கல் தோன்றி மண் தோன்றாத காலம்

நடேசன்

கல் தோன்றி மண் தோன்றாத காலம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் எனக்கு மிகவும் சமீபத்தில் அதுவும் நியுசிலாந்து தேசத்தில்தான் தெரிந்தது..

நியுசிலாந்தில் பெரிய நகரமான ஓக்லண்ட் நகரத்துக்கு அருகே உள்ள சிறுதீவின் பெயர் றான்ஜிரோரோ ( ( Rangitoto) முக்கால் மணித்தியாலம் ஓக்லண்டில் இருந்து சிறிய கப்பலில் போனால் இந்தத் தீவுக்கு சென்று விடலாம. இந்தத் தீவு 600 வருடங்களுக்கு முன்பு கடலில் இருந்து எரிமலை பொங்கி எழுந்ததால் உருவானது. எரிமலைக் குழம்புகள் கரிய நிறத்தில் கல்லாகி இருக்கின்றன. தற்பொழுது இந்தத் தீவில் மரங்கள் முளைத்துள்ளன. ஆனால் புற்கள் இன்னும் இல்லை.

புல் வளர்வதற்குத் தேவையான மண் அங்கு இன்னும் உற்பத்தியாகவில்லை.
மண் என்பது கல்லுதிர்ந்து மண்துகளாவதுடன் தாவரங்கள் சிதைந்தும் மற்றும் நுண்ணுயர்களால் உருவாகிய சேதனபொருட்களாலும் உருவாவதாகும்.

இந்தத் தீவில் எரிமலைக்கற்கள் பல இடங்களில் தூள்களாகிவிட்டன. ஆனால் சேதனப் பொருட்கள் இல்லாததால் இன்னும் புல் வளரமுடியவில்லை. இந்தக் கற்களில் பாசி மாத்திரம் ஆரம்பத்தில் வளர்கிறது. இவை உணவையும் நீரையும் காற்றில் இருந்து எடுக்கிறது. அப்படியான பாசி வகைகள் சிதைவடைந்து உள்ள இடங்களில் சிறிய மரங்கள் பறவைகளால் கொண்டு வரப்பட்ட விதைகளில் துளிர்கின்றன இந்ததீவில் இருபத்தைந்து வகையான மரங்கள் வளர்ந்துள்ளன. ஆனால் புல் மட்டும் முளைக்கவில்லை.

இலையுதிர் காலத்தின் காலை நேரத்து இளவெயில் ஓக்லண்ட் நகரையும் முக்கியமாக துறைமுகப்பகுதியையும் பொன்னிறத்தில் குளிப்பாட்டுவதை இந்தச் சிறு தீவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த போது எனக்கு வியப்பாக இருந்தது. மூன்று வருடத்தின் முன்பு பிஜி தீவுக்கு போவதற்கு திட்டம் போட்டு நியுசிலாந்து விமான நிறுவனத்தூடாக பதிவு செய்த பின் அந்தப்பயணத்தின் பிரகாரம் ஓக்லண்ட வந்து இறங்கியபோது, பிஜியில் கால நிலை சரியில்லை என விமானம் இரத்துச் செய்யப்பட்டது. அடுத்த நாள் மதியம் விமானம் ஏறி சென்றாலும் விமானத்தளத்தில் பயங்கர மழை காரணமாக விமானம் இறங்க முடியவில்லை. மீண்டும் திரும்பி ஓக்லண்ட் வந்தது. பிஜி செல்லும் ஆசையை விட்டு விட்டு நியுசிலாந்தில் விடுமுறையை கழிக்க தீரமானித்தோம்.

வழக்கமாக திட்டமிட்டு ஒரு இடத்துக்குச்செல்லும் போது ஹோட்டல் மற்றும் போகும் இடங்களை முன்கூட்டி பதிவு செய்து செல்லும் நாங்கள் விமானம் நடு வழியில் இறக்கிய இடத்தில் அவற்றை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

இந்த றான்ஜிரோரோ தீவு போல்தான் முழுமையான நியுசிலாந்தும் எனக்கு புதுமையாக இருந்தது.

