சாந்தி தேடும் ஆவி

சிறுகதை

நடேசன்

யுத்தம் முடிந்து பதினாலு மாதங்களில் சரியாகச் சொன்னால் அதாவது ஜுலை 2010 இல் சில நாட்களை யாழ்ப்பாணத்தில் கழித்துவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டபோது இரவு நேரமாகிவிட்டது. நானும் நண்பன் நாதனும் அவனது காரில் புறப்பட்டு தெற்கு நோக்கி பிரயாணம் செய்தோம். நான் ஆரம்பத்தில் சாரதியாக காரை வவுனியா வரை செலுத்துவது பிறகு கொழும்பு வரை அவன் செலுத்துவது என்பது எமது ஒப்பந்தம்.

இரவு எட்டு மணிக்குப்பின்னர் கொழும்புத்துறையில் இருந்து குண்டும் குழியுமான A9 வீதியால் பிரயாணம் செய்து கொழும்பு செல்ல எப்படியும் அடுத்த நாள் மதியமாகிவிடும் என்பதால் இரவு உணவை முடித்துக்கொண்டு ஆறுதலாக வெளிக்கிட்டோம். சாரதியாக இருந்த எனக்கு நாதன் கதை சொல்லவேண்டும்.

புலிகளுக்கும் சிங்கங்களுக்கும் இருபத்தைந்து வருடகாலமாக நடந்த .சண்டையில் சிங்கங்கள் வென்றதால் யுத்தம் முடிவுக்கு வந்தது. ஊருக்குப் போகப் பயந்திருந்த பலருக்கு துணிவைக் கொடுத்தது. யுத்தத்தின் விளைவுகளை நேரில் பார்க்கவும் ஆசை உந்தியதால் அவுஸ்திரேலியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லுவது என வெளிக்கிட்ட முதல் பயணம் மனைவியால் தடுக்கப்பட்டாலும், “இல்லை போறன்” என்று வெளிக்கிட்ட முதல் பயணம். கொழும்பில் 87 களில் எந்தவித பிரச்சினை இல்லாமல் இருந்த போதும் யாழ்ப்பாணத்தில் இராணுவம் தேடுது என கட்டுக் கதை எழுதி அகதி அந்தஸ்து எடுத்ததால் இருக்கும் குற்ற உணர்வு எப்பொழுதும் அரித்தபடியே இருப்பதும் இந்தப் பயணத்திற்கு ஒரு காரணமாகும்.
பிரச்சினை எதுவும் இல்லாமல் யாழ்ப்பாணம் போய் சேர்ந்து விட்டோம். இராணுவ கெடுபிடி அதிகம் இருக்கவில்லை. ஓமந்தையில் இராணுவத்தினர் ஏற இறங்கப் பார்த்து விட்டு பாஸ்போட்டை உற்றுப்பார்த்தார்கள். செக் பொயிண்டில் சண்டைக்காலத்து விடயங்கள் பலர் சொல்லி நினைவுக்கு வந்தது.
சண்டைக்கு முந்தின காலத்தில் மணல் லொரிகள் இராணுவ முகாமிலும் மணலை இறக்கி பின்பு விடுதலைப்புலி முகாமிலும் இறக்கி இரண்டு தரப்புகளையும் திருப்திப்படுத்தியது போன்ற பல சம்பவங்கள் இந்தப் பயணத்தில் இப்பொழுது நகைச்சுவையாக எனது நண்பனால் சொல்லப்பட்டது. குறித்த சம்பவங்களை இப்போது வேடிக்கையாக நினைவு கூர்ந்தாலும் பாவம் அந்த மணல் ஏற்;றி வந்த லொரிக்காரர். அவர்களின் ம.ன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப்பார்த்தோம். இதைவிட அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் முப்பது வருசத்துக்கு முந்தின இலங்கை தேசிய அடையாள அட்டையை காண்பித்து தான் இலங்கையன் என காட்டி சில நூறு ரூபாய்களை நீட்டி விடுதலைப்புலிகளின் வரியில் இருந்து தப்ப முயன்று சென்றி பொயின்ரில் நின்ற பொடியளிடம் வேட்டி உரியிற மாதிரி பேச்சு வாங்கின கதையை நாதனுக்குச் சொன்னேன்.
இப்படியாக ஒருவருக்கு ஒருவர் கதைகளை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டு வந்த போது பளை வந்துவிட்டது.

