மல்லிகா நாற்பத்தைந்து வயது. பார்ப்பதற்கு அழகாக இந்திய பிராமணப் பெண் போல் சிவப்பு நிறத்தில் இருந்தார். இவரது ஒரு மகள் போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளோடு போராளியாக இறந்தவர். மற்றுமொரு மகள் திருமணமாகி கணவனுடனும் பிள்ளையுடனும் வேறு இடத்தில் வசிக்கிறார். நான் சந்தித்த அந்தப் பெண் போர்க்காலத்தில் கணவனை இழந்தவர்.
எனது ‘வானவில்’ திட்டத்தின் மூலம் கனடிய நண்பர் ஒருவாரால் இந்தப் பெண்ணுக்கு உதவி வழங்கப்படுகிறது. இவரை முதலாவது முறையாக நண்பர் கருணாகரனின் வீட்டில் அழைத்து உரையாடியபோது அழுது விட்டார். அவரது அழுகைக்குக் காரணம் போரின் தொடர்ச்சியால் நிகழ்ந்த இடப்பெயர்வு மற்றும் கணவனின் இழப்பு என்றுதான் நினைத்தேன். ஆனால் அதற்கும்மேல் அவர் பெரிய துயரங்களை சுமந்துகொண்டிருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது. கணவனது உறவினர்கள் இவரை வஞ்சித்து கணவனின் சொத்துக்களை எடுத்துவிட்டு இவரை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். கிளிநொச்சியில் இரண்டு கடைகளை நடத்தி வசதியோடு இருந்த மத்தியதர வகுப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இந்தப் பாதிப்பின் வலி அதிகம்.
இவரது கண்ணீருக்கு இலங்கை இராணுவம்,விடுதலைப்புலிகள் என்பதற்கு மேலாக அவரது உறவினர்களே காரணம் எனத் தெரிந்த போது எனக்கு கலக்கமாக இருந்தது. எப்படி ஆறுதல் சொல்வது?
மவுனமே மொழியாக பதிலாகியது.
வானவில் திட்டத்தில் உதவி வழங்கும் அன்பர்களின் குடும்பங்களுக்கு, பாதிக்கப்பட்ட பெண்களைப் படம் எடுத்து அனுப்பினாலும், இந்த பெண்ணின் கண்ணீரைப் பார்த்து விட்டு படம் எடுக்க மனம் இடம் தரவில்லை.
மனிதர்களின் சோகங்களையும் அவலங்களையும் காட்சியாக்கி விளம்பரப்படுத்தித்தான் உதவி பெறவேண்டிய சமூகத்தில் வாழ்கிறோம். ஆனாலும் சில சந்தர்பங்களில் அது முடிவதில்லை.
கவிஞர் கருணாகரன், “புதிதாக ஒரு பெண்ணுக்கு உதவி தேவை. ஆனால் அவர் மிகத் தொலைவில், இயக்கச்சியில் இருக்கிறார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திக்க முயற்சிப்போம்” எனச் சொன்னதும் அவருடன் தொடர்பு கொண்டோம். அவர் தான் கிளிநொச்சிக்கு வருவதாகச் சொன்னார். கிளிநொச்சியில் உள்ள அகதிச் சிறுவர்களைப் பராமரிக்கும் இல்லமொன்றில் அவருடைய பிள்ளைகள் தங்கிப் படிக்கின்றன. அவர்களைப் பார்ப்பதற்காக வருகிறேன் என்றார்.
ஆகவே அவர் பிள்ளைகளைச் சந்தித்தித்து முடித்த பிறகு, அவரைத் தெருவில் சந்தித்து, அவரது குழந்தைகளுடன் ஓட்டோவில் கருணாகரனது வீட்டுக்கு வரும்படி கூறிவிட்டு நாங்கள் மோட்டார் சைக்கிளில் வந்தோம்.
எலும்பும் தோலுமாக காட்சியளித்த சல்வார் போட்ட சிவகாமிக்கு ஆறுபிள்ளைகள். இதில் மூத்தமகளை கிளிநொச்சி – உருத்திரபுரத்திலுள்ள சென்ற் பத்திமா கொன்வென்ற்றில் விட்டு பராமரிக்கிறார்.
சிவகாமி தற்போது வீதி புனரமைப்பு வேலையில் கூலியாளாக வேலைக்குச் செல்கிறார். அந்தப்பெண் தனது கணவனை எப்படி இழந்தார் என கேட்கக்கூட மனமில்லை.
ஆறுமாதப் பணம் 12 ஆயிரம் ரூபாவை கொடுத்தோம். இலங்கையின் தற்போதைய விலைவாசியில் இது சிறு தொகை என்றாலும் அந்தப் பெண்ணின் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.
2011 நவம்பரில் கிளிநொச்சியில் சாந்தா என்பவரின் வீட்டுக்குச் சென்றபோது அந்த வீட்டின் முன்பாக சிறிய கோழிக் கொட்டில் போடப்பட்டு கோழிக்குஞ்கள் சுமார் ஐம்பது வரையில் நின்றன. அதைப் பற்றி கேட்ட போது, ஒரு தன்னார்வ நிறுவனம் உதவியாகக் கொடுத்ததாக கூறினார். இந்த முறை சென்று பார்த்தபோது அந்தகக் கோழிக் கொட்டில் காலியாக இருந்தது. என்ன நடந்தது? எனக் கேட்டபோது, “எல்லாம் நோய் வந்து இறந்து விட்டன.” என்றார்.
கோழி வளர்ப்பு என்பது சாதாரண விடயம் அல்ல. அனுபவம், அறிவு அத்துடன் ஆர்வமும் வேண்டும். இவர்களுக்கு கோழிக் குஞ்சு கொடுப்போம். முட்டை ஆறுமாதத்தில் கிடைக்கும் என தாங்களே முடிவு செய்து சிலரால், போர்முடிந்த காலப்பகுதியில் உதவி செய்யும் ஆர்வத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள். இவைகள் வீணாகிவிட்டதை அறியமுடிகிறது. தையல் தெரியாத, அதில் ஆர்வமில்லதவர்களுக்கு தையல் இயந்திரம் சுமையாகிவிடுகிறது.
‘வானவில்’ திட்டத்தில் உதவிபெறும் 12 குடும்பங்களில் நேரடியாக ஒருவரைத் தவிர மற்றவர்களைப் பார்க்கக் கிடைத்தது. ஆறுமாதத்தில் நல்ல மாற்றங்கள் நடந்திருக்கின்றன. “ஏதாவது தொழிலை நீங்கள் செய்ய தயாராகும் போது சொல்லுங்கள் நாங்கள் உதவி செய்கிறோம்.” என்றுதான் சொன்னேன்.
மனித மனம் மிகவும் சிக்கலானது. குயவன் சட்டி பானை செய்வது போல் நாம் மனதைப் பிசைய முடியாது.
இந்தப் பெண்களை தெரிவு செய்து தந்ததற்காகவும், கிளிநொச்சியில் உணவு எனக்கு உறைவிடம் தந்ததற்காகவும் கருணாகரன் குடும்பத்தினருக்கு நான் நன்றி சொல்லவேண்டும். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் எத்தனையோ எழுத்தாளர்கள், கவிஞர்கள், போரையும் இராணுவத்தின் கொடுமையையும் விடுதலைப்புலிகளின் அக்கிரமத்தையும் எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். அதற்கும் அப்பால் நான் பார்த்த இருவர் முருகபூபதியும் கருணாகரனும் தான். தாம் எழுதுவதற்கும் அப்பால் மானிடநேசத்துடன் இயங்கும் யதார்த்தவாதிகள். ஏதோ ஒருவிதத்தில் எனது நண்பர்களாகிவிட்டார்கள்.
இம்முறை பயணத்தில் நான் சந்தித்த இந்தப் பெண்களைத் தவிர கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரையும் சந்தித்தேன். அவர் சில விடயங்களைச் சொன்னார். அதைப் பொதுவாக பகிர விரும்புகிறேன்
இலங்கையில் 94 கல்வி வலயங்களில் கிளிநொச்சி 94 ஆவது இடத்தில் உள்ளது. பத்தாம் வகுப்புப் பரீட்சை பெறுபேறுகளின்படி இந்தத் தரம்கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடங்களிலும் இப்பிரதேச மாணவர்கள் பெறும் புள்ளிகளை தனியாகச் சொன்னார். அந்தப் புள்ளி விபரங்கள் மறந்தாலும் கல்வித்தரம் மிகவும் கீழ்நிலையில் உள்ளது. இந்த அதிபர், இதனை எப்படி மேம்படுத்துவது என்ற சிந்தனையிலேயே இருக்கிறார். கிளிநொச்சி இராணுவஅதிகாரியின் மகன் ஒருவர், விடுமுறைநாட்களில் வந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் படிப்பிப்பதாகவும் பாடபுத்தகங்கள் கொண்டுவந்ததாகவும் கூறினார்.
புலம் பெயர்ந்தவர்கள் யாராவது வந்து படிப்பிக்க முடியுமா என்று கேட்டபோது அதற்குரிய வழிமுறையை செய்வதாகக் கூறினார்.
இந்தப்பாடசாலையில் உள்ள குழந்தைகள் இடப்பெயர்வில் அவதிப்பட்டவர்கள். மொத்தமாக இந்தப் பாடசாலையில் 2500 மாணவர்கள் இருக்கிறார்.
இவர்கள் விடுதலைப்போராட்டத்தின் அறுவடைகள். இந்தக் குழந்தைகள் யாரோ செய்த தவறின் சுமையை வாழ்க்கை முழுக்க சுமக்கப் போகிறார்கள்.
இவர்களுக்கு 13 ஆவது சட்டத்திருத்தத்தால் வரும் பொலிஸ் அதிகாரத்தாலோ இல்லை அரசாங்கத்தை மாற்றியமைத்தாலோ என்ன கிடைக்கும்?
இந்தப்பாடசாலையில் தந்தை இல்லாத சுமார் 10 குழந்தைகளின் விபரங்களை தாருங்கள் அவர்களுக்கு, அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை அமைத்த எனது நண்பர் முருகபூபதியிடம் சொல்லி அந்த அமைப்பின் மூலம் உதவிகிடைக்க முயற்சிக்கிறேன் என்றேன்.
இந்தக் கட்டுரையை எழுதும் போது, அந்தப் பத்துக் குழந்தைகளுக்கு உதவி அனுப்பி விட்டதாக முருகபூபதி தொலைபேசியில் சொன்னார்.
குறிப்பு- இதில் குறிப்பிடப்பட்ட பெண்களின் பெயர்கள் புனைப்பெயர்கள்.
Contact :-uthayam12@gmail.com
மறுமொழியொன்றை இடுங்கள்