அனாதைப்பிணம்

1990 களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணமும் யாழ்ப்பல்கலைக்கழகமும் இருந்த காலத்தில் எழுதிய கதை இது. இந்த கதைதான் எங்கள் கதையாக இருக்கப்போகிறது என்று நினைத்து இது எங்கள் கதை   ன உதயத்தில் பிரசுரித்தேன். இந்தக் காலத்தில் இருந்து நிட்சயமாக தமிழர்கள் தப்பிவிட்டார்கள் .ஆனால் புலம் பெயர்நத விடுதலைப்புலி ஆதரவாழர்கள் மீண்டும் அக்காலத்தை பொற்காலமாக நினைத்து மக்களை அங்கு கொண்டு செல்ல நினைக்கிறார்கள். இப்பொழுது இந்தக் கதையின் பெயர் மாற்றி பிரசுரிக்கப்படுகிறது. பலர் இலக்கித்திற்கு ஏற்காது என சொல்லலாம் அது அவர்கள் கருத்து.இந்த கதையில் வருவது எனது அப்பு வழி மாமி .மருந்துகள் கிடைக்காமல் தெருவில் இறந்து அனாதைப்பிணமாக யாழ்ப் -பல்கலைக்கழகத்திற்கு சென்றது உண்மைச்சம்பவம்

ஆக்கம்: நடேசன்
நீண்ட விடுமுறைக்குப்பின்னர் அந்தப் பல்கலைக்கழகம் ஆரம்பமாகின்றது. எறும்புகள் சாரிசாரியாக புற்றுக்குள் செல்வது போன்று மாணவர்கள் ஒருவரை ஒருவர் பின்தொடருகிறார்கள்.

மான்களையும் புலிகளையும் உள்வாங்கும் அடர்ந்த கானகம் போன்று மிரட்சியுடன் புதிய மாணவர்களையும் பழைய மாணவர்களையும் அந்தப் பல்கலைக்கழக “கொங்கிரீட்” கட்டிடங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

விடுமுறைக்காலத்தில்-பல்கலைக் கழகத்திற்கு வெளியே எத்தனை யோ சம்பவங்கள் நடந்து விட்டன. கொங்கிரீட் கட்டிடங்களுக்கு உயிர் இல்லாதமையால் நாளும் கிழமையும் போன்று வெளியுலக சண்டைகளை சட்டை செய்வதில்லை. கட்டிடங்கள் அதே இடத்தில் தரித்து நிற்க- நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி தரிக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. மனிதவாழ்வும் அப்படியாகி விட்டது. பிறப்பும் இறப்பும் ஒன்றையொன்று துரத்துகின்றன.

பெருந்தொகையில் மனித உயிரிழப்புக்கள் நேர்ந்தாலும் தொடர்ந்தும் நினைத்துப்பார்க்க நேரம் ஏது?

இறந்தவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் இருப்பவன் எப்படி சாப்பிடுவது?

முக்கியமற்றவர்களுக்கு உறவினர்களின் சிலதுளி கண்ணீர்.

பிரமுகர்களுக்கு மாலைமரியாதையுடன் அஞ்சலிக்கூட்டம்.

இறந்தவர்களுக்கு தனது முக்கியத்துவம் தெரியப்போகிறதா?

இப்படி மரியாதைக்காகக் காத்திருப்பவன் யாராவது இறப்பதற்கு ஆசைப்படுவதுண்டா? எவனும் வாழத்தான் ஆசைப்படுகின்றான்.

இரவல் சிறுநீரகம், அடுத்தவனின் இரத்தம், ஏன் முடிந்தால் கண்களைக்கூட மற்றவர்களிடமிருந்து வாங்கி வாழத்தான் ஆசைப்படுகிறான்.

எந்த நாட்டிலும் இப்படியானவர்கள் தான் வாழுகிறார்கள். நாட்டுக்கு, மொழிக்கு, சாதிக்கு உயிர்கொடுப்போம் என உணர்ச்சிக் கோஷம் போடும் அரசியல்வாதிகள், கவிஞர்கள், விடுதலைப் போராட்டத்தலைவர்கள் நரையை மறைக்க கறுப்பு சாயம் பூசும் காலம் இது.

மயிரை விட்டுக் கொடுக்காதவர்கள் உயிரையா விடுவார்கள். மற்றவர்கள் உயிரைவிட வேண்டுமென்று தான் இந்தக் கோஷங்கள்.

கண்ணிவெடிகள், துப்பாக்கிகள், ரொக்கெட்டுகள் வெடித்து மனித உடல்கள் சிதறி இரத்தமணம் பரப்பும் நாட்டிலும் கல்விக்கூடங்கள் பல்கழைக்கழகங்கள் கிரமமாக இயங்கத்தான் முனைகின்றன.

எதிர்காலத்திற்கு உத்தரவாதம் இல்லாவிட்டாலும் கூட இளம் உள்ளங்களை கனவுகள் நிறைத்திருக்கின்றது. டொக்டர், எஞ்சினியர், விஞ்ஞானி என ஒளிமயமான எதிர்காலம் மனத்திரையில் விரியும் போது இரவுகளை கரைத்து கண்விழித்துப் படித்தவர்களுக்கு கனவுகளை நனவாக்கும் தொழிற்கூடமாக இந்தப்பல்கலைக்கழகம் தெரிகிறது.

இவர்களில் சிலரே மருத்துவபீட உடற்கூற்றுப்பிரிவில் நிற்கின்றனர்.

நேரம் காலை ஒன்பது மணி

மருத்துவபீடத்து மாணவர்கள் ஒன்றாக கூடி நிற்கிறார்கள். அனைவரிடமும் அமைதி மனிதஉடல்களை மிக அருகில் பார்க்கிறார்கள்.

“ஃபோமலினில்” அழுத்தி எடுக்கப்பட்ட விறைத்த உடல்கள் நிர்வாணமாக மேசைகளில் கிடத்தப்பட்டிருக்கின்றது.

சுவர்களில் உடற்கூற்று சம்பந்தமான வண்ணப்படங்களும் அந்த அறையில் சுவர் ஓரமாக சில முழு உருவ மனித எலும்புக்கூடுகள் இரும்புச் சட்டங்களின் உதவியுடன் காட்சி தருகின்றன.

போமலினோடு இரண்டறக்கலந்த மணம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

சாமானியர்களுக்கு ஏற்காத சூழல்-மருத்துவ மாணவர்களுக்கோ ஏற்க வேண்டிய ஏராளமான படிகளில் முதலாவது படி.

பரிசோதனைக்கூடத்தின பொறுப்பாளர் இராசஇரத்தினத்தின் குரல் ஓங்கி ஒலிக்கி;ன்றது.

‘பத்துப்பேருக்கு ஒரு bபொடி உள்ளது’ என்று இராசரத்தினம் சொன்னதும் மாணவர்கள் அருகே சென்றனர்.

மூடிக்கிடந்த பரிசோதனைக்கூட கதவுகள் திறந்தன. இரண்டு தலைகள் எட்டிப்பார்த்தது இராசரத்தினத்தின் கண்களுக்கு தென்படவில்லை.

‘எல்லோருக்கும் bபொடி இருக்குதுதானே?’

கதவின் அருகே இருந்து இரண்டு கைகள் உயர்ந்தன.

‘என்ன?’ விறைப்பான அதிகார மிடுக்கு இராசரத்தினத்தின் குரலில் ஒலித்தது.

விரிவுரையாளர் இல்லாத சந்தர்ப்பங்களில் இராசரத்தினத்தின் அதிகாரம் அங்கே கொடி கட்டிப்பறக்கும். புதிய மாணவர்களுக்கு அவர்தான் விரிவரையாளராக தென்படுவார்.

