காதலைத் தேடும் பெண்

நடேசன்

செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள் வேலைகளை முடித்து வீடு திரும்பிய பின்புதான் அவைகளில் கவனம் செலுத்துவார்கள். இதைக்கருதி ஆஸ்திரேலியாவில் எல்லா மிருக வைத்தியர்களும் இரவு ஏழரை மணி வரை தொழில் செய்வார்கள். சனிகிழமைகளிலும் கிளினிக்கை திறந்து வைத்திருப்பார்கள். இதற்கு நானும் விதி விலக்கல்ல. ஊரொடு ஒத்து ஓடவேண்டும.

ஏழு நாட்கள் வேலை செய்யும் உணவு விடுதிப் பணியாளர்கள் மற்றும் இலங்கை இந்திய மளிகைக் கடைக்காரர்களை ஒப்பிட்டு ஆறுதல் கொள்ள முடியும். ஆஸ்த்திரேலிய அரசாங்கத்தின் லேபர் விதிகள் செல்லாத இடங்கள் இவையாகும்.

உங்கள் அலுவலகத்தை மூடுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னால் வந்து மேலும் பத்து நிமிடங்கள் தனது பூனையை பற்றியும் அதனது உணவு வகைகளையும பற்றி ஒரு பெண் ஒரு நாள் மட்டுமல்ல, பல நாட்கள் பேசிக்கொண்டிருந்தாள் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

ஓரு ஆள் பலமுறை வந்தால் மனதில் எரிச்சல ஏற்படும்தானே.

இப்படியாக முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆறு அடிக்கு இரண்டு அங்குலம் குறைந்த ஓலீவ் நிறமான பொஸ்னியாவை பிறப்பிடமாகக்கொண்ட ஒரு பெண் சில நேரங்களில் தனது பூனையுடனும் சில நாட்களில் புழு தெள்ளு என்பனவற்றுக்கு மருந்து என வந்தால் இலகுவில் வெளியேற மாட்டார் நானும் எனது நேர்சும் நாகரீகம் கருதி லீசா என்ற அந்த பெண் பேசுவதை கேட்டுக்கொள்வோம். மனத்தினுள் வீட்டுக்கு போகும் நேரத்தில் வந்து எங்கள் நேரத்தை அறுக்கிறாளே என வெம்பிக் கொள்வோம். மற்றைய தொழில்கள் போல் அல்லாது அவசர சிகிச்சைக்கு பழக்கமாக இருந்தாலும், இப்படியாக நேரத்தை வீணடிப்பபது எரிச்சலைக் கொடுத்தது.

சில நாட்களின் பின்பு “இந்த பெண்ணுக்கு மூளையில் மிக மிக சிறிய குறைபாடு உள்ளது” என்று எனது நர்ஸ் கூறினாள். நானும் அதை ஆட்சேபிக்கவில்லை. நாங்கள் மிருகங்களின் வைத்தியத்தோடு நிறுத்தி விடுவோம் என பேருக்குச் சொன்னாலும என் மன்திலும் அப்படி ஒரு சந்தேகம் இருந்தது. முடிந்த அளவு இந்த பெண்ணை தவிர்த்துக்கொள்ள முயல்வோம். பூனையை மருத்துவத்துக்கு கொண்டு வராமல் வேறு தேவையாக வந்தால் நான் தொலை பேசியில் இருப்பதாக பாவனை செய்து கொண்டு தப்பிவிடுவேன். இதேமாதிரி எனது நேர்ஸ் தான் பிஸியாக இருப்பதாக காட்டிக்கொண்டு தப்பி விடுவாள். இப்படி இந்தப் பெண்ணிடம் இரணடு வருடங்கள்; கண்ணாம் பூச்சியாடினோம்.

2008 ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதியில் மெல்பேனில் ஒரு ஹொட்டலில் சமையல் செய்யும் ஒருவர் இருபதுக்கு மேற்பட்ட பெண்களை நைட் கிளப்புகளில்,  அவர்கள் அருந்தும் பானங்களில் மயக்க மருந்தை அவர்களுக்கு தெரியாமல் கலந்து அந்தப் பெண்களை பாலுறவுக்கு உட்படுத்தியுள்ளார் என கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றங்களை இவர் கடந்த ஐந்துக்கு மேற்பட்டவருடங்களாக செய்து வந்துள்ளார் எனவும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் பத்திரிகை தொலைகாட்சி போன்றவற்றில் பார்த்து இரண்டு நாட்களின் பின்பு, எனது கிளினிக்கு வழமைபோல் லீசா கடைசியாக வந்தாள். அவளது கறுப்பு வெள்ளை நிறமுடைய விஸ்கி என்ற பூனையைப்பற்றி விசாரித்து விட்டு பரிசோதனை செய்தேன. விஸ்கியில் உடல் குறையோ உளக் குறைவோ காணமுடியவில்லை. பின்பு விஸ்கிக்கு எந்த ஒரு நோய்க்கான அறிகுறியும் இல்லை என அறிவித்து விட்டு அவசரமாக எனது அறையின் உள்ளே சென்றேன்.

எனது நேர்சிடம் லீசா பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

சில நிமிட நேரத்தில் மெதுவான விசும்பல் ஒலி கேட்டது. வெளியே சென்று பாரத்த போது எனது நேர்ஸ் லீசாவின் கண்ணீரைத் துடைக்க பேப்பர் டவலை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

‘என்ன விடயம்?’

எனது நேர்ஸ் பதில் சொல்லவில்லை.

லிசாதான் பதில் கூறினாள்

‘இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் பல பெண்களை மருந்து போட்டு மயக்கி பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டவர் எனது கணவர்தான்.. இவ்வளவு காலமாக எனக்கு கெரியவில்லை.’

‘உங்கள் கணவர் இப்படியான குற்றம் செய்திருப்பார் என நம்புகிறீர்களா?’

‘ஆதாரங்களாக படங்களை காட்டும் போது எப்படி நம்பாமல் இருக்க முடியும்’

‘எவ்வளவு காலமாக ஒன்றாக இருந்தீர்கள்.

‘ஏழுவருடம் திருமணமாகி ஆனால் அதற்கு மூன்று வருடம் ஒன்றாக இருந்தோம்.”

அடுத்த கேன்வியை நான் கேட்க்காமலே லீசாவிடம் இருந்து பதில் வந்தது.

‘ஹோட்டல் சமயல்காரர், ஆனதால் அதிகாலையில் வீட்டுக்கு வந்ததும் நித்திரையாகி விடுவார் மதியம் தான் எங்கள் பேச்சுவார்த்தை மற்றும் தாம்பத்தியம் எல்லாமே. அவர் வேலைக்கு போன பின்பு தான் நான் உங்கள் கிளினிக்குக்கு வருவேன். அவர் இல்லாத நேரத்தில் விஸ்க்கியுடன் தான் பொழுது போக்குவேன். இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் வீட்டை பொலிஸ் சுத்தி வளைத்து படுக்கையில் இருந்த மார்க்கை கைது செய்தது. இருபது பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியவர் என குற்றம் சாட்டப்பட்டது.’ எனக் கூறி தொடர்சியாக விசும்பினாள்

எங்களால் எதுவும் பேச முடியவில்லை. எனது நேர்ஸ் தொடர்சியாக கண்களை துடைப்பதற்கு பேப்பர் ரிசு கொடுத்துக் கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட ஒரு பெட்டி முடிந்துவிட்டது.

கடைசியாக நான் சொன்னேன் ‘ பிணையில் சீக்கிரம் வருவதற்கான சாத்திய கூறு உள்ளதா என லோயர் மூலம் விசாரித்தீர்களா’

லீசா என்னைப்பார்த்து தோளை அசைத்து விட்டு ‘அதற்கான சாத்தியம் இல்லை’ எனக் சொல்லிவிட்டு வெனியேறினாள்.

