ஸ்கொட்டிஸ் வேட்டைக்காரரின் நாய்

நடேசன்
சிலகாலத்தின் முன் சுயகரமைதுனம் என்ற வார்த்தையைப் பார்த்து விட்டு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள பல காலம் சென்றது. எழுதியவர் கையாட்டம் எனும் தமிழ் சொல்லையோ மாஸ்ரபேசன் (masturbation)என்ற ஆங்கிலச் சொல்லையோ பாவித்திருக்கலாம். மிருகவைத்தியம் படிக்கிற காலத்தில் ஆண் பன்றியிலும் காளை மாட்டிலும் விந்தை பெறுவதற்கு எங்கள் கைகளைப் பாவித்து பன்றியில் ஒரு கிளாஸ் நிரம்பவும் காளையில் செயற்கையான பெண் யோனியை பாவித்து சிறிய கண்ணாடி குழாயில் எடுத்துக்கொள்வோம். இப்படியான தொழில்பாட்டை எப்படி தமிழில் வர்ணிக்க முடியும்?

யாராவது தமிழ் பண்டிதர் ஒருவரைத்தான்
கேட்கவேண்டும். இதேவேளையில் எனக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

என்னுடன் வேலை செய்யும் ஹசன் என்ற மிருக வைத்தியர், லெபனானை சேர்ந்தவர். பதினான்கு வயதிலே இவரிடம் பதினைந்து துப்பாக்கிகள் இருந்தன. பின்பு அவைகளை விற்று வந்த பணத்தில்தான் அஸ்திரேலியாவுக்கு வருவதற்கு விமான டிக்கட் வாங்கியதாக கூறினார். சிறு வயதில் இருந்தே வேட்டைக்காரரான இவரிடம் குறைந்த பட்சம் தற்போது பன்னிரண்டு துப்பாக்கிகள் உள்ளன. இதைவிட இவரது வேட்டைக்கு உதவுதற்கு ஸ்பிறிங்கர் ஸ்பனியல்( Springer Spaniel)என்ற இனத்தைச் சேர்ந்த நான்கு நாய்கள் இருக்கின்றன.

இவரது வேட்டைக்கார நண்பர்களை சந்தித்துள்ளேன். இவர்கள் ஒரு தனி உலகத்தைச் சேர்ந்தவர்கள் போல் எனக்கு தென்படுவார்கள். இவர்களது பேச்சு பெரும்பாலும் வேட்டை சம்பந்தமாகத்தான் இருக்கும். நாய்களும் துப்பாக்கிகளுமே இவர்களது பேச்சின் கருப்பொருளாக இருக்கும். அடுத்த வேட்டையை பற்றியோ அல்லது கடந்த வேட்டையை பற்றியோ தொடர்ச்சியாகப் பேசுவார்கள். வேட்டையாடுதல் எனக்கு கற்கால வழக்கமாக தெரிவதால் குறைந்த பட்சமான சம்பாஷனையுடன் இவர்களைத் தவிர்த்துக் கொள்வேன். எனது நண்பர் பல துப்பாக்கிகள் வாங்குவதற்கு சாட்சியாகியுள்ளேன். ஆனால் அந்தத் துப்பாக்கிகளைத் தொடுவதைக்கூட தவிர்த்துக் கொள்வேன். இலங்கையில் பார்த்த துப்பாக்கிகள் ஏற்படுத்திய அருவெருப்போ தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவில் அமெரிக்காவைப் போல் அதிக அளவு கொலைகள் துப்பாக்கியால் தற்காலத்தில் நடக்காதது மனத்துக்கு ஆறுதலானது. அமெரிக்காவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையுள்ளது. ஆதனால் இலகுவாக கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் இது இலகுவானதல்ல. இந்த நாட்டின் வரலாறும் பல கறைகள் நிறைந்தது.

ஆஸ்திரேலியாவில் பலகாலமாக துப்பாக்கிகள் பழங்குடி மக்களுக்கு எதிராக இருந்தன.1800 ஆரம்ப காலத்தில் தஸ்மேனியாவில் ‘கறுப்பு போர்’’ எனக் கூறி ஏராளமான பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பின்பாக 1815இல் ஏழு வெள்ளை இனத்தவர்கள் பதுஸ்ட் என்ற இடத்தில்(BATHUST IN NSW )) கொல்லப்பட்ட பின்பு இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பின்பு நூறு ஆண்டு காலம் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய பழங்குடியினர் கொலை செய்யப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டில் நிலைவரம் திருந்தியது

1996 ஏப்பிரல் 28 ஆம் திகதி தஸ்மேனியாவில் போட்ஆதர் என்ற உல்லாசப்பிரயாணிகள் வரும் இடத்தில் மன நலம் அற்ற மாட்டின் பிரைன்ட் (Martin Bryant) ) என்பவனால் ஒருசில நிமிடங்களில் இருபது பேர் கொலை செய்யப்பட்டதும் முழு ஆஸ்திரேலியாவும் விழித்து எழுந்தது. துப்பாக்கிகளை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டு நாலு இலட்சம் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு நசித்து எறியப்பட்டன.
தற்பொழுது சொட்கன்(Shot Gun)எனப்படும் துப்பாக்கிகள் மட்டுமே விவசாயிகளிடமும் பொழுது போக்கிற்காக வேட்டை ஆடும் கிளப் அங்கத்தவர்களிடமும் உள்ளன.

இந்த கிளப்பொன்றில் டாக்டர் ஹசனும் அங்கத்தினர் ஆனபடியால இவரது வேட்டை நண்பர்கள், பல இடங்களில் இருந்தும் தங்களது வேட்டை நாய்களை சிகிச்சைக்காக எனது கிளினிக்குக்கு கொண்டு வருவார்கள். ஏதாவது அவசரசிகிச்சையாக இருந்தால் மட்டுமே நான் அவர்களது நாய்களைப் பரிசோதிப்பேன். முடிந்தவரையில் எனது நண்பனிடம் அனுப்பி விடுவேன்.

ஒரு முறை மருத்துவ பரிசோதனை ரிப்போட் ஒன்று எனக்கு வந்தது அதை எடுத்துப் படித்துப்பார்த்ததும் சிறு நீரகம் இரண்டும் மொத்தமாக பழுதடைந்த நாய் ஒன்றினது என புரிந்து கொண்டேன்.

எனது நேர்சிடம் கேட்டேன் ‘இது டாக்டர் ஹசனது நண்பரின் நாய். பன்னிரண்டு வயதான ஆண் நாய்’’

‘இந்த நாய்க்கு எந்த சிகிச்சையும் செய்ய முடியாது. என்ன செய்வதாக உத்தேசம்?’’

‘நாயின் சொந்தக்காரர் ஒரு வயதானவர். அந்த நாயை மிகவும் நேசிப்பவர்’’

‘சரி அவரும் டாக்டர் ஹசனும் பட்டபாடு’’ எனக் கூறி விட்டு நான் அந்த விடயத்தை மறந்து விட்டேன்
சில நாட்களுக்குப் பின் நான் வந்த போது கரும் சிவப்பு ஸ்பிறிங்கர் ஸ்பனியல் நாய் ஒன்றுக்கு சேலையின் (Saline)ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது.

நான் இதைப்பற்றி விசாரித்தபோது ‘இதுதான் அந்தச்சிறுநீரகம் பழுதாகிய நாய். உடலில் தண்ணீர் வற்றிப் போய்விட்டது. அதுதான் இன்று சேலையின் ஏற்றப்படுகிறது என்ற தகவல் வந்தது.

‘இந்த நாய் பிழைக்காது. பேசாமல் ஊசியை ஏற்றி கருணைக்கொலை செய்யவேண்டியதுதானே’

‘அதுதான் செய்யப்படப்போகிறது. ஆனால் இந்த நாயின் விந்தை அதற்கு முதல் எடுத்து பாதுகாக்கப்போகிறார்கள்.. இந்த நாய் வேட்டையில் மிகவும் திறமையானது. இதனது விந்தை வேறு ஒரு பெண் நாயின் கருப்பையில் ஏற்ற விரும்புகிறார்கள். இன்று மொனாஷ் மிருக வைத்தியசாலைக்கு விந்தை எடுக்க கொண்டு சொல்லப்போகிறார்கள்’

இப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது வயது அறுபத்தைந்து மதிக்கத்தக்க ஒருவர் உள்ளே வந்தார்
‘எங்கே டாக்டர் ஹசன்?’ ஸ்கொட்லாந்து பேச்சுவழக்குப்போல் இருந்தது.

‘சிறிது நேரத்தில் வந்து விடுவார்’’ என எனது நேர்சிடம் இருந்து பதில் வந்தது

சொன்னபடியே சிறிது நேரத்தில் டாக்டர் ஹசன் வந்ததும் அந்த நாயின் காலின் நாளத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த சேலையினை நிறுத்தி கூட்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது.

அந்த சென்னிறமான ஸ்பிறிங்கர் ஸ்பனியல் சிறிது உற்சாகமாக நின்றது. முகத்தில் ஒரு களையுடன் பொலிவாக காட்சியளித்தது. உள்ளே போய் இருந்த கண்கள் இப்பொழுது வெளியே வந்து பிரகாசமாக இருந்தன இதற்கு காரணம் ஒரு லீட்டர் சேலையினா அல்லது இறுதியாக தனது ஆண்மையை நிச்;சயப்படுத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பம கிடைக்கிறது என்ற விடயத்தை ஏற்கனவே புரிந்து கொண்டதாலோ தெரியவில்லை.

ஹென்றி என்ற நாயின் உரிமையாளரும் டாக்டர் ஹசனும் காரில் ஸ்பிறிங்கர் ஸ்பனியலை ஏற்றிச் சென்றார்கள்.

இந்த விடயத்தில் பல கருத்து வேறுபாடுகள் எனக்கு இருந்தாலும் இந்தச் செயல் ஆச்சரியத்தை எனக்கு அளித்தது. இதைவிட இந்த வேட்டையாடுபவர்களிடம் இருந்த தோழமையை என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

இரண்டு நாட்களுக்கு பின்னர் டாக்டர் ஹசன் வந்த போது கேட்டேன்.

‘நாய்க்கு என்ன செய்தார்கள்?;’

‘என்ன செய்வது? அங்கே மாஸ்ருபேற் செய்தார்கள்?

‘எவ்வளவு காசு அதற்கு?’
‘500 டொலர்’’

‘500 டொலரா ?’

‘பின்னே… அவர்கள் அதை லிக்குவிட் நைதரசனில் பாதுகாக்கவேண்டும்’

‘நாய்க்கு என்ன நடந்தது?

‘நாய்க்கு ஒரு புலட்டை பாவிக்கவிருப்பதாக ஹென்றி சொன்னாhர்’

‘நாங்கள் அமைதியாக கருணைக் கொலை செய்யலாமே?

‘எங்களிலும் பார்க்க புலட் மலிவு என ஹென்றி நினைத்திருக்கலாம். உனக்கு தெரியும்தானே ஹென்றி ஸ்கொட்டிஸ் என்று.

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.