
கருணாகரன்
நேற்று எங்களின் வீட்டுக்கு நண்பரொருவர் வந்திருந்தார். நீண்டநாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். நீண்ட நாட்கள் என்றால், வன்னியின்யுத்த காலத்திற் சந்தித்ததற்குப் பிறகு இப்போதே அவரைச் சந்திக்கிறேன்.ஏறக்குறைய மூன்று ஆண்டுகள். யுத்தத்தின் இடைக்காலப்பகுதியில் -உடையார்கட்டுப் பகுதிக்கு இராணுவம் வந்த பிறகு – அவருடைய தொடர்புகளில்லாமல் போய் விட்டது.
ஆனாலும் வலைஞர்மடத்திலிருந்து நாங்கள் வெளியேறும் வரையில் அவரைப் பற்றி அறிந்து கொண்டிருந்தோம். பின்னர், அதுவும் இல்லாமற் போய்விட்டது. நேரடியாகப் பேசுவதற்கும் தகவல்களைச் சரியாக உரியவரிடமிருந்து அறிந்து கொள்வதற்கும் அங்கே தொலைபேசி போன்ற தொடர்பு வசதிகள் இல்லை. எல்லாமே வாய்வழித் தகவற் பரிமாற்றந்தான். வாய்வழித் தகவல்களில் கூடக்குறைய எல்லாம் வரும்.
விண்ணாணம், பூராயம், விடுப்பு என்றெல்லாம் ஊர்க்கதைகளைக் கதைத்துப் பழகிய ஆட்களல்லவா! ஆகவே, அவரவருடைய கற்பனைகள், விருப்பங்களின் அளவுக்குச் செய்திகளில் ஏற்ற இறக்கம் இருக்கும். அதிலும் யுத்தகாலத்தில், யுத்த களத்தில் இந்தக் கூடக்குறைய என்பதற்கெல்லாம் குறைவே இல்லை. யுத்தத்தில் முதலில் கொல்லப்படுவது உண்மை என்று சொல்வார்கள். அது முற்றிலும் சரியே. அந்த உண்மையை ஆளாளுக்குக் கொன்று கொண்டிருந்தனர். ‘முன்னேறி வரும் இராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக இயக்கத்துக்குப் புதிசாக ஆயுதங்கள் வந்திருக்கு.
முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இரவோடிரவாக இந்த ஆயுதங்கள் இறக்கப்பட்டுள்ளன.ஒரு தொகுதி ஆயுதங்களை இறக்கிய கப்பல் மீதி ஆயுதங்களோடு நடுக்கடலுக்கு –சர்வதேசக் கடற்பரப்புக்குப் போயிட்டுது. எல்லா ஆயுதங்களையும் ஒரே இரவில்இறக்க முடியாதல்லவா! என்றபடியால், அது தூரப் போயிட்டுது. பகலில் கரைக்குக்கிட்ட நின்றால் சிறிலங்காப் படைகளுக்குச் சந்தேகம் வந்து விடும். அதுதான் அது ஆழத்துக்குப் போனது’ என்று சொல்வார்கள். ‘இதையெல்லாம் யார் கண்டது? இந்த ஆயுதங்களை யார் இறக்கியது?’ என்று கேட்டால், ஆயுதங்களை இறக்கியவரே தமக்குச் சொன்னார் என்பார்கள்.
இப்படிச் சொல்வது பெரும்பாலும் பொதுமகன்தான். நானறிந்தவரையில் புலிகள் ஒரு பொதுமகனை இப்படியான மிக அந்தரங்கமான விசயங்களில் ஈடுபடுத்துவது இல்லை எனலாம். அப்படியொருவர் ஈடுபடுத்தப்பட்டால், அது அவருக்கு மிக நம்பிக்கையான ஆளாகவே இருக்கிறார் என்றே அர்த்தம். அந்த நம்பிக்கையான ஆளிடமிருந்து இப்பிடி ஊதாரித்தனமான கதைகள் எல்லாம் வராது. ஆனால், இந்தத் தகவலை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று அவர் சத்தியம் செய்திருந்தார் என்றும் தமக்குமட்டும் அவர் இதைச் சொன்னதாகவும் சொல்லுவார்கள்.
அதிலும் இந்தக் கதையைப் பலரும் பலவிதமாகச் சொல்லுவார்கள். ஒரே நேரத்தில் இரண்டு கப்பலில் ஆயுதங்கள் வந்தன. தனித்தனிக் கப்பலில் கொண்டு வருவதற்கு பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கும் என்பதால், ஒரேயடியாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்லுவார்கள். என்ன கொடுமையென்றால்,இதையெல்லாம் நம்பவேண்டும். நம்பவில்லையென்றால்…? ஆனால், அப்படி நம்புவதற்கும் ஆட்கள் இருந்தார்கள். புலிகளின் ஆயுதக்கப்பல்கள் ஒரு போதுமே பகிரங்கமாக வந்ததில்லை.
அப்படிப் பகிரங்கமாக அவர்கள் கப்பல்களைக் கொண்டு வருவதுமில்லை. அதிலும்பின்னாட்களில் இரகசியமாக வந்த கப்பல்களையே மோப்பம் பிடித்து இலங்கை அரசின் விமானங்கள் தாக்கிவந்தன. உண்மை என்னவென்றால், புலிகளின் ஆயுத விநியோக வழி, விநியோக முறைகளைப் பற்றிய செய்திகள் ஏற்கனவே பலவிதமாக வந்துள்ளன. அதை வைத்துக்கொண்டு அவரவர் இந்த மாதிரிக் கதைகளைச் சொல்வார்கள். இந்தக் கதைகள் இப்படி உருவாகுவதற்கும் உருவாக்கப்படுவதற்கும் கூடக் காரணங்கள் இருந்தன.
இயக்கம் எப்படியும் இறுதி வெற்றியைப் பெற்றே தீரும். இப்போது அதுபின்வாங்குவதற்குக் காரணம், அதற்குப் புதிய ஆயுதங்கள் தேவை என்ற ஒருபிரச்சினை இருக்கிறது. ஆகையால், என்ன பாடுபட்டாவது, அது ஆயுதங்களைக் கொண்டு வந்து விடும். இந்த மாதிரி ஒரு வகையான நம்பிக்கையும் அந்த நம்பிக்கையை மனதளவில் நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒருவித உளவியல் சமப்படுத்தலும் இந்தக் கதைகளின் பின்னணியில் இருந்தது. இன்னொரு காரணம்,அது இயக்கத்தினால் திட்டமிட்டுக் கதைகளை உருவாக்கியது.
இராணுவத்தின் விரைவான முன்னேற்றமும் இயக்கத்தின் தொடர் தோல்விகளும்போராளிகளுக்கும் மக்களுக்கும் உளச்சோர்வையும் நம்பிக்கையின்மைகளையும்உருவாக்கி வந்தன. இதனால், சனங்கள் போராட்டத்தில் வரவர நம்பிக்கையை இழந்து வந்தனர். போராளிகளுக்கும்கூட இதுவரையான அனுபவங்களை விட இந்த இறுதிப்போரின் களநிலையும் அனுபவமும் வேறாகவே இருந்தன. படைத்தரப்பு புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. நாசகார ஆயுதங்கள். அதுதான் இயக்கத்தின்ர பின்னடைவுக்குக் காரணம் என்று சிலர் சொன்னார்கள். அதோட போரில முன்னுக்கு வாற படையினர் ஏதோ போதை மருந்தை ஏற்றிக் கொண்டு வருகிறாரகள்.
நல்ல குடிபோதையில் வருகிறார்கள். சுடச்சுட அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறென்னவாக இருக்கும்? முந்தியென்றால், நல்லதொரு எதிர்த்தாக்குதலைத் தொடுத்தால் பின்வாங்கி ஓடுகின்ற படையினர் இந்தத் தடவை அதைப் பொருட்படுத்தாமல்,முன்னோக்கி விரைவாக வாறதெண்டால், அதுக்கு என்ன காரணம்? போதைதான்.
