பம்பாயில் இருந்த தாதாவான வரதராஜ முதலியாரின் கதையை வைத்து நாயகன் படம் வெளியானது தெரிந்ததே. எனினும் அவரது வாழ்வில் பலருக்கு தெரியாத பக்கம் ஒன்று உண்டு அது ஈழப் போராட்டத்திற்கு அவர் உதவி செய்த பக்கம்.
நான் இந்தியாவில் இருந்த 84 – 87ஆம் ஆண்டு காலபபகுதியில் சிறிசபாரட்னம் தலைமையிலான ரெலோ இயக்கத்தினருக்க இராணுவ உடைகள் மற்றும் சப்பாத்துகள் போன்றவற்றை அவர் வழங்கினார். இதே போன்று பத்மநாபா தலைமையில் இயங்கிய ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தினருக்கும் அவருக்கும் இடையே சில தொடர்புகள் இருந்தன. ஆனால் உதவிகள் கிடைத்ததாகத் தெரியவில்லை.
அத்துடன் புளட் இயக்கத்தில் இருந்து வெளியேறிய சிலர் தாதாக்களாக மாறியதும் பிற்காலத்தில் மற்றும் சிலர் சிறிய பெரிய அளவில் போதைவஸ்து வியாபாரம் செய்ததம் நான் அறிந்தவை. இதை விட இலங்கைத்தமிழர் சிலர் பம்பாயில் இருந்து போதைப் பெட்டி காவினார்கள் முன்னூறு கிராமுக்கு குறைவாக இருந்தால் தாங்களே கொண்டு சென்றார்கள். அத்துடன் கடவுச்சீட்டுகள் தயாரிப்பதிலும் வித்தகர்களாகத் தேறி தொழில் செய்தார்கள் பல வழிகளில் பணக்காரராகிய சிலர் பொலிவூட் நடிகைகள் சிலருடனும் தொடர்புகள் கூட வைத்திருந்தார்கள். நான் அறிந்த ஒருவர் கட்டிலில் நோட்டுகளை விரித்துப் போட்ட பின் ஒரு நடிகையுடன் காதல் செய்தார்.
விடுதலைப்புலிகளால் மற்ற இயங்கங்கள் அழிபடும்போது சிதறி ஓடியவர்கள் பலர் வெளிநாடு செல்ல எண்ணி பம்பாய் நகரம் சென்றார்கள். மேற்கு நாடுகளுக்கு விமானம் ஏற முடியாதவர்கள் இப்படியான தொழிலில் ஈடுபட்டார்கள். இப்படியான தொழில் செய்பவர்களுக்கெல்லாம் பம்பாய் நகரம் தஞ்சம் கொடுத்தது பலர் இடையில் சென்னை வந்து கதை கதையாக சொல்வார்கள். நிச்சயமாக ஒரு தொகையினர்; இன்னும் பம்பாயில் இருப்பார்கள். பம்பாய், இந்திய பட உலகிற்கு வரும் இந்தியருக்கு மட்டும் கனவுத் தொழிற்சாலையாக இருக்கவில்லை. ஈழம் ஆப்கானிஸ்தான் ஈரான் பாலஸ்தீனம் என போர் நடந்த இடங்களில் இருந்து சிதறியவர்களை பம்பாய் அணைத்து அடைக்கலம் கொடுத்தது.
பம்பாய் மாபியாவை பற்றி எந்தனை பொலிவூட் படம் பார்த்திருப்போம் கதைகள் கேள்விப்பட்டிருப்போம். பல படங்கள் மாபியாவின் பணத்தில் உருவாகியவை. தங்களை திரைகளில் ஹீரோக்களாக பார்க்க அவர்கள் விரும்பியதால் அந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. அதை எல்லாம் விஞ்சியபடி இருந்தது நான் சமீபத்தில் படித்த சாந்தாராம் என்ற புத்தகம். கீழே வைக்காமல் தொடர்ச்சியாகப் படித்தன். கிரகரி ரோபேட் என்ற அவுஸ்திரேலியரால் எழுதப்பட்ட நாவல். பல வருடங்களாக பம்பாய் மாபியாவில் இருந்த அவரது அனுபவத்தில் எழுதப்பட்டது.நூல் ஆசிரியர் மெல்பனில் படித்து பின்பு எழுத்து நாடகம் அரசியல் சமூகசேவைகளில் ஈடுபட்ட பின்பு திருமணத்தில் முறிவு ஏற்பட்டதும் போதைவஸ்து பாவித்து போதை வஸ்துக்காக களவுகளில் ஈடுபட்டு சிறை சென்றார். சிறையில் அனுபவித்த கஷ்டங்களை தாங்கமுடியாமல் சிறையில் இருந்து தப்பி இந்தியாவுக்கு போலி பாஸ்போட்டில் செல்லும் கிரகரி பம்பாயில் உள்ள பெரிய பின்தங்கிய சேரிப் பகுதியில் அந்த மக்களோடு தங்கியிருந்து மருத்துவராக வாழ்ந்த பின்பு பொய்யான குற்றச்சாட்டில் சில மாதங்கள் பம்பாய் சிறையில் தள்ளப்படுகிறார். இந்த சிறையில் வாடும்போது அவர்படும் சித்திரவதைகளைப் படிக்கும் போது நாம் அதை அனுபவிப்பது போல் இருக்கும்.
சிறையில் இருந்து காதர் கான் என்ற பம்பாய் மாபியா தலைவரால் காப்பாற்றப்படுகிறார் . அந்த மாபியா தலைவர் ஆப்கானிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து அங்கு நீடிக்கும் போர் காரணமாக இந்தியாவில் வாழுகிறார். அவரது தலைமையின் கீழ் பம்பாயில் மாபியா கவுன்சில் உருவாக்கப்பட்டு ஒருவித ஜனநாயகம் உருவாகிறது. அந்த மாபியா கவுன்சிலில் பாகிஸ்தானியர் ஈரானியர் பாலஸ்தீனியர் உட்பட இந்திய முஸ்லீம்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருந்து தங்கள் தொழிலைச் செய்கிறார்கள்
இந்த மாபியா கவுன்சில் தங்களுக்குள் சில தர்ம நியாயங்களை உருவாக்கி விபசாரம் போதை மருந்து போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளும் அதே வேளையில் பாஸ்போட் தயாரித்தல் தங்கம் ஆயுதக்கடத்தல் மற்றும் கறுப்புப் பணம் போன்ற விடயங்களில் மாத்திரம் ஈடுபடுகிறது.
மாபியா தாதாவான காதர்கானை தந்தையாக வரித்துக் கொண்டதால் ஆப்கானிஸ்தானில் போராடும் Jamiat-e-Islami என்ற முஜாஹிதீன் குழுவான அகமட் சா மசூட் (AhmAhmed Shah Masooded ) என்ற அமைப்பிற்கு ஆயதங்கள் கொடுத்து உதவும் அமெரிக்கனாக நாவலின் நாயகன் ஆப்கானிஸ்தான் செல்வதும் இக்கதையில் மிகவும் சுவாரஸ்யமான பகுதி.
மாபியாவில் இருந்ததோடு இந்தி மராத்தி உருது மொழிகள் பேசும் மிஸ்டர் லின்சி பிற்காலத்தில் வின் ஆகி லின்பாவாவாகிறார். மகாராஸ்ரத்தில் தனது வழிகாட்டியான பிரபாகரோடு தங்கியிருந்த போது பிரபாகரின் தாயால் சாந்தாராம் என்ற பெயர் வைக்கப்பட்டது. அந்தப் பெயரே இந்நாவலின் பெயராக வருகிறது.
ஓட்டோபயக்கிராபி என்ற கதை சொல்லும் வடிவத்தில் வரும் இந்த 900 பக்கங்களுக்கு மேற்பட்ட நாவல் இலக்கியரீதியில் செறிவானதாகவும் வித்தியாசமான பல நாட்டு பல மனிதர்களை சித்திரிப்பதாலும் கலாச்சார பண்பாட்டு எல்லைகளை கடந்து சர்வதேச ரீதியாக பலருக்கும் புரியக்கூடியதாக இருக்கிறது. அதே வேளையில் இந்திய மக்களின் கலாச்சார மெல்லுணர்வுகளை அனுசரித்து வருடிய படி கதை சொல்லப்படுகிறது. பல மேற்கு நாட்டவர்கள் கீழைத்தேசத்தவர்களைப் பற்றி சொல்லும் போது கலாச்சார புரிந்துணர்வில் இடைவெளி தெரியும். ஆனால் அதை இந்நாவலில் காணமுடியவில்லை.
பாத்திரப்படைப்பில் காலா என்ற பெண்ணும் பிரபாகரும் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரங்களாக பல காலத்திற்கு எனது மனதில் நடமாடுவார்கள்.
இந்த நாவலில் வந்து போகும் இரு இலங்கைத்தமிழர்கள் பாஸ்போட் திருத்தி விற்கும் கலைஞர்களாக வருகிறார்கள். இவர்களது தொழில் நுட்பம் மிகவும் பெரிதாக மெச்சப்படுகிறது. மேலும் கதையின் முடிவில் கதை நாயகன் இலங்கைப்போரில் சிங்கள –தமிழ் மக்களின் போரின் மத்தியில் அகப்பட்டு தவிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு உதவ இலங்தை செல்ல இருப்பதாக கதை முடிகிறது
இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டகாலத்தில் இந்நாவலின் கதை தொடங்குகிறது. இந்தக்காலப்பகுதியில் சென்னையில் கடையடைப்பு இருந்தமையால் மூன்று நாட்கள் அங்கு நான் உணவுக்காக அலைந்து பட்டினியாக இருந்ததும் இந்நாவலைப்படிக்கும்போது நினைவுக்கு வந்தது.
– Shantaram is a 2003 novel by Gregory David Roberts, in which a convicted Australian bank robber and heroin addict escapes from Pentridge Prison and flees to India. The novel is commended by many for its vivid portrayal of life in Bombay in the early to late 1980s. The novel is reportedly influenced by real events in the life of the author, though some claims made by Roberts are contested by others involved in the story.-
Author Gregory David Roberts
Country Australia
Language English
Publisher Scribe Publications (Australia)
Publication date 2003
நன்றி ஞானம்
மறுமொழியொன்றை இடுங்கள்