நடேசன்
நாம் ஒவ்வொருவரும் தாய் தந்தை மனைவி ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் என வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். இதை விட எனது பிறந்த நாடு, அடைக்கலம் கொடுத்த நாடு எனவும் பட்டியல் நீள்கிறது.
இதைவிட எமது புலன்களுக்குத் தெரியாமல், எமது சாதாரண உணர்வுகள் அறியாமல் மனித குலத்தின் மூதாதையர் ஒவ்வொரு துறையிலும் எமக்கு ஏணியாக இருந்திருக்கிறார்கள். எம்மை அறியாமல் அவர்களின் தோள்களில் தொற்றிக்கொண்டு வலம் வருகிறோம்.
எனது வாழ்க்கையில் நான் சந்திக்காமல், பார்த்திராமல் கடமைப்பட்டு இருக்கும் கதை இங்கே…
நான் கடமைப்பட்ட அந்தப் பெண் பிரபல விஞ்ஞானி. பெயர் மில்ரெட் ரெப்ஸ் ரொக்(Mildred Rebstock). அமெரிக்காவில் மிச்சிக்கனில் வாழ்ந்த அந்த பெண்ணுக்கும் எனக்கும் என்ன தொடர்பு?
அவுஸ்திரேலியாவில் ஆங்கிலப்பத்திரிகையை வாசிக்கும் போது நான் புகழடைந்தவர்களின் மரணத்தை அறிவிக்கும் பகுதியை வாசிப்பது வழக்கம். அதில் பிரபலமானவர்களை விட சாதனையாளர்கள் மரணிக்கும் போது அவர்களைப் பற்றிய விபரங்களை எழுதியிருப்பார்கள். பல சாதனையாளர்களைப்பற்றி அவர்கள் மரணித்த பின்புதான் அந்த பகுதியை வாசித்து அறிந்திருக்கிறேன்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு அமெரிக்கப் பெண்ணின் மரணத்தை அதில் அறிவித்திருந்தார்கள். அதிலும் மருத்துவம் என்ற சிறிய தலையங்கத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்டிருந்ததால் அதை வாசித்தேன். 91 வயதில் இறந்திருந்த அந்த அமெரிக்கப் பெண்ணுக்கு என் மனதளவில் நன்றி சொல்லிக்கொண்டேன்.
குளோரோமெசிரின் என்ற அன்ரிபயரிக் ஆரம்பத்தில் நுண்ணுயிரான பக்டீரியாவில் இருந்து தயாரிக்கப்பட்டது. மிகக் குறைவாகவே பெறப்பட்ட இந்த அன்ரிபயரிக் தைபோயிட் நோய்க்கு மருந்தானது. இந்த மருந்தை பெருமளவில் செயற்கையாக தயாரிக்க பாக்-டேவிஸ் (Park –Davis) என்ற கம்பனிக்கு உதவியது அங்கு விஞஞானியாக வேலை செய்து வந்து மில்ரெட் ரெப்ஸ்ரொக் ((Mildred Rebstock) என்றபெண்ணாவார். செயற்கை முறையில் பெருமளவு தயாரிக்கப்பட்ட நுண்ணுயிர் கொல்லி இந்த குளோரோபனிக்கலாகும்.
இந்த விஞ்ஞானிக்கு விசேட பரிசு அவரது சாதனைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஹரி ருமனால் (Harry Truman ) வழங்கப்பட்டது. மருத்துவத்தில் மட்டுமல்ல இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. அந்தக் காலத்தில் மிக குறைவான பெண்களே விஞ்ஞானிகளாக இருந்தார்கள். 1950 ஆம் ஆண்டுகளில் உலகில் விஞ்ஞானிகளில் பெண்களின் வீதம் மூன்றே சதவீதமாகும்
இந்த குளோரோமைசின் ஆரம்பத்தில் அதாவது 67ஆம் ஆண்டுவரையும் பல வியாதிகளின் மருந்துவத்துக்கு பயன்பட்டாலும், பின்பு இரத்தத்தில் சோகையை உருவாக்குவதால் தைபோயிட்டுக்கும் மட்டுமே பாவிக்கப்பட்டது.
தற்பொழுது தைபோயிட்டுக்கும் சிறந்த மருந்துகள் வந்துவிட்டன. மிருகவைத்தியத்தில் கூட காது நரம்பை பாதிப்பதால் விலத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாக்-டேவிஸ்(Park-Davis); பைசர் என்ற மருந்து கம்பனியால் (Pfizer))சுவீகரிக்கப்பட்டது
என்னைப் பொறுத்தவரை நான் உயிர் வாழ்வதற்கு காரணமாக இந்த குளோபனிக்கல் இருந்ததின் மூலம் இந்தப் பெண் விஞ்ஞானியை நினைவு கூறவிரும்புகிறேன்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் விடுதியில் சைவ உணவு மட்டும்தான் கிடைக்கும். தீவுப்பகுதிகளில் மீன், நண்டு, இறால் என சாகர புஸ்பங்களை உண்டு வாழ்ந்த எங்களது பொச்சத்தை எப்படி தீர்ப்பது?
அசைவ உணவிற்கான ஏக்கத்தைத்தீர்க்க ஒரே வழியாக இருந்தது விடுதி அதிபரின் சிக்கன கொள்கையின் விளைவால் யாழ்ப்பாண பழைய மார்க்கட்டில் மலிவு விலையில் வேண்டப்படும் மரக்கறிகளான வெண்டிக்காய், கத்தரிக்காயின் உள்ளே உள்ள புழுக்களை உண்பது மூலமே தீர்த்துக் கொள்ள முடியும்.
ஒரு இரு நாட்களில் கத்தரிக்காய் பால் கறியில் எலிகள் விழுந்து எங்கள் பொச்சத்தை தீர்க்கும். ஆனால் என்ன, எலி மயிர் பார்க்க அருவருப்பானதால் சாப்பாட்டை தூக்கி எறிந்து விடுவோம்.
இதனால் வார இறுதியில் ஐந்து லாம்பு சந்திக்;கு அருகில் உள்ள ஹமிதியா ஹோட்டல் என நாமகரணம் சூட்டப்பட்டு எங்களைப் பொறுத்த வரையில் மொக்கங்கடை என்ற உணவகத்திற்கு செல்வோம். இந்தப் பழக்கம் விடுதியை விட்டுச் சென்ற பின்னும் நீடித்தது. புட்டும் மாட்டுக் குருமாவும் நாக்கில் எச்சியூற வைக்கும். பிஸ்த்தா என்ற மாட்டு இறைச்சித்துண்டு மிக அருமையாக இருக்கும். விலை விபரமும் எங்கள் கைக் காசுக்கு அடக்கமாக இருக்கும் .
பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை எடுத்த பின்பு நண்பர்கள் சிலரோடு சென்று ஹமிதியா ஹோட்டலில் சாப்பிட்ட போது எனது அபிமான பிஸ்த்தா பரிமாறப்பட்டது. அப்பொழுதே அதை கடிக்கும் போது சிலந்தி பின்னிய நூல் போல் இழுபட்டது. பழைய இறைச்சி என சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் ஆகாமியம் விட்டு வைக்கவில்லை.
சரியாக 7 நாட்களுக்குப் பின் சல்மனெல்லா என்ற அழகிய பெயரைக்கொண்ட பக்ரீரியாவால் ஏற்படும் தைபோயிட்டு (நெருப்புக்காய்ச்சல்) நோய் என்னைத் தாக்கியது.
இரண்டு கிழமை வைத்தியசாலையில் இருந்து மிகவும் கஸ்டப்பட்டேன். சமைத்தவன் பின்பக்கத்தில் கையை வைத்து விட்டு , கையை கழுவாமல் அதே கையால் மசாலா தடவியதால் வந்த வினை என அக்காலத்திலே எனக்கு புரிந்துவிட்டது.
என்பு தோல் போன்ற உடல் என அந்தக் காலத்தில் சமயபாடம் படிப்பித்த வாத்தியாரின் சொல்லுக்கு ஏற்ற படிமமாக வெளிவந்தேன். என் உடலில் இருந்த தசை, கொழுப்பு என்ற பகுதிகள் என்னிடம் சொல்லிக்கொள்ளாமல் மறைந்துவிட்டன. தலைமயிர் கத்தையாக வசந்த காலத்து டப்ரடோர் நாயின் உடல் மயிர்போல் கையோடு வந்தது, உடல்நிறையில் 22வீதம் விடைபெற்று வெளியேறியபடியால் ”ஓமகுச்சி” போல் வெளிவந்தேன்.
அக்காலத்தில் ஓட்டுமடத்தில் டாக்டர் கங்காதரனின் வைத்தியசாலையில் குளோரோமைசிட்டினால் உயிர்பிழைத்தேன்
தைபோயிட்டு வருவதற்கு சிலமாதத்துக்கு முன்பு காதல் வயப்பட்டு காதலியை தேடி இருந்தேன். வைத்தியசாலையில் இருந்து வந்த உடன் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் ஒருவரும் இல்லாத வேளை பார்த்து துவிசக்கரவண்டியை எடுத்துக் கொண்டு இரண்டு கிலோமீட்டரில் ஒரு ரியுசன் வகுப்பில் படிக்கும் அவரை தேடிச் சென்றேன்.
இரண்டு கிலோமீட்டரை தாண்டுவதற்குள் 16தடவைகள் வண்டியை நிறுத்தி இளைப்பாறினேன். இந்தத் தூரத்தை துவிச்சக்கரவண்டியில் செல்ல எடுத்தநேரம் 45 நிமிடமாகும்.
வண்டியில் செல்லும் போது என் காதலி என்னை அடையாளம் காண்பாரா?
சில மாதங்கள் மட்டுமே ஆன புதிய காதலானதால் எனது காதலியின் மனம் மாறிவிடுமா?
நான்மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவேனா?
என பல கேள்விகள் குமிழி இட்டாலும் அந்தக்காலத்திலே தன்னம்பிக்கை சிறிது அதிகமாக இருந்தபடியால் அவளைக் காணச் சென்றேன். அவரது முகத்தில் என்னைப்பார்த்ததும் வந்த சிரிப்பை பார்த்த போதுதான் எனது மனம் ஆறுதல் அடைந்தது . சல்மனல்லாவால் என் உயிரை எடுக்க முடியவில்லை காதலையும் எனது பதினெட்டு வயதில் தோற்கடிக்க முடியவில்லை.
இப்பொழுது தெரிகிறதா அந்த குளோரோபனிக்கோலைத் தயாரித்த அந்த பெண் விஞ்ஞானி; எனக்கு எவ்வளவு முக்கியமாக இருந்திருக்கிறார் என்பது.
மறுமொழியொன்றை இடுங்கள்