போதையின் உச்சத்தில் மரணத்தைப் பற்றிய அச்சமோ தங்களுடைய பாதுகாப்பைப்பற்றிய எண்ணமோ வராதல்லவா! என்றபடியால்தான் அவர்கள் இப்படி முன்னேறுகிறார்கள். இப்படியொரு கதை. இதையெல்லாம் தடுத்து, எல்லோருக்கும் நம்பிக்கைகளை ஏற்படுத்த வேணும். களத்தில் அனுபவமும் தேர்ச்சியும் திறமையும் உள்ள தளபதிகள் எல்லோரும் நிற்கின்றபோதும் இந்த முறை வெற்றிச் செய்திகள் வருவதாக இல்லை. படையினரின் முன்னேற்றம் சில இடங்களில், சில சமயங்களில் தாமதமாகினாலும் எப்படியோ நடந்து கொண்டேயிருந்தது.
ஆகவே இந்த நிலையில், எப்படியாவது சனங்களும் போராளிகளும் குழம்பாமல் நம்பிக்கையோடிருக்க வேணும். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்றால், ஏதாவது புதிய செய்திகளைச் சொல்ல வேணும். எனவே, ‘படையினரைச் சிதைக்கக்கூடிய – அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடிய மாதிரியான புதிய ஆயுதங்கள் வந்துள்ளன. அவை கரைக்கும் வந்துள்ளன. அதாவது,அவற்றை இறக்கியாச்சு. இனி அவற்றைச் சரிபார்த்து, முன்னோட்டமாக இயக்கிப் பார்க்க வேண்டியதுதான் பாக்கி’ என்ற மாதிரி கதைகள் உருவாக்கப்பட்டன.‘இறக்கப்பட்ட ஆயுதங்கள் பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றன’ என்றுகூடச் சிலர் சொன்னார்கள். இப்படி வருகிற கதைகள், செய்திகளுக்குள் உண்மைகளைக் கண்டு பிடித்து, நிதானமாக ஒரு செய்தியை அறிவது, நிலைமையை விளங்கிக் கொள்வதென்பது மகா கெட்டித்தனந்தான்.
முன்னரே சொன்னதைப்போல தப்பிப் பிழைத்த உண்மைகளைக் கூட எப்படியும் கொன்று விடுவது என்ற மாதிரியே சிலர் இயங்கிக் கொண்டிருந்தனர்.இப்படியெல்லாம் இருந்த நிலையில் நம்ம நண்பரைப் பற்றிய தகவல்களுக்குக்கைகளும் கால்களும் சிறகும் முளைப்பதில் என்னதான் புதினம்? அதற்குப் பிறகு‘அவர் இறந்திட்டார்’ என்று சிலர் சொன்னார்கள். இல்லை, ‘அவர் காயப்பட்டு புல்மோட்டைக்கு அனுப்பப்பட்டு விட்டார்’ என்று இன்னொரு தகவல் கிடைத்தது.‘அவர் மாத்தளன் பகுதியால் சனங்களோடு சேர்ந்து தப்பிச் சென்று விட்டார்’ என்று ஒரு நண்பர் சொன்னார். அதுவுமல்ல, ‘அவர் ஒரு முன்னாள் போராளி என்பதால்,வட்டுவாகலில் சரணடைந்து காணாமற் போய்விட்டார்’ என்று வேறொருவர் சொன்னார். இல்லை ‘அவர் தடுப்பில் இருக்கிறார். தங்களுடைய சொந்தக்காரரைப்பார்க்கப்போனவர்கள் ஆளை நேரில கண்டிருக்கினம்’ என்றனர் சிலர்.
இதில் எதையும் முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதையும் ஏற்றுக்கொள்ளாமல் விடுவதற்கும் நியாயமில்லை. ஏனென்றால், இதிலுள்ள ஒவ்வொன்றும் நிகழ்வதற்கு நூறு வீதம் சந்தர்ப்பமுண்டு. இறந்து விட்டார் என்று சொல்லப்பட்டவரை அகதி முகாமில் சந்தித்திருக்கிறேன். தப்பிச் சென்று இராணுவத்திடம் பாதுகாப்பாகச் சேர்ந்து விட்டார் என்று சொல்லப்பட்டவர் இறந்திருக்கின்றார். பிடிபட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் எப்படியோவெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். வெளியே தப்பிச் சென்று விட்டார்கள் என்று சொல்லபட்டவர்கள் சிறையில் இருக்கின்றனர். இப்படி ஏராளம் தடுமாற்றங்கள்.ஆனால், இப்ப நம்ம ஆள் வந்து முன்னே நிற்கிறார். அதே சிரிப்பு.
அதே பம்பற்கதைகள். யுத்தத்தின் அலைகள் அவரைக் கண்காணாமற் கொண்டு செல்லவில்லை. எல்லா அலைகளுக்குள்ளும் தாக்குப் பிடித்து இப்பொழுது அவர்கரையொதுங்கியுள்ளார். ‘என்னண்ணை ஒரு மாதிரியாகப் பாக்கிறியள்? எப்பிடித் தப்பி வந்திருக்கிறன் எண்டா? இவ்வளவு ஷெல்லுக்குள்ளயும் ரவுண்ஸ் அடிக்குள்ளயும் இவ்வளவு சனமும் தப்பினதை நினைக்க உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா?அப்பிடித்தான். நானும் தப்பினதை நினைக்கவே எனக்கே ஆச்சரிந்தான்.
அதிலயும் உடம்பில ஒரு காயமும் இல்லாமற் தப்பியிருக்கிறனெண்டால்….!’ ஒரு புன்னகையுடன் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ‘உங்கட ரெலிபோன் நம்பர் கிடைச்சது. ஆனால், நேரில உங்களைச் சந்திக்க வேணும் எண்டுதான்… தொடர்பெடுக்காமல் நேரில வந்தன்’ என்றார். அவர், தான் தப்பிச் சென்றதையும் பிறகு நடந்த கதைகளையும் சொன்னார். மாத்தளனுக்கும் கடற்புலிகளின் தளமிருந்த சாலைக்கும் இடையிலிருந்த பகுதியிலிருந்து படகொன்றில் உறவினர்களுடன் தப்பிப் புல்மோட்டைக்குச் சென்றிருக்கிறார். புல்மோட்டையில் ஒன்றரை மாதங்கள் அகதி முகாமில் இருந்தார்.
ஆனால், அங்கே இருந்தவர்களில் யாரோ செய்த புண்ணியத்தின் பேரில் அல்லது யாரோ வழங்கிய தகவல் உபயத்தின் பேரில், ஒரு நாள் காலையில் இவருடையபெயரை ஒலிபெருக்கியில் அழைத்து விசாரித்தனர் படைப்புலனாய்வுப் பிரிவினர்.பிறகென்ன? ஒன்றரை ஆண்டுகாலத் தடுப்பு. இவ்வளவுக்கும் இவர் இயக்கத்தை விட்டு விலகி, பத்து வருசங்கள். இந்த பத்து வருசங்களிலும் இவர் கடற்றொழிலே செய்தார். இயக்கத்தை விட்டு விலகிய பிறகு திருமணம் செய்திருந்தார். 2004 இல் சுனாமியின் போது மனைவியையும் பிள்ளையையும் கடல் கொண்டு போனது.
பிறகு அங்கும் இங்குமாகச் சிலகாலம் அலைந்தார். தொடர்ந்து அப்படியிருக்க முடியுமா, என்ன? மீண்டும் கடற்றொழிலுக்குப் போனார். கடைசிவரையிலும் கடலிலேயே தொழில் செய்திருக்கிறார். எந்த அலைகளுக்குள்ளும் நின்று பிடிக்கும் வல்லமையோ என்னவோ ஷெல்லடி அமோகமாக நடந்து கொண்டிருக்கும்போதும் ரவுண்ஸ் எல்லாம் தாறுமாறாகச் சீறிக்கொண்டு வரும்போதும் ‘சிங்கன்’ கிறுங்காமற் கடலில் இறங்குவார்@ கரையில் ஏறுவார். அந்த நாட்களில், கறிக்கு வழியே அற்றிருந்த அந்தக் காலத்தில் கடலுக்குப் போய் மீனைக் கொண்டு வருவதென்பது,
ஒரு ஆயுதக்கப்பலைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதைவிடக் கடினமான காரியம்.நாங்கள் கிளிநொச்சியிலிருந்து தரைவழியே ஒதுங்கி ஒதுங்கிக் கடலுக்குச் சென்று வலைஞர் மடம் கடற்கரையில் இருந்த காலத்தில் (எல்லோரும் கடலில் ஒதுங்கியே கரைக்கு வருவது – நாங்களோ தரையில் ஒதுங்கிக் கடலுக்குப் போனோம்) நண்பர் பொக்கணையில் இருந்திருக்கிறார்.
ஆனால், சில நாட்கள்தான். அதற்கு முதல் கல்லாறு – பேய்ப்பாறைப்பிட்டியில் இருந்து தொழில் செய்தார். எல்லாம் அவர் சொல்லியே தெரிந்தன. ‘இயக்கத்தில் இருந்ததற்காக ஒண்டரை வருசம் தடுப்பு. அப்பிடியெண்டால் இயக்கத்தை விட்டு விலகினதுக்காக என்ன சலுகையைத் தருவியள்?’ எண்டு கேட்டன். ‘இன்னும் ரண்டு வருசம் உள்ளுக்குள்ள இருக்கப் போறியா? எண்டு கேட்டார்கள். பதிலைச் சொல்லாமல் கேள்வியைத்தான் கேட்கிறாங்கள் அண்ணை. எல்லாத்துக்கும் பதில் சொல்லிறதைக் காட்டிலும் கேள்வி கேட்கிறதுதான் லேசுபோல இருக்கு’ என்றுசொல்லிச் சிரித்தார். ‘………………..’ ‘கேள்வியே கேட்காமல் இருக்கப் பழகினதால பிரச்சினை குறைவாக இருக்கு’ என்றார். ‘ஆனால், மனசுக்குள்ள கேள்விகள் எழாமலா இருக்கும்?’ என்றார் பிறகு. நான் மௌனமாகத் தலையசைத்தேன். ‘இல்லையண்ணை,நானும் இயக்கத்தில கடைசி வரையும் விலகாமல் இருந்திருந்தால் இன்னும் சண்டை முடியாமலும் இருந்திருக்கும்.
சிலவேளை தமிழீழம் கிடைச்சாலும் கிடைச்சிருக்கும். உங்களுக்கு வெற்றியே கிடைக்காமலும் போயிருக்கலாம் அல்லவா! எண்டு கேட்கப்பார்த்தன். ஆனால், எதுக்கு இந்த வம்பெல்லாம் எண்டு விட்டிட்டன்.’ நானும் பதில் சொல்ல முடியாமல் மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.
நண்பரின் குறும்புத்தனமும் உட்கோபங்களும் இன்னும் அப்படியேதானிருக்கின்றன.இவற்றில் எப்படியோ அவர் தன்னுடைய சமநிலையைப் பேணிக்கொள்கிறார் போலும். பேய்ப்பாறைப்பிட்டியில் இருந்து வெளியேறிய அதே நாளில் மீண்டும் தொழிலுக்கு இறங்கப் போகிறேன் என்று சொன்னார். நண்பர் இரண்டாவது சுனாமியையும் சந்தித்து மீண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல நாங்களுந்தான். இன்னும் எத்தனை சுனாமிகள் இலங்கையில் அடிக்குமோ!
—
மறுமொழியொன்றை இடுங்கள்