
நடேசன்
மிருகவைத்தியராக மெல்பேனில் ஒரு கிளினிக்கை நடத்தும் எனக்கு வெள்ளிக்கிழமை காலைநேரத்தில் ஓய்வு. எனது நண்பன் அவ்வேளையில் அங்கு பணியாற்றுவான். உறக்கம் களைந்து எழுந்தது முதல் புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். சிறிய படகொன்றில் சிறு குழந்தையாக குடும்பத்துடன் பல கடற் கொள்ளையர்களையும் அபாயகரமான தென் சீனக் கடலையும் தாண்டி மலேசியாவுக்கு வந்து, அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கிய ஒருவன் தனது சிறு வயது அனுபவங்களை மிகவும் நகைச்சுவையாக அந்தப் புத்தகத்தில் விவரித்திருந்தான்.
தற்பொழுது இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகள் வரும் பின்னணியில் அந்தப் புத்தகம் கீழே வைக்க முடியாமல் மனதைக் கவ்வியபடி இருந்ததால் படித்து முடித்து கீழே வைக்க நடுப்பகலாகி விட்டது.
என்னைப் பொறுத்தவரை இந்த வெள்ளிக்கிழமையை ஒரு விடுமுறை நாள் போல் பாவிக்க முடிவு செய்துவிட்டேன். நண்பன் ஒரு மணி வரைக்கும் வேலை செய்வதால் அதன் பின்பு ‘எனக்காக அப்பொயின்மென்ட் கொடுத்திருக்கிறாயா?’ என எனது நர்சிடம் தொலைபேசியில் கேட்டபோது ‘மாலை நாலு மணிக்குப் பின்னர்தான் வருகிறார்கள். அப்பொழுது வந்தால் சரி’ என்றாள்.
வீட்டுக்குப் பக்கத்தில் கிளினிக் இருப்பதும் அப்பொயின்மென்ட் வைத்து வேலை செய்வதும் பல விடயங்களை இலகுவாக்கும். ஏதாவது நோயுற்ற செல்லப்பிராணிகள் அவசரமாக வரும் போது ஐந்து நிமிடத்தில் போய்விட முடியும். அந்த ஐந்து நிமிடத்தையும் எனது நேர்ஸ் ஆரம்ப தகவல்கள் எடுப்பதில் செலவிடுவதால் நான் போக சரியாக இருக்கும்.
நாலு மணி நேரம் படுக்கையில் இருந்தபடி வாசித்ததால் ஏற்பட்ட உடல் சோம்பலைப் போக்க பக்கத்தில் உள்ள ஜெல்ஸ் பாக்கில் ஒரு மணி நேரம் நடந்து விட்டு சில நண்பர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் இரண்டு மணியாகிவிட்டது.
குளித்து முடித்து குளியலறையை விட்டு வெளியே வந்ததும் செல்போன் அடித்தது.
‘உடனே வரமுடியுமா?’
‘பத்து நிமிடத்தில்…’
‘இல்லை, உடனே வரமுடியுமா?’
‘என்ன அவசரம்?’
‘ஒரு வித்தியாசமான மனிதன் கிளினிக்குக்குள் வந்து விட்டான் . நான் வெளியே வந்து எனது செல்போனில் பேசுகிறேன்.’
‘வருகிறேன்…’ என இரண்டு நிமிடத்தில் உடைகளை அணிந்தபடி எனது நேர்ஸ் ஷரனைப் பற்றி யோசித்தேன். நாற்பது வயதானாலும் மிக அழகானவள். அத்துடன் மூன்று பிள்ளைகளுக்குத் தாய். பதினாறு வருடத்துக்கு முன்பு என்னோடு வேலை செய்துவிட்டு பின்பு திருமணமாகியதும் வேலையை விட்டு முழு நேர மனைவியாக, பின் தாயாக வீட்டில் பல வருடங்களாக இருந்தவளை இரண்டு நாட்கள் என்னுடன் வேலை செய்யும்படி வலியுறுத்தியதால் வந்து வேலைசெய்கிறாள். அந்த வித்தியாசமான மனிதனால் அவளுக்கு எதுவும் நேரிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஏற்பட்ட பரபரப்பில் ஐந்து நிமிடத்தில் எனது கிளினிக்குக்கு வந்து சேர்ந்துவிட்டேன். வேகத் தடைகளை மீறிக் கொண்டு காரைச் செலுத்தியபடி சேட்டு பொத்தான்களைப் போட்டேன். கைவிரல்களால் தலையைச் சீவினேன். தொழில் முறையில் இப்படி அவசரமாக பலதடவை செல்வதுதான்.
கிளினிக் கார் பாக்கில் காரை நிறுத்தியபோது அங்கு நின்ற ஷரன் ‘இந்த மனிதன் கிளினிக்கின் உள்ளே வந்து தொலைபேசியை பாவிக்கவேண்டும், என்றதும் கொடுத்தேன். அவன் உடனடியாக கதவை உள்ளால் பூட்ட சொன்னதும் திகைத்துப் போனேன். ஆறடிக்கு மேல் உயரமானவனோடு தர்க்கம் செய்யாமல் வெளியே கடிதங்களை தபால் பெட்டியில் இருந்து எடுக்கப் போகிறேன் எனக் கூறிவிட்டு வெளியே வந்தேன்…’ எனக் கூறிவிட்டு, நான் உள்ளே செல்ல ‘எதற்கும் கவனம்’ என்று கூறிக்கொண்டு என்னைப் பின் தொடர்ந்தாள்.
அவளுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதால் மற்றைய விடயங்களை என்னால் சமாளிக்க முடியும், என நினைத்தபடி உள்ளே சென்றேன். மஞ்சள் ரீ சேட்டும் காக்கி நிற பாண்டும் அணிந்த முப்பது வயதான அழகான இளைஞன் உள்ளே நின்றான். முன் தலையில் அதிக மயிரில்லை ஆனால் ஒழங்காக வெட்டப்பட்ட தலைமயிர். நீலக் கண்கள். விரிந்த தோள். உறுதியான கால்கள். ஒரு ரக்பி விளையாட்டுகாரன் போல் தோற்றமளித்தான். எந்த பெற்றோரும் தன் மகன் என பெருமைப்படும் படியான கவர்ச்சியான தோற்றம்.
அவன் கையில் எங்கள் கிளினிக்கின் போட்டபிள் தொலைபேசி.
‘மகனே உமக்கு என்ன உதவி வேண்டும்?’
எது வித தயக்கமும் காட்டாது ‘இரண்டு பேர் என்னைக் கொல்வதற்கு ரொயாட்டா காரில் துரத்துகிறார்கள். நான் மெல்பேனில் உள்ள முக்கிய இடத்துக்கு தொலைபேசியில் பேசவேண்டும். அதற்கு உங்களது அறையை பாவிக்க வேண்டும்’ என்றான்
‘எனது அறையையை பாவிக்க நான் அனுமதிக்க முடியாது. ஆனால் பக்கத்து அறையை பாவிக்கலாம்’ என அந்த அறையின் கதவைத் திறந்து அவனை உள்ளே அனுமதித்தேன்.
அவனது வார்த்தைகள் மிகவும் உறுதியாகவும் மரியாதையாகவும் வெளிவந்தன.
மெல்பெனில் கொலை செய்யத் துரத்துவதாகக் கூறியதால், ஏதாவது மாபியா மட்டும்தான் இப்படி செய்ய முடியும். உண்மையில் மாபியாவாக இருந்தால் இவன் கதி அதோ கதிதான். சமீபத்தில் ஜெயிலுக்குள் வைத்து தங்கள் கூட்டத்தில் இருந்து பின் பொலிஸாருக்குத் தகவல் பரிமாறியதால் ஒருவனைக் கொலைசெய்த சம்பவம் பத்திரிகையில் வந்தது. இந்த இளைஞனுக்கு அடைக்கலம் கொடுத்ததால் நாங்கள் மாபியாவின் இலக்காகி விடுவோமோ என்ற பயமும் நெஞ்சில் நிழலாடியது. ஷரனைப் பார்த்த போது அவளும் கண்களை அகல விரித்தபடி வாசலருகே நின்றாள்.
நான் காட்டிய அறைக்குள் அந்த இளைஞன் சென்றதும் மீணடும் ‘கவனம்’ என்றபடி உள்ளே வந்து கிச்சின் பகுதியில் உள்ள கத்தி முள்ளுக்கரண்டி எல்லாவற்றையும் எடுத்து மறைத்தாள்.
அவளது செய்கை எனக்குச் சிரிப்பை வரவழைத்தாலும் அவளது முன் எச்சரிக்கையை மெச்சாமல் இருக்க முடியவில்லை. வருமுன் காப்பது பெண்களுக்கு வழிவழியாக வந்தது போலும். எனக்கு இந்த இளைஞனைப் பற்றி எதுவும் புரியா விட்டாலும் பேச்சு வார்த்தையால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று நம்பினேன். ஆனால் அதை ஷரனுக்குச் சொல்லவில்லை.
பத்து நிமிடத்தின் பின், விலகிய கதவு ஊடாகப் பார்த்த போது அவன் தொலைபேசியில் இலக்கங்களை அழுத்திக் கொண்டிருந்தான். ஆனால் பேசியதாகத் தெரியவில்லை. திடீரென வெளியே வந்து எங்களது வரவேற்பு மேசையின் கீழே குனிந்தபடி இருந்து தொலைபேசியின் இலக்கங்களை தொடர்ச்சியாக அழுத்தினான்
இது என்ன வேடிக்கையாக இருக்கிறது. எனது கிளினிக்கில் ஒரு சம்பவம் நடக்கும் போது நிலைமையை எப்படியும் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரும் பொறுப்பு என்னிடமே இருப்பதால் ‘என்ன பிரச்சினை’ என வினவினேன்
‘அந்த அறையில் நான் இருந்தால் யன்னல் கண்ணாடி வழியே என்னைக் கொல்ல வருபவர்கள் என்னைப் பார்த்துவிட முடியும்…’ என்றான்.
இந்த இளைஞனுக்கு மனோவியாதியால் வரும் ஓடிரறி ஹலுசிநேசன் (Auditory hallucination) என்ற நோய் வந்துள்ளது என்பது எனக்குப் புரிந்தது. இவன் நோயாளி. இவனை நாங்கள் பக்குவமாகக் கையாளவேண்டும். ஷரனை வெளியே அழைத்துச் சென்று ‘இவனுடன் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிரு. ஏதாவது குடிக்கக் கொடுத்து அவனது பெயர் ஊர் விபரங்களை அறிந்தால் அவனைச் சேர்ந்தவர்களுக்குத் தகவல் கொடுக்கலாம். அதுவரையில் அவனிடம் நமது தொலைபேசி இருக்கட்டும். அதைக் கேட்க வேண்டாம்’ என்று கூறிவிட்டு நான் எனது அறைக்குச் சென்று கம்பியூட்டரில் பேஸ் புக்கைத் திறந்தேன்.
எனது பாடசாலைப் பிராயத்து நண்பனும் விடுதலைப் புலிகளின் பக்தனுமான சாந்தன் வந்து ‘யாழ்ப்பணத்தில் கிறீஸ் பூதமாக வருவது கோத்தபயாவின் வேலை தான். தமிழருக்கு எதிரான சதி இது. உனது கருத்தைச் சொல்’ என்றான்.
தனது கருத்துக்கு ஆதாரமாக யாழ்ப்பாணக் கவிஞர் தீபச்செல்வன் இராணுவத்தினர் தமிழ்ப் பெண்களின் முலைகளை ராஜபக்ச குடும்பத்துக்காக தேடித் திரிவதாக உயிர்மை என்ற தமிழ் நாட்டு இதழில் எழுதிய கட்டுரையையும் அனுப்பி இருந்தான்.
இந்த சட்டிங்கிற்கு நான் எதிர்த்து பதில் கொடுத்தால், என்னையும் அந்த முலைகளைத் தேடும் இராணுவத்தினரில் ஒருவராக்கி, துரோகி என்று பட்டம் கட்டலாம் என நினைத்துத்தான் இதை அனுப்பி இருந்தான். ஆனால் அந்தக் கூற்றை ஆமோதிக்கவும் எனது பகுத்தறிவு இடம் தரவில்லை.
ஷரன் அவசரமாக வந்து ‘இந்த இளைஞன் எமது கெலியோடு பேசி இருக்கிறான்’ என்றாள். கெலி மற்றுமொரு நேர்ஸ்.
‘அது எப்படி?’ என்று கேட்டேன்.
‘இந்தத் தொலைபேசியில் அவளது இலக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.’
‘என்ன பேசினான்?’
‘தனது பெயர் டானியல் என்றும் தனக்கு பாதுகாப்பு தேவையாக இருக்கிறது என்றும் பொலிஸை அனுப்பி வைக்குமாறும் சொல்லி இருக்கிறான்.’
‘கெலி என்ன சொன்னாள்?’
‘நீ யார் என்பது எனக்குத் தெரியாது. தயவு செய்து போன் பண்ணவேண்டாம்… என்றாள்.’
இன்று அவளுக்கு விடுமுறை நாள்.
‘ஷரன் கிளன்வேவளி பொலிசுக்கு போன் பண்ணு. அவனே பொலில் பாதுகாப்பு கேட்கிறான்.’
இப்பொழுது டானியல் எங்களது மலசல கூடத்துக்குள் இருந்தபடி யாருக்கோ மீண்டும் தொலைபேசியில் பேசுகிறான்.
- • •
மீண்டும் சாந்தன் சட்டிங்கில்.
‘என்ன பதில் சொல்லவில்லை. போர்காலக் குற்றங்கள் செய்ததால் ராஜபக்சவுக்கு எதிராக மெல்பேனில் வழக்கு தொடர்கிறோம்.’
‘எப்படியும் பொலிஸ் வருவதற்கு சிறிது நேரம் செல்லும். டானியல் மலசல கூடத்தில் பாதுகாப்பாக இருக்கிறான். ஷரன் வெளியே நிற்பதால் சாந்தனுக்கு பதில் ஒன்று சொல்ல நேரம் இருக்கிறது.
‘இலங்கையில் முப்பது வருடங்களாக பல யுத்தக் குற்றங்கள் இரண்டு தரப்பாலும் செய்யப்பட்டது. இந்திய அமைதிப் படையினரும் பல யுத்தக் குற்றங்கள் செய்தார்கள். சில வருடங்கள் முன்னால் முல்லைத்தீவு கடற்கரையில் கைதாகிய இராணுவத்தினரை விடுதலைப் புலிகள் கொலை செய்தார்கள். அதேபோல் போர்க்காலத் தொடக்கத்தில் மூதூர் தொண்டர் ஸ்தாபனத்தில் பணிபுரிந்த பதினேழு தொண்டர்களை இராணுவம் கொலை செய்தது. அப்பொழுது ஏன் வழக்கு தொடரவில்லை? எங்கே போயிருந்தீர்கள்?’
இதை சட்டில் எழுதிவிட்டு நிமிர்ந்த போது, பொலிஸ் வந்திருப்பதாக ஷரன் வந்து சொன்னாள்.
நான் வெளியே வந்து பார்த்த போது டானியலின் கையில் எமது தொலைபேசி இன்னும் இருந்தது. சிறிய குழந்தைகள் பயத்தில் தங்கள் கரடி பொம்மையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நிற்பது போல் எனக்குத் தோன்றியது. இரண்டு இளம் பெண்கள் பொலிஸ் சீருடையில் வாக்கி டோக்கி மற்றும் ரிவோல்வர் சகிதம் வந்திருந்தார்கள். அவர்கள் காரில் பொலிஸ் என எழுதப்படவில்லை. ஒரு பெண் பொலிஸ் நேரடியாக என்னிடம் வந்தாள்.
‘பெண்கள் வந்தது நல்லது என நினைக்கிறேன். அமைதியாகக் கையாளுவீர்கள்… இந்த இளைஞன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டியவன். இரண்டு மணித்தியாலமாக எங்களது தொலைபேசி அவனிடத்தில் உள்ளது.’
நன்றி தெரிவித்து விட்டு அந்தப் பெண் பொலிஸ் மீண்டும் அந்த இஞைனிடம் சென்றாள்.
இரு பெண் பொலிசாரின் கேள்விகளுக்கு அமைதியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அவனது கையில் தொலைபேசி பத்திரமாக இருந்தது.
சில நிமிடத்தில் அவன் வெளியே செல்ல, பெண் பொலிசாரும் அவனுடன் சென்றார்கள். இப்பொழுது வீதியின் சிக்னல் லைட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
நானும் ஷரனும் எங்கள் பொறுப்பு முடிந்து விட்டது. இனிமேல் பொலிஸ்காரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று அமைதியாகி சிறிது தொலைவில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றோம். எங்களைப் பொறுத்தவரை நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக நம்பிக்கை கொண்டோம்.
வீதியில் நின்ற அந்த இளைஞன் மீண்டும் கிளினிக்கின் உள்ளே வந்தான். அவனைத் தொடர்ந்து பெண் பொலிசார் வந்தனர். அவர்களது பேச்சில் எங்களுக்கு ஒரு விடயம் புரிந்தது. டானியல் அவர்களை பொலிஸ் என நம்பவில்லை. அவர்கள் கிளன்வேவலி பொலிஸ் நிலைய இலக்கத்தைக் கொடுத்து அவனை பேசச் சொல்லி இருக்கிறார்கள்.
பலதடவை நம்பரை அழுத்திக் கொண்டிருந்தான். போன் போகவில்லை. பொறுமை இழந்த பொலிசார் தங்கள் வாக்கி டோக்கியில் பொலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டு அவனிடம் கொடுத்தபோது அவன் அதை வாங்க மறுத்தான். தன் கையில் இருந்த எங்கள் தொலைபேசியால் தொடர்ச்சியாக முயற்சித்தபடி இருந்தான்.
இடையில் தொலைபேசியை அழுத்துவதை நிறுத்தி விட்டு ‘உங்களை நான் நம்பவில்லை. பொலிஸ் காரில் நீங்கள் வரவில்லை’-என்றான்.
‘நான் இந்தத் தொலைபேசியால் பொலிஸ் நிலையத்துக்குத் தொடர்பு செய்து தருகிறேன்’ எனக்கூறிக் கொண்டு ஒரு பெண் பொலிஸ் அவனது கையில் இருந்த போனை எடுக்க முயன்றாள். அவன் விடவில்லை. சிறிய போராட்டத்தில் தொலைபேசி அவனது கையை விட்டுப் போனதும் கிளினிக்குக்கு வெளியே ஓட முயற்சிக்க, பெண் பொலிசார் இருவரும் வெளிவாசலில் அவனைப் பிடிக்க முயற்சித்து மூவரும் நிலத்தில் உருண்டு புரண்டார்கள். திடகாத்திரமான இளைஞனானபடியால் அவனை மடக்க இரு பெண் பொலிசாரால் முடியவில்லை.
பொலிஸின் வேலையில் நாங்கள் தலையிட முடியாது, என நினைத்து தயங்கியபடி நான் சிறிது முன்னால் சென்றபோது அந்த இளைஞன் தனக்கு உதவும்படி பலதடவை கெஞ்சினான். அவனது கண்களில் பயங்கரமான மிருகங்களிடம் இருந்து தப்ப விரும்பும் ஒரு மனிதனின் உணர்வுகள் தெரிந்தன. என்னிடம் உதவியை யாசித்த அவனது கண்கள் தூக்குத் தண்டனைக்குப் போக இருந்த ஒருவனை எனது மனத்தில் நிறுத்தின. என் வாழ்நாளுக்கு அந்தக் கண்கள் மறக்க முடியாதவை. அவ்வளவு பரிதாபமாக இருந்தன. அவனைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர கட்டிப் பிடித்து உருண்ட பெண்களது சீருடை விலகியதும் பார்க்கக் கஷ்டமாக இருந்தது.
எப்படி பொலிசுக்கு நான் உதவுது என சிந்தித்துக் கொண்டு நின்றேன். இளைஞன் தனது கையை நீட்டி ஒரு பெண் பொலிஸின் ரிவோல்வரை எடுக்க எத்தனித்த போது மற்ற பெண் பெப்பர் ஸ்பிறேயை அவனை நோக்கி பாவித்தாள். அந்த ஸ்பிறே அவனை மட்டும் செயல் இழக்கச் செய்யவில்லை. அவர்களையும் பாதித்தது. அந்தச் சமயத்தில் கையை விடுவித்துக் கொண்டு அவன் தெருவில் ஒடினான். ஆனால் அவனால் அதிக தூரம் ஓட முடியவில்லை. பல பொலிஸ்கார்கள் உதவிக்கு அழைக்கப்பட்டு வந்தபோது அந்த இளைஞன் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டான்.
அருகில் நின்றதால் எனக்கும் பெப்பர் ஸ்பிறேயின் தாக்கத்தால் முகம் எரிந்தது. உள்ளே வந்து முகத்தைக் கழுவினேன்
ஷரன் சொன்னாள். ‘அவனிடம் இருந்த தொலைபேசியை அவர்கள் பறித்திருக்கக் கூடாது. தனது பாதுகாப்பிற்கு அந்தத் தொலைபேசியை அவன் நம்பி இருந்தான்.’
‘உண்மைதான்.’
- • •
திரும்ப கம்பியூட்டருக்கு வந்தபேர்து அதில் சாந்தனின் தகவல் இருந்தது.
‘அப்பொழுது தமிழருக்குப் பாதுகாப்பாக விடுதலைப்புலிகள் இருந்தார்கள்.’
மறுமொழியொன்றை இடுங்கள்