இராசரத்தினத்தின் சேவை முதலிரண்டாண்டு மாணவர்களுக்கு தேவை. அவரது பெருமளவு ஆதரவு மாணவிகளுக்கு கிடைத்தாலும் பதுங்கிப் பவ்வியமாக நடக்கும் மாணவர்களையும் அவர் புறக்கணிப்பதில்லை.

உடற்கூற்று பாடத்தின் செயல்முறைபரீட்சை நடக்கும்போது இராசரத்தினத்தின் உதவி இல்லாமல் சித்தி அடைவது கடினம்.
எலும்புகள்இ உறுப்புகள்இ உடற்கூற்று வரைபடங்களை பெறுவதற்கு இராசரத்தினத்தின் தயவை நம்பியிருப்பவர்கள் இம்மாணவர்கள்.

‘எங்களுக்கு பொடி இன்னமும் கிடைக்கவில்லை.” கபிலனும் வாசுகியும் ஒரே குரலில் சொன்னார்கள்.’

‘லேட்டாக வந்தால் இதுதான் நடக்கும்.. அடுத்தவாரம் உங்களுக்கு bபொடி ஒழுங்கு பண்ணுறன் எங்களுடைய தேசியத்தலைவர் இருக்கு மட்டும் அதற்கு பிரச்சனை இல்லை. இந்தவாரம் மட்டும் மற்றவர்களுடன் சேர்ந்து படியுங்கோ’.

மாணவர்களுக்கு இராசரத்தினத்தின் நகைச்சுவை புரிந்தாலும் போமலின் மணம் கண்களையும் மூக்கையும் உறுத்தியது.

உயிர்அற்ற உடல்களின் நெருக்கம் தலைச்சுற்றையும் மயக்கத்தையும் கொடுத்தது. சில மாணவர்கள் வயிற்றைத் தடவிக்கொண்டது வாந்தியை தடுப்பதற்காக இருக்கலாம்.

இதனால் இராசரத்தினத்தின் நகைச்சுவையை ரசிக்க முடியவில்லை.

——— ——————

சின்னாச்சியின் தகரடப்பாவுக்குள் இருந்த மருந்துக் குளிசைகள் முடிந்து விட்டன. இரண்டு சிறிய துண்டு மாத்திரைகள்தான் இருந்தன. விரல்களினால் மீண்டும் துலாவிப் பார்த்து ஏமாந்தார். எப்பொழுதோ முடிந்திருக்க வேண்டிய பிரஷர் குளிசைகள். சின்னாச்சி காலம் தாழ்த்தி பாவித்ததனால் நேற்றுவரையில் இருந்தன.தினமும் இரண்டு குளிசைகள் எடுக்கும்படி டொக்டர் சொல்லியிருந்தார். தினமும் எடுத்திருக்க வேண்டியதை ஒன்று விட்டு ஒருநாள் எடுப்பதும்-சில நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு குளிசையுமாக சேமிப்பு முறையில் சின்னாட்சி உட்கொண்டாள்.

தலையிடி வந்தால் பிரஷர் கூடிவிட்டது என்பது அறிகுறி.- இது டொக்கடர் சொல்லித் தெரிந்ததுதான்.

இதை அளவுகோலாக கொண்டு தலையிடிவேளையில் மாத்திரம் குளிசை எடுத்தாள் சின்னாச்சி.

“இன்றைக்கு எப்படியும் மருந்து வாங்கவேண்டும். பக்கத்து வீட்டு ஆறுமுகம் டவுனுக்கு அழைத்துப் போவதாக சொல்லியிருந்தான். நேற்று மகளிட்ட போய் வருவதாக போனவன் இன்னும் வரவில்லை. இன்றைக்கு தனியாக வேணும் போய் மருந்து வாங்க வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்க்க வேண்டாம் என டொக்கடர் சொல்லியிருக்கிறார். இந்த ஊரில் உப்புத்தான் கட்டுபடியாகிற விலையில் கிடைக்கிறது. உப்பில்லாமல் எப்படி சாப்பிடுவது. ரவுனுக்கு போவதற்கும் மூன்றுமைல் தூரம் நடக்க வேண்டும். முடியுமா? அந்தக்காலத்தில் எத்தனை மைல் தூரம் நடந்திருக்கிறேன். நம்மட ஊரில் முன்பு கார் பஸ்ஸா இருந்தது.? சூரியன் மேலே ஏற முன்னம் ரவுனுக்கு போக வேண்டும்.”

முகத்தை கழுவி கொடியில் தொங்கிய துணியால் துடைத்துவிட்டு அம்மன் படத்துக்கு முன்பாக இருந்த சிறிய பெட்டியில் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்ட சின்னாச்சியின் உதடுகள் அம்மாளாச்சியைதான் பார்க்க வேண்டும் என முணுமுணுத்தன.

“வெளிக்கிட்டு படலையடிக்கு வந்நதவுடனேயே மூச்சு வாங்குது. எப்படித்தான் பஸ்ராண்டுக்கு போகப்போகிறனோ?”

பதினைந்து நிமிடப் பொடி நடையில் ஒழுங்கைக்கு வந்தபோது சின்னாச்சியின் நெஞ்சு புதுச்சுளகு போன்று படக்படக்கென்று அடித்தது. நெஞ்சுக் கூட்டுக்குள் இருக்கும் இதயம் வெளியே வருமாப் போல இருந்தது. வலது கையை நெஞ்சில் வைத்து தடவியபடி பஸ்ஸ்ராண்ட் மரத்தடியில் அமர்ந்தாள்.

வீதிவெறிச் சோடிக்கிடந்தது. எந்தவொரு வாகனப் போக்குவரத்தும் இல்லை. ஏதாவது ஹர்த்தால் என்று கடையடைப்பும் வாகனப் போக்குவரத்து மற்ற சூனியம் படர்ந்திருக்கிறதோ என சின்னாச்சி நினைத்தாள்.

அரைமணி நேரம் கடந்து விட்டது. வாகனப்போக்குகளை காணவில்லை. வீதியில் பறந்த கடதாசிகளை மேய்ந்து கொண்டு இரண்டு செத்தல்மாடுகள் கடந்தன.

இரண்டு ஆண்நாய்கள் துரத்திக் கொண்டு சென்றன. காற்றும் புழுதியை வாரிக்கொண்டு அத்திசையில் நகர்ந்தது.

தூரத்தில் ஒரு சைக்களிள் வந்தது.

சின்னாச்சி வீதிக்கு குறுக்கே வந்து மறித்தாள்.

‘தம்பி என்னடா நடந்தது. ரோட்டில் ஒரு பஸ்ஸையும் காணவில்லை.’

‘எங்கேயோ வெடி வைச்சிட்டான்கள் ஹெலியும் சுத்துது.’

‘தம்பி நீ எங்கப்பன் போகிறாய்?’

‘பிள்ளைக்கு பால்மா வாங்கவேணும் ரவுனுக்கு போறன்.’

‘உன்ர சைக்கிளுக்கு பின்னால் தொத்துறன். எனக்கு பிரஷர் குளிசை வாங்க வேணும்..’

‘சரி ஏறுங்கோ’.

ரவுனில் சின்னாச்சியை இறக்கியவன் ‘இந்தவழியாக நடந்தா ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரி வரும்’ என்றான்.

‘உனக்கு புண்ணியம் கிடைக்கும் ராசா.’

சைக்கிள் மறைந்தது.

“நானும் பெத்தனே ஒரு நாயை. இத்தாலியில் கம்பி எண்ணுது. கம்பி எண்ணுவதுதான் விதியென்று இருந்தால் இங்கே சிங்களவனின்ரை கம்பிகளை எண்ணலாம்தானே. பிள்ளையின்ரை முகத்தை பார்த்துட்டு சாகலாம் என உயிரைப் பிடிச்சுக் கொண்டிருக்கிறன். வயதுபோன தாயை வந்து பார்க்க வேண்டாம். குளிர்தேசத்தில் சாகிறானே. சரி.. நான் புலம்பி என்ன நடக்கபோகிறது.”

படபடசென்று துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன.

“துலைவான்கள் சுடுறான்கள். நான் எங்கதான் ஓடுறது.?”

சின்னாச்சி காலை எட்டி வைத்து நடந்தாள்.

கண்கள் இருட்டின. நெஞ்சை பிசைவது போன்ற உணர்வு.

“என்ன கண்கள் அந்தரத்தில் மிதக்கிறதே, நெற்றி கழுத்தெல்லாம் வலிக்கிறதே அடிவயிறு கலங்குகிறதே.. எனக்கு என்ன அம்மாளாச்சியே. . என்னை- என்னை”

சின்னாச்சி மயங்கியவாறு வீதியில் சரிந்தாள்.

இப்போது துப்பாக்கி வெடிக்கும் சத்தங்களோ ஹெலியின் இரைச்சல்களோ சின்னாட்சிக்கு கேட்கவில்லை. எங்கும் இருட்டு. அந்தகாரமான இருட்டு.

இருட்டும் இப்போது தெரியவில்லை.

முகத்தில் ஈரம் பட்டது.

விழித்தாள்.

‘ஆச்சி எங்கேயண போறாய்? ஏன் விழுந்து கிடக்கிறாய்?’- கேட்ட குரலுக்கு சொந்தமான முகம் தெரியவில்லை.

‘யார்? கண் தெரியவில்லை இருட்டாக இருக்குது. பிரஷர் குளிசை வாங்க ஆஸ்பத்திரிக்கு போகவேணும்.’

‘இந்தா பக்கத்தில் தான் நடக்கிறாயா?’

‘உன்ர முகம் கூட தெரியவில்லை. எப்படி பாதை தெரியும். ஆஸ்பத்திரி வாசலடியில் கொண்டு போய்விடு.’

சின்னாச்சிக்கு உதவவந்த நபர் கையால் ஆதரவு கொடுத்து தூக்கியபடி ‘தனியாவா வந்தனி ஆச்சி? யாரும் இல்லையோ’ என்று கேட்டார்.

‘எனக்கு விதி, அந்தக்காலத்தில் இருந்தே இப்படித்தான் என்ர மனிசன் கொழும்புக்கு வேலைக்கு போய் வருஷத்துக்கு ஒருதடவை வரும். ஆறுபிள்ளைகளை பெத்தாலும் இரண்டு தான் தங்கிச்சுது. பொத்திப்பொத்தி வளர்த்தனான். மூத்தவன் சிங்கள நாட்டில இருந்து ஒருத்தயை கொண்டுவந்து இவள்தான் பெண்டில் என்டான். அவளோடு சுகமாக இருந்தானா..? அதுதான் இல்ல ஆறுவருஷத்தில நஞ்சைக் குடித்து செத்துப்போனான். சின்னவனை ஆமி பொலிஸில பிடிபடாம காப்பாத்தி இருந்த காணி நகையை வித்து வெளிநாட்டுக்கு அனுப்பினனான்…. அவன் இத்தாலியில ஜெயிலுக்குள்;ள இருக்கிறானாம். கட்டினவனாலும் சுகமில்லை. பெத்தபிள்ளைகளாலும் சுகமில்லை கொஞ்சக்காலம் பல்கலைக்கழத்தில் படிக்கிற பிள்ளைகளுக்கு சமைச்சுக் கொடுத்து என்ர வயித்தைக் கழுவினன். உடம்புக்கு ஏலாமல் இப்ப அந்த வேலையையும் விட்டிட்டன். இனி அந்த அம்மாளாச்சி தான் துணை.’

‘ஆச்சி ஆஸ்பத்திரி வந்திட்டுது. இந்த வாங்கில் உட்காருங்கோ. தலையை நிமித்தி வையுங்கோ”

குரலின் தொனியில் மாற்றம்.

சின்னாச்சியின் சாய்ந்த தலை பக்கவாட்டில் சரிந்தது. கண்கள் நிலைகுத்தியவாறு ஆஸ்பத்திரிக் கூரையில் சுழலும் மின்விசிறியை நோக்கியது.

ஆஸ்பத்திரி தாதியர் அவசரஅவசரமாக சின்னாச்சியை ஸ்ரெச்சரில் வைத்து உள்ளே கொண்டு சென்றனர்.

சொற்பவேளையில் ஸ்ரெதஸ்கோப்புடன் வந்த டொக்டர் கேட்டார். ‘யாராவது உறவினர்கள் வந்திருக்கிறார்களா?’

‘இல்லை டொக்கடர் கிழவி தனியத்தான் சீவிக்குதாம். கொண்டு வந்து விட்டவர் சொன்ன தகவல்’.

டொக்டர் உதட்டை பிதுக்கினார் ‘அனாதைப்பிணம்’ என்றால் மருத்துவ பீடத்துக்கு அனுப்புங்கோ.’

சின்னாச்சி அவசர அவசரமாக போமலினுக்குள் அமுக்கப்பட்டாள். எஞ்சியிருந்த அற்ப சொற்ப பிராணவாயு குமழிகளாக வெளியேறின.

——- —————-

கபிலனுக்கு புதிய bபொடி கிடைத்த மகிழ்ச்சியில் 24ம் பிளேட்டை எடுத்து கைப்பிடியில் கவனமாக பொருத்தினான்.

வாசுகி உடல்கூற்று புத்தகத்தை விரித்து கழுத்து நரம்புகளின் படங்கள் உள்ள பக்கத்தை படம் தெரியத்தக்கதாக கபிலனுக்கு அருகில் வைத்தாள்.

பத்துப்பேருக்கு ஒரு bபொடி ஆனால் கபிலனுக்கும் வாசுகிக்கும் ஒரு bபொடி சின்னாச்சியின் உருவத்தில் கிடைத்தது.

பிளேட்டை சற்று அழுத்தி பொடியின் முகத்தில் வைத்தான் கபிலன்.

bபொடியின் மூக்கில் சிறு துடிப்பு.

‘கபிலன் நிறுத்து மூக்கு அசைகிறது..’ என்றாள் வாசுகி.

‘எனக்கு தெரியவில்லை.’

‘எனக்கு தெரிகிறதே’.

அந்த bபொடி மெதுவாக அசையத்தொடங்கியது. முனகியது.
கண்கள் திறந்தன.

முகத்தில் இரத்தம் கசியத்தொடங்கியது.

கபிலனும் வாசுகியும் விக்கித்து போனார்கள்.

சின்னாச்சியின் bபொடி வாய்திறந்து பேசியது. கண்களில் படிந்திருந்த இருட்டு இப்போது நீங்கியிருக்கிறது.

‘ஏன் பிள்ளைகளே.. என்னைத் தெரியல்லையா’.

கபிலனும் வாசுகியும் வாயடைத்து நிற்க சின்னாச்சி வாயசைத்தாள்.

‘உங்களுக்கெல்லாம் சமைச்சுப்போட்ட சின்னாச்சிதான். நீங்களெல்லாம் சோதினைக்கு படிக்கும் போது எத்தனைநாள் காலையில் கோப்பி போட்டுத்தந்திருப்பன்.’

‘கபிலன்.. இது எங்கட சமையல்கார ஆச்சி’ வாசுகி உரத்த குரலில் சொன்னாள்.

‘நான் அனாதை இல்ல. எனக்குச் சொந்தக்காரர் கொழும்புக்கு இடம் பெயர்ந்திட்டினம். சொல்லியனுப்புங்கோ என்ற கட்டை வேக வேணும்’

சின்னாச்சியின் இறுதி வாக்குமூலம் உதிர்ந்தது. மீண்டும் உண்மையாகவே bபொடி ஆனாள்.

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.