பிள்ளைத்தீட்டு.

இந்த சிறுகதை தொண்ணுறுகளில் எழுதப்பட்டு உதயத்தில் வெளி வந்தது. தமிழர்கள் துன்பப்பட்டார்கள் என்பது உண்மை. அதே போல் பலருக்கு தமிழர்களால் துன்பங்களை இழைக்கப்பட்டிருக்கிறுது. இந்த கதையில் வரும் நாகலிங்கம் ஜமிலையையும் உருவகித்து என் மன வெளியில் நான் விரும்பும் சமூகத்தை உருவாக்கியுள்ளேன். கருத்துகள் வரவேற்கப்படும்

பிள்ளைத்தீட்டு

‘ஆயிஷா, வேலைக்கு வரச்சொல்லி எனக்கு கடிதம் வந்திருக்கு” – ஜமீல் பரவசத்துடன் வீட்டுக்குள் வந்தான்.
நாள் முழுவதும் பலசரக்குக் கடையில் குனிந்து நிமிர்ந்து நடமாடி வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கவனித்து களைப்பால் சலிப்படைந்துவரும் அவனிடம் இன்று குதூகலம்.
நெடுநாள் ஆசையொன்று நிறைவேறிய பூரிப்புடன் அவன், ஆயிஷாவை முகமலர்ச்சியுடன் பார்த்தான்.

‘மகன், இன்டைக்கு வாப்பா சந்தோஷமா வாரார், எல்லாம் அல்லாஹ்வின் கருனைதான். சொல்லுங்க…. என்ன வேலைக்கு கடிதம் வந்திருக்கு.” ஆயிஷா, ஜமீலுக்கு தேநீர் தயாரித்தவாறு கேட்டாள்.

‘ஆமியில வந்து சேரட்டாம்”.

நடுப்பகலில் எதிர்பாராதவிதமாக சூரியகிரகணம் வந்தது போன்று ஆயிஷாவின் முகம் இருண்டது. சில நிமிட மௌனத்தின் பின்பு, அவள் வாய் திறந்தாள்.

‘எங்களுக்குத்தானே ……. நல்ல வியாபாரம் இருக்குதே. அல்லாஹ்வினால் ஒரு குறையும் இப்போது இல்ல… ராணுவத்தில் போய் சேர்ந்து ஏன் சண்டை பிடிக்கோணும்.?”

ஆயிஷா மீண்டும் மௌனித்தபோது பெருமூச்சு உதிர்ந்தது. அதில் ஏக்கம் சஞ்சரித்தது.

‘ஆயிஷா….. ஒனக்கு ஒண்டும் விளங்காது…. நாங்கள் இப்படி அகதியா …. ஊர் விட்டு ஊர் வந்து கஷ்டப்படுறதுக்கு காரணமானவங்களை பழிவாங்க இதுதான் நல்ல சந்தர்ப்பம்.” – ஜமீல் ஆத்திரத்துடன் சொன்னான்.

‘என்ன… சொல்லுறீங்க … இப்ப … நாங்க அகதியாகவா இருக்கிறோம். வாப்பாவின்ட வீட்டில நல்லாத்தானே வாழறோம்.”
‘புத்தளத்தில இருக்கும் எங்கட உறவுகள் அகதிகள் இல்லையா ஆயிஷா”.

ஜமீல் குறிப்பிடும் உறவுகள் அவனது குடும்பத்தினர்தான் என்பதைப் புரிந்து கொள்ளும் ஆயிஷா, குழைவுடன், ‘ நாமளும் பழிக்குப் பழி வாங்குறதா? கெட்டவர்கள் எந்த சமூகத்திலதான் இல்லை….” – எனக் கேட்டாள்.

‘நீ என்ன….. எல்லத்தையும் மறந்துபோனால் என்னட பத்துவருட உழைப்பு, கட்டின வீடு, சொத்துப் போனது கவலை இல்ல. எங்களையெல்லம் இரக்கமில்லம லொறியில் ஏத்தி அனுப்பினாங்களே…..அது என் மனசில ஆறாது. நீ என்ன சொன்னாலும் சரி, நான் ஆமியில சேரத்தான் போறன்.”
ஜமீல், அந்த பழுப்பு நிறக்கடித உறையை மேசையில் வைத்தான்.