நியுசிலாந்து, பூமியில் கடைசியாக மனிதர்கள் குடியேறிய நாடு மட்டுமல்ல கொண்வானன் (Gondwanan) என்ற இந்தியா அவுஸ்திரேலியா ஆபிரிக்கா சேர்ந்த பெரிய நிலக்கண்டம். பின்பு புவியியல் மாற்றங்களால் விலகி கடலுக்குள் அமிழ்ந்து போன பிரதேசம், 24 மில்லியன் வருடங்களின் பின்பு மீண்டும் கண்டங்களின் மோதலால் உருவாகியது என சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் ஆதிவாசிகளான மாவுரிகளும் கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகத்தான் இங்கு குடிபெயர்ந்தார்களாம்.

இரண்டு நூற்றாண்டுகளின் முன்பாகத்தான் ஐரோப்பியர்கள் அங்கு குடியேறினார்கள்.

இந்தத் தேசம் நோத் ஐலண்ட் சவுத் ஐலண்ட் என இரண்டு தீவுகளாகி இருக்கிறது. இதில் நோத் ஐலண்ட் எரிமலைப் பிரதேசமாக உள்ளது. இந்த எரிமலைகளால் ஆபத்து இருந்தாலும் பல நன்மைகள் இருக்கின்றன. எரிமலை குழம்புகளாக பூமிக்கடியில் இருந்து வெளியே தள்ளப்பட்டு கனிம சத்து அதிகமாவதால் அவை விவசாயத்துக்கு உவப்பாகிறது. கனிம சத்துள்ள நிலமாக இப்பிரதேசம் இருப்பதால் இங்கு சிறந்த புல்வகைகள் வளர்கின்றன. விவசாயத்துக்கு சிறந்த இடமாகிறது. வழமையாக கடற்கரையில் எங்கும் வெள்ளை மணலைப் பார்த்த எனக்கு கருமையான மணலைக் கொண்டுள்ள ஓக்லண்ட் கடற்கரை ஆச்சரியத்தைத்தந்தது.

இதைப் போல் சவுத்ஐண்ட், கண்ட நகர்வினால் மடிப்புகள் கொண்ட மலைப் பகுதியாக உருவாகி இருக்கிறது. இந்த மலைப்பகுதிகளும் அவற்றினிடையே உறைந்து கிடக்கும் பனிப்பாளங்களும் அவற்றினிடையே பாய்ந்துவரும் அருவி ஊற்றுக்களும் கண்ணுக்கும் மனத்துக்கும் உவகையானது.

இங்கு உள்ள மில்போட் சவுண்ட்(Milford Sound) என்ற பிரதேசத்தில், பனிப்பாறைகள் உருகி மலை மடிப்புகளுக்கு இடையே புது வழி சமைத்து கடலுக்குச் செல்கிறது. மலை முகடுகளை ஊடறுத்து பல கிலோ மீட்டர் தூரம் பெரிய ஆறாகி; கடலை நோக்கிச் செல்கிறது. இந்த ஆற்றில் கப்பலில் செல்வது மறக்கமுடியாத ஒரு சுகானுபவம். அதே போல் இங்குள்ள பனிப் பாறைகளால் வேயப்பட்ட மலைகளுக்கு மேலாக உல்லாசப் பிரயாணிகள் ஹெலிகப்டரில் பயணிக்கிறார்கள். நியுசிலாந்துக்கு செல்பவர்கள் தவறவிடக்கூடாத ஒரு அனுபவம் இந்தப் பயணமாகும்.

மலைகள் பிரமாண்டமாக காட்சியளிப்பவை. அத்துடன் மனிதர்களை மலைக்க வைப்பவை. ஆனால் ஹெலிகொப்டரில் செல்லும்போது அவற்றை மனிதன் எளிதாக வென்றுவிடுகிறான் என சிந்திக்க வைக்கும். இந்த மலைகள் சாதாரணமானவை அல்ல. ஏறுவதற்கு மிகவும் கடினமானவை. எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த எட்மண்ட் ஹிலாரி இங்குதான் பயிற்சி பெற்றார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து போன என்னை ஆச்சரியப்படுத்தியது நியுசிலாந்தின் கால்நடை விவசாயம் ஆகும்.  கடந்து செல்லும் பாதையோரத்தில் செம்மறி, மான், மாடுகள் என மிக அடர்த்தியான கால் நடைவிவசாயத்தை அவதானிக்க முடிந்தது. இங்கு விளையும் புற்களைத் தின்னும் குதிரைகள் பெரும்பாலும் மெல்பன் குதிரை பந்தயத்தில் வெல்கின்றன.

நியுசிலாந்துக்கு உலகம் முழுவதும் இருந்து இளம் வயதினர் உல்லாசப் பிரயாணிகளாக வருகிறார்கள். கரணம் தப்பினால் மரணம் எனப்படும் சகல சாகசங்களுக்கும் இங்கு இடம் உண்டு.

ஓக்லாண்டில் உள்ள 328 மீட்டர் உயரமான கோபுரத்தில் இருந்து நாங்கள் சுழலும் ரெஸரோரண்டில் சாப்பிட்டபடியே முழு ஓக்லண்ட் நகரத்தையும் பார்க்க முடியும். ஆனால் பலர் அதில் இருந்து ஸ்கை டைவிங் செய்யும் விதமாக வெளவ்வால்கள் போன்று கீழே இறங்கினார்கள். இதை விட ஸ்கை வாக்கிங் என அந்த கோபுரத்து விளிம்புகளில் நடந்தார்கள். ஓக்லண்ட் பாலத்தில் இருந்து இறப்பராலான கயிற்றில் காலை கட்டியபடி பன்ஜி யம்பிங். இவைகள் போதாதென்று கயாக்கிங் மலை ஏறுவது போன்ற சகல சாகச விளையாட்டுகளும் உண்டு. பனிக்காலத்தில் சகல பனிவிளையாட்டுகளும் இங்கே நடைபெறும்.

நியுசிலாந்தில் மனிதரைக் கொல்ல எந்த மிருகங்களும் இல்லை. ஏன் பாம்புகளே கிடையாது. விபத்து அல்லது இயற்கைக்கு மாறான மரணங்கள் நடந்தால் இப்படியான சாகசங்களால்தான் ஏற்படும்.
ஓக்லண்ட் நகரம் சிட்னியைப் போன்று பல இனமக்களைக் கொண்ட துறைமுக நகரம். பிஜியில் இருந்து குடிவந்த 250,000 பேர் இருப்பதாக ஒரு இந்திய டாக்சி சாரதி கூறினார். சவுத் ஐலண்டில், பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்பவர்கள். பிரித்தானியாவில் இருந்து குடிவரவாக வந்தவர்கள்.

நியுசிலாந்து உலகத்தரமான வைன்களையும் உற்பத்தி செய்கிறது. பினோ நோ (Pinot noir) என்ற சிவப்பு வைனும் சவுயோன் புலோக்(Sauvignon Blanc) என்ற வெள்ளை வைனும் உலகப் பிரசித்தி பெற்றவை. முக்கியமாக சவுயோன் புலோக்கின் ருசி பற்றி வைனைப்பற்றி எழுதும் ஒருவர், முதலாவது பாலியல் உறவுக்கு இணையாக ஒப்பிடுகிறார்.

இலங்கையில் இருந்து ஒரு பத்திரிகையாளர் வெளிநாட்டுக்கு போக முயன்ற போது இலங்கையின் பிரதமராக இருந்த டட்லி செனநாயக்கா சொன்னார்

‘உலகத்தில் மூன்று நாடுகள் மிக அழகானவை- இலங்கை, சுவிட்சலாந்து நியுசிலாந்து. இலங்கையை விட்டு செல்லும் போது மற்ற இரண்டு நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு போ’என்றாராம். நியுசிலண்டை பார்த்த அளவில் அந்த கூற்றில் உண்மையுள்ளது என்பதைப் புரிந்து கொண்டேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: