தவறுகள் இல்லாமல் மிருகவைத்தியம் செய்வதற்கு முயலும் போது சில தவறுகள் என்னையும்மீறி நடந்துவிடுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு எனது கிளினிக்கில் வேலைசெய்யும் நேர்சினது பூனையின் வயிற்றில் ஒரு ஒப்பரேசன் செய்தேன். ஒப்பரேசன் சுமுகமாக முடிந்தது. புண் ஆறியதும் வயிற்றில் உள்ள இழையை இரண்டு வாரத்தில் வெட்டி அகற்றினேன்.
ஆறுமாதத்திற்குபின் எனது நேர்ஸ் ‘ஒப்பரேசன் செய்த இடத்தில் சிறிய பட்டாணி கடலை அளவில் கட்டி ஒன்று வந்துள்ளது. அதை அமுக்கும்போது பூனைக்கு வலிக்கிறது” என்றாள்.
‘அது மறைந்துவிடும் கவலைப்படாதே” என்றேன். ஆயிரக்கணக்கில் இந்தமாதிரி ஒப்பரேசன் செய்ததாலும், எனது திறமையில் இருந்த நம்பிக்கையும்சேர்ந்து அப்படி சொல்லவைத்தது.
இடைக்கிடை பூனையின் கட்டிபற்றி பேசுவாள். நான் கவனத்துக்கு எடுக்கவில்லை. ஒருநாள் கேட்டேன். ‘கட்டி பெரிதாகியதா”? இல்லை. ஆனால் சின்னதாகவில்லை.
சரி. நாளைக்கு கொண்டுவா. திருப்பவும் கட்டியை வெட்டி திறந்து பார்க்கிறேன்.
வயிற்றுக்குள் உள்ள கொழுப்பின் ஒரு பகுதி கேணியாவக (Hernia) வெளித்தள்ளி இருந்தது ஆச்சரியமாக இருந்தது. காரணங்கள் பல இருக்கலாம்.
ஒப்பரேசனின்பின் பூனை தாவிப் பாய்ந்திருக்கலாம். பாவித்த இழையின் தயாரிப்பில் தவறு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் இதன் பொறுப்பு என்னை சார்ந்தது.
இரண்டாம்முறை செய்த ஒப்பரேசனில் கட்டி மறைந்தது.
மருத்துவர்கள், மிருகவைத்தியர்களின் தவறுகளை மறுபரிசிலனைக்கு உட்படுத்த பலவழிகள் இந்த நாட்டில் உண்டு. மருத்துவர்கள் சபை, காப்புறுதி, நீதிமன்றம் என்பவற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் பெறமுடியும். திருப்பதி படத்தில் வருவதுபோல் நிவாரணம் பெற முயற்சிக்கவேண்டி இராது.
எல்லாவற்றையும்விட பொறுப்புணர்வுள்ள வைத்தியரின் மனத்தில் ஏற்படும் குற்ற உணர்வு ஆழமாகவும் நீளமாகவும் நிலைத்து இருக்கும். இருபத்துஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்னுடன் என் மனைவி போல் நிலைத்திருக்கிறது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவந்த நாட்களில் ‘கெப்பிட்டி கொல்லாவை அடுத்த கிராமத்தில் கன்று போடமுடியாமல் எருமை ஒன்று பெண் உறுப்பு வெளித்தள்ளியபடி விழுந்து கிடக்கிறது” என அழைப்பு வந்தது.
முதல்முதலாக ஒப்பரேசன் ஒன்று செய்யப்போகிறேன் என்ற ஆவலுடன் எனது உதவியாளர் சமரசிங்காவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன்.
மழைக்காலமாதலால் வழியெங்கும் தண்ணி தேங்கி இருந்தது. மோட்டார் சைக்கிளின் சக்கரத்தால் சேறடிக்கப்பட்டு இறுதியில் சிறிய கிராமமொன்றுக்குள் வந்துசேர்ந்தோம். எங்களை ‘துன்பங்களை நீக்க வந்த தேவனின் தூதர்களாக” மரியாதை செய்து தனது வயலுக்கு இட்டுசென்றார் அந்த விவசாயி. வயலுக்கு சிறிது முன்புள்ள நீர் தேங்கியுள்ள குட்டை அருகே பாரிய பெண் எருமை பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தது. நீர் தேங்கியுள்ள அந்த குட்டை தலையை வைத்துக்கொண்டு உடல் உயரத்தில் இருந்தது. தண்ணீர் குடிக்க முனைந்தபோது விழுந்திருக்கவேண்டும். பெண் உறுப்பு வெளித்தள்ளி அதன்மேல் இலையான்கள் மொய்த்தபடி இருந்தன. நிமிடத்துக்கு ஒருமுறை கருப்பை சுருக்கம் அலை போல்வந்து முழு உடம்பையும் அதிரவைத்தது. தலையும் உடலும் நிலத்தைவிட்டு எம்பி விழுந்தது.
துன்பப்படும் மிருகத்தை நேரில் பார்ப்பது இதுவே முதல் முறையானதால் பரிதாபமும் ஆவலும் என்னுள் ஏற்பட்டு, உடனே கன்றை வெட்டிஎடுத்து அந்த எருமையின் வேதனையை போக்கத்துடித்தேன்.
‘ஒப்பரேசன் செய்யவேணும். தண்ணி கொண்டுவரசொல், அமரசிங்கா” என கூறிவிட்டு எனது பெட்டியைத் திறந்து உபகரணங்களை இரண்டு பச்சை தென்னோலைமேல் பரப்பினேன். படுத்துக்கிடந்த எருமையின் மேல்ப குதியை கழுவிவிட்டு விறைப்பு மருந்தை கொடுத்துவிட்டு ஒப்பரேசன் செய்யத்தொடங்கினேன். வெட்டி உள்ளே சென்றதும் எருமையின் முழு குடலும் பாடசாலையைவிட்டு ஓடிவரும் சிறுவர்களைப்போல வெளியே வந்துவிழுந்தது. நான் தேடிய கருப்பை மட்டும் கிடைக்கவில்லை. தோள்பட்டைவரையும் கையைவிட்டு தேடினேன்.
தேடிய களைப்பில் நிமிர்ந்துபார்த்தபோது வயிற்றின் வலது பக்கத்தில் வெட்டி இருந்தேன். கருப்பை இடதுபக்கத்தில் இருக்கிறது.
மிருகவைத்தியத்தில் இது அரிச்சுவடிபோன்ற விடயம்.
ஏன் நினைவுக்கு வரவில்லை? உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்ததாலோ?
தவறை நினைத்து வயிற்றில் அசிட்டும் உடலில் வேர்வையும் ஊறியது.
குற்ற உணர்வும் உடலில் கும்மாளம்போட்டது.
எருமையின் நிவாரணத்துக்கு வந்த தேவ தூதர்களாக முழுக்கிராமமும் எங்களை கவனித்துக்கொண்டும் நிற்கிறார்கள். ஏற்கனவே பல பேர் மத்தியில் ஒப்பரேசன் செய்வது தயக்கத்தை தந்தது.
எப்படி இவர்களிடம் உண்மையை சொல்லுவது?
ஆனாலும் உண்மையே சகல நிவாரண சஞ்சீவி என்ற முடிவுடன் ‘வலது பக்கத்தில் வெட்டியது தவறு. இதைத்தந்துவிட்டு இடது பக்கம் வெட்டவேண்டும்” என எனது கரடுமுரடான சிங்களத்தில் சொல்ல முயற்சித்தேன்.
அமரசிங்கா, ‘கொஞ்சம் பொறுங்கள். நான் சொல்கிறேன்” என தடுத்தான்.
மீண்டும் சிங்களத்தில் ‘கருப்பை இடது பக்கம் திரும்பிவிட்டது. இதனால்தான் கன்றுபோட கஸ்டப்படுகிறது. இந்தப் பக்கத்தைத் தைத்துவிட்டு அடுத்த பக்கத்தை வெட்டவேண்டும்” அந்த சிங்கள விவசாயியை நோக்கி.
என்னால் அந்த லாவகமான பொய்யை நிறுத்த முடியவில்லை.
நான் அவனை தடுக்கவில்லை. ‘பொய் இந்த நேரத்தில் வசதியாக உள்ளதா”?
அந்த விவசாயி ‘அதுக்கென்ன ஐயா. எருமை உயிர் பிழைத்தால் எங்களுக்கு போதும். நல்ல கட்டித்தயிர் இந்த எருமையில்தான் கிடைக்கும்.
அவரது சிரித்த பல்வரிசைகளில் வெத்திலைக்காவி மட்டுமல்ல அப்பாவித்தனமும் ஒட்டிஇருந்தது. எல்லாரினதும் உதவியுடன் எருமையை திருப்பி ஒப்பரேசனை செய்தபோது ஆண் கன்று ஒன்று வெளியே வந்தது.
நாங்கள் முழு வேலையையும் செய்து முடிக்க ஆறு மணி நேரம் எடுத்தது. ஊர் மக்கள் நாங்கள்பட்ட கஸ்டத்தைப் பார்த்து சாதனையாளர்களாக வியந்தனர். விவசாயியின் வீட்டில் விருந்து நடந்தது. உள்ளுர் சாராயம் என்ற கசிப்பை பரிமாறினார்கள்.
கசிப்பை பருகிய அமரசிங்காவிடம் ‘ஏன் பொய் சொன்னாய்” என்றேன்.
‘பொய் சொல்லாவிட்டால் இந்தக் கசிப்பு கிடைக்குமா சேர்”
‘எரிவாக இருக்கிறது”
எது சேர் கசிப்பா?, பொய்யா?
‘இரண்டும்தான்” என்றேன்.
வாழும்சுவடுகள் 2 உள்ளது
நன்றி: மல்லிகை ஆண்டுமலர்