‘சரி… நீங்க…. சண்டைக்குப் போறதுதான் எண்டு முடிவெடுத்தா…. நான் என்னதான் செய்ய முடியும். என்னையும் பிள்ளையையும் நாகலிங்கண்ணை வீட்டில விட்டுட்டு போற இடத்துக்குப் போங்கோ…. சண்டை முடிஞ்சாப்பிறகு வாங்கோ……

‘உணக்கென்ன பயித்தியமா ஆயிஷா…”

எனக்குப் பயித்தியம் இல்லை: நாகலிங்கண்ணை, செல்வராணி அக்கா போல் எத்தனையோ பேர் இருக்கிறாங்க. அன்டைக்கு அவுங்க இல்லம….. என்னையோ பிள்ளையையோ பார்த்திருப்பீங்களா?.”

நாகலிங்கத்தின் பெயரை ஆயிஷா உச்சரித்ததும் ஜமீல் உற்சாகம் இழந்தான். சோர்வுடன் தரையில் அமர்ந்து மேடையில் கிடக்கும் அரசாங்க கடிதத்தைப் பார்த்தான்.

ஆயிஷா, ஜமீல் அருகில் நகர்ந்து அவனது தலையை ஆதரவுடன் தடவினாள்.

மதவாச்சி பஸ்நிலையத்துக்கு சமீபமாக செய்யது முகம்மது, மருமகன் ஜமீலுக்கு பலசரக்குக் கடையொன்று வைத்துக் கொடுத்தார். செய்யது முகம்மது மரவியாபாரி. மதவாச்சியில் மட்டுமல்ல, அநுராதபுரம் வவுனியா பிரதேசங்களிலும் பிரபலமானவர். அவரது மூத்த மகள் ஆயிஷா.
உளுந்து வியாபாரம் நிமித்தம் யாழ்ப்பணத்திலிருந்து வவுனியா, மதவாச்சிப்பக்கம் வந்து சென்ற ஜமீல் செய்யது முகம்மதுவுடன் நட்பாகி, அவரது மகளை விரும்பி தந்தையின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டான்.
மனைவி ஆயிஷாவுடன் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வேளையில் புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர்.
மகள் ஆயிஷா, மருமகள் ஜமீல், பிள்ளையுடன் மதவாச்சியில் வாழத்தக்கவிதமாக பலசரக்கு வியாபாரத்துக்கு முதல் கொடுத்து ஜமீலை ஒரு கடையின் முதலாளியாக்கினார் செய்யது முகம்மது.
ஜமீல், மாமனாரின் உதவியோடு மதவாச்சிக்கு இடம் பெயர்ந்தாலும், அவனது உறவினர்கள் புத்தளம், நீர்கொழும்பு என சிறிப்போனார்கள்.

—————————-
கணவனுடன் தினமும் சச்சரவுப்படும் மனைவிமார்கள் கூட கர்ப்ப காலத்தில் சாந்த சொரூபியாகிவிடுவார்களாம். கர்ப்பிணித்தாயான ஆயிஷா, அவசரமாக புறப்பட்ட கணவனைப்பார்த்து, ‘வெளியே போறீங்களா? இன்டைக்கு லீவு நாள்ணெடுதான் நினைத்தேன்”- என்றாள்.

‘ஆயிஷா…… அவசர சோலியா கொழும்புக்குப்போறன். நாலு நாளில் வந்திருவன்.”

மேலாடைக்குள் கையை வைத்துக்கொணடு, ‘எங்களுக்கு இது முதல் குழந்தை. தகப்பன் உடன் இருக்க வேண்டாமா?” எனக்கேட்டாள் ஆயிஷா.

‘கலைப்பட வேண்டாம். அல்லாஹ், எங்களை கைவிடமாட்டார். இனசனம் இருக்கு, நாகலிங்கம் அண்ணையிடமும் சொல்லிவிட்டுப் போகிறேன். குழந்தை பிறக்க இன்னமும் ரெண்டு கிழமை இருக்கு எண்டு டொக்டர் சொன்னார்தானே?”

இரண்டு கிழமைக்கு முந்தியும் பிறக்கலாம் எண்டும் சொன்னார்தானே……. ஒண்டு செய்யுங்க….. போகிற வழியில வாப்பாவீட்டுள மதவாச்சியில விட்டுட்டுப்போங்க.”

‘என்ன பேச்சுப் பேசிறாய் ஆயிஷா……. எங்கட சாதி சனத்தோட இருக்காமல்……இந்த நேரத்தில…… யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி டொக்டர்கள் பழக்கம்தானே, நான் எதுக்கு கொழும்புக்கு போறன் தெரியுமா……… காதர் மச்சானிடம் போன தடவை உளுந்து வித்ததில் கொஞ்சம் பணம் இருக்கு அதை வாங்கிட்டு வந்தால்…..பிள்ளை பேறு செலவுக்கு உதவும்தானே.” – எனச் சொன்னவாறு ஆதரவுடன் ஆயிஷாவை அணைத்து அவளது வயிற்றின் மீது படிந்துள்ள கையை பற்றி விரல்களினால் தீண்டினான்.

ஜமீலின் கை அவளது உடலை சிலிர்க்க வைக்க, அவன் தோள் மீது சாய்ந்து கொண்டு

‘நாகலிங்கம் அண்ணையை அனுப்பலாம்தானே? நீங்கதான் போகோணுமா?”

‘இப்ப நாடு இருக்கிற நிழைமையில அவரை கொழும்புப் பக்கம் அனுப்பக்கூடாது. புலி எண்டு பிடிச்சுக் கொள்ளுவாங்கள். எங்கட காசுக்கும் ஆபத்து…. நாகலிங்கண்ணைக்கும் பிரச்சினை.”

‘எனக்கு மனம் கேட்கலீங்க……” அவளது கவலை கண்ணீராக செரிந்தது.

‘என்ன….. ஆயிஷா…. சின்னப்பிள்ளை மாதிரி அழற….. நீ இப்படி அழுதா…. உள்ளுக்க இருக்கும் எங்கட பிள்ளையும் அழும்…..” – ஜமீல் அவளது கண்களை துடைத்துவிட்டான்.

அவள் அவன் கரத்தை ஒதுக்கினாள்.

‘இங்க பாரு….. நாகலிங்கண்ணையிடம் சொல்லி காருக்கு பெற்றோல் போட்டு எப்பவும் தயாறாக வைக்கச் சொல்லி இருக்கிறன். தகவல் அனுப்பினால் கொக்குவில்லிருந்து பத்து நிமிடத்தில் கார் வந்துவிடும். அவர் பிஸினஸ் கூட்டாளி மாத்திரமில்லை … சகோதரன் மாதிரி. நீ கவலைப்பட வேண்டாம்.”

ஜமீல் பெரியகடையை நேக்கி நடந்தான்.

ஆயிஷாவுக்கு தலைப்பிரசவம் எப்பவும் நடக்கலாம். இத்தருணத்தில் வீட்டில் நிற்காமல் போவது அவனுக்கு மனக்கஷ்டமாகவும் இருந்தது.

ஜமீலும் நாகலிங்கமும் வவுனியா பகுதிக்கு ஒன்றாகச் சென்று அறுவடையாகும் உளுந்தை வாங்கி சில காலம் வைத்திருந்து யாழ்ப்பாணத்தில் விறபார்கள். எண்பத்து மூன்று கலவரத்தின் பின்பு – இந்த வியாபாரத்தில் மந்தமும் தேக்கமும் ஏற்பட்டதையடுத்து கொழும்புப்பக்கம் தமது வியாபாரத்தை விஸ்தரித்தார்கள். இரண்டுபேரும் கூட்டாக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டது ஒரு வகையில் இருவருக்கும் சௌகரியமானது.

வவுனியா – செட்டிகுளம் பக்கம் செல்லும் வேளைகளில் நாகலிங்கம் முதலாளியாகவும் ஜமீல் கிளீனராகவும் நடந்து கொளவர். அநுராதபுரம், பதலியா போன்ற சிங்களப் பிரதேசங்களுக்கு செல்லும்போது ஜமீல் முதலாளியாகிவிடுவான்.

இனங்களுக்கிடையே குரோதங்கள் தோன்றும் பொழுது சாமானியர்களின் பாதிப்பு வெளித் தெரிவதில்லை. குடும்ப உறவுகள், நட்புகள் அறுபட்டு, இனம் மட்டும் கண்ணுக்குத் தெரியும்.

இந்த யதார்த்தத்தையும் மீறி நாகலிங்கம் ஜமீல் நட்பு நீடித்தது. எண்பத்தி மூன்று கலவரத்தின் பின்பும் – ஆறுவருடங்களாக இந்தநட்பும் வியாபாரமும் நீடிக்கிறது.

ஜமீலைவிட பத்து வயது மூத்த நாகலிங்கம,; மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் கொக்குவிலில் வாசம். ஜமீல் கடந்த வருடம் மதலாச்சியில் ஆயிஷாவை மணம் முடித்தபின் யாழ்ப்பாணம் சோனகத்தெருவில் குடியிருக்கிறான்.

————————————————
சொல்லி வைத்தாற் போன்று, ஜமீல் கொழும்பு சென்று இரண்டு நாட்களில் ஆயிஷா பிரசவ வேதனையால் துவண்டால். அயல்வீட்டு ஜப்பார் மூலம் நாகலிங்கத்திற்கு தகவல் அனுப்ப – அவர் காருடன் மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்து, ஆயிஷாவை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சேர்த்தார்.

நடுநிசியில் ஆயிஷாவுக்கு ஆண்குழந்தை பிறந்தது.

பிரசவ தியேட்டரிலிருந்து வாட்டுக்குத் திரும்பிய ஆயிஷவின் முகத்து வியர்வையை துணியால் துடைத்தவாறு, ‘பிள்ளை …… பயப்படாதை…எங்கட நல்லுர்கந்தன் அருளால் எல்லாம் நல்ல படியா முடிஞ்சது….. பிள்ளை, ஜமீல் தம்பியை உரிச்சு வைத்திருக்கிறான்.” என்றாள் செலவராணி.

ஆயிஷா அருகில் உறங்கும் குழந்தையைப் பார்த்து முறுவலித்தாள்.

‘என்ன பெயர் வைத்தப் போகிறாய்…”

‘நான் எதுவும் நினைக்க இல்லை அக்கா…. அவர் வந்துதான் சொல்லவேனும். அவர் இல்லாத நேரத்தில் அவசரமா பிறந்திட்டான்.” – ஆயிஷா சோர்வோடு சொன்னாள்.

‘ஏன் நாங்கள் இல்லையா?”

நீங்ளும் அண்ணையும் இருக்கிறீர்கள் எண்டுதான் வழிக்கு வழி சொல்லிவிட்டுப் போனார் அக்கா….. நீங்களும் கூடப்பிறந்த சகோதரி மாதிரி பக்கத்திலேயே நிக்கிறீங்க….இப்ப…..நேரம் என்னவாக இருக்கும் அக்கா….”

‘இப்ப….. பன்னிரண்டு மணிக்கு மேல இருக்கும்”

அது பிரசவ வார்ட் என்பதனால் நாகலிங்கம் வெளியே நின்றார்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மாரும் அவர்களுக்கு உதவும் பெண்களுமாக அந்த வார்ட் நிறந்திருந்தது. கருப்பைகளை நிறைத்திருந்த புதையல்கள் தொட்டில்களிலும் கரங்களிலும் நெளிந்தன. இக்காட்சியைக்கண்டு களிப்படைந்த பெண்கள் – தாம்தானே இவற்றின் பிரம்மாக்கள் என்று பெருமிதம் கொள்கின்றனர்.

‘ஆயிஷா…..பிள்ளைக்கு பால் கொடுக்கிறாயா?”

‘இல்லையக்கா……” – என்றாள் நாணத்துடன்.

‘கொஞ்சம் திரும்பு”- எனச் சொன்னவாறு குழந்தையின் தலையை சற்று உயர்த்தினாள் செல்வராணி.

உடலைத்திருப்ப முயற்சித்த ஆயிஷா,’உம்மா…..உம்மா…..”- என்று அரற்றினாள். அவள் கண்களில் சுரந்தது.

‘பிள்ளையின் தலை பெரிசாக இருந்ததால்…..கத்தி வைச்தாங்க …. புண் மாறுவதற்கு ஒரு கிழமைக்குமேல செல்லுமாம்.” ஆயிஷா சிரமப்பட்டு சொன்னாள்.

‘நான் என்ட இரண்டு பிள்ளைகளுக்கும் மிகவும் கஷ்டப்பட்டேன். எனக்கும் கத்தி வைத்தார்கள் ஒண்டுக்கு, இரண்டுக்கு போவதற்கும் கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் ஏன்தான் கலியாணம் செய்தேன் என்றுகூட யோதனைப்பட்டிருக்கிறன். என்ற அவரை அந்த நேரத்தில் கொலை செய்யக்கூட நினைத்ததை இப்ப நினைத்தால் சிரிப்பாக இருக்கு….. ஆனால் பிள்ளையின்ர முகத்தைப்பார்த்ததும் அந்த நோவெல்லம் மறைஞ்சிடும், நான் உன்ர முதுகை திருப்பிறன். நீ திரும்பு….”

பல தடவை முயற்சித்து, ஆயிஷா திரும்பியதும் செல்வராணி, அருகில் குழந்தையை கிடத்தினாள். கண்களை மூடியிருந்த குழந்தையின் மருதுவான உதட்டினுள் ஆயிஷா முலைக்காம்பை செலுத்தினாள்.

குழந்தையின் கடவாயில் பால் வழந்தது.
‘உம்மா…”
‘என்ன…..”
‘நெஞசு பாரம் இறங்கினது போல….”
‘குழந்தை பால் குடிக்க உடம்பு வலியும் குறைஞ்சிடும்.” – என்று தனது அனுபவத்தைச் சொன்னாள் செல்வராணி.

வாசலில் நின்ற நாகலிங்கம், செல்வராணியை கைச் சைகைமுலம் வெளியே அழைத்தார்.

வாசலுக்கு வந்த செல்வராணி,’என்ன…” எனக் கேட்டாள்.

‘இந்தப் பெடியங்கள் முஸ்லிம்கள் எல்லோரையும் யாழ்ப்பாணத்தை விட்டு போகச் சொல்ல இருக்கிறாங்க.. எல்லோரும் லொறிகளில் போகத் தயாராகிறார்கள்.”

‘என்னப்பா சொல்றீங்க … இதென்ன கொடுமை. அதுகள் எங்கே போவது……”

‘ஆயுதங்கள் வைச்சிருக்கிறவன்கள் சொன்னா கேட்கத்தானே வேண்டும்.” நாகலிங்கத்தின் வார்த்தைகள் விரக்தியுடன் உதிர்ந்தன.

‘இப்ப…..என்ன செய்யிறது… ஆயிஷாவிடம் இதைச் சொல்ல ஏலாது….. பிள்ளை பெத்த பச்சை உடம்புக்காரி. ஜமீலும் இப்ப ….. இங்கின இல்லை….” – எனச் சொன்னவாறு தலையில் கைவைத்த படி வாசலில் அமர்ந்தாள் செல்வராணி.

‘எழும்பு…. இப்ப ஆயிஷாவுக்கு தெம்பூட்ட வேண்டியது நீதான்…”

‘ஆயிஷாவையும் பிள்ளையையும் எங்கட வீட்டுக்கு கொண்டு போவோம். நீங்கள்…. காரை ஆஸ்பத்திரிக்குள்ள கொண்டு வாங்க…” – எனச் சொன்ன செல்வராணி சட்டெனத் திரும்பி ஆயிஷாவிடம் வந்தாள். நிலைமைகளை விளக்கினாள்.

‘ஆயிஷா… உங்கட பகுதியில் – உங்கட ஆட்களுக்கும் – புலிகளுக்கும் இடையில் ஏதோ தகராறு… இந்த நேரத்தில் இங்கே போக வேணாம்…. நாங்கள் கொக்குவிலுக்கு எங்கட வீட்டுக்கு போவோம்….. உனக்கு சம்மதம்தானே..”

‘அக்கா…. நீங்களும் அண்ணையும் எங்கே கூப்பிட்டாலும் வாரன்…. “

செல்வராணியின் மனதில் பொய் கனத்தது. ‘எங்களை நம்பி, ஜமீல் இந்தப் பெண்ணை ஒப்படைத்துப் போயிருக்கிறான். ஜமீல் அந்நியனா…. எங்கே சென்றாலும் எங்களை நம்பி வரத்தயாராக இருக்கும் இவள் யார்…? இவர்கள் என்ன துரோகம் செயதார்கள். நாம் செய்யும் துரோகத்திற்கு என்ன பரிகாரம் செய்ப் போகிறோம். யாழ்ப்பானத் தமிழர்கள் அனைவருக்குமே இந்த பாவத்தின் சமபளம் கடைக்கப் போகின்றதா…..?

குழந்தையை ஏந்தியவாறு சக்கர நாற்காலியில் அமர்ந்தாள் ஆயிஷா. செல்வராணி அதனைத் தள்ளியவாறு ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்தாள்.

அங்கே காரின் பின் கதவைத் திறந்து கொண்டு நாகலிங்கம் நின்றார்.

‘பிள்ளையைத் தந்திட்டு…. மெதுவாக ஏறு” – செல்வராணி குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
சக்கர நாற்காலியிலிருந்து இறங்க முடியாமல் தவித்தவளிடமிருந்து குழந்தையை வாங்கிக கொண்ட செல்வராணி…, ‘இஞ்ச வாருங்கப்பா…இவளால எழுந்திருக்க முடிய இல்லை…. ஒருக்கா தூக்கி காரில் ஏற்றிவிடுங்க…” என்றாள்.

பலகாலம் உளுந்து மூடைகளை ஏற்றி இறக்கிய அந்தக்கரங்கள் – அந்தப் பெண்ணை அலக்காகத் தூக்கி காரினுள் அமர்த்தியது.

அவரது கையில் ஏதோ பிசுபிசுத்தது. மனதிற்குள் ‘பிள்ளைத்திட்டு” – எனச் சொன்னவாறு குழாயடிக்குச் சென்று கழுவிக் கொண்டார்.

அந்தக் கார் – யாழ்பாணம் பஸ்நிலைய பக்கமாகச் செல்லாமல், ஆரியதளம் சந்திக்கு வந்து பருத்தித்துறை வீதியில் நல்லூர் சென்று கொத்குவிலை வந்தடைந்தது.

‘என்னால்….. உங்களுக்குத்தான் எவ்வளவு கஷ்டம்…” – என்றாள் ஆயிஷா.

நாகலிங்கம், வீட்டு முற்றத்து முருங்கைமரத்திலிருந்து பிஞ்சு முருங்கக்காய்களை பறித்துக் கொடுத்தார். செல்வராணி கொத்தமல்லி சீரகத்துடன் உள்ளியை அம்மியில் வைத்து அரைத்து சரக்குத் தண்ணி தயார் செயதாள்.
——————————————————————-

‘அப்பா…. அப்பா…..”

கதிரையில் சாய்ந்து கண்களை மூடி இளைப்பாறிக் கொண்டிருந்த நாகலிங்கத்தை மகன் தோளில் தட்டி எழுப்பினாள்.

‘என்னடா?”
“இயக்கம் வந்திருக்கு”

சிலகணங்களில், இரண்டு இளைஞர்களும் இரண்டு யுவதிகளும் இராணுவ உடையில் அவர் முன் நின்றனர்.

அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் எழுந்த நாகலிங்கம், ‘என்ன பிள்ளைகள்….? – என்றார்.

‘நீங்கள் ஒரு முஸ்லிம் குடும்பத்தை வீட்டில் வைத்திருப்பதாக கேள்விப்பட்டோம். பார்க்க வந்தோம். ‘குரூப்லீடர்” போன்றிருந்தவனின் குரலில் அதிகாரம் தொனித்தது.

வீட்டுக்கு வந்து சில மணிநேரங்களுக்குள்ளாகவே – இவர்களுக்கு தகவல் பறந்துவிட்டதா…. அயலவர்கள் பற்றி கவலையுடன் யோசித்தார் நாகலிங்கம்.

‘ஜமீல் பலகாலம் என்னுடன் தொழில் செயகிறான். அவசரமாக கொழும்பு போயிட்டான். அவன் மனைவிக்கு நேற்று இராத்திரிதான் ஆஸ்பத்திரியில் பிள்ளை பிறந்தது. இந்த நேரத்தில்……” நாகலிங்கம் இழுத்தார்.

‘அதைப்பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது….. யாழ்பாணத்தில் இருக்கிற முஸ்லிம்கள் எல்லாம் இன்டைக்கு ஆறுமணிக்குள்ள வெளியேற வேனும்….. இது இயக்கத்தின்ர கட்டளை,”…….

‘இந்தப்பிள்ளை எப்படிப் போறது…… அதுவும் பிறப்பு வாசலில் கத்தி வைச்சிருக்கு….. எழும்பி இருக்கக் கூட முடியாது… ஒரு கிழமையில நானே கொண்டு போய்விடுகிறேன்….. அதுவரையில்…..”

நாகலிங்கம் அழாத குறையாகச் சொன்னார்.

‘அது எங்கட பிரச்சனை அல்ல. மேலிடத்து உத்தரவு…. நாங்கள் நிறைவேற்றுகிறோம்…. அவ்வளவுதான்.”

‘நான் வந்து உங்கள் பொறுப்பாளருடன் பேசட்டுமா…” எனக்கேட்டார் நாகலிங்கம்.

‘கொஞ்சம் பொருங்க ….. நாங்கள் முதலில் பேசிவிடுகிறோம்.” – எனச் சொன்ன அந்த ‘லீடர்” மற்றவர்களை அழைத்துக் கொண்டு முருங்கை மரத்தின் கீழே சென்றான்.

செல்வராணி வெளியே வந்து கணவனிடம் மெதுவான குரலில் கேட்டறிந்தாள்.

முருங்கை மரத்தடிக்குச் சென்றவர்கள் திரும்பினர்.

‘ அண்ணே….. நாங்கள் எதுவும் செய்ய முடியாது…. நீங்கள்…. அந்தத்தாயையும் பிள்ளையையும் அனுப்புவதைப் பார்த்துவிட்டு திரும்ப வேண்டும் என்பதுதான் எமக்கிடப்பட்ட கட்டளை.” – எனச் சொன்ன ‘லீடர்” திரும்பி, முருங்கை மரத்தின் கீழிருந்த கற்குவியலின் மேல் ஏனையவர்களுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டான்.

‘ஆமிக்காரன்கள்ட கொடுமையைவிட இவங்கட கொடுமை பெரிசாக இருக்கு ……” – செல்வராணி முணுமுணுத்தாள்.

சொற்பவேளையில், செல்வராணி, ஆயிஷாவை அணைத்தபடி வெளியே வந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்கலங்கினர்;.

நாகலிங்கம் லொறியை முற்றத்துக்கு கொண்டு வந்தார்.

இயக்க யுவதி ஒருத்தி வந்து, ‘அக்கா…. நாங்கள் ‘செக்” பண்ண வேண்டும்” – என்றாள்.

என்னத்தை ‘செக்” பண்ணப் போறியள்”

‘ஐநுறு ரூபாய் பணமும் மாற்றுத்துணியும்தான் கொண்டு போகலாம். நகை எதுவும் கொண்டு போக முடியாது.”
‘பிள்ளை பெத்து ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு வந்திறங்கியும், சிறு குண்டுமணி நகை கூட
அவவிட்ட இல்லை.”

‘நாங்க செக் பண்ண வேண்டும் என்பது இயக்கத்தின் கட்டளை.”

‘அப்ப…… செக் பண்ணுங்கோ…… அவளுக்குத் திட்டுத்தான் வழியுது.”- என்று எரிச்சலுடன் சொன்னாள் செல்வராணி.

‘குரூப்லீடர்” அருகில் வந்து ‘சரி… நீங்க போங்கோ” – எனச் சொன்னவாறு அந்த யுவதியைப்பார்த்து கண்களால் சமிக்ஞை செய்தான்.

லொறியினுள்ளே சணல் சாக்கு விரிக்கப்பட்டு அதன்மேல் துணி விரித்து ஆயிஷாவையும் குழந்தையையும் படுக்க வைத்தனர் நாகலிங்கமும் செல்வராணியும்.
————————————————————————————–
மதவாச்சியை வந்தடைய இரவு எட்டு மணியாகிவிட்டது. பல தடவைகள் வியாபார நிமித்தமாக வந்திருந்தபடியால், ஆயிஷாவின் தந்தை வீட்டடுக்கே நேரடியாக லொறியை கொண்டு வந்தார் நாகலிங்கம். லொறியைக் கண்டதும் பலர் ஓடி வந்தனர்.

அங்கே இருந்த ஜமீல், ‘நாகலிங்கண்ணே….” எனக் கத்தியவாறு ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்து அணைத்தான்.

‘ஜமீல்…. உன்ர ஆயிஷாவும் பிள்ளையும் பத்திரமாக வந்திருக்கிறார்கள்.”- என்றார் நாகலிங்கம்.

‘என்ற ஆயிஷா…” – என குரலிட்டவாறு லொறியின் பின்புறம் ஏறினான் ஜமீல்.

அன்றைய தினம் அங்கே பண்டிகைதான்.

மறுநாள் நாகலிங்கம் புறப்படத்தயாராளார்.

‘ஜமீல் ….. நான் போக வேணும்…. இந்த லொறி இனி உங்களுக்குத்தான்… இந்தா பிடி சாவி…” என்றார் நாகலிங்கம்.

‘என்ன அண்ணை நீங்க சொல்றது… உங்கட தொழில் யாவரத்தை இனி எப்படி செய்யிறது… எனக் கேட்டான் ஜமீல்.

‘ஜமீல்… எனக்கு ஊரில் வீடு இருக்கு… உனக்கு இல்ல. வீடும் இல்லை வாசலும் இல்லை…
இனி எப்போது யாழ்ப்பாணப்பக்கம் நீங்கள் வரமுடியுமோ தெரியாது. இது நான் உன்ற பிள்ளைக்குத் தரும் பரிசு….. அநுராதபுரம் கச்சேரிக்கு வந்து பெயரை மாற்றிக்கொள்…. என்னை வவுனியாவில் விட்டு விடு”- என்றார். நாகலிங்கம்.

நாகலிங்கம், ஜமீலுடன் புறப்பட்டார். வெளியேறு முன்பு- குழந்தையின் கன்னத்தை பிரியத்துடன். தடவினார்.

ஆயிஷாவின் கண்கள் கலங்கின.
‘அக்காவுக்கு எங்கட அன்பைச் சொல்லுங்க அண்ண” – அவள் நா தழுதழுக்க சொன்னாள்.

——————————————————————

‘என்னங்க…….யோசனை……… ஆர்மியில போய்ச் சேரத்தான் போறிங்களா?” – கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்தவனை உசுப்பினாள் ஆயிஷா.

‘இல்லை ஆயிஷா… நான் போகவில்லை” ஜமீல் எழுந்து ஆயிஷாவின் கரத்தை பற்றினான்.
வெளியே தரையில் விளையாடிக்கொண்டிருந்த அவர்களின் மகன், ‘உம்மா…..” – என அழைத்தவாறு வந்தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: