமாகாது, மரணிக்காது.
எவ்வளவோ சிங்கள நல் இதயங்களினால் தான் இன்றும் பல தமிழர்கள் தென் பகுதிகளில் அமைதியாக வாழ முடிகிறது.