ஓவியர் ரவிவர்மா

மங்கிய நிலா ஒளியில் பெண்.

சிலகாலத்துக்கு முன்பு எழுதியது

R.Raja Ravi Varma

பதினாலு வயதுப்பருவத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் காலத்தில் நடந்த சம்பவம் ,நினைவுக்கு வருகிறது. நியூபோடிங் எனப்படும் பாரிய மண்டபத்தில் வரிசைவரிசையாக கட்டில்களும் இரண்டு பக்கங்களில் சிறிய அலுமாரிகளும் அமைந்திருந்தன. அப்படி ஒரு அலுமாரி ஒவ்வொரு மாணவனுக்கும் சொந்தமானது.

ஒரு நாள் நவராத்திரி காலம். காலை ஆறுமணியளவில் எனது பக்கத்துகட்டில் மாணவன் பயபக்தியாக ஒரு படத்தின் முன்பு நின்று ‘வெள்ளை கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு..” என்ற சரஸ்வதி தோத்திரத்தை பயபக்தியுடன் பாடிக்கொண்டு நின்றான். நெற்றியில் திருநீறு, நெஞ்சில் சந்தனம். பொடியன் பக்திப்பழமாக தோற்றமளித்தான்.

எட்டிப் பார்த்தேன். அழகான மூன்று சினிமா நடிகைகள் அந்த படத்தில் இருந்தனர். சாவித்திரி, தேவிகா, கே.ஆர்.விஜயா என்ற நடிகைகள் மூவரினதும் படத்தை ஒன்றாக்கி படமாக்கப்பட்டிருந்தது.

அவனிடம் கேட்டேன் ‘சினிமா நடிகைகளிடம் இவ்வளவு பக்தியா?”

கெட்டவார்த்தையால் பேசிவிட்டு ‘நவராத்திரி காலத்தில் விடிய எழும்பி சரஸ்வதி தோத்திரம் பாடினால் படிப்பு மூளையில் பதியும் என்று அம்மா சொன்னா” என்றான்.

‘இது சிவாஜிகணேசன் நடித்த சரஸ்வதி சபதத்தில் வந்த நடிகைகள்” என்றேன்.

அவன் நம்பவில்லை. ‘சினிமா பார்த்த அனுபவமும் இல்லை. கடைசிவரையும் சாவித்திரி, தேவிகா, கே.ஆர்.விஜயாவை வணங்கி வழிபட்டான். அவனைக் குறைகூறிப் பிரயோசனமில்லை. கேரளத்து ஓவியர் ரவிவர்மா>,  சரஸ்வதி, லட்சுமி என்று அழகான பெண் உருவங்களை உருவாக்கினார். சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அழகான சேலைகளையும் நகைகளையும்கொண்டு அவர்களை அழகு செய்தார். உதாரணமான இந்தியப்பெண் உருவத்தையும் உருவாக்கினார். இதுதான் இந்தகாலத்திலும் அழகான பெண்ணைப்பார்த்ததும் ‘மகாலட்சுமி போல் இருக்கிறாய்” என்ற வசனத்துக்கு காரணமாகியது.

ரவிவர்மாவின் காலத்துக்கு முன்பு பெரும்பாலான இந்துப் பெண் தெய்வங்களை சிலைகளிலும் ஓவியங்களிலும் ஒவ்வாத (non propotional)) உடல் அமைப்புகளுடன் செதுக்கப்பட்டு, வரையப்பட்டு இருந்தன. ஆபிரிக்க பெண்களின் முலைகளையும் பின்பகுதியையும்,  ஐரோப்பிய பெண்களின் கால் அமைப்பையும் கொண்ட சிற்பங்கள், ஓவியங்கள் செதுக்கப்பட்டன, வரையப்பட்டன.

தற்காலத்திற்கு ஏற்ப விரசம் எற்படாது வரைந்த ரவிவர்மா கடந்த வருடம் ஒக்ரோபர் இரண்டாம் திகதியில் இறந்து நூறுவருடங்களாகிறது. இவரது ஓவியங்கள் நிரந்தரமாக இளமையுடன் நித்தியமானவை.

இரண்டு வருடங்களுக்கு முன் திருவனந்தவரத்திற்கு குடும்பமாக சென்றபோது எனது குடும்பத்தில் மற்றவர்கள் சொப்பிங்போனபோது ஆட்டோவை எடுத்துக்கொண்டு ரவிவர்மாவின் ஓவியங்கள் உள்ள மியூசியத்துக்கு சென்றேன். ‘நிலா ஒளியில் பெண்” என்ற ஓவியத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு இருந்தேன். மூன்று மணி நேரம் மட்டுமே என்னால் அங்கு செலவழிக்க முடிந்தது என்ற கவலையுடன் வெளிவந்தேன்.

உலகப் புகழ்பெற்ற ஐரோப்பிய ஓவியர்களான வான்கொக், பிக்காசோ, சல்வடோர் டாலி போன்றவர்கள் சாதாரண மக்களால் புரிந்துகொள்ளப்படவில்லை. படித்தவர்களிடம் மட்டுமே இவர்கள் புகழ்பெற்றார்கள். வேதாகமங்களை வரைந்த லியனடோடாவின்சி போன்றவர்களினதும் ஓவியங்கள் சாதாரண கிறிஸ்தவர்களுக்கும் தெரியாது. இதேவேளை இந்தியாவின் தெருக்களில் படம் கீறிப் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனிடமும் அவனை அறியாமல் ரவிவர்மாவின் தாக்கம் பதிந்துள்ளது.

கேரளாவின் கிளிமனுர் என்ற சிறுகிராமத்தில் பிறந்து சிறுவயதில் மாமாவால் வாட்டர்க்கலர் ஓவியங்களையும் பின்பு ஒயில் ஓவியங்களை திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆதரவிலும் பயின்றார். ராஜா ஆயிலிய திருநாளால் இவரது ஓவியத்திறமை ஊக்குவிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இராஜகுடும்பம், பிரித்தானிய பிரபுக்களின் உருவங்களை வரைந்தார். 1873ல் வீயன்னாவில் நடந்த ஓவிய கண்காட்சியில் பரிசுபெற்று இந்தியாவின் தலைசிறந்த ஓவியர் என பெயர் பெற்றார்.

சமஸ்கிருத செவ்விலக்கிங்களான இராமாயணம், மகாபாரதம், சகுந்தலம் என்பவற்றின் காட்சிகளுக்கு வண்ணவடிவம் கொடுத்து கோடிக்கணக்கில் பதிப்பிக்கப்பட்டது. இவரால் வரையப்பட்ட கடவுளர் உருவங்கள் படங்களாகவும் காலண்டர்கள் ஆகவும் இன்னும் வீடுகளிலும் பூசை அறைகளிலும் கோடானகோடி மக்களிடம் உள்ளது. எத்தனை பேருக்குத் தெரியும், இவர்கள் வணங்குவது ரவிவர்மாவின் ஓவியத்தைதான் என்பது!?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: