சில வருடங்களுக்கு முன்பு எனது இரத்தத்தில் சர்க்கரை சிறிது அதிகமாக உள்ளது என்று அறிந்த போது எழுதியது பலருக்கு உதவும் என மீண்டும் பிரசுரிக்கிறேன்
நடேசன்
சமீபத்தில் ஒரு நண்பர் ஒருவருடன் பேசும்போது ‘எனது கலாச்சார கூறுகளில் அரிசி சோற்றைத் தவிர எதையும் நிராகரிக்க முடியும்’ என கூறினேன்.
சிறுவயதில் எங்கள் குடும்பத்தில் பாண்(ரொட்டி) சாப்பிடுவது இழுக்காக கருதப்படும். அரிசி வேண்டுவதற்கு பணம் இல்லாதவர்கள் மட்டும் தான் பாண் சாப்பிடுவது என்ற கருத்து எங்கள் தீவு பகுதி மக்களிடம் பரவி இருந்தது. இதில் சரி பிழை விவாதிக்க முடியாது.
இக்கால தமிழ் அரசியல் போல் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த போக்கை தீவுப்பகுதி மையவாதம் எனக் கொள்ளலாம். அதாவது எமது தமிழ் அரசியலை யாழ்ப்பாணமையவாதம் என சில கற்றவர்கள் கூறுவது உண்டு.
இந்த அரிசியியலில் பழகிப்போன எனக்கு அரிசி சோற்றை விடமுடியாது போனது வியப்பில்லை. இரவில் ஒரு கோப்பை நிரம்ப சோறை உண்ணுவதை பார்த்து பலதடவை எனது மகள் ‘‘Dad This is too much’ என்பாள். இதைவிட அரிசி சோற்றை இலகுவாக உண்பதற்கு சிங்சிள் மோல்ற் விஸ்கி தேவைபடும்.
நண்பகலில் வெளியே சென்றால் பெரும்பாலான இலங்கை இந்திய உணவகங்களில் உணவு பரிமாறுபவர்கள் எனக்கு பரிச்சயபானவர்கள், தாரளமாக பரிமாறுவார்கள். இளவயதினர் அங்கிள் , அண்ணை என சொல்லி தாராளமாக தட்டில் வைப்பார்கள்.
இப்படி நெல் தண்ணியில் வளர்வது போல் அரிசியில் வளரந்த எனக்கு கடந்த மாதம் பிளட் சுகர் கூடியது.
அந்தகோ அரிசி சோறுக்கு வயிற்றில் அடி விழுந்தது.
தமிழன்தான் அரிசியை கண்டு பிடித்தது. காவிரி கரையில் தமிழும் அரிசியும் ஒன்றாக பிறந்தது என சமிபத்தில் கலப்பையால் உழுதிருந்தார்கள். இது உண்மையா இல்லை தமிழ் உணர்வின் பிரவாகமா? எனக்கு தெரியாது.
எனக்கு தெரிந்த வரை சமிப காலத்தில் கனடிய விஞ்ஞானிகள் பல உணவு பொருட்களை உண்ட பின்பு அந்த உணவு நமது இரத்தத்தில் குளுக்கோசாக மாறுவதற்கு எடுக்கும் நேரத்தை கணக்கிட்டுள்ளார்கள். குறைவான நேரத்தில் குளுக்கோசாக மாறுவதை High Glycemic Index அதிக நேரம் எடுத்து மாறுவதை
Lower glycemic Index என வகைப்படுத்தினார்கள். இதில் அரிசிச்சோறு குறைவான நேரத்தில் குளுக்கோசாக மாறுவதாக அவதானித்தார்கள். இதே வேளையில் கோதுமை பாதார்த்தங்கள் moderate Glycemic ஆக இருப்பதும் அவதானிக்கப்பட்டது.
இந்த நிலையில் எனது கையில் இருந்த உணவுப்பட்டியல் என் மனைவியிடம் சென்றுவிட்டது. ஏழைகளின் உணவாக கருதப்பட்ட பாண், கோதுமை, ரொட்டி எனது தட்டில் இடம்பிடித்தது. அக்கால தமிழகம் போல் ஆல்ககோல் பேர்மிட் நடைமுறைக்கு வந்துள்ளது.
அக்காலத்தில் இந்தியாவில் ஒரு ஈழ விடுதலை இயக்கம்
தனது போரளிகளுக்கு ஒவ்வொரு நாளும் கொண்டல் கடலை அவித்து கொடுப்பார்கள். போராளிகள் திடகாத்திரமாக இருப்பதற்கு என நீங்கள் எண்ணலாம். நானும் அப்படித்தான் ஆரம்பத்தில் நினைத்தேன் உண்மை என்னவென்றால் அதற்கு மட்டும் தான் அவர்களிடம் பணம் இருந்தது. அந்த இயக்கத்தை சேர்தவர் ஒருவர் விடுதலைப் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டார். அவர் எனக்கு சொன்னார்’ நான் புலிச்சிறையில் இருந்தபோது அடி உதை கிடைத்தாலும் எங்களது இயக்கத்தை விட நல்ல சாப்பாடு போட்டார்கள் ‘
இப்படி பிரபலமான கொண்டைக்கடலை, பட்டாணிக்கடலை காலை மாலை எனது தட்டுக்கு வந்து சேர்கிறது. வேள்ளரிக்காய், கரட் , லெற்ருஸ் என்பன முயல்களுக்கு கொடுக்கும் படி என்னை நாடி வந்தவர்களுக்கு பலமுறை ஆலோசனை சொல்லியுள்ளேன். இப்பொழுது அதே ஆலாசனை எனக்கு திரும்பவும் என் மனைவி மூலம் வந்து வந்து சேருகிறது.
இரைப்பைக்கு சிறிது கீழே உள்ள பங்கிறியஸ்சுக்கு இன்சுலினை சுரந்து நாங்கள் சாப்பிட்டதால் உருவாகிய குழுக்கோசை இரத்தத்தில் மட்டுப்படுத்துகிறது இந்த பங்கிறியஸ். தென் கிழக்காசிய மக்களை பொறுத்தவரை ஓவற்ரைம் வேலை செய்கிறது
காலையில் அரிசியில் ஆன புட்டு இடியப்பம் பின்பு மதியத்தியத்தில் அரிசிச்சோறு இரவிலும் இதே உணவு. பாவம் இந்த சுரப்பிக்கு சபார்த்( SABBATH DAY) நாளிலும் விடுதலை கிடைப்பதிலை. அதுதான் ஞாயிற்று கிழமை. அந்த நாளில் அதிகம் சாப்பிட்டதால் மேலும் இன்சுலின் தேவைப்படுகிறது.இதன் காரணத்தால் பங்கிறியஸ்சில் இன்சுலின் குறைந்து விடுகிறது. இந்த நிலை டயபற்றிஸ் என சொல்லப்படுகிறது.
இது மட்டும் அல்ல ஓடியாடி வேலை செய்தாலோ , அல்லது உடல் பயிற்சி செய்தால் குளுக்கோஸ் உபயோகிக்கப்பட்டு இரத்தத்தில் குறைந்து விடுகிறது. இதன் காரணமாக இன்சுலினுக்கு சிறிது ஓய்வு எடுக்க முடிகிறது. எம்மவரை பொறுத்தவரை இது , பணமும் வயதும் ஏறும் போது உடல் பயிற்சி குறைந்து விடுகிறதே!
இரத்தத்தில் குளுக்கோசை 8.5mmol/L என பரிசோதித்து விட்டு இரண்டு கிலோ மீட்டர் வேகமாக நடந்துவிட்டு மீண்டும் பரிசோதித்த போது 5.5 mmol/L ஆக குறைந்து விட்டது. இதோ போல் டெல்லியில் உள்ளவர்களை விட டெல்லியின் வெளியே இருக்கும் கிராம மக்ளுக்கு இந்த டயபற்றிஸ் குறைவாக இருக்கிறது என ஒரு ஆய்வு இந்தியா ருடெயில் வெளிவந்திருந்தது.
அக்காலத்தில் கிராமங்களில், மண்ணில் தாங்கள் சலம் விட்ட இடத்தில் எறும்புகள் மொய்த்திருபதின் மூலமே தங்களுக்கு டயபற்றிஸ் என்பதை பலர் தெரிந்து கொள்வது வழக்கம். மேலும் சிலருக்கு கண் தெரியாமல் வைத்தியரிடம் சென்ற போது அவர் இது கற்ரராக்ற் என்று சொல்லிவிட்டு இரத்தப் பரிசோதனை செய்து டயபற்றிஸை உறுதிப்படுத்துவார்.அவுஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 700000 பேர் டயபற்றிஸ் என அறியபட்டு இருக்கிறார்கள் என்றால் இதே போன்ற எண்ணிக்கையில் தங்களுக்கு டயபற்றிஸ் உள்ளது என அறியாமல் இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.
இரத்தத்தில் குளுக்கோஸ் கூடுதலாக இருக்கும் போது சிறிய இரத்த குளாய்களில் உள்ள செல்களை தாக்கிறது. ஆதனால் அக்கலங்கள் அழிகிறது. இந்த நிலையை ஒரு ஆராச்சியாளர் சீனி தோய்த்த கருகிய ரொட்டியின் வெளிப்பகுதிக்கு ஒப்பிடுகிறார். இப்படியான தாக்கம் உடலின் பல உள்ளுறுப்புகளில் ஏற்படும்போது இரத்த பெருக்கு ஏற்படுகிறது. இதன் அந்த இடத்தில காயத்தைப்போல் தாக்கம் நடக்கிறது. இதன் விளைவே கண், சிறுநீரகம் ,கால் நரம்பு , இதயம் என்பனவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. டயபற்றிசின் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு அரிசி சோற்றை குறைப்பது உதவும்.
அரிசிக்கு ஏற்கனவே தட்டுப்பாடு உள்ளது. இந்தியா பசுமதி அரிசியை தவிர மற்றவையையின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது. இலங்கையும் வங்க தேசமும் இறக்குமதி தேடி அலைகிறார்கள். மேலை நாடுகளில் வாழும் நாங்கள் அரிசியை குறைப்பது பலருக்கு உதவும்.
மறுமொழியொன்றை இடுங்கள்