சொல்ல மறந்த கதை

அநாமதேய தொலைபேசி அழைப்பு

முருகபூபதி
அன்று இரவு வீரகேசரியில் பணிமுடியும்போது நடுஇரவும் கடந்துவிட்டது. அங்கு ஒப்புநோக்காளர் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த நானும் நண்பர் தனபாலசிங்கமும் (தற்போது தினக்குரலின் பிரதம ஆசிரியர்) வீட்டுக்குத்திரும்பாமல் அலுவலகத்தின் ஆசிரியபீடத்திலேயே தங்கிவிட்டோம்.
எனக்கு நீர்கொழும்புக்குச்செல்வதற்கு இரவு 12.30 மணிக்குத்தான் கடைசி பஸ். அதனை தவறவிட்டால் பின்னர் அதிகாலை 4 மணிக்குத்தான் மறுநாளுக்கான முதல் பஸ். இரவுக்கடமையின்போது கடைசிபஸ் தவறவிடப்படுமானால் அலுவலகத்திலேயே தங்கிவிடுவது எனது வழக்கம்.
1977 கலவரத்திற்குப்பின்னர், தனபாலசிங்கம் வேலைமுடிந்து நடந்துபோகும் தூரத்திலிருக்கும் கொட்டாஞ்சேனைக்கு நடு இரவில் வீடுதிரும்பமாட்டார். அவ்வாறு வீடு திரும்ப முடியாத ஊழியர்கள் வீரகேசரி அலுவலகத்தில் தங்கலாம். ஆனால் படுக்கை, தலையணை, விரிப்புகள்தான் இருக்காது.
ஆசிரியபீடத்திலிருக்கும் உதவிஆசிரியர்கள் பயன்படுத்தும் மேசைகள் எமக்கு கட்டில். அங்கிருக்கும் வீரகேசரி பிரதிகளும் இதரபத்திரிகைப்பிரதிகளும் தொகுக்கப்பட்ட பெரிய கோவைகளே எமக்கு தலையணைகள். அச்சுக்கூடத்திலிருந்து பத்திரிகை அச்சிடும் நீண்ட தாளை உருவி எடுத்துவந்து மேசையில் விரித்துப்படுப்போம்.
நுளம்புகள் ரீங்காரமிடும். டெங்கு அபாயம் அக்காலத்திலிருந்ததாக ஞாபகம் இல்லை. விட்டத்தில் சுற்றும் மின்விசிறிகள் நுளம்புகள் எம்மை அண்டவிடாது பாதுகாக்கும். ஆனால்… காலை எழும்போது கண்கள் எரியும். மூக்கு அடைத்திருக்கும்.
செய்தி ஆசிரியர்களாக பணியிலிருந்த நடராஜா மற்றும் கார்மேகம் ஆகியோர் சில நாட்கள் இரவுக்கடமையின்போது அங்கு தங்கிவிடுவதும் உண்டு.
அந்த நாட்கள் இனிமையானவை. ஆமர்வீதிச்சந்தியிலிருக்கும் அம்பாள் கபே, வாணிவிலாஸ் தோசை, இடியப்பம் உண்ட நாட்கள் அவை. கெப்பிட்டல் தியேட்டருக்கு அருகில் ஒரு குச்சொழுங்கையிலிருந்த தீவுப்பகுதியைச்சேர்ந்த அன்பர் ஒருவர் நடத்திய சாப்பாட்டுக்கடையில் புட்டும் சம்பலும் முட்டைப்பொரியலும் நண்டுக்குழம்பும் சுவையானவை.
அக்காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியிலிருந்த ஆனந்தசங்கரியும் அங்கு இரவுச்சாப்பாட்டிற்கு வருவதைக்கண்டிருக்கின்றேன்.
அந்தப்பிரதேசத்தில் அந்த சாப்பாட்டுக்கடை பிரசித்திபெற்றது.
மேற்படி மூன்றில் ஏதாவது ஒன்றில் இரவு உணவை முடித்துக்கொண்டு, மீண்டும் பணிதொடங்கி, வீரகேசரி அலுவலகம் தரும் இரவு நேர பால்தேநீருடன் படுக்கை விரித்து உறங்கிவிடுவோம்.
மறுநாள் எழுந்து அங்கேயே சிரமபரிகாரம் செய்து குளித்து உடைமாற்றிக்கொண்டு சீனிச்சம்பலும் பாணும் சாப்பிட்டுவிட்டு மீண்டும்பணி தொடருவோம்.
இப்படி கழிந்த நாட்களில் ஒருநாள் இரவை மறக்கவே முடியாது.
1977 கலவரத்தின் பின்னர் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை படிப்படியாக கூர்மையடைந்துகொண்டிருந்தது. 1978 ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி இலங்கையை குழுக்கிய ஒரு பாரதூரமான சம்பவம் நடந்தது. மன்னார் மடுவீதியில் முருங்கனில் ஒரு காட்டுப்பிரதேசத்தில் இன்ஸ்பெக்டர்கள் பஸ்தியாம்பிள்ளை, பேரம்பலம் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
அனைத்து தினசரிகளிலும் இந்தச்செய்தி வெளியாகி நாடே பரப்பாகியிருந்தது. அன்றைய ஜே.ஆர். அரசும் இச்சம்பவத்தினால் உஷாராகியது.
1977 இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தனாவின் தலைமையிலான யூ.என்.பி. அரசு 1978 ஆகஸ்டில் புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்றியது.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதினம் ஜே.ஆர். ஆற்றிய உரையில் தாம் தார்மீக சமுதாயத்தை (தர்மிஷ்ட சமாஜய) உருவாக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரகடனம் செய்தார். அன்றுமுதல் அவர் எதிரணியினரால் மிஸ்டர் தர்மிஷ்டர் என்று அழைக்கப்பட்டார்.
புதிய சட்டத்தினால் ஜே.ஆர். இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியானார். அவரது புண்ணியத்தினால், பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கும் இந்த ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றவே முடியாமல் இலங்கை இன்றுவரையில் திணறிக்கொண்டுதானிருக்கிறது. அதிகாரங்கள் பல ஜனாதிபதியிடம் குவிந்திருப்பதும் விமர்சனத்துக்குக்காரணம்.
குறிப்பிட்ட புதிய சட்டம் அமுலுக்கு வந்த 1978 செப்டெம்பர் மாதம் புலிகள் இயக்கம் கொழும்பில் பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தனர். பலாலியிலிருந்து கொழும்புநோக்கி வரும் அவ்ரோ ஜெட் 748 விமானத்தில் குண்டை பொருத்தி பாராளுமன்ற கட்டிடத்தைதகர்க்கும் திட்டம்.
1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி காலை முதலில் பலாலிக்குப்பறந்த அந்த விமானம், அங்கிருந்து இரத்மலானை திரும்பி, கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலைத்திற்கு வந்து, அங்கிருந்து பம்பாய்க்கு பறக்கவிருந்தது. எனினும் இரத்மலானை விமானநிலையத்தில் அதனை சுத்தம்செய்யும் தருணத்தில் வெடித்துச்சிதறியதனால், 1931 இல் திறக்கப்பட்ட வரலாற்றுச்சிறப்புமிக்க அந்த பழைய பாராளுமன்ற கட்டிடம் உயிர்தப்பியது.
இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ வெடித்தபோது, கொழும்பு கிராண்ட்பாஸில் மற்றுமொரு சம்பவம் நடந்தது. ஒரு இனந்தெரியாத நபர் வீரகேசரி அலுவலகத்தின் வாயிலிலிருக்கும் பாதுகாவலர் அறையில் (புரயசன சுழழஅ) ஒரு கடித உறையை கொடுத்துவிட்டு மாயமாகிவிட்டார். வீரகேசரி ஆசிரியருக்கு எனத்தலைப்பிடப்பட்ட அந்த உறையை பிரித்துப்பார்த்தபோது ஆசிரியபீடம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.
பஸ்தியாம் பிள்ளை உட்பட மூவரின் கொலைக்கும் உரிமைகோரியும் மேலும் சில கொலைச்சம்பவங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கும் தாமே பொறுப்பு என்றும் தெரிவித்திருந்த அந்தக்கடிதம் பல சந்தேகங்;ளை எழுப்பியிருக்கிறது.
புலிகள் இயக்க லெட்டர்ஹேடில் தட்டச்சுசெய்யப்பட்டிருந்த அக்கடிதம் போலியானதா, நிஜமானதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டி பிரதம ஆசிரியர் சிவப்பிரகாசம் பிரதம செய்தி ஆசிரியர் டேவிட்ராஜூ, சிரேஷ்ட துணை செய்தி ஆசிரியர்கள் நடராஜா, கார்மேகம் ஆகியோர் மந்திராலோசனை நடத்தினர்.
இறுதியில் புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகளை அழைத்து அவர்களின் அனுமதியுடன் அதனை வீரகேசரியின் முதல் பக்கத்தில் பிரசுரிக்க ஆவன செய்தனர். குறிப்பிட்ட முதல் பக்கத்தின் முழுமையான Pசழழக தயாரான வேளையில் நான் அலுவலகத்தினுள்ளே ஒப்புநோக்காளர் பிரிவுக்கு கடமைக்கு வந்துசேர்ந்தேன்.
நண்பர் தனபாலசிங்கத்துடன் அரசியல், இலக்கியம், சமூகம் தொடர்பாக அடிக்கடி உரையாடுவதும் விவாதிப்பதும் அன்றாட நிகழ்வு. அன்றையதினம் நாமிருவரும் இரவுக்கடமையில்வேறு இருந்தோம்.
எங்களது உரையாடல் குறிப்பிட்ட கடிதம் பற்றியே சுற்றிச்சுற்றி வந்தது.
அன்று மதியம் அலுவலகம் வந்த புலானாய்வுப்பிரிவு அதிகாரிகள், குறிப்பிட்ட கடிதத்தின் மூலப்பிரதியை பிரதி எடுத்துக்கொண்ட பின்பே பிரசுரிக்க அனுமதியளித்துள்ளனர்.
இதுபோன்ற கடிதத்தின் பிரதிகள் கொழும்பிலிருந்து வெளியாகும் ஏனைய தமிழ், ஆங்கில, சிங்கள ஏடுகளுக்கும் வந்திருக்கிறதா? என்ற கேள்விக்கு குறிப்பிட்ட அதிகாரிகளிடமிருந்து திருப்திகரமான பதில் இல்லை.
வீரகேசரி இலங்கையில் பிரசித்தி பெற்ற முன்னணிப் பத்திரிகை. விற்பனை எண்ணிக்கையும் அதிகம். அந்தக்கடிதத்தை வீரகேசரிக்கு மாத்திரம் கொடுப்பதன் மூலம் புலிகள் இயக்கம் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கலாம்.
அல்லது அப்படி ஒரு கடிதத்தை தயார்செய்து அதனை வீரகேசரியில் வெளியிட்டு, அதன்பின்னர் அவசரகாலச்சட்டத்தையும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தையும் விரிவுபடுத்தி புலிப்படைத்தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அரசின் புலானாய்வுப்பிரிவு திட்டமிட்டிருக்கலாம்.
குறிப்பிட்ட புலிகளின் கடிதம் வீரகேசரியில் மாத்திரமே வெளியானது. அதுவே எமது ஐயப்பாடுகளின் ரிஷிமூலம்.
அந்தச்செய்தி வெளியான அனைத்து வீரகேசரி பத்திரிகை பிரதிகளும் வெளியாகி சில மணிநேரங்களிலேயே விற்றுத்தீர்ந்துவிட்டன. வீரகேசரி குழுமத்தின் மற்றுமொரு பத்திரிகையான மித்திரனிலும் அச்செய்தி வெளியாகி விற்றுத்தீர்ந்துவிட்டது.
எனது சில இலக்கிய நண்பர்கள் என்னுடன் தொடர்புகொண்டு குறிப்பிட்ட வீரகேசரியின் பிரதிகளை பெற்றுத்தருமாறு பலதடவை கேட்டனர். எனினும் பிரதிக்கு தட்டுப்பாடு நிலவியது.
அந்தக்கடிதம் தொடர்பாக பிரபல இடதுசாரி தொழிற்சங்கத்தலைவர் பாலாதம்பு மாத்திரமே வெளிப்படையாக கருத்துவெளியிட்டிருந்தார்.
புலிப்படைத்தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதற்காகவே, அரசாங்கமே தயாரித்து வெளியிட்ட கடிதம் என்பது அவரது கருத்தாக அமைந்திருந்தது.
அவ்ரோ விமான சம்பவத்திற்கும் அந்தக்கடிதத்திற்;கும் ஒற்றுமை இருந்தது. புலிகள் இயக்கம் ‘உரிமைகோரும்’ மரபு அந்தக்கடிதத்துடன் ஆரம்பமாகியது.
அந்தக்கடிதம் வெளியானதும், புலிப்படைத்தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளன்று இரவுக்கடமை முடிந்து வழக்கம்போன்று வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பேப்பர் விரித்து படுத்துவிட்டோம்.
நடுச்சாமம் கடந்து அதிகாலை 2 மணியிருக்கும். ஆழ்ந்த உறக்கத்தை குழப்பியது ஒரு தொலைபேசி அழைப்பு. அடுத்தடுத்த மேசைகளில் படுத்திருந்த தனபாலசிங்கமும் கொம்போசிட்டர் கதிர்வேல் அண்ணையும் எழுந்திருக்க பஞ்சிப்பட்டனர்.
தொலைபேசி தொடர்ந்து சிணுங்கியது.
“ மச்சான் எழும்பி எடுடாப்பா… இந்த நேரத்தில் யார்தான் எடுக்கிறாங்களோ…” என்று எரிச்சல்பட்டார் தனபாலசிங்கம்.
நானும் சலிப்புடன் எழுந்து தொலைபேசியை எடுத்து, ‘ஹலோ’ சொன்னேன்.
மறுமுனையிலிருந்து ஒரு தடித்த ஆண்குரல். புலிகள் இயக்கத்தின் தலைமைக்காரியாலயத்திலிருந்து பேசுவதாகவும் தொலைபேசி ஊடாக ஒரு அறிக்கை தருவதாகவும் அதனை எழுதி ஆசிரியபீடத்தில் கொடுக்குமாறும் அதிகார தோரணையில் அந்தக்குரல் பேசியது.
உறக்கக்கலக்கத்திலிருந்த நான் திடுக்கிட்டு சுதாரித்துக்கொண்டேன்.
“தற்போது இரவு நேரம். இனி மறுநாள் காலைதான் வீரகேசரி அலுவலகம் பணிகளுக்காக திறக்கப்படும். அப்பொழுது தொடர்புகொள்ளுங்கள்” என்றேன்.
“ பரவாயில்லை. நாம் தருவதை எழுதிக்கொடுங்கள்” என்று அந்தக்குரலுக்குரியவர் வற்புறுத்தினார்.
சொல்லச்சொல்ல எழுதினேன். பலதாக்குதல் சம்பவங்ளை பட்டியலிட்டு அவற்றுக்கெல்லாம் தாமே உரிமைகோருவதாக அந்த அறிக்கை சொன்னது.
“ புலிகளின் தாகம் தமிழ் ஈழத்தாயகம். வணக்கம்.” என்று செல்லிவிட்டு தொடர்பை துண்டித்துக்கொண்டார்.
குறிப்பிட்ட தொலைபேசி அழைப்பு எங்கிருந்தும் வந்திருக்கலாம்.
தனபாலசிங்கத்தை தட்டி எழுப்பி தகவல் சொன்னேன்.
“ எழுதியதை பிரதம ஆசிரியரின் மேசையில் வைத்துவிட்டு படுக்குமாறு” நண்பர் சென்னார்.
திகதி, நேரத்தையும் அதில் குறித்து ஆசிரியரின் மேசையில் வைத்துவிட்டு, மறுநாள் காலை பிரதம செய்தி ஆசிரியர் கடமைக்கு வந்ததும் சொன்னேன்.
மீண்டும் ஒரு மந்திராலோசனை ஆசிரியபீடத்தில் நடந்தது. தொலைபேசி வாயிலாக வந்த அந்த அறிக்கையை வீரகேசரி தீவிரமான கவனத்திற்குட்படுத்தவில்லை.
அக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்துடன் பல்வேறு இயக்கங்களும் களத்திலிருந்து சம்பவங்களுக்கு உரிமைகோரிக்கொண்டிருந்தன.
ஏனைய இயக்கங்கள் புலிகளினால் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டதும், பல சம்பவங்களுக்கு புலிகள் மறுப்பறிக்கை வெளியிடும் மரபையே தொடக்கியிருந்தனர்.

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.