




நடேசன்.
கியூபா என்றதும் பலருக்கும் சேகுவேராவும் காஸ்ட்ரோவும்தான் நினைவுக்கு வருவார்கள். இன்னும் சிலருக்கு அழகான பெண்களும் (ஆண்களும்) நைட்கிளப்புகளும் நினைவுகளில் ஊஞ்சல் ஆடும். இதைவிட கியூபா சுருட்டும் ஹவானா ரம்மும் மறக்க முடியாதவை.
பிடல் காஸ்ட்ரோ உயிர் வாழும் போதே கியூபா செல்லவேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற கடந்த தை மாதம் அங்கு சென்றேன். எனக்கு ஹவானா விமானநிலையத்தைப் பார்த்த போது ஒரு மூன்றாம் உலக நாட்டின் விமான நிலையம் போல்தான் காட்சியளித்தது. அரை குறையான ஆங்கிலமும் புன்னகை குறைவாக அணிந்திருந்த குடிவரவு அதிகாரிகளின் முகங்களும் ஏற்கனவே அமெரிக்க பிரசாரங்கள் படித்திருந்த என் மனத்தில் கொட்டையற்ற பழப்புளியை கரைத்தது போல் இருந்தது. ஆஸ்திரேலிய பணத்தை மாற்றி கியூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு டாக்சியில் ஏறியமர்ந்து பயணித்தபோதுதான் கியூபாவின் தனித்தன்மை எனக்கு ஆச்சரியம் அளித்தது.;
அதிகம் வாகனங்கள் அற்ற அமைதியான தெருக்களில் ஒரு சில வாகனங்கள் மட்டுமே கண்களுக்கு தென்பட்டன. விமான நிலையத்தில் இருந்து ஹவானா செல்லும் பாதைதான் இப்படி என நினைத்தேன். சில வருடங்கள் முன்பு இதே அளவோ அல்லது குறைந்த தூரத்தை கொண்ட கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து கொழும்பு நகருக்கு செல்ல எடுத்த நாலு மணி நேரத்தையும் மனதில் எண்ணிக்கொண்டேன்.
அடுத்த நாள் புரட்சியாளர் சேகுவோரவால் பாவிக்கப்பட்ட பொருட்கள் பல நினைவு சின்னங்களாகவும் மற்றும் பொலிவியாவில் அமெரிக்க உளவு நிறுவனத்தால் சுட்டு கொல்லப்பட்டு பின்பு அங்கிருந்து கொண்டுவரப்பட்ட சேகுவோரவின் உடலின் பகுதிகள் வைக்கப்பட்ட நினைவு மண்டபம் அமைந்த இடத்திற்கு காரில் சென்ற போது நாங்கள் சென்ற கார் கியூபாவின் பிரதான சாலையில் சென்றது. இந்த சாலை கரும்புவயல்களை ஊடறுத்து சென்றது. சாலையோரம் பிரயாணத்தை தொடர இருந்தவர்களை அவ்வழியே சென்ற பல வாகனங்கள் ஏற்றிக்கொண்டு சென்றன. அரசாங்க உத்தியோகத்தர்கள் தாங்கள் செல்லும் வழியில் நிற்பவர்களை கார்களில் ஏற்றிக்கொண்டு செல்லாவிடில் இவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் இதற்கு நியாயம் கூறவேண்டும் என்றார், எங்கள் காரச்சாரதி.
மற்றைய நாடுகளிலும் இதேவழி முறை கடைப்பிடிக்கப்பட்டால் எவ்வளவு எரிபொருள் மிச்சமாகும்?
குதிரை வண்டிகள் குப்பைகளை அகற்றும் வண்டிகளாக பாவிக்கப்படுகின்றன.. சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் பெருமளவு ரோட்டில் காணக்கூடியதாக இருந்தது. வேனிசுவேலாவில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணை சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறது என நினைத்தேன்.
worldwide fund for Nature வெளியிட்ட 2007ஆண்டு அறிக்கையின்படி கியூபா மட்டுமே உலக நாடுகளில் சுற்று சுழல் பாதிப்படையாமல் தொடர்ச்சியாக வளரக்கூடிய பொருளாதாரம் கொண்ட ஒரு நாடாகும் (Ecologically sustainable economy) இப்படியான நிலையை கியூபா அடைவதற்கு சோவியத் யூனியனது வீழ்ச்சியே பெரிய உதவியாக இருந்தது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் இருந்த கியூபாவுக்கு சோவியத் உதவி தொப்பிள் கொடியாக நாற்பது வருடங்கள் இருந்தது.விசேடமாக எரிபொருள் சோவியத்திடம் இருந்துதான் வந்தது. இந்த எரிபொருளில் இருந்து வந்த இரசாயன உரம் முக்கிய விவசாய உற்பத்திகளான கரும்பு. புகையிலையின் ஆதாரமாக இருந்தது. தற்பொழுது கியூபா தனது மூலவளங்களில் மட்டுமே தங்கியிருக்க வேண்டியது மட்டுமல்ல அந்த வளங்களை பாதுகாத்து சிக்கனமாக பாவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
97ம் ஆண்டு கியூபாவில் சூழல் சட்டம் அமுலுக்கு வந்தது. அதன் பின் ஏற்பட்ட மாற்றங்கள மற்றைய நாடுகளுக்கு முன்னுதாரணமானவை. மூன்றாம் உலக நாடுகள் மேற்கு நாடுகளின் வழியில் செல்ல முடியாது என்பதற்கு தற்போதைய பெற்றோல் விலையும் வெப்பமடையும் புவியும் நமக்கு சான்று தெரிவிக்கிறது.
கியூபாவின் வெற்றியின் அடிப்படையாக இருந்தவை இயற்கை விவசாயம், நகரப்புற விவசாயம் என்பன. மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அருகே உணவு உற்பத்தியாக்கப்படுவதால் குதிரை வண்டிகள் மூலம் அவை அனுப்பப்பட்டு போக்குவரத்துச் செலவு குறைக்கப்பட்டது
பாரிய மின்சார உற்பத்தித் திட்டங்கள் மூடப்பட்டு சிறிய மின்சார உற்பத்தித் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. காற்றாலைகள் கொண்டு மின்சாரம் உருவாக்கப்பட்டது. வீடுகளுக்கு குறைந்த சக்தியில் ஒளியூட்டும் பல்புகள் இலவசமாக வினியோகிக்கப்பட்டது. சிறிய கிராமங்களுக்கு சோலர் பனல் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.
ஓவ்வொரு கிராமப் பாடசாலைகளுக்கும் இரண்டு சோலர் பனலுடன் கம்பியூட்டர் ரேலிவிசன் மற்றும் டி.வி.டி பிளேயரும் கொடுக்கப்பட்டது. இதே போன்று கிராம வைத்தியசாலைகளுக்கு சோலர் பனலுடன் சிறிய இரண்டு வழி ரேடியோவும் ஓட்டோகிளேவ் மற்றும் குளிர் சாதனப்பெட்டியும் வழங்கப்பட்டது.
உயிர் வாயு(Bio Gas ) கரும்பு சக்கையில் இருந்து எடுக்கப்படுவது கியூபாவின் 30 வீதமான சக்தி தேவையை பூர்த்தி செய்கிறது. அதிக சக்தியை விரயம் செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இப்படியான காகித மற்றும் பல சக்கரை தொழிற்சாலைகள் மூடப்பட்டதோடு அங்குள்ள தொழிலாளர்கள் முழு வேதனத்தடன் வேறு தொழிற்பயிற்சியும் கல்வியும் பெறுவதாக சமீபத்தில் அவுஸ்திரேலியா வந்திருந்த கியூபா நிபுணர் ஒருவர் கூறினார்.
கியூபாவின் வழி தனி வழியாக இருந்த போதிலும் கல்வி சுகாதார முன்னேற்றங்கள் செல்வந்த நாடுகளுக்கு ஈடானவை. தற்பொழுது உல்லசப்பிரயாணிகளால் பெறும் வருமானமும் வெனிசுலாவில் இருந்து கிடைக்கும் பெற்றோலியமும் சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறது.
சில வருடங்கள் முன்பு கியூபா சென்ற பின்பு எழுதியது
மறுமொழியொன்றை இடுங்கள்