நீரளவே ஆகுமாம் நீராம்பல்

நடேசன்
எமது தமிழ் சமூகத்தில் சிறிது வித்தியாசமாக சிந்தித்து செயல்பட்டால் அந்த மனிதனை எதிரிகள் மட்டுமல்ல, நண்பர்களும் திணற வைத்துவிடுவார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக நீரின் ஆழத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்து வாழ்வது போன்ற ஒரு நிலை எனக்கு இருக்கிறது.

எனக்குத் தெரிந்த தூரத்து உறவினர் எங்கள் தீவுப்பகுதியை சேர்ந்தவர். என்னில் உண்மையான அன்பு கொண்டவர். அடிக்கடி சொல்லுவார் “நீங்கள் ஏன் ஊரோடு ஒத்து வாழக்கூடாது. பிள்ளைகள் குடும்பம் என உங்கள்பாட்டுக்கு இருந்தால் பிரச்சினை இல்லைத்தானே” என்பார். அவருக்கு நான் பதில் சொல்லாமல் நட்புடன் சிரிப்பேன். எனது காரணங்களை அவருக்குச்சொல்லி புரிய வைக்கமுடியாது. அப்படி அவருக்கு சொன்னாலும் புண்ணியமில்லை. நாளை இதே கேள்வியைதான் புதிதாகக் கேட்பார்.

அவர் போகட்டும. பலர் அறிவுரையாக எனக்குச் சொல்வார்கள். எனது நண்பர்களை உறவினர்களை சந்தித்து அவர்கள் மூலமாக என்னை குணப்படுத்தும் முயற்சியில ஈடுபடுவார்கள். இந்தத் துன்பத்தை நான் பல வருடங்களாக அனுபவித்து வருகிறேன்.

இது மட்டுமா, எனது நண்பன் ஒருவன் சொன்னான் “உனது மரண வீட்டுக்கு அதிகமானவர்கள் வரமாட்டார்கள்.”என்று. அவனைப் பொறுத்தவரையில் மெல்பன் விடுதலைப்புலிகள் பொறுப்பாளர் இறந்த போது வந்த சனக்கூட்டம் தான் அவனது அளவுகோல். ‘இறந்த பின் நடப்பதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை’ என்று சொல்லி விட்டேன். இதுமட்டுமா, எனது வயதான மாமா மாமியிடம் சென்று, ‘நடேசனின் செயற்பாடுகள் எல்லாம் அவரது பிள்ளைகளுக்குத் தானே சேரப்போகிறது’ என்று கவலைக்குரிய பயமுறுத்தலாக சொல்லி இருக்கிறார்கள். எனது மாமா மாமி வயதானவர்களானபடியால் தங்கள் பாவம் புண்ணியத்தை அடிக்கடி மீளாய்வு செய்பவர்கள். அவர்கள் கலங்கிப் போய்விட்டார்கள்.

இம் மாதிரியான சமூகப்பிரச்சினைகளை எவ்வாறு எதிர் கொள்வது?

இது எனக்கு மட்டும் நடப்பது அல்ல. பலருக்கும் நடந்திருக்கிறது. பலர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். பலர் ஊரை விட்டு ஓடி இருக்கிறார்கள்.

அதிகாரமுள்ள அரசாங்கம் அல்லது அரசியல் தலைமை இப்படி இருந்தால் தங்களைப் பாதுகாக்க செய்வதாக புரிந்து கொள்ளலாம். ஆனால் சாதாரணமானவர்கள் எதுவித அவசியமுமற்ற நிலையில் இப்படியான ஒற்றைப் படையான சிந்தனையைக் கொண்டு இருத்தல் அரசியல் கருத்தியலில் மட்டுமல்ல இலக்கியம், கல்வி ,விஞ்ஞானம் என பல துறைகளில் இருப்பதை எப்படி விளக்க முடியும்?

இங்கிலீஸ் பொக்ஸ் என்ற செடியை அவுஸ்திரேலியாவில் வீட்டுத் தோட்டங்களில் வைப்பார்கள். அது நன்றாக வளரும் போது இலையுதிர்காலத்தில் அதன் கீழ் கிளையின் உயரத்தில் மேல் உள்ள கொப்புகளை எல்லாம் கத்தரித்து அழகு படுத்துவார்கள் . பார்ப்பதற்கு எல்லாம் ஒரு மட்டத்தில் சமமாக வெட்டப்பட்டு அழகாக இருக்கும். அதுவும் வரிசையாக நட்டால் வேலி போல் இருக்கும்.
மனிதர்களிடம் இப்படியான சமமான சிந்தனையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் இதை புரிந்து கொள்ளும் நிலையில் பலர் இல்லை.

ஒருவிடயத்தைப் பற்றி பலர் பல்வேறுவிதமாக சிந்திப்பது மூன்று காரணங்களில் தங்கி இருக்கிறது.

1) நம்பிக்கை- காலம் காலமாக மத நம்பிக்கையில் வளர்ந்தவர்கள் மனங்களில் அவை முன் மூளையில் அதன் கூறுகள் பதிந்து விடும். கிறீஸ்துவ மதத்தவர்கள் பத்துக்கட்டளைகளை காலம் காலமாக படித்து, எழுதி ,செபம் செய்து வருகிறார்கள். இதே போல் மற்ற மதங்களில் வந்தவர்கள் அந்தந்த மதக்கோட்பாடுகளை நம்பிவருவார்கள். புத்த,  ஜைன சமயத்தின் தொடர்பால் இந்தியாவில் மாமிசம் உண்பது பாவம் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் உண்ணும் ஹலால் முறையில் தயாரித்த மாமிச உணவுக்கும் தற்காலத்தில் மற்ற முறைகளில் தயாரித்த உணவுக்கும் அடிப்படையில் வித்தியாசம் இல்லையானாலும் இன்னும் இந்த நம்பிக்கையினால் அந்த மதத்தவர்கள் எல்லோரும் ஹலால் மாமிசத்தையே தேடி உண்கிறார்கள். மதம் மட்டுமல்ல அரசியல் தத்துவங்கள் கூட மனிதர்களில் இப்படியான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

2) மனச்சாட்சி – இது நமது மனிதர்கள் மத்தியில் அடிக்கடி பாவிக்கப்படும் வார்த்தை. மனச்சாட்சியை நீதிமன்றத்திலும் உயரியதாகக் காட்ட முயல்வார்கள். இரஸ்சிய நாவலாசிரியரான டொஸ்ரோஸ்கி( Fyodor Dostoyevsky)‘குற்றமும் தண்டனையும்’ என்ற நாவல் இதை அடிநாதமாக வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.

எமது சமூகத்தில் நான் படித்த காலத்தில் சில வசனங்களை வாய்க்கு வந்தபடி பாவிப்பார்கள். ஆனால் ஆயுதப் போராட்டம் தொடங்கியதும் அந்த வார்த்தைகள் பாவனையில் குறைந்துவிட்டன.

நான் கேட்ட வசனங்களில் சில:-

அவன் சொன்னால் உனக்கு மனச்சாட்சி எங்கே போய்விட்டது?

மனசாட்சியை விற்றவர்கள்

மனச்சாட்சி இல்லாதவர்கள்

மனச்சாட்சியை அடைவு வைத்தவர்கள்

மனச்சாட்சி இல்லாதவனாக இருக்கிறாயே

நீ மனச்சாட்சி இல்லாத துரோகி

மனசாட்சி இல்லாத தமிழனாக இருக்கிறாயே

இப்படி பல வார்த்தைப்பதங்கள் கேட்டிருக்கிறோம்
மனச்சாட்சி ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதை பலரும் புரிந்திருக்கிறார்கள்.
பல திருடர்கள் திருடிய பின் அதில் சில பணக்கட்டுகளை திருப்பதி உண்டியலில் போட்டதும் மனச்சாட்சி சமாதானமாகிவிட,  மீதியை கொண்டு போவார்கள்.

திருமணமாகிய ஆண் வேறு பெண்ணிடம் உறவு கொள்ளும் போது தன் மனைவியில் ஏதாவது குறை கண்டு தன் மனதை சரிப்படுத்திக்கொள்வான். அதே போல் பெண்ணுக்கும் பல காரணங்கள் மூலம் தங்களை மனச்சாட்சியின் தலையீட்டில் இருந்து விடுவித்துக் கொள்வார்கள். கொலைகாரர் கொள்ளைக்காரர்களும் இப்படியான காரணங்களை வைத்திருப்பார்கள்

1. பிரித்தானிய உளவியலாளரான நிக்கலஸ் ஹம்றி Nicholas Humphrey இந்த மனச்சாட்சி என்பது மாயாஜாலங்களின் காட்சி என்கிறார். அதாவது மூளையின் ஒரு பகுதி மற்ற பகுதியுடன் நடத்தும் செஸ் போன்ற விளையாட்டு. உங்களது தரப்புக்கு ஏற்ப நீங்கள் வரைந்திருக்கும் ஒரு கோடு.  அந்தக்கோட்டை நீங்கள் மனச்சாட்சி என பெயர் கொடுத்து அதனோடு காலம் காலமாக விளையாட்டு நடத்துகிறீர்கள். உங்களது கோடு நீங்கள் எட்டும் உயரத்தில்தான் கீறப்பட்டிருக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. மாறக்கூடியது.

இதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இலங்கையில் இருக்கம் அண்ணனது மனச்சாட்சி அவுஸ்திரேலியாவில் இருக்கும் தம்பியின் மனசாட்சியை விட வித்தியாசமாக இருக்கும்.
காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப அணையின் தண்ணீர் மழைக் கேற்ப மாறுபடுகிறது. அது போலத்தான் இதுவும் எனச் சொன்னால் பலர் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திட்டவட்டமாக மறுப்பார்கள்.

மனிதர்களுக்கு பரிணாமத்தில் மிக நெருங்கிய கொரில்லாவை விஞ்ஞானி ஒருவர் கண்ணாடிக் கூண்டில் அடைத்து விட்டார் . படிப்படியாக தண்ணீரை அந்த கண்ணாடிக் கூண்டுக்குள் செலுத்தினார். அந்த கொரில்லா தனது குட்டியை மடியில் வைத்திருந்தது. தண்ணீரின் மட்டம் வயிற்றருகே வந்த போது தனது குட்டியை நெஞ்சுக்கு கொண்டு சென்றது. நெஞ்சுக்கு நீர் மட்டம் உயர்ந்த போது தலைக்கு மேல் குட்டியை வைத்துக் கொண்டு இருந்தது. நீர் மட்டம் மூக்குக்கு வந்த போது, தனது குட்டியை காலின் கீழ் போட்டுவிட்டு அதன் மேல் ஏறி நின்றது.

3)உங்களது சிந்தனையை பார்வையை உருவாக்குவது உங்களுக்கு கிடைக்கும் தகவல்களும் உங்களது அனுபவங்களுமாகும். பலவிடயங்களில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அனுபவங்கள் கிடைப்பதில்லை. உதாரணமாக நான் மிருக வைத்தியம் பயின்ற போது மூன்றாவது வருடத்தில் தமிழ் பேராசிரியர் என் மீதிருந்த தனிப்பட்ட குரோதம் காரணமாக ஒரு பாடத்திற்கு மூன்று முறை பெயில் போட்டார். அதன்பின் ஒரு சிங்கள பேராசிரியர் என்னை வீட்டுக்கு அழைத்துச்சென்று நடந்த பழிவாங்கலை தெரிந்து கொண்டார். பின்னர் அவரால்தான் நான் எனது மிருக வைத்திய படிப்பையே முடிக்கக் கூடியதாக இருந்தது. இப்படிப்பட்ட அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்.
இந்தக்காலத்தில்  தகவல்கள் தேடியலைந்தால் பலருக்கும் கிடைக்கும். புத்தகம் தொலைக்காட்சி வானொலி மற்றும் இணையம் என்று தகவல்கள் பரவிக்கிடக்கிறது. ஆனால் தகவல்களில் இருந்து விடயத்தை புரிந்து கொள்வதானது, சமயலறையில் வெங்காயம், மசாலா, இறைச்சி ,உப்பு என சகலதும் இருந்தாலும் நல்ல சமையல்காரர் அங்கு இருந்தால் மட்டும்தான் நல்ல கறி வைக்க முடியும். நான் பல பல்கலைக்கழக நூலகர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் காலம் காலமாக புத்தகங்களை அடுக்கியபடிதான் இருந்திருப்பார்கள்.

தமிழில் அழகான வாக்கியம் .

நீரளவே ஆகுமாம் நீராம்பல்

அது போல்தான் நமது சிந்தனைகளும் பார்வைகளும் ஆளுக்காள் வேறுபடுகின்றன. அதை ஏற்றுக்கொள்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது.
-0-

“நீரளவே ஆகுமாம் நீராம்பல்” மீது ஒரு மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: