உலகத்தமிழ் இலக்கிய மாநாடு’

யோ.கர்ணன்

ந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பு மாநகரின் மையத்தில் கடந்த எழுபது வருடங்களாக சைவத்தையும் தமிழையும் வளர்த்து வரும் கொழும்பு தமிழ்ச்சங்கமானது ‘உலகத்தமிழ் இலக்கிய மாநாடு’ என்ற தலைப்பில் இலக்கிய மாநாடொன்றையும், பாரதிவிழாவையும் நடாத்தி தமிழையும், இலக்கியத்தையும் தொடர்ந்து வாழ வைப்பதற்கான ஒட்சிசன் ஊட்டும் முயற்சியொன்று செய்திருந்தது. இது நடந்தது இந்த மாதம் 02,03,04ம் திகதிகளில். இதற்கு முதல்நாள் பாரதிவிழா நடந்திருந்தது. உண்மையில் இவை பாராட்டப்பட வேண்டிய பெரு முயற்சிகள்தான். இதில் சந்தேகப்பட ஏதுமில்லை. ஓவ்வொரு இனமானமுள்ள தமிழனும் தனது தார்மீக ஆதரவை இதற்கு வெளிப்படுத்த வேண்டியது உடனடியானதும் கட்டாயமானதுமான வரலாற்றுக்கடமையென்பேன். ஏனெனில் இலங்கைத்தீவில் காட்டாச்சி புரிந்து வரும் அரசானது, தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று, தமிழர்களையும் தமிழையும் அழித்து வரும் நிலையில், அந்த அரசின் தலைநகரில் நின்றே ஆட்சியாளர்களிற்கு சவால்விட்டு, தமிழைத் தாங்கிப்பிடிக்கும் காரியத்தை செய்யும் தமிழ்ச்சங்கத்தாருக்கு என் முதல்க்கண் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனாலும் துரதிஸ்டவசமாக இந்த மாநாட்டை சில இலக்கியவாதிகளும், அரசியல்வாதிகளும் எதிர்த்திருந்தார்கள். அப்படி எதிர்த்தவர்கள் பெரும்பாலும் தமிழகத்தையும், புலம்பெயர்நாடுகளையும் டசேர்ந்தவர்களே. மாநாட்டை புறக்கணிப்பதற்கு அவர்கள் சொன்ன காரணமும் பீதியூட்டக்கூடியது. ‘முள்ளிவாய்க்கால் துயரம் நடந்து மூன்றாண்டுகளிலேயே ஆரம்பிச்சிட்டியளா’ என்ற ரீதியில் கேட்டிருந்தார்கள். நன்றாக யோசித்தால், ஒருவகையில் அதுவும் நியாயம்தான். இழவு நடந்த வீடுகளில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மங்களகரமான நிகழ்வுகளெதனையும் நடத்துவதில்லைத்தான். காலம் காலமாக தமிழர்கள் பின்பற்றிவரும் மரபு அது. மரபுகளை அவ்வளவு சீக்கிரமாக உடையவிடக்கூடாது. ஆனால் அந்த இடங்களில் அதற்கெல்லாம் ஒரு காலவரையறை வைத்திருந்தார்கள். சில இடங்களில் அதிகம் ஒரு வருடம் இருக்கும். இங்கே இவர்களின் காலவரையறை என்னவென்று தெரியவில்லை. சிலவேளைகளில் அப்படியெதுவும் இல்லாமல்கூட இருக்கலாம். பொதுவாகவே இராவணன் சீதாப்பிராட்டியை வன்கவர்வு (நன்றாக கவனியுங்கள் வன்கவர்வு) செய்த பின்னர், இந்தியக்குடிகள் இலங்கையர்களில் ஒரு கண் வைத்துத்தானிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களின் ஒவ்வொரு அங்க அசைவுகளைக்கூட அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டுமொரு வன்கவர்வு மாதிரியான சம்பவங்களெதனையாவது தடுப்பது நோக்கமாக இருக்கலாம். ஆனால் இலங்கையிலுள்ள சில ஆயிரம் கவிகளையும், கதாசிரியர்களையும் தொடர்ந்தும் இது மாதிரியான கிடுக்குப்பிடிக்குள் வைத்திருப்பது நீதியாகாது. இப்படியான மாநாடுகள் இலங்கையரசை பாதுகாப்பவையென்ற முடிவிற்கு எந்த தரவுகளினூடாக வந்தார்கள் என்று தெரியவில்லை.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்பு எத்தகையென்பது எல்லோரிற்கும் தெரிந்தது. அதிலும் குறிப்பாக புலிகளின் அரசியல்த்துறை பிரமுகர்களை சரணடைய ஏற்பாடு செய்தது, அவர்களிற்கு உயிர் உத்தரவாதம் கொடுத்தது, சரணடைவிற்கு பின்னான நாட்களில் அவர்களை கொண்டு ஏற்படுத்தப்படும் ஆட்சிபற்றிய நம்பிக்கைகளை ஊட்டியதெல்லாம் இந்திய அரசு மந்திரிகளில் சிலர்தான். அவர்கள்தான் அப்பொழுது இந்திய அரசு சார்பாக புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தார்கள். இப்பொழுதுள்ள சிக்கல் என்னவெனில், இலங்கையிலுள்ளவர்கள் பட்டிமன்ற பாணியில் ‘உங்கள் ஆட்களின் சீத்துவம் இதுதான். ஆகவே நீங்கள் இந்தியாவிலிருந்து மூச்சுக்கூட விடக்கூடாது’ என ஒரு கையெழுத்து அறிக்கை விட்டால் நிலைமை என்னவாவது?
கையெழுத்து அறிக்கை விடுவது அவ்வளவு பெரிய காரியமா என்ன? முன்னர்தான் ஒரு காகிதமாவது தேவைப்பட்டது. இப்பொழுது அதுவும் தேவையில்லை. பெரும்பாலான எல்லா தமிழ் படைப்பாளிகளும் பேஸ்புக்கிற்கு கலகம் செய்ய வந்துவிட்டார்கள். அவர்கள் போடும் ஒவ்வொரு ஸ்டேட்டும் குறைந்தது நான்கைந்து லைக்காவது வாங்குகிறது. இந்த ஆறு பேரும் சேர்ந்து ஒரு அறிக்கை விடுவதெல்லாம் பெரிய காரியமேயல்ல.
இப்படி ஓயாமல் இலங்கையில் கலகம் விளைவிக்க எண்ணும் இந்தியபடைப்பாளிகள் இன்னொன்றையும் கவனத்திலெடுக்க வேண்டும். இலங்கையிலிருந்து எழுதினால் அவர் மகிந்த ஆள். கூட்டம் நடத்தினால் மகிந்த ஆள் என்ற ரேஞ்சில் யோசித்தீர்களெனில், இலங்கையிலிருந்து கதைத்தால் கூட அவர் மகிந்த ஆள் என்றாகிவிடும். அப்படி பார்த்தால் இலங்கையில் ஒரு சுயாதீன குரல் கூட இருக்காது. ஒரு உதாரணத்திற்கு, எந்த அடிப்படையில் மனோ கணேசனின் கருத்தையடுத்து வை.கோ அமைதியானார்? இலங்கையிலிருந்து பேசும் மனோ மகிந்தவின் ஆள் ஆயிற்றே.
பெரிய பெரிய வல்லரசுகளின் புலனாய்வுச் செயற்பாடுகள்கூட குறிப்பிட்ட சில காலங்களில் வெளித் தெரியவரும் இந்த தகவல்யுகத்தில்- இலங்கையில் நடந்த யுத்தத்தில் பங்காற்றிய பிறதேசங்கள் பற்றிய தகவல்கள், யுத்தத்தில் இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றிய ஆதாரங்கள் வெளியானதெல்லாம் இந்த வகைக்குள் அடக்கம்- கொழும்பில் இருக்கும் சில முதுகு சொறிபவர்களை வைத்து அரசு தனது ஆட்சியை தக்க வைக்கும் ஒரு பெருமுயற்சி பற்றிய ஆதாரமுமா இதுநாள் வரை வராமலிருக்கும்?
யுத்த சுமைகளினாலும், இந்திய கலை பண்பாட்டு சுமைகளினாலும் கூனிப்போயிருக்கும் இலங்கைப்படைப்பாளிகள் இது போன்ற மேலும் பல கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் தொடர்ந்தும் ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் அடையாளங்களை கண்டடையவும், தங்கள் குரல்களை பதிவு செய்யவும் அவை உதவும். மாறாக, யார் யாருக்கோவாக எல்லாம் வாழ வேண்டுமெனவும், பேச வேண்டுமெனவும் எதிர்பார்ப்பதெல்லாம் அபத்தமானது. இந்த மாநாட்டை எதிர்த்து அறிக்கை விட்ட இந்தியப்படைப்பாளிகள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மேற்படி காரணங்களின் நிமித்தம் பல இலங்கைப்படைப்பாளிகள் இந்த மாநாட்டை ஆதரித்திருந்தார்கள். சிலர் மனதளவில் எதிர்த்திருக்கலாம். அப்படியான குரல்கள் இதுவரை பதியப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் ஆதரித்தவர்களில் பெரும்பாலானவர்கள் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. அது நியாயமானதும் கூட. அப்படியொரு அவலமான சூழல்தான் நிலவுகிறது. ஓட மாட்டாத சொம்பேறி குதிரையென்று தெரிந்தும் அதன் மீது பந்தயம் கட்டும் அவலம் எம்மைத் தவிர வேறு யாருக்கு நேர்கிறது?
இலங்கையிலல்ல. எல்லா இடங்களிலுமுள்ள சங்கங்கள், அமைப்புக்கள் எல்லாவற்றிற்குமே ஒரு அரசியல் இருக்கும்தான். சிலவற்றிற்கு வெளிப்படையான நிகழ்ச்சிநிரல் இருக்கும். சிலவற்றிற்கு மறைமுகமாக இருக்கும். இதற்கு கொழும்பு தமிழ் சங்கமும் விதிவிலக்கல்ல. ஆனால் இந்த அரசியல் என்பதன் அர்த்தம் ஒரு ஆட்சிபீடத்தை பாதுகாப்பதோ, ஆட்சிமாற்றத்தை உண்டாக்குவதோ என்பதல்ல. (கதாசியர்களும் கவிஞர்களும் தங்கள் எழுத்தின் வழி இந்த சமூகத்தை உய்வித்துவிடலாமென தினம்தினம் இராத்திரிகளில் கனவு கண்டுகொண்டிருப்பதை விட்டாலும்இ இன்னமும் இந்த உலகம் அவர்களை நம்பிக் கொண்டிருப்பதுதான் பேராச்சரியம்). சில சங்கங்களிற்கு, கருத்தியல்கொள்கை ரீதியிலான எதிரணியினரை வீழ்த்தி இழந்த இடத்தை மீட்டெடுப்பதாக இருக்கும். சில சங்கங்களிற்கு இன்னொரு சங்கத்தை வீழ்த்துவதாக இருக்கும். சில சங்கங்களிற்கு எதிலும்பட்டும்படாமலும் இருந்துவிடுவதிலேயே பிரயத்தனப்பட்டுக் காலத்தைக்கழிக்க வேண்டியிருக்கும். இந்திய இராணுவம் வெளியேறியதும் முற்போக்கு அணி யாழ்ப்பாணத்தில் நடத்திய மாநாடு முதல் வகைக்குள் வந்தால், கொழும்பு தமிழ்ச்சங்கம் இதில் இரண்டாவது வகைக்குள்தான் வரும். அவர்களிற்கு இராமன் ஆண்டாலுமொன்றுதான். இராவணன் ஆண்டாலுமொன்றுதான்.
இப்படித்தான் முன்னர் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடென்று ஒன்று நடைபெற்றிருந்தது. அதற்கு தமிழ்கூறும் நல்லுலகம் திரண்டெழுந்து தனது வலுவான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. சாதாரணமாக நாலுபேர் பரஸ்பரம் சொறிந்து கொள்ள இருந்த முதுகுகளை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியதுதான் இதன் மூலம் நடந்தது. மாநாட்டினாலோ, எதிர்ப்பாலோ ஒன்றுமே ஆகியிருக்கவில்லை. தனிப்பட்ட எழுத்தாளர்களோ, சங்கங்களோ காலாதி காலாமாக செயற்பட்டு வருவதைப் போல வார்த்தை யுத்தமொன்று நடத்தி, அந்தச் சமர்க்களத்தில் செயற்பட்ட திருப்தியுடன் நித்திரைக்குப் போனதுதான் நடந்தது. இப்பொழுது வந்ததைவிடவும், சர்வதேச எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிர்ப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால் மாநாடு நடைபெற்றுவிட்டது. எதிர்த்தரப்பை சமாதானப்படுத்தவோ என்னவோ, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள், எழுத்தாளர்கள், அந்த இலக்கியங்கள் பற்றிய கவனமெடுக்கப்படுவதாக மாநாட்டுக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நடந்ததென்ன? அந்த மாநாட்டினால் விளைந்த பயனென்ன? (எழுதுகின்ற யாருமே செயற்படாததனாலும் செயற்படுகின்ற யாருமே எழுதாததனாலும் பயன் விளையுமென எதிர்பார்ப்பதெல்லாம் ஓவர்தான்) சொன்னதெதனையாவது அவர்கள் செய்தார்களா? இல்லை. ஏனெனில் அது குருவியின் தலையில் பனங்காயை வைத்தது போன்றதொரு விடயம். முன்னரே குறிப்பிட்டது போல நாலு பேர் பரஸ்பரம் ஏதோ செய்ய வெளிக்கிட்டதை அரசியலாக்கினால் இப்படியான சப்பைக்கட்டுக்களும், ஏதிர்பார்ப்புக்களும்தான் மிஞ்சும்.
இந்தக் கூட்டத்திலும் அதுதான் நடந்தது. எந்த அரசியலுமற்ற கொழும்புத் தமிழ்சங்கம் வழமை போல இனிதே கூடிக்கலைந்தது. சிலருக்கு சாதாரணமாக சொறியப்பட்டது. சிலருக்கு காயம் வருமளவு சொறியப்பட்டது. அவ்வளவுதான். அதனைவிட வெறென்ன அங்கே நடந்துவிட முடியும். நல்ல மரங்கள் நல்ல கனிகளையும், கெட்ட மரங்கள் கெட்ட கனிகளையும் கொடுப்பதுதானே இயல்பு. ஏனெனில் அந்த சங்கத்திடம் எந்த அரசியலுமில்லை. கொழும்பிலுள்ள உயர்குடித் தமிழர்களும், உயர்பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களும், ஓய்வு பெறாதவர்களும், பொழுது போகாதவர்களும், புதிதாக பட்டுச்சேலை, வேட்டி வாங்கியவர்களும் கூடிக்கலையுமொரு இடம்/சம்பவம் போன்றதான கலாச்சாரமாகவே அது உருவாகியுள்ளது.
இப்பொழுது நம்முன்னுள்ள கேள்வி என்னவெனில் -இந்தியப்படைப்பாளிகள், புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல- இப்படியான நிகழ்வுகளை எதிர்ப்பதா திசைமாற்றுவதா என்பதே. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் நடந்ததை போல, இங்கே நடந்ததைப் போல- கம்ப நயத்தையும் பாரதி நயத்தையும் வியந்து கூடிக்கலையாமல்- நடக்கவிடாமல் அவர்களை நிகழ்காலத்திற்கு அழைத்து வருவதே தலையாய பணியென நினைக்கிறேன். யுத்தமற்ற, பட்டினியற்ற, கடத்தல் கொலைகள் அற்ற, சமூக எற்றத்தாழ்வுகளற்ற ஒரு சமதர்ம தேசத்தில் வாழும் நினைப்பை விட்டுவிட்டு வரும்படி, அல்லது அந்தப் பொருள்களை தொடப் பயப்படும் மனநிலையை மாற்றும்படி ஒரு கையெழுத்து அறிக்கையை விடுவதுதான் பயனுள்ளதாக இருக்குமே தவிர, மாநாட்டை நிறுத்தச் சொல்வது நீதியாகாது.
இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக பாராதிவிழா நடைபெற்றதாம். நல்லவேளையாக சங்கப்பக்கமே போகவில்லை. நிகழ்வு முடிந்து ஐந்து நாளாகியும் கலவரம் தெளியாமல் நண்பர் ஒருவர் நடந்தவற்றை கூறினார்.
ஆரம்பத்திலேயே மேடையிலிருந்த எல்லோருமே தவறாமல் ஒரு வசனத்தை உச்சரித்துள்ளனர். அதாவது இந்த பொன்னாடை மாதிரியான ஐயிற்றங்களில் தமக்கு உடன்பாடில்லையென்று. பின்னர் எல்லோருமே தவறாமல் ஒரு செயலை செய்தனர். ஒருவர் தவறாமல் ஆளாளுக்கு பொன்னாடைகளை போர்த்திக் கொண்டனர். அப்பொழுது சொன்னார்களாம்- நமக்கு விருப்பமில்லைதான். மற்றவர்களிற்கு மனம் கோணக்கூடாதென.
அன்று பார்த்து தமிழகத்திலிருந்து வந்திருந்த பாரதிச்சங்கத் தலைவர் காந்திக்கு பிறந்தநாளாம். பிறகென்ன, மேடையில் வைத்து ஆளாளுக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் கொண்டாடி காந்தியையும், பாரதியை மகிழ்வித்தார்களாம். பின்னர் செய்த காரியம்தான் உச்சம். பாரதியின் படம் வரைந்த முகமூடிகளை எல்லோரும் அணிந்து படம் எடுத்தார்கள். அந்த சமயத்தில் ‘எங்கும் பாரதி. எதிலும் பாரதி’ என முழக்கமிட்டு, பாரதியின் புகழை எல்லை கடக்கச் செய்தனர்.
அன்று வரலாற்று முக்கியத்தவம் மிக்க மிகமிக முக்கியமான இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியதாக அறிகிறேன்.
1. இந்தியாவில் பாரதிக்கு பாரதரத்னா விருது கொடுக்க வேண்டும். (பாரதிக்கு எம்.பி, எம்.ல்.ஏ, இராணுவத்தில் லெப்.கேணல் பதவிகளையும் இனி கேட்கலாம்)
2. யாழ்ப்பாணத்தில் இந்தியதூதரகம் கட்டும் மணிமண்டபத்திற்கு பாரதியின் பெயரை சூட்ட வேண்டும். (குறைந்த பட்சம் இடம்பெயர்ந்த அகதிகளிற்கு இந்தியா கட்டித்தருவதாக வாக்குறுதியளித்த ஐம்பதினாயிரம் வீடுகளை விரைவாக கட்டிக் கொடுக்க வேண்டுமென்றாவது சொல்லியிருக்கலாம்)
மாநாட்டின் கடைசியிரண்டு நாட்களும் மிகுந்த பயப்பிராந்தியுடன் மண்டப வாசல் வரை சென்று ஓரிரு மணித்தியாலங்களை செலவிட்டிருந்தேன். அந்த நேரத்தில் நான் அடைந்த பீதிக்கும், பதட்டத்திற்கும் அளவேயிருக்கவில்லை. என்னுடன் தேவாவும் வந்திருந்தார். அவரும் நான் அடைந்த உணர்வுகளை அடைந்திருந்தார்.
சிறுகதைகள் குறித்த அமர்வில் திசேரா கட்டுரை வாசித்துக் கொண்டிருப்பதையறிந்து மண்டபத்திற்குள் நுழைந்தோம். நாங்கள் நுழைய திசேரா முடிக்கும் தறுவாயிலிருந்தார். அவர் முடிக்க எழுந்து வந்துவிட்டோம்.
அதன் பின் மதவடி ரௌடிகள் போல, மண்டபத்திற்கு வெளியிலிருந்த சீமெந்து படிக்கட்டிலேயே இருந்துவிட்டோம். எங்களுடன் திசேராஇ மணிசேகரன், லெனின் மதிவாணம் போன்றவர்கள் இருந்தார்கள். எல்லோருக்குமே பகிடி பார்க்கும் மனநிலைதானிருந்தது.
அந்த இடத்திலிருந்து நாங்கள் சில ஆய்வகளை செய்திருந்தோம். இதனைவிட்டால் வேறெதனையும் செய்ய முடியவில்லை. இந்த ஆய்வுகளின் மூலம் முக்கியமான சில முடிவகளிற்கும் வந்திருந்தோம். அவற்றை கவனத்தில் கொண்டால், தமிழிலக்கியத்தையும், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் எதிர்காலத்தையும் செழிப்புற செய்யலாம். முக்கியமானதும் முதலாவதுமானது. கம்பன் கழகத்தை சேர்ந்த பேச்சாளர்களை அவ்வளவாக அழைத்திருக்கவில்லை. இது பெரிய குறையே. இரண்டாவது, மினுங்க மினுங்க பட்டு வேட்டியுடுத்தி நசனல் போட்டு, விபூதி சந்தனம் தரித்து பெரும்பாலான பேச்சாளர்கள் வந்திருந்த போதும், மிகச்சிலர் அந்தியமோகம் கொண்டு நவீன உடையணிந்து வந்திருந்தார்கள். மூன்றாவது, தொடர் நாடக நாயகிகள் பாணியில் மினுங்க மினுங்க வந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் கூந்தலில் பூச்சூடி மங்கையர் மானத்தை காத்த போதிலும், சிலர் பட்டுடுத்திய போதும் கூந்தலில் மல்லிகையோ முல்லையோ சூடவில்லை. இதனை தவிர்த்திருந்தால், பெண்களின் கூந்தலிற்கு வாசனையுண்டா என்றொரு பட்டின்றத்தை அடுத்த முறை நடத்தி முடித்திருக்கலாம்.
இப்படியான முதல்நாள் அனுபவங்கள் தந்த பாடங்களின் நிமித்தத்தினால் அடுத்தநாள் மண்டபத்திற்குள் நுழைவதில்லை என்பதில் உறுதியாக இருந்தோம். நாங்கள் பதினொரு மணிக்கு பின்னரே அங்கு சென்றோம். வெளியில் திசேரா காத்து நின்றார். எங்களை எதிர்பார்த்திருந்ததாக சொன்னார். மீண்டும் அங்கேயே உட்கார்ந்தோம்.
நாவல் இலக்கியம் பற்றிய ஒரு அரங்கு நடப்பதாகவும், கட்டாயம் பார்க்கும்படியும் ஒரு நண்பர் வற்புறுத்தியபடியிருந்தார். சரியென மனதை திடப்படுத்திக் கொண்டு நுழைந்தோம். நாங்கள் நுழைய பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் மகேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். கதிரையில் சற்றே ஆசுவாசமாக உட்கார்ந்து காதைக் கொடுக்க, ‘ ‘உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். மிக மிக அண்மையில் ஒரு முக்கியமான நாவல் வந்துள்ளது. விமல் குழந்தைவேல் என்பவர் எழுதிய வெள்ளாவி’’ என தொடங்க நான் பீதியுற்று வெளியில் ஓடி வந்துவிட்டேன். விமல் இன்னும் இரண்டு நாவல்கள் எழுதியபின்னர்தான் கசகறணம் அவரது கைக்கு கிடைக்கலாம். அதுவரை நாம் பொறுத்திருப்போம்.
இதே அரங்கில் நாவலாசிரியர் செங்கையாழியனை இரண்டு மூன்றுபேர் தூக்கிக் கொண்டு வந்து மேடையில் வைத்தனர். அவர் நடமாட முடியாதளவிற்கு நோய்வாய்ப்பட்டிருக்கிறார். ஆனாலும் அவர் தமிழ்ச்சங்கத்தாரின் மனதிற்குகந்த விதமாக உடையணிந்துதான் வந்திருந்தார். அவரும் பேசுகிறார் என்றார்கள். ஆனாலும் மீண்டுமொரு முறை மனதை திடப்படுத்தும் வல்லமையற்றதினால் உள்ளே நுழையவில்லை. பின்னர்தான் அறிந்தேன். அவர் பேசவில்லை. அவர் முன்னரெப்பெழுதோ ஞானம் என்ற சஞ்சிகையில் எழுதிய ஒரு கட்டுரையை இன்னொருவர் வாசித்தாராம். (உடையார் காலத்து நினைவுகள் வருவது தவிர்க்க முடியாததுதான்) ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்குமா என்ன?
இப்படி பீதியுடன் அலைந்த நண்பர்கள் பலரிடம் பொதுவான ஆதங்கமொன்றை காண முடிந்தது. தொடர்ந்தும் இப்படி பகிடி பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாமும் ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டுமென. திசேரா இதில் அதிக ஆர்வமாகயிருந்தார். எனக்கும் விருப்பம்தான். இன்னும் ஓரிரு மாதங்களில் மட்டக்களப்பில் சந்திப்பதென ஒரு முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியொரு முடிவிற்கு வந்ததுமே, தர்சிறி பண்டாரநாயக்காவின் வீட்டிற்கு ஓடித்தப்பிவிட்டோம். அங்கு பிரளயனுடன் சிறிது நேரம் பொழுதைக் கழிப்பதாக திட்டமிட்டிருந்தோம்.
வழியெல்லாம் எனக்கு ஒரேயொரு எண்ணந்தான் இருந்தது. இப்படியொரு மாநாட்டிற்கு எதிராக எதற்காக இவ்வளவு அளப்பறை பண்ணினார்கள் என்று. தேவாவிற்கும் அது புரியவில்லை.
நான் நினைக்கிறேன்- இன அழிப்பு மற்றும் தமிழர்களின் இருப்பிற்கெதிரான கலை பண்பாட்டு அழிப்பிற்கெதிராக ராஜபக்சவிற்கு தண்டனை வழங்குவதென்றால் இப்படியான நிகழ்வகளை மாதம் ஒரு முறை கட்டயாம் நடத்த வேண்டும். அப்படி நடத்தப்படும் எல்லா நிகழ்வுகளிலும் ராஜபக்சவை ஆரம்பத்திலிருந்து முடியும் வரை உட்கார வைக்க வேண்டும். அறிக்கை விட்ட தமிழக படைப்பாளிகளையும் கூட்டி வந்து உட்கார வைக்க வேண்டும். அதன் பின்னர் இவர்கள் யாருமே இலங்கைத்தமிழர்களின் திசையிலேயே தலை வைத்தும் படுக்கமாட்டார்.

நன்றி: எதுவரை இணைய மாத இதழ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: