கலாநிதி கந்தையாவின் ஆவணப் பணி

நடேசன்

அவுஸ்திரேலியாவில் 14 வருடங்கள் உதயம் இதழை நடத்திவிட்டு மூடிய பின்பு என்னிடம் இருந்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது அதிக அளவில் இருந்த படங்கள் கலாநிதி கந்தையாவுடையதாகும். உதயம் பத்திரிகையை ஆரம்பித்தபோது எனக்கு அறிமுகமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர்

சிட்னியிலிருந்து உதயத்திற்கு அடிக்கடி விடயதானங்களும் ஒளிப்படங்களும் அனுப்பிக்கொண்டிருந்த கலாநிதி ஆ.கந்தையா.           அண்மையில் சிட்னியில் காலமானார்.

அவர் தனது நிகழ்ச்சியொன்றை அனுப்பி விட்டு அதைபிரசுரிக்க சொன்னபோது மறுத்துவிட்டேன்.; அந்த விடயம் இந்தியாவில் நடந்தது இங்கே அது முக்கியமானது அல்ல என்று மறுத்த போது அடுத்த முறை வேறு நிகழ்ச்சி பற்றிய படத்தை அனுப்புவார்.

அவுஸ்திரேலியாவில் உதயம் அவர் சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகளை பிரசுரித்தது அவரைப் பொறுத்தமட்டில் சிறந்த களம் என்று கூடச் சொல்லலாம். சிட்னியில் அவருடைய ஏதாவது நூல்களின் வெளியீட்டு விழாக்கள் நடந்தால் அல்லது அவர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு சமூக நிகழ்வு நடந்தால் நிச்சயமாக அவரிடமிருந்து செய்திக்குறிப்புகளுடன் ஒளிப்படங்களும் தாமதமின்றி உதயம் அலுவலகத்திற்கு வந்துவிடும். அனுப்பிவிட்டு மௌனமாக இருக்கமாட்டார். தபாலில் சேர்த்த மறுகணமோ அல்லது மின்னஞ்சல் அனுப்பி அடுத்த நிமிடமோ தொலைபேசி எடுத்து “ அனுப்பியிருக்கிறேன்… பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பவ்வியமாக சொல்வார்.

இலங்கையில் கந்தையா வாழ்ந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் நெருக்கமான நண்பர். ஜே.ஆரின் பல உரைகளை தமிழுக்கு பெயர்த்து ஊடகங்களில் ஜே.ஆர். சார்பாகவே பேசியவர். கபிலவஸ்துவில் இருந்து புத்தமதம் சார்ந்த சரித்திர புனித பொருட்கள் இலங்கைக்கு வந்தன. பின்னர் அவை யாழ்ப்பாணம் வந்துபோவதற்கு பொறுப்பாக இருந்தவர் கந்தையா. அதனால் அக்காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களால் அவர் ‘கபிலவஸ்து’ என்றும் அழைக்கப்பட்டது சிலருக்கு மட்டுமே தெரிந்தது.

1977 இனவாத வன்செயல் நடந்தபோது ஜே.ஆரின் புகழ்பெற்ற “ போர் என்றால் போர்…சமாதானம் என்றால் சமாதானம்…” என்ற வசனங்களை இலங்கை வானொலியில் பேசியவர்தான் கந்தையா, ஓரு காலகட்டத்தில் இது ஒன்றுபோதும் கந்தையா மீதான அந்த விமர்சனங்களுக்கு. எனினும் அந்த வசனங்கள் கந்தையாவினுடையது அல்ல என்பதை விமர்சித்தவர்கள் இலகுவாக மறுந்துவிடுவார்கள்.

கந்தையாவும் தொடர்ச்சியாக அயராமல் இயங்கியவர். இலங்கையில் களனி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்தலைவராக 1978- 1980 காலப்பகுதியில் பணியாற்றியவர். பொதுநலவாய நாடுகளின் பல்கலைக்கழகங்களின் ஆணையம் மற்றும் யுனெஸ்கோ நிறுவனம் ஆகியனவற்றின் புலமைப்பரிசில்களில் கற்பித்தல் முறைகளை பயின்றவர். இலங்கை கல்விச்சேவை ஆணைக்குழுவில் அங்கம் வகித்தவர். அக்காலப்பகுதியில் பலருக்கு ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுத்தவர். அதிலும் விமர்சனங்களை சந்தித்தவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் இதுவரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர். அதில் சுமார் இருபது நூல்கள் அவுஸ்திரேலியாவுக்கு அவர் புலம்பெயர்ந்தபின்பு எழுதப்பட்டவை.

கந்தையா அவுஸ்திரேலியாவில் செய்த ஒரு முக்கியமான பணி. கமல்ஹாஸன் நடித்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி கமலுக்கு தேசிய விருது கிடைத்த நாயகன் படத்திற்கு ஆங்கில Sub Titles எழுதியவர்தான் கந்தையா. இந்தப்படத்தை அவுஸ்திரேலிய தேசிய தொலைக்காட்சி SBS பலதடவைகள் ஒளிபரப்பியிருக்கிறது.

கலாநிதி கந்தையா எழுதியிருக்கும் சில நூல்கள் அவுஸ்திரேலியா பற்றி தமிழில் தெரிந்துகொள்ள ஆசைப்படும் பல வாசகர்களுக்கு சிறந்த ஆவணங்களாகத்திகழுகின்றன. கங்காருநாட்டில் தமிழரும் தமிழும் என்ற நூல் இங்குள்ள தமிழ் சமூக அமைப்புகள் மற்றும் கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுக்கும் அமைப்புகள், ஊடகங்கள் தொடர்பான விரிவான பதிவுகளைக்கொண்டது..
புலம் பெயர்ந்த பின்பு தனது அயராத இயக்கத்தின் ஊடாக அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு பயனளித்தவர் கந்தையா. அவுஸ்திரேலியாவில் தமிழ் சமூகத்தில் மொழிபெயர்ப்புத்துறைக்கும் ஆவணப்படுத்தல் பணிகளுக்கும் முக்கியமானது
பத்திரிகைகள் சமூகத்தின் நிகழ்வுகளை தொகுக்கின்றன. அத்துடன் எழுத்தில் இருப்பதால் காலத்தால் அழியாதவை. இந்த விடயத்தில் உதயம் விட்டுச் சென்ற வெற்றிடம் அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தில் இன்னும் நிரப்பப்படவில்லை. புத்தகங்கள் மூலமாக சமூகத்தை ஆவணப்படுத்திய கலாநிதி கந்தையா மரணமானது பாரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது

கலாநிதி கந்தையா குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் அதற்கும் அப்பால் சிட்னி தமிழ் சமூகத்துக்கு மட்டுமல்ல புதிதாக வந்து குடியேறிய இலங்கைத் தமிழரைப் பற்றி பல தொகுப்புகளை செய்திருக்கிறார். கல்வி சார்ந்த பணிகளில் மற்றும் மொழிபெயர்ப்புகளிலும் ஆவணங்களை தொகுப்பதிலும் ஈடுபட்டவர். சமூகத்தில் வரலாறை தொகுப்பது என்பது பெரிய விடயம். அந்த விடயத்தில் மொத்தமான தமிழ் சமூகமே பின் தங்கியுள்ளது. இலங்கை சிங்கள மக்களிடம் 2500 வருடங்களாக எழுதப்பட்ட சரித்திரம் உண்டு. அதை புத்த பிக்குகள் செய்தார்கள். ஆனால் இந்தியவிலோ இலங்கையிலோ அப்படியான வரலாறு எழுதப்படவில்லை. ஆனால் நாம் எழுதாத வரலாறை எடுத்து கல்தோன்றி மண் தோன்றாத காலத்துக் குடி மற்றும் ஆண்ட குடி — என நீட்டி முழக்குகிறோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: