அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

நொயல் நடேசன், அவுஸ்திரேலியா

1996 ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு 1200 இராணுவத்தினர் இருந்த முல்லைத்தீவு முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டபோது, அங்கு இராணுவத்தினரில் எஞ்சியிருந்தவர்கள் 6 ஆவது விஜயபா படையணியில்

இருந்த எட்டு இராணுவத்தினர் மட்டும்தான். அவர்கள் எண்மரும் தண்ணீர்த் தாங்கியில் மறைந்து பதுங்கி உயிர் பிழைத்தனர்.இந்தத் தாக்குதல் நான்கு நாட்களில் அதாவது 22ஆம் திகதி முடிவுக்கு வந்தது.

வட்டுவாய்க்கல் வன்னிப்பிரதேசத்துடன் முல்லைத்தீவை, இணைக்கும் பிரதேசம். இங்கு 400 இராணுவ வீரர்கள் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த போது அந்த இடத்தில் அவர்கள் எல்லோரும் கொலை செய்யப்பட்டார்கள். எவரையும் போர்க் கைதிகளாக தொடர்ந்து வைத்திருக்க பிரபாகரன் மறுத்ததே அதற்குக் காரணமாகும்.

இதே இடத்தில் விடுதலைப்புலிகள் 2009 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். பதினேழு வருடத்தின்பின் அதேசம்பவம் திரும்பி நடந்திருக்கிறது. அதே விஜயபா படையணியின் விசேடபிரிவினர் 19ஆம் திகதி அதிகாலை பிரபாகரனை சுட்டதாக கூறினார்கள்.
பிரபாகரன் விற்றவை மீண்டும் அவரிடம் திரும்பிவந்தன. ஆனால் பல அப்பாவிகளும் அழிந்தார்களே? தவறானவர்களை எமது சமூகம் பின்தொடர்ந்ததாலா?

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்;

பற்றைக்காடான இந்த மணல்ப்பாங்குப் பிரதேசம், மனித உயிர்களை மொழி, மதத்துக்கு அப்பால் காவு கொண்டிருக்கிறது. பழைய சம்பவத்தை நான் இங்கு கூறவேண்டியதன் காரணம் இருக்கிறது.

சில கவிஞர்களும் எழுத்தாளர்களும் சொல்வது போல் 2009 இல் மட்டும் இந்தப் பிரதேசத்தில் இரத்தம் சிந்தப்படவில்லை. இந்த மண் குருதியால் முன்பும் சேறாக்கப்பட்டிருக்கிறது. சிங்கள இரத்தம் என்றாலும் அது சிவப்பு நிறமானதுதான். அந்த இளைஞர்களும் சம்பளத்துக்காக தமது குடும்பங்களைப் பராமரிக்கத்தான் ஆயுதம் ஏந்தினார்கள். அவர்கள் விடயத்திலும் ஜெனிவா ஒப்பந்தம் கவனிக்கப்படவேண்டும்.

இதை விட விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில் இந்தப் பிரதேசத்தில் அவர்களது  சிறை இருந்தது. தமிழ்நாட்டில் ‘வேலூரில் இருந்தாயா?’ என கேட்பது போல் விடுலைப்புலி அதிகாரத்துக்கு பணிய மறுத்தவர்களை வன்னிப்பிரதேசத்தில் ‘வட்டுவாய்க்காலுக்கு போகப் போகிறாயா?’ என கேட்பார்கள்.காரணம் இங்குதான் புலிகளின் மத்திய சிறையிருந்தது. இந்தச் சிறை அவர்களின் பார்வையில் தமிழ்த் துரோகிகளுக்காக மட்டுமல்ல, குடும்பப் பிணக்கில் மனைவியை அடித்தவர்கள், சிறு களவுகளில் ஈடுபட்டவர்கள், சிறு குற்றங்கள் செய்தவர்கள் என எல்லோருக்கும் தண்டனை அளித்தது. இங்கும் துணுக்காயிலும் கிட்டத்தட்ட 3000 பேருக்கு மேற்பட்ட தமிழர்கள், பின்பு காணாமல் போய்விட்டர்கள். இவர்கள் ஆவியாக போயிருக்க முடியாது. புலிகளினால் கொலை செய்யப்பட்ட இவர்களது இரத்தம் அந்த மண்ணை சேறாக்காதா எனது அருமைக் கவிஞர்களே? உங்கள் பார்வையில் துரோகிகளின் இரத்தம் திரவமில்லையா? இவர்களின் குருதி உறைந்து கட்டியாகி திண்ம நிலையானதா?

இதை விடப் பாரதூரமான விடயம் போரின் இறுதிநேரத்தில், இறுதிக்காலத்தில் சிறையில் இருந்த இராணுவத்தினர் பலர் (அதில் சிலர் கப்டன் தரத்தில் இருந்தார்கள்) புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள். இவர்களை கொலை செய்துவிட்டுத்தான் விடுதலைப்புலிகள் சரணடைந்தார்கள். இதில் எங்கே யுத்த தர்மம் கடைப்பிடிக்கப்பட்டது? அவர்கள் உயிருடன் ஓப்படைக்கப்பட்டிருந்தால் விடுதலைப்புலிகளை சேர்ந்தவர்கள் இன்னும் பலர் தமிழினி போன்று உயிர் பிழைத்திருக்க சாத்தியம் உண்டல்லவா.

இவற்றிற்கு அப்பால் ஊனமுற்றவர்களாக விடுதலைப்புலிகளில் பலர் இருந்தவர்கள். அவர்களில் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் கடைசி நிமிடத்தில் உறவினர்களிடம் கையளிக்கப்படுவார்கள் எனச் சொல்லி பஸ் ஒன்றில் ஏற்றப்பட்டு பின்னர் அந்த பஸ் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. அந்தக்கொடூரத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகள் உள்ளனர் இன்னும் அந்த பஸ் கடைசிச் சண்டை நடந்த அதே இடத்தில் சிதிலமாக இருக்கிறது. இதை நான் மட்டும் சொல்லவில்லை

 நான் அங்கிருந்த ஆயுதக் கிடங்கில் ஒரு வித்தியாசமான சிறு ரக பீரங்கியை பார்த்தேன். அது இரசாயன குண்டுகளை வைத்து சுடுவதற்கானது. இதைபற்றி சிறிது ஆராய்ச்சி செய்த போது ஒருவிடயம் புரிந்தது. சயனைட்டை கழிமண்ணில் கலந்து அதை இரும்பு குண்டுக்குள் வைத்துச் சுட்டால் இரும்பின் வெளியுறை உடைந்ததும் சயனைட் ஆவியாகி மெதுவாக அந்த இடத்தில் வெளியேறும். இந்தக்குண்டுகளை விடுதலைப்புலிகள் பாவிப்பது இராணுவத்தின் மேலிடத்திற்கு தெரிந்தாலும் தங்களது இராணுவத்தினர் பயந்து விடுவார்கள் என்பதற்காக வெளியே சொல்லவில்லை. விடுதலைப்புலிகள் கடைசிக் காலத்தில் மட்டும் இராசாயன பொருட்களை பாவித்தார்கள் என நினைக்கவேண்டாம். 95இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறும் போது யாழ்ப்பாணத்தில் பல கிணறுகளுக்குள் சயனைட்டைப் போட்டார்கள். ஆனால் போட்ட சயனைட்டின் அளவு கிணற்றுத் தண்ணீருக்குப் போதவில்லை. இதற்கு முன்பு 90 ஆரம்பத்தில் குளோரின் வாயுவை பலாலி இராணவத்தளத்திற்கு பாவிக்க முயன்றபோது காற்றினால் அது எதிர்திசைக்கு போய்விட்டது. அதனால் இவர்களுக்கே கண்ணெரியத் தொடங்கிவிட்டது.

நல்ல வேளை இதை விட பல தீய விடயங்கள் அதன் தொழில் நுட்பம் இவர்களுக்கு தெரியாதமையினால் நடைமுறையாகவில்லை.

முல்லைத்தீவு பிரதேசம் இரத்தத்தால் 2009 இற்கு முன்பும் நனைக்கப்பட்டிருக்கிறது என்பதற்காகத்தான் இந்த விடயங்களை கூறினேன்.

அரசபயங்கரவாதத்தை எதிர்க்க 83 இன் பினனர் விடுதலைப்புலிகள் இப்படியான பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தள்ளப்பட்டார்கள் என யாராவது சப்பை கட்ட முயல்வார்கள். அதிலும் சமாதான ஒப்பந்தத்தின் பின்பு வெளிநாடுகளில் புலிகவிஞர்களாக தங்கள் நலன்கருதி ஒட்டிக்கொண்டவர்களும் மெத்தப்படித்தவர்களும் புலி மூலமாவது இலங்கையில் இரத்த வாடையை நுகர முடிகிறது என நினைத்த சில பீக்கிங் சார்பு  இடதுசாரிகளுக்கும், முக்கியமாக தமிழகத்தில் இருந்து திருதராஷ்டிரன் பாரதப்போரை பார்த்தது போல் ஞானக்கண்ணால் பார்க்கும் அறிஞர்களும் இங்கிலாந்தில் இருந்தபடி இலங்கை அரசியலை விழுங்கி சக்கை போடும் யமுனா இராஜேந்திரன் போன்றவர்களுக்காகவும் சில சரித்திரத்தின் ஏடுகளை மீளப் புரட்டுகிறேன்.

81-82 காலப்பகுதியில் கிட்டத்தட்ட 700-1000 இடைப்பட்ட நீர்கொழும்பு பிரதேச மீனவர்கள் (இவர்களில் பலர் இந்திய வம்சாவழியில் வந்த பரவர் இனத்தவர்கள் நீர்கொழும்பில் வாழ்ந்ததால் ரோமன் கத்தோலிக்கராகவும் சிங்களம் பேசுபவர்களாகவும் இருந்தார்கள். இதனை ஆயர் இராயப்புவிடம் உறுதி செய்து கொள்ளமுடியும். இவர்கள் ஒவ்வொரு வருடமும் மடு தேவாலயத்துக்குச் செல்பவர்கள்) இந்த அப்பாவி மீனவர்கள்தான் கொக்கிளாய் நாயாறுப்பகுதியில் கொலை செய்யப்பட்டார்கள். லொரிகளில் குடும்பங்களாக ஏற்றி காட்டுக்குள் கொண்டு சென்றபின் பெரியவர்களை துப்பாக்கியால் சுட்டபின் எஞ்சிய சில சிறுவர்களின் நாக்குகளில் சயனைட் தடவினார்கள். காரணம் அக்காலத்தில் குண்டுகளை வீணாக்க விரும்பவில்லை. இதைப் பார்த்த சாட்சிகளையும் இந்த மீனவர்களை புதைப்பதற்கு உதவியவர்களையும் இன்று என்னால் கொண்டு வரமுடியும்.

விடுதலை இயக்கங்கள் அரசுக்கு எதிராக வன்முறையை பாவிக்கும் போது அப்பாவிகள் தற்செயலாக இறப்பது துரதிஸ்டவசமானது. இது சில சந்தர்பங்களில் நடந்திருந்தால் அதை பொருட்படுத்தாமல் போகலாம். ஆனால் விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை தங்களது முக்கிய ஆயுதமாக பாவித்தார்கள். இவர்கள் சந்தர்ப்பவசத்தால் கெட்டுப் போனவர்கள் அல்ல. அரச பயங்கரவாதத்தால் இடையில் பயங்கரவாதிகளானவர்களுமல்ல. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் அப்படித்தான். இது தமிழர்களுக்கும்…ஏன் பல சிங்களவர்களுக்கும் புரியவில்லை.

வன்முறையின் வெளிப்பாடு போர் என்பது எவருக்கும் தெரியும். ஆனால் காலம் காலமாக போருக்கு விதிமுறைகள் இருக்கின்றன. தார்மீகம், சத்தியம் என்பன அங்கு இருக்கவேண்டும். இதற்கு நாங்கள் மேற்கு நாடுகளுக்கோ ஜெனிவாவிற்கோ போகத்தேவையில்லை. பாரதம், இராமாயணம் என்ற எங்கள் செவ்விலக்கியங்களில் எங்கும் நிரம்பி இருக்கிறது. போர் தர்மம் ஒருசாராரிடம் மட்டும் இருக்கவேண்டும் என்பது எப்படி நியாயமாகும?; வன்முறையில் ஈடுபடுபவர்கள் அதிகாரத்தில் இருக்கும் போது தர்மத்தை பற்றி நினைப்பதில்லை. தோல்வியில் முடியும்போது யுத்ததர்மத்தையும் ஜெனிவா போர்முறையையும் பேசுவது பிரயோசனம் அற்றது.

சரித்திரத்தை மட்டும் சொல்லி விட்டு நான் போகத் தயாரில்லை. தற்போது நான் பார்த்த நிலையையும் கோடுகாட்ட விரும்புகிறேன்

இதற்கு முன்பு முல்லைத்தீவுக்கு நான் சென்றதில்லை. ஆனால்ஏனைய கிளிநொச்சி, வவுனியா, அநுராதபுரம் மற்றும் பொலநறுவை முதலான இலங்கையின் வரட்சியான பகுதிகளுக்கு பிரயாணம் செய்திருக்கிறேன்;. நான் கடந்த ஜுன் மாத நடுப்பகுதியில் இலங்கை சென்றபோது கடைசியாக சண்டை நடந்த சுமார் 10 கிராம சேவகர்கள் பிரிவுகளில் மக்கள் கிட்டத்தட்ட   பத்தாயியிரம் பேர் இன்னும் குடியேறவில்லை என்ற தகவல் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரால் சொல்லப்பட்டது.

நான் வாகனத்தில் சென்ற போது ஒரு ஐரோப்பியப் பெண் ஒரு கண்ணிவெடியை செயலிழக்கப் பண்ணியதைப் பார்த்தேன். இந்த இடங்களில் பல சண்டைக்கு முந்தியகாலத்தில் ஆயுத கிடங்குகளாக பயன்படுத்தப்பட்டதால் பாதுகாப்பிற்காக கண்ணிவெடி புதைக்கப்பட்டிருந்தவை. சமாதான காலத்திலே சாதாரணமானவர்கள் அங்கு செல்வது தடுக்கப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் இருந்தபோதும் முல்லைத்தீவுதான் அவர்களின் கேந்திரமுக்கியத்தவம் பெற்ற பிதேசமாக இருந்தது. இங்கு ஆயுதக் கிடங்குகள் கடற்படைத்தளங்கள், பயிற்சித்தளங்கள் என்பன இருந்தன

யுத்தம் நடந்து 3 வருடங்களில் பத்து தடவைக்கு மேல் இலங்கை சென்றாலும், முல்லைத்தீவுக்குச்செல்ல சமீபத்தில்தான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப்பயணத்தில், கவிஞர் கருணாகரனுடன் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்வண்டியில் பரந்தனில் இருந்து சென்றேன் கிளிநெச்சியை அண்டிய பிரதேசங்கள் நெல் விதைக்கப்பட்டு விவசாயம் செய்யப்படிருந்தது. மக்கள் தங்களது சோலிகளை கவனிக்கச் சென்றார்கள் அந்த பஸ் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் ஆசிரியர்களால் நிறைந்திருந்தது.

பஸ் பயணத்தில், எதிர்நோக்கிய அசௌகரியம் காற்றில் வரும் புழுதி மூக்குக்கண்ணாடியில் படிவதுதான். இந்தச்சந்தர்ப்பத்தில் ஒரு சுவாரஸ்யத்தையும் சொல்ல விரும்புகின்றேன்.
அக்காலத்தில் விடுதலைப்புலிகளின் அவுஸ்திரேலிய பொறுப்பாளர் தில்லை ஜெயக்குமாரிடம் ‘எங்கே கனகாலம் காணவில்லை’ என்று கேட்டால், ‘மண்ணுக்கு போய் வந்ததாகச்’ சொல்வார். அவர் இந்த புழுதியைதான் சொன்னாரா என நினைக்கிறேன்.

இதே நேரத்தில் பத்மநாபா, ‘தாங்கள் மக்களைத்தான் நேசிக்கிறேம். மண்ணையல்ல’ என இந்தியாவில் கூறியதும் நினைவுக்கு வந்தது
புதுக்குடியிருப்பு சந்தியில் முன்னாள் பாராளுமன்ற அங்கத்தவர் கனகரத்தினம் எங்களை சந்தித்து தனது ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்ற போது வழியெங்கும் சண்டையின் தழும்புகள் தெரிந்தன. உடைந்த கட்டிடங்களின் சுவர்கள் தலையற்ற தென்னை மரங்கள் யுத்தத்தின் அகோரத்தை பறைசாற்றின.
• முன்னாள் அங்கத்தவர் எம்முடன் வரும் போது பலருடன் கலந்துரையாடி சில பணிகளில் ஈடுபட்டார்
நான் அவரிடம், “நீங்கள் கூட்டமைப்பில் இருந்திருந்தால். இப்படியான வேலைகள் செய்யாமல், சில அறிக்கைகளை விட்டுவிட்டு, வெளிநாட்டு வானொலிகளுக்கு பேட்டி கொடுப்பதோடு உங்கள் சோலி முடிந்திருக்குமே” என்று கேட்டபோது அவர் சிரித்தார்

அந்தச் சிரிப்பில் அப்பழுக்கற்ற கிராமியத் தன்மை தெரிந்தது

‘நான் நேற்று மணலாறு சென்றேன். அங்கும் மக்கள் துன்பப்படுகிறர்கள். அங்கு இடம் பெயர்ந்தவர்களைப் பார்த்தபோது மனக்கஷ்டமாக இருக்கிறது’ என்று அவர் சொன்னபோது மொழிபேதமற்ற அரசியல் வாதியாகத் தெரிந்தார். ஆனால் எமது சமூகம் அப்படியானவர்களை கண்டுகொள்வதில்லை.

கடற்புலித்தளபதி சூசையின் வீடு இப்பொழுது சுற்றுலா இடமாக மாற்றபட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்காக பல கடைகளை இராணுவத்தினர் திறந்துள்ளனர்
அங்கிருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனது வீட்டை நோக்கிச் சென்றேன். அது ஒரு இராணுவ கோட்டைபோல் காட்டுக்குள் இருந்தது. நிலத்துக்குக் கீழ் நாலு தளங்களுடன் இரும்பு கதவுகள் கொண்ட வீடு.

ஒரு விதத்தில் மனிசன் பாவம்.தன்ர உயிரைப்பற்றி எவ்வளவு கவலைப்பட்டிருந்தார் என்பது அந்த அரண்கள் நிறைந்த வீட்டைப்பார்த்தால் விளங்கும். அதே நேரத்தில் மற்றவர்கள் உயிருக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல் இருந்திருக்கிறார் என்பது ஆத்திரத்தைத் தருகிறது. தனது தலைமயிரையும் மீசையையும் கரும் சாயம் அடித்து காப்பாற்றிக்கொண்டிருந்தார் என்பது அவரது கடைசி போட்டோவை பார்த்தால் தெரியும்.

‘அடப்பாவி உன்ர மசிருக்கு இவ்வளவு கவனம் எடுத்திருக்கிறாய். அந்த மூன்று இலட்சம் மக்களுக்கு அந்த மரியாதை கூட கொடுக்கவில்லையே’ என நினைக்க வைத்தது.

ஏராளமான சிங்கள மக்களை அங்கு கண்டேன்  முன்பு வடமாகாணத்தில் மடுவிலும் நயினாதீவிலும் மட்டும்தான் சிங்கள மக்களை சந்திக்க முடியும்.
ஒரு விதத்தில் இலங்கையை ஒரு நாடாக இணைத்த பெருமை பராக்கிரமபாகு மன்னனுக்குப் பின்பு பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும்தான் சாரும்

தமிழ்தலைவர்கள் பிள்ளையார் பிடிக்க குரங்காகின கதைதான் தொடர்ந்து அரங்கேறுகிறது.

இதுவெல்லாம் நடந்த கதை.

இந்த 60 வருட கதையில் இருந்து என்ன புரிந்துகொண்டோம்? என்ன பாடத்தை கற்றுக்கொண்டோம்?

இலங்கையில் நடந்த விடயங்களுக்கு யார் பொறுப்பு என பார்த்தால், தண்டிக்க நினைத்தால் இரண்டு பக்கத்திலிருந்தும் எவரும் தப்ப இயலாது. தமிழ் தரப்பினரும் சிலுவை சுமக்க வேண்டியிருக்கும்.

இலங்கையில் சகல இனங்களும் அரசியல்வாதிகளின் தவறான வழிகாட்டுதலால் இரத்தம் சிந்தியுள்ளன. தொகையில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் இழப்புகள் பொதுவானவை.

வெறும் மண்ணை நினைத்து மனிதரை காவு கொடுத்தவர்கள் தமிழ் அரசியல் வாதிகளும் விடுதலைப்புலிகளும். இப்பொழுது புலிசார்பு வெளிநாட்டு தமிழர்கள் மற்றும் தற்போதைய சம்பந்தன் போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் இறந்தவர்களின் ஆவிகளை நினைத்துத் தப்பி உயிர்வாழும் தமிழர்களை அழிப்பதில் வேட்டியை தூக்கிக் கொண்டு நிற்கிறார்கள்.

எஞ்சி இருக்கும் மக்கள் மத்தியில், இலங்கையில் இன மத சமத்துவமான ஒரு நாட்டை கட்டி எழுப்புவதற்கு யார் முன்வருவார்கள் என்பதே இன்று இருக்கும் கேள்வி.
இதற்கான பதில் இந்தியாவில் இருந்தோ அமெரிக்கவில் இருந்தோ ஜெனிவாவில் இருந்தோ வரமுடியாது. எமது மக்கள் மத்தியில் இருந்துதான் வரவேண்டும்;.

நல்லது நடக்க நல்லது நினைப்போம்.

—–0000—-

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

 1. Bharthipan சொல்கிறார்:

  Dear Nadesan,
  Who is responsible to this one. I am sure not prabakaran. Bloody tamil society is only responsible to this one. if singala does not govern us (If tamil eelam was born ) definitely I will say that this tamil eelam would be a exact xerox of Saudi arabia. Because in normal sense tamils have never respect any democratic aspects or policy alternatives. they are following typical bloody feudalistic ideology even in this centuary. prabakaran absolutely represent this ideology that is all. Then how can I blame Prabhakaran alone. Am I correct.
  bharthipan

  • noelnadesan சொல்கிறார்:

   I agree 100 %. If we consider our Jaffna society as a arrow, he was like a poison at the sharp end. He enhanced it. This was same with Adolf Hitler in Germany. The reason we have to focus on him even after death, we do not want him have martyrdom or some kind of Anti- Government symbolism which will be cause problem for future generation. This where I disagree with many writer like SD Sivaram or even with DBS some extent

 2. ramaswamy சொல்கிறார்:

  Useless scrap words selfish post this is what i see from your words… I believe there is still a very big time for an independant Tamil eelam.. One thing is sure Eelam will not blossom alone it will merge with Tamil Nadu.. Life spam of india is still for another 25-40 years from my political knowledge.. At the end of this many new countries will emerge at the time… I am not a fond of any predictions or astrologies but still i believe in “swamy potuluri veerabrahmendra predictions”
  He says there will be blood shed near rameshwaram and hindus will be killed in lakhs it happened now.. and there will be big destruction as some parts in south india will be drowned and north and south india will be splitted as a new hindu kingdom will emerge..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.