யுத்தத்தில் காணாமற் போன இன்னொன்று –2

–           கருணாகரன்

ஒழுங்குகள் சிதையும் நிலையை யுத்தத்தின்போது வெளிப்படையாகவே பார்க்கலாம். கண்முன்னே நிகழும் மாற்றங்கள். சடுதியான மாற்றங்கள். ஒரு கிராமம் ஒரு சில மணி நேரத்தில் அப்படியே கைவிடப்பட்டு வெறிச்சோடி விடும். ஒரு நகரம் கணப்பொழுதில் சிதைந்து போகும். கண்ணுக்கு முன்னே பிரமாண்டமாக விரிந்திருக்கும் கட்டிடங்கள் நடக்கின்ற குண்டு வீச்சில் நொடிப்பொழுதில் பொடியாகிக் கற்சிதிலமாகிவிடும். ஒரு அமைதியான நிரந்தர வாழ்க்கை மறு நொடியில் அகதி வாழ்க்கையாகி கொந்தளிக்கும் மனிதரைத் தெருவுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். இடம், பொருள், நிலை எதுவும் நிரந்தரமற்றது என்பதை யுத்தத்தின்போது தெளிவாகவே பார்க்கலாம். எல்லா அர்த்தங்களும் அர்த்தமின்மை என்றாகிக் கொண்டிருப்பது யுத்தத்தின்போதே. எல்லா விழுமியங்களும் சிதிலமாகிவிடும் அப்போது. நிறங்கள் உதிரும் விதியைத் தன்னுடைய ஆயுள்ரேகையாகக் கொண்டது யுத்தம்.

அது வன்னியில் இறுதி யுத்தம் ஆரம்பமாகிய நாட்கள். 2007க்குப் பிந்திய காலம். யுத்த அரங்கு விரிய விரிய இழப்புகளும் சேதங்களும் அதிகமாகிக் கொண்டேயிருந்தன. போராளிகள் தொடர்ச்சியாகச் சாவினைச் சந்தித்துக்கொண்டேயிருந்தார்கள். களத்தில் விழுகின்ற போராளிகளின் மாவீரர் பட்டியல் நீண்டுகொண்டே போனது. எந்த நாளும் எந்தத் தெருவிலும் சோக கீதம் கேட்டுக்கொண்டேயிருக்கும். யுத்தம் தீவிரமடையத் தொடங்கிய ஒரு குறிப்பிட்ட காலம் கீழே சோக கீதமும் மேலே ‘வண்டு’ என்று சனங்கள் ‘கிலி’யுடன் சொல்கிற உளவு விமானத்தின் இரைச்சலுமே எங்களின் காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தன. பிறகு சோக கீதத்தைப்போடுவதற்கான நிலைமை இல்லாமற் போய்விட்டது. ஆனால், வேவு விமானத்தின் இரைச்சல் நிற்கவேயில்லை. வேவு விமானங்களின் உபயத்தை அமெரிக்கா அல்லவா செய்திருந்தது! அதனால், அந்த ஆளில்லா உளவு விமானங்கள் ஒன்று மாறி ஒன்றாக எந்த நேரமும் வானிலே நின்று நிலத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. வேவு விமானம் நிற்குந்தோறும் கள நிலைமை மோசமாகிக் கொண்டேயிருந்தது. (களநிலைமையை மோசமாக்கவதே அவற்றின் நோக்கம்). கள நிலைமை மோசமாக மோசமாக மாவீரர் பட்டியலும் நீண்டு கொண்டேயிருந்தது. மாவீரர் பட்டியல் நீள நீள துயிலுமில்லங்களும் பெருத்துக் கொண்டே போயின. ‘வன்னியே துயிலுமில்லங்களால் நிறையப்போகிறதோ?’ என்று அந்த நாட்களில் ஒரு நண்பர் கேட்டதே இப்பொழுது நினைவுக்கு வருகிறது. அப்படித் துயிலுமில்லங்கள் பெருத்துக் கொண்டு போகிறதை நினைத்தோ என்னவோ ஒரு வித்தியாசமான முடிவைப் புலிகள் எடுத்திருந்தனர்.

மாவீரர் பட்டியலின் முடிவற்ற நீட்சியை மதிப்பிட்டார்களோ அல்லது சண்டையின் தீவிரம் என்னமாதிரியான நிலைமைகளையெல்லாம் உருவாக்கப்போகிறது என்று கருதினார்களோ தெரியாது, ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்து யாரோ ஒரு தீர்க்கதரிசியின் ஆலோசனையின்படி ஒரு வித்தியாசமான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். இதனால் விசுவமடு, முள்ளியவளை, கிளிநொச்சி, மல்லாவி – தேறாங்கண்டல் போன்ற இடங்களில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு அருகில் துயிலுமில்லங்களின் விரிவாக்கம் பற்றித் திடீரென அறிவிப்புப் பலகைகள் நடப்பட்டன. அந்த அறிவிப்புப் பலகைகளில் ‘இந்தக் காணி மாவீரர் துயிலுமில்லத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்ற வாசகம் மிகத்துலக்கமாகப் பொறிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே பல ஏக்கர் விஸ்தரணமான நிலப்பரப்பில் இந்தத் துயிலும் இல்லங்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கல்லறைகளால் நிரம்பியிருந்தன. மேலும் அங்கே புதிய கல்லறைகள் உருவாகிக்கொண்டும் இருந்தன. இதைவிட எப்போதும் ஒரு பத்துப் பதினைந்து குழிகள் (விதைகுழிகள் என்று இந்தக் குழிகளை வன்னியில் அழைப்பது வழக்கம். ஏனெனில் ஒரு போராளி புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகிறார் என்ற உணர்வின் அடிப்படையில் இவ்வாறு சொல்லப்படுவதுண்டு)  வெட்டப்பட்டிருக்கும். என்னதானிருந்தாலும் இந்தக் குழிகளைப் பார்க்கவே மனம் பதைக்கும்@ உறுத்தும். யாருடையதோ மரணத்தை எதிர்பார்த்து, நிச்சயமாக எதிர்பார்த்து இந்தக் குழிகள் வெட்டப்பட்டிருக்கின்றன. இப்படி ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் குழிகள் வெட்டப்பட்டேயிருக்கும். இதற்காக என ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் பணியாட்களும் தயார் நிலையில் இருந்தார்கள். ஈரமண் காயாத சவக்குழிகளால் நிரம்பிக்கொண்டேயிருந்தன ஒவ்வொரு துயிலுமில்லங்களும். (இன்னொரு பக்கத்தில் பதுங்கு குழிகள்).

இந்தக் குழிகளைப் பார்க்கின்ற போராளிகளுடைய பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும்? என நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. சில நண்பர்களும் இதைப்பற்றிப் பல சந்தர்ப்பங்களிலும் தங்களுடைய கவலைகளையும் அபிப்பிராயங்களையும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், போரின் போக்கின்படி அங்கே, அப்படிப் புதைகுழிகளை (விதைகுழிகளை) வெட்டி வைத்திருப்பது தவிர்க்க முடியாத ஒரு நிலையே.

ஆகவே, இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாலோ என்னவோ, துயிலும் இல்லங்களின் இடவசதி குறித்த முன்னெச்சரிக்கையின்படி அவர்கள் இந்தப் புதிய எல்லைகளை விரிவாக்கம் செய்வதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள். எனவேதான், ‘இந்தக் காணி மாவீரர் துயிலுமில்லத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்புப் பலகைகள் நாட்டப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த அறிவிப்புப் பலகையானது, அங்கேயுள்ள போராளிகளுடைய மனதிலும் பெற்றோருடைய உளநிலையிலும் மிகப் பாதகமான தாக்கங்களையெல்லாம் ஏற்படுத்தும் என யாரும் சிந்தித்ததாக இல்லை. இந்தக் குழிகளைப் பார்க்கும்போது, முடிவற்றதாக நீண்டு செல்லப்போகின்றன கல்லறைகள். கல்லறைகளின் தொகை பெருகப் பெருக துயிலும் இல்லங்களின் விரிவும் கூடப்போகிறது. இதெல்லாம் கூடக்கூட மரணமும் பெருகும். மரணம் பெரும் ஒரு சமூகத்தின் நிலை அல்லது ஒரு சூழலிலின் நிலைமை மோசமாகும் என்பதெல்லாம் தெளிவாகவே எவருக்கும் தெரியும். இவையெல்லாம் நிச்சயமாக மக்களின் உளநிலையில் எதிர்மறையான அம்சங்களையே ஏற்படுத்தும். ஏன் போராளிகளின் உளநிலையிலும்கூட இது பெருந்தாக்கங்களை ஏற்படுத்தும். என்னதான் சாவுக்கஞ்சாத – சாவை விரும்பி ஏற்கின்ற மனநிலையை பெரும்பாலான போராளிகள் கொண்டிருந்தாலும் இந்தத் துயிலும் இல்லங்களின் விரிவும் கல்லறைகளின் பெருக்கமும் நிச்சயமாக சிந்திக்கும் போராளிகளிடத்தில் கவலைகளையும் வெறுமையையுமே உருவாக்கும். இதைச் சில போராளிகளே கூறியுமிருக்கிறார்கள். ஆனால், இயக்கத்தின் பொதுத்தீர்மானங்களுக்கு அப்பால் அவர்களால் எதையும் செய்ய முடியாது. ‘இயக்க உறுப்பினர்’ என்ற அடையாளம் அவர்களைக் கட்டுப்படுத்தியது. அமைப்புகளில் அல்லது அமைப்பைச் சார்ந்து இயங்கும்போது இத்தகைய கட்டுப்பாடுகளும் மட்டுப்பாடுகளும் ஏற்படுவது இயல்பு. அமைப்பின் விதிக்கு அத்தனை வலிமையுண்டு. அது தனி மனிதர்களின் உணர்வுகளையும் அபிப்பிராயங்களையும் இரண்டாம் மூன்றாம் நிலைக்குத் தள்ளி விடும். சிலவேளை அவற்றுக்கு இடமேயில்லை என்று ஆக்கி விடுவதும் உண்டு.

ஆகவே மாவீர் துயிலுமில்லங்களின் விரிவாக்கம் பற்றிய இந்த அறிவிப்பலகைகள் பகிரங்கமாகவே – அங்குள்ள முக்கியமான  வீதியோரங்களில் பளிச்செனக் கண்களுக்குத் தெரியக்கூடிய மாதிரி நாட்டப்பட்டிருந்தும் இதைக்குறித்து யாரும் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவித்த மாதிரித் தெரியவில்லை.

இதைப் பார்த்த நானும் இன்னொரு நண்பருமாக இதைப் பற்றி, புலிகளின் மேலிடத்திலுள்ள உரையாடக்கூடிய நிலையில் இருந்தவர்களுடன்; பேசினோம்.  ‘இப்படித் துயிலும் இல்லங்களுக்கான காணிகளை மேலதிகமாக ஒதுக்கும்போது அது போராளிகளின் சாவு வீதத்தைக் கூட்டுவதாகவே காட்டுகிறது. உண்மையில் ஒரு போராட்டத்தின் வளர்ச்சியில் சாவு வீதம் குறைந்து கொண்டே செல்லும்@ இழப்புகள் அப்படிக் குறைந்தே செல்ல வேணும். அனுபவங்களும் புதிய சிந்தனைகளும் செயலின் முறைகளும் இழப்புகளையும் சேதங்களையும் நிச்சயமாகக் குறைக்கும். அப்படியல்லாமல் அவை அதிகரித்திருக்குமானால், நிச்சயமாக போராட்டம் நெருக்கடியை நோக்கி, வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது என்றே அர்த்தப்படும்’ என்றோம்.

மேலும், ‘புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் புதிய நுட்பங்களையும் உச்சமான தொழில் நுட்ப வசதிகளையும் பயன்படுத்துகிறவர்கள். புதிய வகையான – வலுக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றவர்கள் என்ற அபிப்பிராயம் பொதுவாகவே உண்டு. ஆகவே, நிச்சயமாக இந்த நிலையில் போராளிகளின் இழப்பு வீதம் குறைவடையவே வாய்ப்புண்டு. இதையெல்லாம் கடந்தும் மிகச் சாதாரணமாக தினமும் பல போராளிகள் சாவடைவதென்பது நிலைமையைக் குறித்துக் கவலைப்படும்படியாகவே இருக்குமல்லவா?’ என்றும் கேட்டோம்.

இதைக் கேட்ட அவர்கள், இதைப் பற்றி மேலிடத்துக்கு எழுதும்படி சொன்னார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் சொன்னாலும் நாம் நினைத்த மாத்திரத்தில், நினைத்த மாதிரி எழுதிவிடமுடியாது. அப்படி எழுதுவதை நாங்கள் விரும்பவும் இல்லை. ஏனென்றால், புலிகளைப் பொறுத்தவரையில் எந்தமாதிரியான விசயத்தைப் பற்றி அவர்களுடன் பேசுவதானாலும் அதை அவர்கள் எப்படி விளங்கிக் கொள்வார்கள், எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்ற பிரச்சினை ஒன்றுள்ளது. எதையும் மாறி விளங்கினால் அது தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடும். அதிலும் சில விசயங்களில் அவர்கள் கடுமையான ‘சென்ரி மென்ற்’ உள்ளவர்கள். குறிப்பாக இந்த மாதிரி போராளிகள், மாவீரர்கள் போன்ற விசயங்களில் இந்தச் ‘சென்ரிமென்ற்’ தனம் இன்னும் அதிகம். அதை விட யுத்த நிலைமையானது பதற்றத்தை வேறு அதிகரித்திருக்கும் சூழலில் இதைக் குறித்துப் பேசுவது என்பது சற்று யோசிக்க வேண்டியது.

ஆகவே, நாங்கள் இதைக்குறித்து மேலே தெரிவிக்கலாமா இல்லையா என்ற குழப்பத்துக்குள்ளானோம். எனினும் போய்வரும்போது இந்த அறிவிப்புகள் மனதுக்குள் பெரும் நெருக்கடியையே தந்தன. ஆனால், நாங்கள் உரையாடிய விசயம் எப்படியோ பரவலாகி அது உரிய இடங்களுக்குச் சென்று விட்டது. என்றாலும் இன்னும் அது தீர்மானிக்கும் சக்திமிக்க பகுதியை சென்றடையவில்லை. ‘பூனைக்கு மணி கட்டுவது யார்?’ என்பதே பலருக்குமான பிரச்சினை. அதனால்தான் இதைக்குறித்து எங்களை எழுதித்தருமாறு கேட்டனர். தாங்களே பிரச்சினையை நேரடியாகக் கதைக்கும்போது அது வேறு விதமாக விளங்கிக் கொள்ளப்பட்டால்…? என்ற அச்சம் அவர்களுக்கும் இருந்தது. எனவே குறிப்பிட்ட விசயத்தைப் பற்றிக் கதைப்பவர்களே எழுதித்தந்தால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை என்ற முன்னெச்சரிக்கையுடன் எல்லோரும் இருந்தனர். ஆனாலும் இதையெல்லாம் கடந்து மேலிடத்துக்கு இந்த விசயம் போய்ச் சேர்ந்து விட்டது.

விளைவு, போடப்பட்டிருந்த அந்த அறிவிப்புகள் அகற்றப்பட்டன. என்றபோதும் கல்லறைகள் கூடிக்கொண்டேயிருந்தன. இதேவேளை சில துயிலுமில்லங்கள் கைவிடப்பட்டன. அல்லது படையினரிடம் அவை வீழ்ச்சியடைந்தன.

அவற்றைப் படையினர் கைப்பற்றி வந்தனர். பதிலாகப் புதிய துயிலும் இல்லங்கள் முளைக்கத் தொடங்கின. புதுக்குடியிருப்பில் இரணப்பாலை, தேவிபுரம், மாத்தளன் – பச்சைப் புல்வெளி, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் என இறுதிவரையில் துயிலுமில்லங்கள் வௌ;வேறு இடங்களில் புதிது புதிதாக முளைத்துக்கொண்டேயிருந்தன. தென்னந்தோப்பில், வெளிகளில், ஒதுக்குப் புறக்காட்டில், பனங்கூடல்களின் நடுவே, கடற்கரையில் என எல்லா இடங்களிலும் போராளிகள் புதைக்கவோ விதைக்கவோ பட்டனர்.

ஆனால், இறுதி நாட்களில் சாவடைந்த போராளிகளுக்கான அஞ்சலிகளோ வீர வணக்க நிகழ்வுகளோ நடக்கவில்லை. அப்படியெல்லாம் நடக்கக்கூடிய சூழல் அங்கேயில்லை. இறுதிக்கணத்திலே ஒலிக்கப்படும் மாவீரர் வணக்கப்பாடல் நிறுத்தப்பட்டுப் பல நாட்களாகி விட்டன. மரியாதை வேட்டுகள் கூடத் தீர்க்கப்படவில்லை. கூடவே நாலு போராளிகள் கூட இல்லாத நிலை உருவாகிக் கொண்டிருந்தது. யாரெல்லாம் களத்திலே வீழ்கின்றார்கள் என்றே தெரியாத – அதை அவதானிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இப்படியே இருந்த நிலைமை இறுதிவரையில் மாறவேயில்லை. மேலும் மேலும் அது ஒழுங்கமைக்க முடியாதளவுக்கு நிலைகுலைந்தே சென்றது.

அந்த நண்பர் முன்னர் சொன்னதைப்போல இறுதியில் வன்னியிலே சனங்கள் இருந்த வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகள் பெரிய துயிலுமில்லங்களாக – புதைகுழிகளாகவே மாறின. ஒரு மாபெரும் புதைமேடாக அந்தப் பகுதியில் ஏராளம் மனிதர்கள் பிணங்களாகினர். அதில் புலிகள், படையினர், சனங்கள் என்ற எல்லா வகையும் இருந்தது. பலி. பலி. பலி. பலியைத் தவிர வேறெதுவும் அங்கே அப்போதிருக்கவில்லை.

இறுதி நிகழ்ச்சிகள் இப்படியானதொரு பலியரங்கில்தான் முடியும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. ஆனால், அப்படியாகவே அது நடந்து முடிந்தது.

எல்லாம் முடிந்து விட்டன. இப்போது நினைத்துப் பார்த்தால், புலிகளின் முதற்போராளியாக லெப்ரினன்ற் சங்கர் என்ற சத்தியநாதன் 1982 இல் வீழ்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், வன்னியின் கடைசிப்போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்? அவர் எப்போது வீழ்ந்தார்? எங்கே வீழ்ந்தார்? எப்படி வீழ்ந்தார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரிடமுள்ளது பதில்?

உண்மையில் வரலாறு விசித்திரமான ஒரு பயணிதான்.

00

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to யுத்தத்தில் காணாமற் போன இன்னொன்று –2

  1. Andy Lingam - london சொல்கிறார்:

    So LTTE fight for last day ! Hut off to you All fighters !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.