திடீரென ‘ கதிர்காமக்கந்தனின் கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்று நாதன் கேட்டபோது அந்தக் கேள்வி எனக்கு சற்று புதுமையாக இருந்தது. பல காலமாக கதிர்காமக்கந்தனைப் பற்றி நான் கேள்விப்பட்ட கதை கதிர்காமத்தில் புகையிலை விற்ற ஒருவருடைய கதை. முக்கியமாக எனது அறையில் இருந்த புங்குடுதீவு நண்பனை சீண்டுவதற்கு சொல்லப்படும் கதையாகும்.

‘அது என்ன புதுக் கதை?’

‘கொக்குவிலைச் சேர்ந்த ஒருவர் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவருக்கு புகையிலை விற்றிருக்கிறார். கதிர்காமத்துக்கு அருகில் அவர் கடை இருப்பதால் நேரடியாகச் சென்று பணம் பெற எண்ணி அங்கே போயிருக்கும் போது அவர் இவருக்கு பணம் கொடுக்காமல் கம்பி நீட்டி விட்டார். ஏமாற்றமடைந்தவர், “வந்ததும் வந்தம் மாணிக்ககங்கையில் குளித்து விட்டு கதிர்காமக் கந்தனையும் கும்பிட்டுச் சென்றால் குறைந்த பட்சம் புண்ணியமாவது கிடைக்கும், இந்தப் பிறப்பில் செலவு செய்யவிருந்த பணம்தான் போய்விட்டது. கந்தனிடம் இருந்து கிடைக்கும் புண்ணிம் அடுத்த பிறப்பிலும் உதவும் என்ற தூர நோக்கில் மனுசன் மாணிக்க கங்கையின் கரையில் இருந்த மரங்களின் அடி வேரில் உடுத்த உடையையும் கொண்டு வந்த உமலையும் வைத்துவிட்டு கட்டிய கோவணத்தோடு கதிர்காமக்கந்தா எனது மகள் பூரணிக்கு கலியாணம் செய்து வைக்க இந்தக் காசைத்தான் நம்பி வந்தேன். புகையிலையை வேண்டிய பாவி எனக்கு இப்படி நாமம் போட்டு விட்டான். உன்னாலைதான் எனது காசை மீட்டுத்தர உதவ முடியும்” எனச்சொல்லியவாறு பல தடவை முங்கிக் குளித்தார். மனுசனுக்கு கோவணத்துக்குள் மீன் நுழைந்த பிறகுதான் அதிக நேரம் குளித்து விட்டோம் என்ற நினைவு வந்தது. பணம் போன கவலை எல்லாம் அந்த புனித கங்கையில் கரைந்து இலேசான மனத்தடன் கரைக்கு ஏறிவந்து மரத்தின் வேரடியை பார்த்தபோது அங்கு உமலோடு வேட்டி சட்டையும் காணாமல் போய்விட்டது. மனுசன் பதகளித்துப் போய்விட்டார். சுத்தி சுத்தி நின்ற மரங்கள் எல்லாவற்றையும் பார்த்தார் அரைமணி நேரம் அல்லாடிவிட்டு கோயிலை நோக்கிச் சென்றார். வழியில் சென்றவர்கள் எல்லோரும் பார்த்தார்கள். பொலீஸ்காரனும் பார்த்தான். அவர்கள் ஈரக் கோவணத்துடன் பதறியபடி ஓடிய இவரை ஒரு சாமியாராக நினைத்து அவருக்கு இடம் விட்டு ஒதுங்கி நின்று ‘அரோகரா கந்தனுக்கு அரோகரா’ என அவர் ஓடிய திசையைப் பார்த்து கோசமிட்டார்கள். நேரே கோயிலுக்குச் சென்ற மனுசன் கதிர்காம கந்தனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். “கந்தா நான்தான் கோவணத்தோடு நிற்கிறேன். நீ ஏன் நிற்கிறாய். நீயும் புங்குடுதீவானுக்கு புகையிலை விற்றாயா? “ஏன்று சொல்லி கண்ணீர் மல்கினார்.

‘நீங்கள் சொன்னது நக்கல் கதை. நான் சொல்லப் போவது உண்மையான ஒரு தத்துவம். பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்தது. கதிர்காமத்திற்கு சிறிது தொலைவில் உள்ள காட்டில் வேல் ஒன்று அந்தப் பகுதியைச் சேர்ந்த வேடுவர்களால் கண்டெடுக்கப்பட்டது. அதனது கூரான பகுதி ஒளியை வீசியபடி கண்ணைப்பறித்தது. அதைப்பார்த்த வேடுவர்கள் அது அபூர்வ சக்தி வாய்ந்ததெனக் கருதி அதை ஒரு இடத்தில் குத்தி வைத்து வணங்கினார்கள். இதைப் பார்த்த படித்த மனிதர் ஆகம விதிப்படி அதனை வணங்க வேண்டும் என அவர்களுக்குக் கூறிவிட்டு பிராமணரை வைத்து பூசைகள் செய்யத் தொடங்கினார். அப்பொழுது முருகன் அந்த படித்தவர் கனவில் வந்து, “அப்பாவியான அந்த வேடர்களுக்குத்தான் அது சாதாரணமாக வேட்டைக்குப் பாவித்த வேல் என்பது புரியாமல் செய்கிறார்கள். ஆனால் உனக்கு இந்த விடயம் தெளிவாகத் தெரியும். ஏன் உன்னையும் ஏமாற்றி அவர்களையும் ஏமாற்றி கடைசியில் என்னையும் ஏமாற்றுகிறாய்?. புடித்தவன் மற்றவர்களை ஏமாற்றக்கூடாது. அந்த வேடர்கள் என்னில் வைத்த அன்பில் அவர்கள் விரும்பியவாறு பூசைகள் செய்யட்டும். எனக் கூறி மறைந்தார். அந்தப் படித்த மனிதரும் வேடுவர்களை அவர்கள் முறைப்படி செய்யும்படி சொல்லிவிட்டு மாணிக்ககங்கையில் மூழ்கி எழுந்து தனது பாவத்தை கழுவினார்.

‘அற்புதமான கதைதான்’ என சொல்லிக் கொண்டு வெளியே பார்த்த போது மழை சற்று தூறலாக இருந்தது. பிறந்த மண்ணின் மணம் மெதுவாக நாசியில் ஏறட்டும் என நினைத்து கார்க்கண்ணாடியை சிறிது இறக்கினேன். அப்பொழுது என் கவனத்தை வீதியில் வெள்ளையாக வந்த ஏதோ கவர்ந்தது. ஏதாவது பத்திரிகை துண்டாக இருக்கும் என நினைத்தபடி காரை விலத்தி எடுத்த போது சதக் என சத்தம் வந்தது. மெதுவான முனகலுடன் கருப்பு வெள்ளை நிற ஆடு பாதையோரத்தில் அடிபட்டு கிடந்தது. வாகனத்தை நிறுத்தி ஆட்டுக்கு முதல் உதவி செய்ய நினைத்தாலும் தெரு விளக்குகள் அற்று இருளடைந்திருந்த அந்தப் பாதையில் இறங்க மனப்பயம் இடம் தரவில்லை.
கொழும்புத்துறையில் இருந்து வரும்போது வழி நெடுக வீதியோரங்களில் இராணுவ வீரர்கள் நிற்பதை பல இடங்களில் கண்டோம். யுத்தம் முடிந்தது என்றாலும் அவர்களை அறியாமலே துப்பாக்கிகள் வெடிக்கலாம். இலங்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆளுக்கொரு விதத்தில் வேறுபடுகிறது. ஐக்கிய நாட்டு பிரதிநிதி கோடென் வெய்ஸ் பத்தாயிரத்தில் இருந்து நாற்பதாயிம் என்ற போது எமது இருவரின் எண்ணிக்கையை யார் கணக்கெடுப்பார்கள்? என நினைத்தபடி காரை திரும்பவும் வேகமாக்கிய போது வழியில் உள்ள பூவரச மர நிழலின் கீழ் இருந்து வந்த மெலிந்த இராணுவ சிப்பாய் கையை காட்டி வாகனத்தை நிறுத்தினார்.

சிங்களத்தில் ‘என்ன அதிகாரியே’ என நான் விளித்தபோது

‘ஆட்டை அடித்தீர்களா?’

‘ஆடு ரோட்டில் கிடந்தது. இருட்டில் தெரியவில்லை’

‘ஆட்டுக்காரருக்கு என்ன பதில் சொல்வது?’

‘வீட்டுக்குள் கட்டி வைக்கச் சொல்லுங்கோ. நாங்கள் ஒரு தொகை தருகிறோம். அதை அவரிடம் கொடுங்கள்’

சிறிது நேரம் யோசித்து விட்டு ‘மாத்தையா, வெளி நாடா?’

‘அவஸ்திரேலியா’

‘நீங்கள் போங்க நான் பார்த்துக் கொள்ளுகிறேன்’

வழி முழுவதும் எனக்கு யோசனை. காயப்பட்ட ஒரு விலங்கை பாதையில் துன்பப்பட விட்டு விட்டு வருகிறேன் என்பது மனத்துக்குச் சங்கடமாக இருந்தது. அவுஸ்திரேலியாவாக இருந்தால் நிச்சயமாக முதலுதவி செய்திருப்பேன். முடியாவிடில் ஒரு வைத்தியரிடம் கொண்டு சென்றிருப்பேன்.
இந்த எதிர்பாராத சம்பவத்தால் இருவருக்கும் ஏற்பட்ட மனத் தாக்கத்தால் பாடிக்கொண்டிருந்த குறுந்தட்டில் இருந்து வந்த சங்கீத ஒலியை குறைத்து விட்டு சிலமணி நேரம் அமைதியாக ஓடினோம். பதினாலு மாதங்களுக்கு முன்பு பல்லாயிரம் மனித மரணங்கள் நடந்த பிரதேசத்தின் ஊடாகச் செல்லுகிறோம் என்பது மனதில் உறைத்தது. இந்த இடத்தில் எத்தனை பேர் அவயவங்களை உற்றார் உறவினர்களை இழந்து கதறி இருப்பார்கள். அந்த குரல்கள் இந்தக் காற்றில் கலந்திருந்தன. எத்தனை சிறு குழந்தைகள் எந்தப் பாவமும் செய்யாமல் அரசியல்தலைவர்களின் தவறால் உயிர் துறந்திருப்பார்கள் என நினைத்துகொண்டிருந்தேன். பல வருடங்கள் நடந்த போரில் இறந்தவர்கள் ஆவியாக நிரையாக அந்த வீதியால் நடந்து போவது போல் ஒரு நினைப்பு வந்ததும் வாகனத்தின் வேகத்தை குறைத்தேன்.

‘என்ன மவுனமாக வருகிறீர்கள்?’’

‘நான் போரில் இறந்த மக்களை நினைத்துக் கொண்டுவருகிறேன்’

‘வேலுப்பிள்ளை பிரபாகரன் குடும்பம்தான் ஆவியாக அலையும். மற்றவர்களுக்கு எப்படியும் யாராவது உறவினர் ஆத்மசாந்தி பூசை செய்திருப்பார்கள்’

‘இந்த நேரத்தில் பயப்படுத்த வேண்டாம். நாங்கள் கிளிநொச்சியை கடந்து கொண்டிருக்கிறோம். இருட்டுடன் வெளியே மழை வேறு பெய்கிறது’.

‘நான் காரை ஓடட்டுமா’

‘சரி ஓடுங்கள்’; என கூறிவிட்டு இறங்கியதும்

‘என்ன பெட்ரோல் முடியுது. பார்க்காமலா ஓடினீங்க?’

‘ஆடு அடிபட்டதில் மனம் வேறு திசையில் திரும்பிவிட்டது. என்னை மன்னிக்கவும்’

‘அடுத்த பெட்ரோல் நிரப்பு நிலையம் வவுனியாவில்தான். வுழியில் கிடைக்காது. மாங்குளத்தில் ஆமிக்காரனிடம் கேட்கவேண்டியிருக்கும். எதற்கும் இங்கு ரோட்டோரகடைகள் எதிலாவது கிடைக்கிறதா என இறங்கிப் பார்ப்போம்’
வாகனத்தை வீதியருகே ஒதுக்கமாக நிறுத்தி விட்டு காரின் டீக்கிக்குள் இருந்த பிளாஸ்டிக் கேனை எடுத்துக்கொண்டு இருவரும் இறங்கி பார்த்தபாது தூறல் நனைத்தது. எங்கோ தூரத்தில் ஒளி தெரிந்தாலும் ஆகாயம் சில நட்சத்திர பொட்டுகளை தவிர்த்து எல்லா இடத்திலும் கருந்திரை விரித்திருந்தது. கோட்டை மதில் போல் சுற்றி இருக்கும் இருட்டு நடந்து முன்னேறத் தடுக்கும் எங்களை சுற்றி நின்றது. அந்த இருளை கிழித்துக்கொண்டு அந்த ஒளியை நோக்கி நடக்க தொடங்கியதும் இருள் மெதுவாக மழையில் கரைந்து உடைகளில் வழிந்து ஓடுவது போல் உணர்வு ஏற்பட்டது. போரின் பின்பு திருத்தப்படாத ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. தடக்காமல் இருப்பதற்காக கவனமாக பாதங்களை வைத்து நடக்கும் போது என் நினைவுகளில் வீதிகளின் இருபுறமும் நிலக்கண்ணி வெடிகள் இன்னும் அப்புறப்படுத்தாதது செய்தியாக நினைவுக்கு வந்தது. யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு, பகல் நேரத்தில் பயணிக்கும் போகும் நிலக்கண்ணி வெடி என மண்டையோட்டு படத்துடன் எச்சரிக்கை அடையாளங்களை வீதியோரங்களில் காணமுடிந்தது.

வீதியிலிருந்து சிறிது தூரத்தில் காடுகள் இருந்தாலும் பறவைகள் மிருகங்களின் எதுவித சத்தமும் கேட்கவில்லை. சண்டையில் அவைகளும் இறந்து விட்டன போலும். அல்லது போர்க்காலத்தில் உணவின்றி மனிதர்கள் அவற்றை உண்டுவிட்டார்களா?  சீனாவில் மாசேதுங்கின் காலத்தில் சிட்டுக்குருவிகளை உணவற்ற மக்கள் உண்டு தீர்த்தார்கள் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனது நண்பன் ஒருவன் வன்னியின் மாடுகள்தான் எங்களை பட்டினியில் இருந்து காப்பாற்றியது என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அப்படியென்றால் அவற்றின் ஆவிக்கு யார் சாந்தி செய்திருப்பார்கள் என நண்பனிடம் கேட்க நினைத்தாலும் பெற்றோல் டாங்கரை கவனிக்க மறுத்த என் மீது கடுப்பில் இருக்கும் அவனிடம் பேச்சு கொடுக்காமல் இருப்பது உத்தமம் என நினைத்து மவுனத்தை துணையாக்கிக் கொண்டு நடந்தேன்.
பதினைந்து நிமிட நடையின் பின் அந்த ஒளிக்கு உரிய இடம் ஒரு தேநீர்க்கடை என்பது தெரிந்தது. ஓரு விதத்தில் துணிந்த இந்தமனிதர்களை மனத்துக்குள் பாராட்டினேன். போர் நடந்து கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படாத இடங்களில் சுற்றி வர இராணுவ காவல் நிலையங்களுக்கு மத்தியில் அந்தக் கடை புதிதாக போடப்பட்டிருந்தது. கூரையின் தென்னங்கீற்றுக்கள் புதிதாக இருந்தன. கடைக்கு முன்பாக மரக்குத்திகள் நிறுத்தி மணலும் போட்டு அழகாக லாண்ட்ஸ்கேப் பண்ணப்பட்டு இருந்தது. திறந்திருந்த கடையின் தாழ்வாரத்தின் உள்ளே நீளமான வாங்கில் ஒருவர் படுத்து நித்திரையில் இருந்தார். படுத்தவரை தட்டி எழுப்பி பெட்ரோல் தேவை என்று பிளாஸ்டிக்கானைக் காட்டிய போது கண்களை கசக்கியபடி சிறிது தூரத்தில் இருக்கும் இதேமாதிரியான கடையைக்காட்டி ‘அங்கு கிடைக்கும். போங்கோ நானும் உங்களோடு வருகிறேன்’ என்றதும் அவரோடு நாதன் அங்கு செல்ல, நான் அந்த அந்த வாங்கில் அமர்ந்து அந்தச் சிறிய கடையை நோட்டம் விட்டேன்.
அதிக அளவு பொருட்கள் இல்லாதபோதும் பிஸ்கட் குளிர்பான வகையறாக்கள் என ஒரு கிராமத்து தேனீர் கடைக்குரிய தேவையான பொருட்கள் சுத்தமாக அடுக்கப்பட்டிருந்தன.
கடையின் பின்பகுதியால் ஒரு சாரமணிந்த கட்டையான மனிதர் ஒருவர் உள்ளே வந்தார். வந்தவர் வாங்கின் மறுகரையில் அமர்ந்தடி சிரித்தார். அவரது சிரிப்பு யாரோ தெரிந்த மனிதரை நினவு படுத்தியது. இந்தக் கடையில் வேலை செய்பவர் என நினைத்து புன்னகைத்தபடி, ‘எப்படி இருக்கிறீர்கள்’ என சம்பிரதாயமாகக் கேட்டேன்.

சினேகமாக சிரித்த மனிதரிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்பதால் ‘போருக்குப் பிறகு இப்ப நிலைமை எப்படி?’ என்றேன்
‘என்னத்த சொல்லுவது மக்கள் உயிர் வாழ்கிறார்கள். இலவச உணவை தின்பதற்காக மட்டும் வாயைத் திறக்கிறார்கள். இராணுவம் மலம் கழிக்கிற இடத்தில் கூட நிற்கிறது’. என சொல்லிய போது மனிதரின் முகத்தில் சோகம் தெரிந்தது.

‘இந்த மாதிரித்தானே வன்னியில் விடுதலைப்புலிகள் காலத்திலும் மக்கள் வாழ்ந்தார்கள். இது புதிதான விடயம் இல்லைத்தானே?’

என்னை மேலும் கீழும் பார்த்தார். எதாவது பிழையாக சொல்லி விட்டேனோ என்ற பயம் என்னை கவ்விக் கொண்டது. மழைக் குளிரிலும் கழுத்தில் சாடையாக வேர்த்தது. பழைய விடுதலைப்புலி ஒருவரிடம் வீணாக பேச்சைக் கொடுத்து மாட்டிக்கொண்டு விட்டேன். இந்த இரவு நேரத்தில் என்ன அரசியல் வேண்டி இருக்கு?. அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்த நான் வீணாக மற்றவர் மனங்களை நோகப் பண்ணுவதில் என்ன பயன் என சிந்தித்து மவுனமாகினேன். அந்த நேரத்தில் மவுனம் சுற்றி இருந்த இருட்டை விட கனமாகத் தெரிந்தது. மெதுவாகத் திரும்பி அந்த மனிதரின் கண்களைப் பார்த்த போது அந்த கடையின் விளக்கின் வெளிச்சம் அந்த மனிதரின் கண்களில் பட்டுத் தெறித்தது. அவை அசாதாரணமான கண்கள். மற்றவர் மனங்களை ஊடுருவிப் பார்க்கும் சக்தி கொண்டவை.

சிறிது நேரத்தில் அவரே மவுனத்தை கலைத்தார்.

‘விடுதலைப்புலிகள் காலத்தில் மக்கள் கஷ்டங்களை அனுபவித்தார்கள்தான். அதை ஏற்றுக்கொள்கிறேன். அப்போது விடிவு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கஷ்டம் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது எதிர்காலத்தை நினைக்காமல் கஷ்டத்தை அனுபவிக்கிறோம்.’

இதற்குப் பதில் சொல்வதா இல்லையா என யோசித்து விட்டு, ‘இதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விடயம். விடுதலைப்புலிகள் ஆட்சியில் தமிழ்ப்பிரதேசங்களில்; பதினைந்து வருடங்கள் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கட்டாய வரிகள் கட்டாய ஆட்சேர்ப்பு தண்டனைகள் என கொடுரமாக இருந்தது என சிலர் சொன்னார்கள். உடலுறவுக்கு மட்டும் வரி விதிக்காமல் மற்ற எல்லாவற்றிற்கும் வரி விதித்தார்கள் என்று வெளிநாட்டில் இருந்து வன்னிக்குப் போய் வந்தவர்கள் சொன்னார்கள்.’

‘அப்படிச் செய்ய காரணம் தமிழ் ஈழத்திற்கு அதிகமானவர்கள் தேவை என்பதாலாகும்.’ எனச் சொல்லி விட்டு சிரித்தார். அந்த சிரிப்பில் கனமான சூழ்நிலையின் இறுக்கம் தளர்ந்தது. உடலுறவைப் பற்றிய விடயம் பேசும் போது மத்திய வயதானவர்களிடம் நட்பு உருவாகிறது.

‘நீங்கள் விடுதலைப்புலிகளை எதிர்ப்பவரா?’

‘நான் விடுதலைப்புலிகளின் போராட்ட வழி முறைகளை மட்டுமல்ல இலங்கையில் பிரிவினையையும் எதிர்ப்பவன்.

‘நீங்கள் சிங்களவர்களை நம்புகிறீர்களா?

‘நம்புவது நம்பாதது இங்கே விடயமல்ல. இந்த நாடு பிரிந்து வாழ சர்வதேசம் அனுமதிக்காது. இந்தப் பிரிவினைப் போராட்டம் ஒடுக்கப்படும் போது மக்கள் அநியாயமாக அழிவார்கள் என்பது எனக்குப் புரிந்திருந்தது.’

‘இது ஏன் மற்றவர்களுக்குப் புரியவில்லை?

‘இதற்கு நான் எப்படி பதில் சொல்லமுடியும்? இது நான் சம்பந்தப்படாத விடயம். எனது அனுமானம் ஒன்று உண்டு. இலங்கைத் தமிழ் சமூகம் தகப்பனுக்கு உண்மை சொல்ல பயந்து வளர்ந்து பாடசாலையில் ஆசிரியருக்கு, அதன்பின் இராணுவம், இயக்கம் என்று பயத்;தினால் உண்மை பேச மறுத்து வளர்ந்ததால் கடைசி வரையும் அப்படியே வாழ்ந்து விட்டது. வாக்குகளுக்காக அரசியல்வாதிகளும் பொய் பேசினார்கள். அகதி அந்தஸ்துக்காக வெளிநாடு சென்ற தமிழரும் பொய் பேசினார்கள். இந்த நிலையில் மூளை பிசகானவர்கள் மட்டுமே உண்மை பேசுவார்கள். காந்தியை போல் ஒருவர் வந்து சத்திய மேவ ஜய… என்றால் தலையில் போட்டுவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள்.’

‘யார் அந்த காந்தி?  இயக்கத்து காந்தியை, ராஜீவ் காந்தியையும்தானே போட்டாகிவிட்டதே.’

‘நான் சொல்லுவது இந்தியக் காசில் இருக்கிற காந்தியை. சரி நீங்கள் இந்தப் பகுதியில் என்ன செய்கிறீர்கள்?’

‘நான் இந்தப் பகுதியை விட்டு எப்படி போக முடியும்?’

‘ஏன் அலுத்துக் கொள்கிறீர்கள்?’

‘நான் ஒரு இலட்சியத்துக்காக வாழ்ந்தேன். நானும் தியாகம் செய்து மற்றவர்களையும் தியாகம் செய்ய அழைத்தேன்.’

அவரது பேச்சு புதிராக இருந்தாலும் இரவுப் பொழுதில் இந்த மனிதரின் உணர்வுகளைக் கிளறி மீண்டும் ரணமாக்க மனமில்லாமல் மவுனமாக இருந்தேன். ஆனால் மனிதர் விடாமல் அரசியல் பேசுவதென்று திடமாக இருந்தார்.

‘நீங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்துதானே வருகிறீர்கள்?’

‘ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் ஓமந்தையில் இராணுவத்துக்கு மட்டும்தானே எனது பாஸ்போட்டைக்காட்டினேன்?

‘இது பெரிய விடயமல்ல. உங்களிடம் ஒரு வேண்டுகோள. வெளிநாட்டில் உள்ளவர்களை இந்த நாட்டு மக்களின் பேரில் அரசியல் பண்ணாமல் இருக்கச் சொல்லுங்கள். இறந்தவர்களை அங்கீகரித்தால்தான் அவர்கள் ஆன்மா சாந்தியாகும். நாட்டில் ஆயுதப் போர் முடிந்து விட்டது.’

‘எப்படி நீங்கள் சொல்லமுடியம்?’

‘கடைசியில் முள்ளிவாய்க்காலில் போரின் போது நான் பதினைந்தாம் திகதி வரையும் இருந்தேன்.’

‘அதைச் சொல்லுங்கள்.’

‘தமிழ்நாட்டையும் வெளி நாட்டுத் தமிழரையும் நம்பிச் செய்த போர். அவர்கள் கைவிட்டதால் முடிவுக்கு வந்தது. எவரையும் நம்பி சரணடையத் தயாராகாதவர்கள் தப்பிப் போக முடியாமல் இரவு இருட்டில் நடந்த சண்டையில் மரணமானார்கள்’.

‘இதைச் சொன்னால் என்னைத் துரோகி என்பார்கள்’

‘நான் சொன்னேன் என்று சொல்லுங்கள் அதாவது பெரிசு சொன்னது என்று சொல்லுங்கள்.’

இந்தக்காலத்தில் வெளிநாட்டவர்களுக்கு பல பெரிசுகள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒரு பெரிசு தன்னை தலாய்லாமா என சொல்லுது. நோர்வேயில் ஒரு பெரிசு. இந்த நிலையில் அவனவன் இராச்சியம் நடத்துகிறான். உங்களைப் பெரிசு எனச்சொன்னால் யார் நம்புவார். வேலுப்பிள்ளையின் மகனை வைத்து வியாபாரம் செய்ய நினைக்கிறாங்கள்.’

‘அப்ப வேலுப்பிள்ளை மகனுக்கு சாந்தி செய்து விட்டு அரசியல் நடத்தச் சொல்லுங்கோ’ என்று சொல்லிவிட்டு கோபத்துடன் அந்த மனிதர் வெளியேறினார். .போன வேகத்தில் அவரது கால்கள் நிலத்தில் பாவியது தெரியவில்லை.

‘யாரோடு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? என என்னைத் தட்டி எழுப்பிய போது திடுக்கிட்டு கண்ணைத் துடைத்துக்கொண்டேன்.
நாதன் பெட்ரோல் கானுடன் நின்றார்.

‘அண்ணைக்கு டீயோ கோப்பியோ’ என்றார் கடைக்கரர்.
“கடைக்காரரும் நம்மட ஊர்பக்கம்தான் அடி புங்குடுதீவு. ஆனால் வவுனியாவில் சண்டைக்காலத்தில் இருந்தார்’ என்றார் நாதன்.

‘கோப்பியைப் போடுங்கள்’ எனச்சொல்லிக்கொண்டு கண்களை கசக்கினேன்.

கோப்பிக்காக கொதித்த தண்ணீரில் ஆவி வந்து கொண்டு இருந்தது.

—–0——

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.