லெ. முருகபூபதியின் மூலம் அறிமுகமாகிய நண்பர்களில் முக்கியமானவர் நோயல் நடேசன். 2010 இல் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தபோது முருகபூபதி நடேசனை அறிமுகப்படுத்தினார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே நடேசன் நெருக்கமானார். அதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு உதவி வருகிறார்.
அண்மையில் வன்னிக்கு வந்திருந்தார் நடேசன். வன்னியில் இது நடேசனுக்கு இரண்டாவது பயணம். இரண்டு பயணங்களும் அவருக்கு ஆச்சரியமாகவே இருந்தன. இருக்காதா பின்னே! தன்னுடைய வாழ்நாளில் வன்னிக்கு செல்வேன் என்றோ, வன்னியில் சில இடங்களுக்குப் போவேன் என்றோ, யாருமே பார்க்க முடியாதிருந்த முக்கியமான சிலவற்றைப் பார்ப்பேன் என்றோ அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. நடேசனின் அரசியல் நிலைப்பாடு வன்னிக்கான தடையை விதித்திருந்தது. அவர் புலிகளின் அரசியலையும் அதனால், புலிகளையும் கடுமையாக எதிர்க்கும் தரப்பைச் சேர்ந்தவர். இதற்காகவே அவர் அவுஸ்ரேலியாவில் ‘உதயம்’ என்ற பத்திரிகையைக் கடந்த பதின்மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடத்தினார். அதனால் ஏராளம் அச்சுறுத்தல்களையும் நெருக்கடிகளையும் சந்தித்தவர் நடேசன். அதெல்லாம் வேறு கதை. அவை பலருக்கும் தெரிந்த கதைகள். ஆனாலும் நடேசன் ஒரு பிடிவாதக்காரர். தான் எடுத்துக்கொண்ட அரசியல் நிலைப்பாட்டைக் கைவிடாமல், கடைசிவரையில் அதைப் பின்பற்றிச் செயலாற்றி வந்தார். அவர் நடத்திய பத்திரிகையையும் அவர் கைவிடவில்லை. போருக்குப் பின்னரும் உதயம் வெளிவந்ததாகத் தகவல். மோதல்களும் எதிர்ப்புகளுமே நடேசனைப் பிரபலமாக்கின. கூடவே அவர் ஆற்றுகின்ற செயல்களும்.
புலிகளின் தோல்வி நடேசனின் அரசியல் நிலைப்பாட்டில் பாதி வெற்றியைத் தந்தது. அவர் இலங்கைக்கு வந்து போகக்கூடிய வழிகளையும் திறந்தது. அதனால்தான் இந்தப் பயணங்களும் சாத்தியமாகியிருந்தன. வன்னியில் அவர் பல இடங்களுக்கும் சென்றார். எதிர்பார்த்தேயிராத பலரையும் சந்தித்தார். என்னையும் சந்தித்தார். நாங்கள் பலதையும் பேசினோம். அவருக்கு ஏராளம் ஆச்சரியங்கள். முக்கியமாக நவம்பர் 27 மாவீரர் நாளன்று தான் கிளிநொச்சியில் நிற்கிறேன் என்பது. இது நடந்தது 2011 இல். அதுதான் அவர் வன்னிக்கு வந்த முதற்பயணமாக இருக்கவேணும். அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருக்கும் அக்கராயன்குளம் – கிளிநொச்சி வீதியால் நடேசன் பயணித்தார். ஆனால், அங்கே மாவீரர் துயிலும் இல்லம் இருக்கவில்லை. பதிலாக எருக்கலஞ்செடிகளும் முட்புதர்களுமே மூடிவளர்ந்திருந்தன. அங்கே நின்று நடேசன் சில படங்களை எடுத்தார். அந்தக் கணத்தில் அவருடைய மனதில் என்ன தோன்றினவோ! இவ்வளவு மரணங்களும் எங்களுக்கு எதைத்தான் தந்தன? நாங்கள் எதற்காக இப்படி விலையைக் கொடுத்தோம் என்றவாறு பேசிக்கொண்டு வந்தார். இட்டு நிரப்ப முடியாத அளவுக்குத் துக்கம் இடையில் நின்றது.
உண்மையில் அப்படியொரு நாளில் தான் கிளிநொச்சியில் நின்றிருக்கச் சாத்தியமே இல்லை என்றார் நடேசன். வரலாறு மாறிவிட்டது. அதனால், நிகழ்ச்சிகளும் நிலைமைகளும் மாறிவிட்டன. முன்னர் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த வேளை புலம்பெயர் நாடுகளில் இருந்து வன்னிக்கு வரும் புலிகளின் ஆதரவாளர்கள், அபிமானிகள் வன்னியில் பல இடங்களுக்கும் செல்வார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களுக்கும் செல்வார்கள். அங்கே இருக்கும் கல்லறைத் தோட்டங்களையும் பார்ப்பார்கள். விதவிதமாகப் படங்களையும் பிடித்துக்கொள்வர். அதைப் பார்ப்பதற்கென்றே புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகின்ற பலரைப் பார்த்திருக்கிறேன். வன்னிக்கு வந்தால் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் செல்லும் ஒரு வழமையும் பிறகு ஏற்பட்டிருந்தது. அநேகமாக வன்னிக்கு வந்து திரும்பும் புலம்பெயர்ந்தவர்கள் அனைவரின் அல்பங்களிலும் கல்லளைத் தோட்டத்தின் படங்கள் இருக்கும். விதிவிலக்குகளுக்கு இடம் குறைவு.
அந்த அளவுக்கு மாவீரர் துயிலும் இல்லங்கள் (அந்தக் கல்லறைத் தோட்டங்கள்) ஒரு காட்சிப் பொருளாக, கவர்ச்சிப் பொருளாக மாறியிருந்தன. அப்படித்தான் இதைப் பெரும்பாலான தமிழ்ச்சமூகம் கருதிக் கொண்டிருந்தது.
ஆனால், அங்கே இருக்கும் கல்லறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகம். ஒவ்வொரு மனிதரின் முகங்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இடையில் முறிந்து போனது. ஆனால், அவர்களிற் பெரும்பாலானோர் எப்படியோ ‘இந்தச் சனங்களுக்காக’ எனத் தங்கள் உயிர்களை ஈந்தவர்கள். அதிலும் மிக இளவயதில், வாழவேண்டிய பருவத்தில்.
வரிசையாக, அணிவகுத்து ஒரு பெரும் படையணியைப் போல இருக்கின்ற இந்தக் கல்லறைகளை எத்தனை தாய்மாரின் கண்ணீர் நனைத்திருக்கும்? அவர்கள் இங்கே தங்களின் பிள்ளைகளுக்காக எவ்வளவு கண்ணீரைச் சிந்தியிருப்பர்! பிள்ளைகளாயின் தங்களின் தந்தையருக்காகவும் தாயருக்காகவும் எப்படியெல்லாம் உருகியிருப்பர்? ஆனால், இதைப் பெரும்பாலானவர்கள் ஆழமாக உணர்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தங்களின் விருப்பங்களுக்காகவும் எதிர்பார்ப்புகளுக்காகவும் தங்களால் செய்ய முடியாதவற்றைச் செய்து மடிந்ததற்காக உள்ளுர ஒருவித மதிப்பை இந்தக் கல்லறையில் வீழ்ந்தவர்களுக்காகக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். அதற்கப்பால், இரத்தமும் சதையுமான வாழ்க்கையை இடையில் முறித்துத் தங்களை இழந்தவர்களைப் பற்றிய துயரம் இவர்களிடம் இல்லை. அப்படித் தங்கள் இன்னுயிரை இழப்போரைக் குறித்த ஆழமான – உண்மையான துயரம் இருந்திருக்குமாயின் இன்னும் போரிலும் போர்ச்சுமையிலும் ஏனைய போராளிகள் சிக்கியிருக்கும்போது இவர்கள் எல்லாம் எப்படித் தூர நின்றனர்? அழுத்தும் பாரச் சுமையை இறக்குவதை விடுத்து, ‘விடாதே பிடி’ என்று சொல்ல எப்படி மனம் வந்தது இவர்க்கெல்லாம்? தங்களொத்த வயதையுடையோர் வாழ்வைக் காட்டிலும் மேட்டிலும் போர்க்களத்திலும் கழித்து மாள்கையில் இவர்கள் படிப்பு, பட்டம், தொழில், பணம் என்றெல்லாம் வழிகண்டு, வசதிபெருக்கி வாழமுனையும் மனவேட்கையை என்னவென்பது? இதைவிடக் கொடுமை வேறென்ன? தங்கள் பிள்ளைகளின், சோதரரின் வயதொத்தவர்கள் போரில் வெந்து மடிகையில் ‘விடுதலை வேட்கையில் அவர் ஆகுதியாகிறார்’ என்று சொல்லித் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் தந்திரத்தை எப்படிச் சொல்வது?
இப்பொழுது எல்லாமே மாறிவிட்டன. எல்லாமே மாற்றப்பட்டு விட்டன. எல்லாக் கல்லறைகளையும் படையினர் இடித்தழித்து விட்டார்கள். இது முறையா, என்பதைக் கூடிய அவர்கள் ஒரு கணமும் சிந்திக்கவில்லை. சுவடுகளை அழிப்பது வரலாற்றிற்குப் புதியதல்ல. இனிக் கண்ணீரைப் பெருக்குவதற்கும் அதைக் காட்சிப் பொருளாக்குவதற்கும் விதியில்லை. தலைகீழாகி விட்டது எல்லாமே. மனிதர்களை மதிக்காத விதி வந்து பாம்பைப் போல காலைச் சுற்றுகிறது. இறந்தவர்களை யார்தான் மதித்தார்? வீழ்ந்தவர்களை யார் கணக்கிற் கொள்கிறார்கள்? வரலாற்றின் கொடுமையும் விசித்திரமும் இதுதானா!
நடேசனின் படங்கள் இன்னொரு முகமுடையன. ஒரே துயிலுமில்லம் எப்படிக் காட்சி மாறியுள்ளது? வரலாற்றிற்குத்தான் எத்தனை முகங்கள்?
அன்று நடேசன் இன்னும் சிலரைச் சந்தித்தார். அவர்களில் சிலர் போராளிகுடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், போரினால் பாதிக்கப்பட்டவர்கள். போரிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் நோக்கின் அடிப்படையில் அவர் அவர்களைச் சந்தித்தார். ஆனால் யாரிடமும் நடேசன் அரசியல் பேசவில்லை. அவர்களுடைய கடந்தகாலத்தைப் பற்றி அவர் விசாரிக்கவில்லை. இன்றைய வாழ்க்கையைப் பற்றி, அவர்களுடைய எதிர்காலத் திட்டங்களைப் பற்றியே அவர் கதைத்தார்.
அன்றைய மாலைநேரம் பற்றி நான் நடேசனுக்குச்சொன்னேன். அதிகார மாற்றங்கள் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. வழமைகள் மாறுகின்றன. அல்லது மாற்றப்படுகின்றன. இதுதான் வரலாறா?
வாழ்க்கை என்பது அதிகாரம் வரையறுக்கின்ற ஒன்றா? அல்லது அதிகாரம் வழங்குகின்ற சலுகையா? அல்லது அது வகுக்கின்ற விதியா?
பிறகு அவர்
இதையெல்லாம் என்னவென்பது?
நடேசன் கிளிநொச்சியில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டுச் சென்றார்.
அடுத்த பயணமாக இவர் கடந்த மாதம் (2012 ஜூனில்) மீண்டும் வன்னிக்கு வந்திருந்தார். இந்தத் இந்தத் தடவை அவருடைய பயணத்திட்டமாக முல்லைத்தீவுக்குச் செல்வதாக இருந்திருக்க வேணும். அதற்கு முன்னர், அவர் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் குடும்பங்களைச் சந்திக்க விரும்பினார். அதன்படி முதல்நாள் சந்திக்கக் கூடியவர்களைச் சந்தித்து பேச வேண்டியதையெல்லாம் பேசி, கொடுக்கவேண்டியவற்றைக் கொடுத்தார். தொடர்ந்து ஏதாவது தொழில்முயற்சிகளைப் பற்றிச் சிந்தியுங்கள். பொருத்தமான தொழிலைக் கண்டறிந்தால் சொல்லுங்கள், அதற்கான உதவிகளைச் செய்யலாம் என்று சொல்லி அனுப்பி விட்டு முல்லைத்தீவுக்குப் பயணமானார். என்னையும் தன்னோடு வருமாறு அழைத்தார்.
பேருந்துப் பயணம். குண்டும் குழியுமான வீதியில் புழுதி நிறைந்த பயணம். புதுக்குடியிருப்பில் இறங்கினோம். அங்கே பிரதேச சபை வளாகத்தில் சனங்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் எச்சங்கள் குவிக்கப்பட்டிருந்தன. எதற்கும் உதவாதவை. வேணுமானால் மிகக் கழிவு விலையில் பழைய இரும்பாக விற்கலாம். ஆனால், அதற்கும் அனுமதி எடுக்க வேண்டும். அதற்கு அலைந்து திரியும் நேரத்தை விட இப்படியே உக்க விடலாம். நடேசன் விவரம் கேட்டார். சொன்னேன். ‘சனங்கள் இறுதிப்போரின்போது கைவிட்டவை. கழற்றக் கூடியதை எல்லாம் கழற்றி விட்டார்கள். இப்பொழுது சக்கை மட்டும் காட்சிக்குக் குவிக்கப்பட்டிருக்கு’ என்று.
பிறகு நாங்கள் ஒரு நண்பரின் உதவியோடு, புதுக்குடியிருப்புப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டுக்குச் சென்றோம். அது கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் வீடு என்றார்கள். அந்த வீட்டைப்பார்க்கவென்று சிங்களவர்களும் தமிழர்களும் முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள். அங்கே உணவுப்பொருட்களையும் சிற்றுண்டிகளையும் விற்கின்ற கடைகளும் இருந்தன. தினமும் பெருகி வருகின்ற பார்வையாளரை இலக்கு வைத்த வியாபாரம் செய்யும் கடைகள்.
சூசையின் வீட்டில் பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தன. மிக விசாலமான பதுங்குகுழிகள். ஒரு பதுங்குகுழி வீட்டினுள்ளே இருக்கும் அலுமாரியின் கீழிருந்து செல்கிறது. ஏனையவை வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டவை.
அதைப் பார்த்து விட்டு, புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருக்கும் பதுங்குகுழியைப் பார்க்கச் சென்றோம். அங்கும் குறிப்பிட்ட நண்பரே எங்களை அழைத்துச் சென்றார். காட்டுப் பாதையால் வாகனம் வளைந்து வளைந்து சென்றது. இருளடர்ந்த காடு. போகும் வழியில் இடையிடையே கைவிடப்பட்ட காப்பரண்கள். ஆனால், எல்லோமே உருமறைப்பில் இருந்தன.
இருபது நிமிடப் பயணத்தின் முடிவில், ஒரு வட்டப் பாதை தெரிந்தது. அது தார்பூசப்பட்ட பாதை. அருகில் ஒரு படை முகாம். அதை அண்மித்து வாகனங்கள் நின்றன. அங்கேதான் அந்தப் பெரிய பதுங்குகுழி இருந்தது. அதைப் பற்றி அங்கே பெரிய விளக்கப்படத்தை வரைந்து குறிப்புகளையும் எழுதியிருந்தார்கள். போதாக்குறைக்குச் சிங்களத்தின் விளக்கமளித்தனர் படைச்சிப்பாய்கள்.
அது பிரபாகரனின் பதுங்குகுழி என எழுதப்பட்டுள்ளது. அவ்வாறே அங்கே சொல்கிறார்கள். முன்தோற்றத்தில் தெரியும் பெரிய முகப்புடைய வீடு. ஆனால், வெளியே தெரியாதவாறு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தது. வீட்டினுள் நுழைந்து படியிறங்கினால், ஒவ்வொரு தளமாக இறங்கிக்கொண்டேயிருக்கலாம். ஒவ்வொரு தளத்திலும் விசாலமான அறைகளும் மண்டபங்களும் காப்பிடங்களும். இறுதியில் நான்காவது தளமுண்டு. அந்தத்தளத்திலிருந்து வெளியே செல்வதற்கு மாற்றுப் பாதைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வியப்பூட்டும் அளவுக்கு இருந்தது அதன் அமைப்பு.
தரைக்கு மேலே பல அடுக்குகளைக்கொண்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்களைப் பார்த்திருக்கிறோம். நிலத்துக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ள சில கட்டிடங்களையும் பார்த்திருந்தாலும் இந்த அளவுக்குக் கீழ் நோக்கி, நான்கு அடுக்குகளைக் கொண்ட கீழ்வீட்டை என்வாழ்நாளில் பார்த்ததில்லை. நடேசனுக்கும் இது ஆச்சரியமே. அவருக்கு இன்னொரு ஆச்சரியம், பிரபாகரனின் பங்கரைப் பார்ப்பது. வரலாற்று மாற்றங்கள் நிகழவில்லை என்றால் இந்த இடத்துக்கு அவரால் வந்திருக்க முடியுமா?
தொடர்ந்து நாங்கள், முல்லைத்தீவுக்குப் பயணித்தோம். வழியில் மந்துவில் என்ற இடத்தில் அரசாங்கம் அமைத்திருக்கிற போர் நினைவுச் சின்னத்துக்கு அண்மையில் உள்ள போர்ப்பொருட்களின் மியூசியத்தைப் பார்த்தோம். அங்கே காட்சிப்படுத்தப் பட்டுள்ள, சேகரித்து வைக்கப்பட்டுள்ள அத்தனை ஆயுத – யுத்த தளபாடங்களும் விடுதலைப்புலிகளுடையவை. அவர்களால் தயாரிக்கப்பட்ட படகுகள், பீரங்கிகள், நீர்மூழ்கிகள், இயந்திரங்கள், பிற சாதானங்கள், ஆயுதங்கள்…. எனப் பெரிய வளவொன்றில் அவை நிரற்படுத்தப்பட்டிருந்தன. அங்கும் ஏராளம் சனங்கள். தமிழர்களும் சிங்களவர்களும் தங்களுடைய கடந்த காலத்தை நினைவு கூரும் மறக்க முடியாப் பொருட்களைப் பார்க்கிறார்கள்.
நடேசனும் அவற்றைப் பார்த்தார். பீரங்கிகளுக்கு அருகாக நின்று படம் எடுத்துக்கொண்டார்கள் பலரும். போர்ப்படகுகள் காட்சிப் பொருளாகியுள்ளன. ஆயுதங்களும்தான். வெயில் ஏறிக்கொண்டிருந்தது. ஆனால் அதைப் பற்றிச் சனங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர்கள் தாங்களறியாதிருந்த வியப்புகளின் முடிச்சை அவிழ்க்கும் முனைப்பிலிருந்தனர். நான் எல்லாவற்றையும் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டு நின்றேன்.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு வந்த நடேசன், ஒரு இடத்தில் வந்ததும் அங்கே நின்று கொண்டு என்னை அழைத்தார். அருகே சென்று கவனித்தேன். சிறைக்கூண்டுகள். இரண்டு இரும்புக்கூண்டுகள். ஒன்று சற்றுப் பெரியது. நாற்சதுர வடிவத்தையுடையது. மற்றது, ஒரு ஆள் மட்டும் நிற்கக் கூடிய அளவில் மிகச் சிறியது. ஒடுங்கியது. ஒவ்வொன்றையும் சுற்றி முட்கம்பிகள் பின்னப்பட்டிருந்தன.
இந்தக் கூண்டுகளைப்பற்றி முன்னரே அறிந்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்த்ததில்லை. இப்போதே முதற்தடவையாக இவற்றைப் பார்க்கிறேன். முன்னர் வன்னியில் யாராவது தப்போ, தவறோ செய்தால் ‘வட்டுவாகலில் போய் நிற்கப்போகிறாயா?’ என்று கேட்பார்கள்.
வட்டுவாகற் பகுதியில் இத்தகைய சிறைக்கூண்டுகளும் தண்டனைக் களமும் இருந்ததாக வன்னியிற் சொல்லிக் கொள்வார்கள். குற்றமிழைத்தவர்களை இந்தக் கூண்டுகளுள் அடைப்பதாக செய்தி. கூண்டில் நிற்பது என்பதே பிரசித்தமானது. அதற்குள் இருக்கவோ, படுக்கவோ முடியாது. ஆகவேதான் தவறு செய்ய முனைவோரைப் பார்த்து ஏனையவர்கள் கேட்பது, ‘வட்டுவாகலில் போய் நிற்கப்பபோகிறாயா? என்பதாக இருந்தது.
நடேசன் அந்தக் கூண்டுகளுக்கு அருகாக நின்று படங்கள் எடுத்துக் கொண்டார். அப்பொழுது அவர் என்ன நினைத்தாரோ! ஆனால், நான் நினைத்தேன், முன்னர் வன்னிக்கு நடேசன் வந்திருந்தால் இந்தக் கூண்டுகளுக்குள்தான் நிச்சயமாக இருந்திருப்பார். இப்பொழுது வெளியே நிற்கிறார் என்று.
படங்களை எடுத்துக்கொண்டிருந்த என் முகத்தைப் பார்த்து எதைப் புரிந்து கொண்டாரோ தெரியாது, ஆனால், நான் நினைத்ததை அப்படியே அவரே சொன்னார், ‘உள்ளே நின்றிருக்க வேண்டியவன் வெளியே நிற்கிறேன். பாருங்கள், இதுதான் வரலாறா அல்லது விதியா’ என்று.
வரலாற்றிற்குத்தான் எத்தனை முகங்கள்?
ஒரு அதிகார மாற்றம் எப்படி எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.
வாழ்க்கை என்பது அதிகாரம் வரையறுக்கின்ற ஒன்றா? அல்லது அதிகாரம் வழங்குகின்ற சலுகையா? அல்லது அது வகுக்கின்ற விதியா?
மறுமொழியொன்றை இடுங்கள்