‘இந்தப் பெண்ணுக்கு மூளையில் கோளாறு இருக்க வேண்டும். இல்லாவிடில் தன்னோடு சீவிக்கும் மனிதனின் குணத்தை புரிய முடியாமல் இருக்குமா வழக்கமான தனது கருத்துக்கு உரமிட விரும்பினாள் எனது நேர்ஸ்.

அவ்வளவு எளிதாக எடை போட்டு விடமுடியாது. சில மனிதர்கள் தங்கள் உள் மனங்களை பல பகுதிகளாக கூறு போட்டு தாங்கள் விரும்பிய பகுதியை மட்டும் தங்களுடன் பழகுபவர்களுக்கு வெளிக்காட்டுவார்கள். பல சர்வாதிகாரிகள்,  கொலைகாரர்கள் அப்படி நடந்திருக்கிறார்கள். இந்த மனிதன் இந்த பெண்ணை மட்டும் அல்ல,  வேறு பல இளம் பெண்களையும் ஏமாற்றி இருக்கிறான். இதைவிட வெளிவராமல் பல குற்றங்கள் இருக்க வேண்டும். இந்தப் பெண்ணையும் இவளது அப்பாவித்தனமான வாழ்க்கையையும் தனது இருண்ட பகுதியை மறைக்கும் ஒரு முகமூடியாக பாவித்து இருக்கிறான்.

நான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட திருப்தி அவள் முகத்தில் இல்லை. மீண்டும் சொன்னாள்.

‘லீசா தனிமையாக வாழ்ந்திருக்க வேண்டும். இந்த மனிதனுடன் ஒட்டாமல் வாழ்ந்திருந்ததால்தான் இந்தக் குறைபாடு தெரியாமல்
இவ்வளவு காலம் இவனுடன் சீவித்திருக்க முடியும்.’ என கூறி தனது வாதத்திற்கு பலம் சேர்த்தாள்.

இந்தப் பெண் பொஸ்னியாவில் இருந்து இளம் வயதில் அகதியாக வந்திருக்கலாம் எனக் கூறிய படி இருவரும் அரைமணி நேரம் தாமதமாக வேலைத்தலத்தை விட்டு வெளியேறினோம்

இது நடந்து சில காலத்தின் பின்பு லீசாவைபற்றிய நேர்முகம் ஒரு பெண்களுக்கான பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது என எனது நேர்ஸ் மூலம் அறிந்து கொண்டேன்.

ஓரு மாலை நேரத்தில் நான் மட்டும் எனது கிளினிக்கில் இருந்த போது லீசா தனது பூனைக்கு தௌளுக்கு மருந்து
வாங்க என வந்தாள். மருந்தை எடுத்து கொடுத்த போது ‘எப்படி இருக்கிறாய்’ என வழமையாக கேட்டு வைத்தேன்

‘நான் இப்பொழுது ஒரு மிருக வைத்தியரை எனக்கு போய் பிரண்டாக தேடிக் கொண்டு இருக்கிறேன். என்னையும் என் பூனையைபும் ஒன்றாக அவரால் தான் பார்த்துக் கொள்ள முடியும்.

சிறிது அதிரச்சியை தந்தாலும் ‘அந்த மிருக வைத்தியர் எதாவது நாடு, இனம் அல்லது வெள்ளை ,கறுப்பு ,மஞ்சள் என நிறம் தொடர்பாக முன்னுரிமை உள்ளதா? என்றேன்

‘இத்தாலியரை எனக்குப் பிடிக்கும்’

‘ஏன்?’

‘நல்ல காதலர்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்’ என சிரித்தாள்

அவளது சிரிப்பு மனத்துக்கு இதமாக இருந்தது. அத்துடன் தனது துயரங்களில் இருந்து வெளியே வந்து மீண்டும் ஒரு வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டாள் என்பதை எனக்கு புரிய வைத்தது.

எனக்குத் தெரிந்த மிருக வைத்தியர் இருந்தால் உனக்கு சொல்லுகிறேன் என வாக்குறுதி கொடுத்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: