



நடேசன்
சமீபத்தில் தென் கொரியாவில் உள்ள ஜேஜு (Jeju)தீவில் ஒரு சர்வதேச மிருக வைத்திய மகாநாடு நடந்த போது அதில் பங்குபற்றச் சென்றேன். மகாநாட்டு குழுவினரால் ஒதுக்கப்பட்ட தென்கொரியாவின் பெரிய நட்சத்திர ஹோட்டல் லோட்டேயில்( Lotte) தங்கினேன் . நான்கு நாள் மகாநாட்டில் இரண்டு நாள் மட்டும் மகாநாட்டில் கலந்து கொண்டேன். மற்றைய இரண்டு நாட்களில் ஒரு நாள் ஊர் சுற்றிப் பார்க்கச் சென்றேன். மற்றைய நாளில் றக்கிங் (Tracking)என பதினைந்து கிலோ மீட்டர் நடந்து எரிமலைகளைப் பார்க்கப் போனேன்.
இந்தத் தீவில் ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் வாழ்கிறார்கள். தென்கொரியாவின் பெருநிலப்பரப்பில் இருந்து. தென் பகுதியில் 750 சதுர கிலோ மீட்டர் தீவாக இந்த இடம் அமைந்துள்ளது. இந்தத் தீவு கடலுக்கு அடியில் இருந்து எரிமலை வெடித்ததால் உருவாகியது. இதனால் இந்த முழுத்தீவிலும் எரிமலையின் கற்கள் குகைகள் பாறைகள் பரந்து கிடக்கின்றன.
தென்கொரியாவில் இருந்து கடலால் பிரிந்து இருப்பதால் பழையகாலத்தில் பெரும்பாலானவர்கள் மீனவர்களாக இருந்தார்கள். கடலில் ஆண் மீனவர்கள் இறந்து விடுவதால் இங்கு கடலில் பெண்கள் சுழி ஓடி கடல் உயிரினங்களை பிடிக்கும் பாரம்பரியம் உருவாகியது. இன்றும் அந்தக் கடினமான தொழிலில் ஈடுபடும் பெண்கள் இருக்கிறார்கள். அப்படி சுழியோடி தொழில் புரியும் ஐம்பது வயதான ஒரு பெண்ணை கடற்கரையில் பார்த்தேன். இவர்கள் தொகையில் தற்போது அருகி வருகிறார்கள்.
இந்தத் தீவு உலக விஞ்ஞான கல்வி நிறுவனத்தால்(UNICEF) வேர்ள்ட் கெரிரேஜ் ( world Heritage) பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் மிகப் பிரபலமான உல்லாசப் பிரயாண இடமாகிறது. தென் கொரியாவிலும் மிதமான வெப்பமான பிரதேசமாக இருப்பதால் சீனா, ஜப்பானிய மற்றும் தென்கொரிய பெரும் நிலத்தில் இருந்து ஏராளமானவர்கள் வருவதால் பெரிய ஹோட்டல்கள், மகாநாட்டு மண்டபங்கள் அங்கு உள்ளன. தென்கொரியா உலகத்தில் சிறந்த போக்குவரத்து வசதிகள் உள்ள நாடு. அதை ஜேஜு தீவில் நேரில் பார்க்க முடிந்தது.
நான் இந்த இடத்தில் நாலு நாட்கள் மட்டும் தங்கி இருந்தாலும் இங்கு பல விடயங்களுடன் மக்களும் மனதை கவர்ந்தனர். உல்லாசப் பிரயாணிகளை மிக மரியாதையாக நடத்தினார்கள்.
மணியனது பயணக்கட்டுரை போல் நான் எழுத வரவில்லை. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய விடயம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இது நான் இருந்த ஹோட்டலில் நடந்தது. ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்பதால் சகல வசதியும் இருந்தன. இந்த ஹோட்டலின் பெயர் லொற்றே (LOTTE) இது ஒரு ஐரோப்பிய பெயரான (Charlotte) சாலற்றின் சுருக்கம். எப்படி தென்கொரியாவின் ஹோட்டலுக்கு இந்தப் பெயர் வந்தது என்பது எனக்கு விடை கிடைக்காத கேள்வியாக மூளையை குடைந்தது. இதைக் கேட்பதற்கு அங்கு வேலை செய்பவர்களிடம் சில தடவை முயற்சித்து தோல்வியடைந்தேன். அவர்களுக்கு அதிக அளவு ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு பெயரின் பூராயம் தெரியவில்லை.
ஹோட்டலின் படுக்கை அருகாமையில் உள்ள சிறிய பெட் சைட் மேசையை தேடிய போது ஜெர்மனியில் வெளிவந்த செவ்விலக்கியத்தின் கதாநாயகியின் பெயர் என ஒரு பிரசுரத்தில் எழுதி இருந்தது. மேலும் தேடிய போது சிறிய புத்தகம் ஒன்று கிடைத்தது . அதன் பெயர் “இளம் வெதரின் துன்பம்” (The Sorrows of Young Werther, )என்ற பெயரில் கோதே (Johann Wolfgang von Goethe) என்பவரால்1718; ஆண்டில் எழுதப்பட்டது இந்த நாவல். இது கடிதம் எழுதும் பாணியில் எழுதப்பட்டிருந்தது.
இலகுவான ஆங்கில மொழியாக்கமானதால் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். நிறைவேறாத ஒரு தலைக்காதல் கதை. கடைசியில் ஆண் துப்பாக்கியால் தன்னைத்தான் சுட்டு தற்கொலையில் முடிகிறது.
ஏற்கனவே திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்த சாலற் என்ற இளம் பெண் தாய் இறந்ததால் அவளது சகோதரர்களை பொறுப்பாக பார்க்கும் கடமையில் ஈடுபடுகிறாள். அவளை நடன விருந்தில் சந்தித்த வெதர் அவள் மேல் தீராத காதல் கொள்கிறார். சாலற்றால் இந்த காதல் மறுக்கப்பட்டாலும் வெதரின் நட்பை தனது புதிய கணவனுடன் சேர்த்து ஏற்றுக்கொள்கிறாள். வெதரின் காதல் பின்னர் பொறாமையாக மாறியதால் சாலற்றால் மீண்டும் நிராகரிக்கப்படுகிறார் அதனால் வெதர் தற்கொலை செய்து கொள்கிறார்.
கவித்துவமான மொழியில் ஒரு தலைப்பட்சமான காதல் சொல்லப்படுகிறது. இளம் வயதில் படிப்பவர்களை தன்வயப்படுத்தி கதையுடன் கலக்கும் தன்மை கொண்டது.
இந்தப் புத்தகத்தை படித்த பின்பு இதனை பற்றி அறிய இணையத்தில் பார்த்தேன். இந்நாவல் ஐரோப்பிய செவ்விலக்கிய வரிசையில் பெரும் தாக்கக்தை ஏற்படுத்தியதாகவும் நெப்போலியனால் பெரிதும் புகழப்பட்டதாகவும் சொல்கிறது. தற்கொலையை, துன்பத்தின் விடுதலையாக. இறப்பதற்கு முன்பு கருதி, சாலற்றின் கணவனுடன் தர்க்கத்தில் ஈடுபடும் வெதர், வேட்டைத் துப்பாக்கியை சாலற்றிடம் இருந்து பெற்றுக் கொள்வது பெரியளவில் புத்திஜீவிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் மேலும் பல இளைஞர்கள் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார்கள். நாவலில் வரும் வெதரின் உடைகள் இளைஞர்களால் அணியப்பட்டது.
தனது வாழ்க்கையனுபவத்தில் எழுதப்பட்ட இந்த நாவலால் பெருமளவு புகழ் பெற்றார். அதன் படைப்பாளி கோதே. பிற்காலத்தில் இந்த நாவலை நிக்கோல் என்பவர் நகைச்சுவையாக கதையின் முடிவை மாற்றி வெதரின் தற்கொலையை போலியாக்கி, சாலற், வெதரை ஏற்பது போல் புதிய வடிவம் கொடுத்தார். அதனை கடுமையாக எதிர்த்து, ஒரு கவிதையில் வெதரின் கல்லறையில் நிக்கோலய் (Friedrich Nicolai)) மலம் கழித்தாக எழுதி இருந்தார் கோதே.
இப்படி ஐரோப்பிய ரொமாண்டிக் இலக்கிய வரிசையில் முக்கிய மைல் கல்லாகிய இந்தப் புத்தகத்தின் கதாநாயகியின் பெயர் ஆசியாவில் ஒரு நட்சத்திர ஹோட்டலின் பெயராக அமைவது ஆச்சரியம் அல்லவா? அதை விட ஹோட்டேலின் ஒவ்வொரு அறையிலும பெட் சைட் மேசையில் இடம்பெறுகிறது.
இலக்கியத்துக்கு கிடைத்த மரியாதையா அல்லது காதலுக்கான மரியாதையா?
மறுமொழியொன்றை இடுங்கள்