கோட்பாடுகளினால் படைப்பாளியின் கழுத்தை இறுக்கவேண்டாம்” நடேசன் – அவுஸ்திரேலியா


(இலங்கையில் 2011 நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை)

மற்றவர்களைப் போல் இறைவன் என்னைப் படைத்தது தமிழ் செய்ய என சொல்லமுடியாதவன் நான். இறை நம்பிக்கை அற்றவனாக மிருகவைத்திய தொழிலை செய்பவன். .நண்பர்கள் முருகபூபதி ,எஸ்.பொ ஆகியோரின் நட்பால் தமிழ் எழுத கற்றுக் கொண்டவன்

தற்காலத்தில் நாவல், சிறுகதை, கவிதை, ஆகிய துறைகளில் ஈழத்து இலக்கியங்கள் உலக மட்டத்தில் எங்கு நிற்கின்றன என்ற கேள்விக்கு பதில் இலகுவானது அல்ல. மிக மிகக் கடினமானவை. சில கோடுகள் மட்டுமே என் போன்ற இலக்கிய வாசகனால் இடமுடியும்.

இலக்கிய வடிவங்கள் ஒரு சமூகத்தின் அழகுணர்வை பிரதிபலிப்பவை. ஓவ்வொரு சமூகத்திற்கும் இவை வேறுபடும். இதில் போட்டி தேவையில்லை. அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் மொழி ஓவிய வடிவங்களை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டியதில்லை. திறந்த வெளிகளில் கூட்டமாக உறங்குவதால் ஆதிவாசிகள் இரவை எட்டு பிரிவாகப் பிரித்து அதற்கு பெயரிடப்பட்டது அவர்களின் மொழியில்.

நாம் தற்காலத்தில் உலக இலக்கியம் என பலர் கருதுவது ஐரோப்பிய இலக்கிய வரலாறே. .இதில் ரூஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய இலக்கியங்கள் முன்னிலை வகிக்கின்றன.   இருபதுகளில் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க மற்றும் அமெரிக்க இலக்கிய வடிவங்கள் இணைந்து செல்கின்றன.

ஐரோப்பிய இலக்கிய மறுமலர்ச்சிக்கு,  ரோமன் கத்தோலிக்க கோட்பாடு பலவீனமடைந்தது முக்கிய காரணமாகும். ருஷ்யாவில் உருவாகிய சிறந்த படைப்புகள் ருஷ்ய புரட்சிக்கு முன்னானவை என்பதையும் கவனத்தில் எடுத்தால் கோட்பாடுகள்,  கருத்தியல்கள் எப்பொழுதும் கலை இலக்கிய வடிவங்களின் கழுத்தை நெரிப்பனவாக இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் முன்காலப்பகுதியில் கம்யூனிசத்தின் கோட்பாடுகளை எதிர்த்து படைத்தவைதான் ஜோர்ஜ் ஓர்வெல்லின் விலங்குப்பண்ணை மற்றும் 1984 என்பன என்பதை நினைவு கூரலாம்

கலை இலக்கிய வெளிப்பாட்டை நசிப்பது கம்யூனிச கத்தோலிக்க கோட்பாடுகள் மட்டுமல்ல. பிராமணீயம்,  இந்துத்துவம்; இஸ்லாமிய அடிப்படை வாதம் போன்றவையும் ஆகும். இவை கலை இலக்கியத்திற்கு கைவிலங்கு போடுகின்றன.

இந்தியாவில் விளாடிமீர் நபகோவின் லொலிராவை உருவாக்க முடியாது. அதேபோல் லேடி சட்டர்லி லவ்வரை ஈரானில் படைத்திருக்க முடியாது என்பது எனது கருத்து.

தமிழ் இலக்கியத்தில் கவிதைகள் உணர்வுகளை மையப்படுத்துபவை. கவிதை என்பது எமது கதை சொல்லும் மொழியாக காலம் காலமாக இருந்திருக்கிறது. அவை உச்சத்தை தொட்டிருப்பதாக இலக்கிய முன்னோர்களால் அறியப்பட்டிருப்பதாலும் எனது கவிதை அறிவு சொற்பமானதால் மற்றவர்களது கருத்துகளை கடன் வாங்குகிறேன்.

சிறுகதை நாவல் என்பன எமக்கு பாரம்பரியமானவையல்ல . மேற்கு நாடுகளில் இருந்து நாம் பெற்றவை.  தமிழில், தமிழ்நாட்டு பிராமணீய மூடுபனியை உடைத்துக்கொண்டு தற்போது பல நாவல்கள், சிறுகதைகள் வந்து கொண்டிருக்கின்றன. பல நாவல்களும் குறிப்பிடத்தக்கதாக உள்ளன. முழுமையான நாவல் வாசிப்பு இல்லாததால்  பட்டியலாகச் சொல்ல முடியாத போதிலும் சமீபத்தில் என்னை மிகவும் பாதித்தது ஜெயமோகனின் ஏழாவது உலகம். யாரும் தொடாத பகுதியை யதாரத்தமாக வெளிக் கொண்டு வந்துள்ளார்.

நான் படித்த பல நல்ல தமிழ் நாவல்களில் 18ஆம் 19 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய நாவல்களின் அகவுணர்வுகளை  பிரதிபலிக்கம் தன்மை இருந்துள்ளன. இதைத் தழுவல் என கூறமுடியாது. ஆனால் பாதிப்பு என கூறலாம்.  சூழலை ஆழமாக கவனத்தில் கொண்டு படைக்கும் தன்மையை பல தமிழ்நாவல்களில் காண முடிவதில்லை. பிரதேசங்களை, பாதைகளை, இயற்கையின் பிரதிபலிப்பை கொண்டு வரும் அளவுக்கு பாத்திரத்தின் வெளிச்சூழல் பொருட்படுத்தப்படுவதில்லை.

தமிழ்நாவல்களில் தேவையற்ற அம்சமானது ஆடம்பரமான வார்த்தை பிரயோகம். கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் பரிசு பெற்றது தென் தமிழ்நாட்டு கிராமிய வாழ்க்கையை துல்லியமாக விமர்சிக்கிறது. என் மனதில் ஆழமாக பதிந்த ஒன்று. ஆனாலும் அந்த நாவலில் உள்ள வார்த்தைப் பிரயோகங்கள் அந்த நாவலின் தரத்தை குறைத்து விட்டதாக நான் கருதுகிறேன். தமிழர்களுக்கு வசனங்களை நீட்டி முழக்குவதில் அதிக விருப்பம். இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விரிவுரையாளர்கள் சிலர், அரசியல்வாதிகளை முன்னுதாரணமாக்கி ‘வாழ்த்தி வணங்கி’ விடைபெற்றார்கள். நன்றி என ஒரு வார்த்தையில் முடித்திருக்கலாம். திராவிட பாரம்பரியம் மொழியால் கயிறு திரித்து சாமானிய மக்களுக்கு அந்தக் கயிறைக் கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொண்டது.

இங்கே அப்படி என்ன தேவை இருக்கிறது?

மூன்றாவதாக நான் வைக்கும் குறைபாடு, ஈழத்து இலக்கியம் சம்பந்தமானது. ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற கடந்த 60 வருடங்களில் முதல் 30 வருடங்களில் முற்போக்கு, மார்க்சீயம் என வட்டம் போட்டுக் கொண்டு அந்த வட்டத்துக்குள் இலக்கிய வாதிகளை இலக்கியம் படைக்கச் சொன்னார்கள் சில பேராசிரியர்கள். அதை மீறியவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். இலக்கிய வாதிகள் அங்கீகாரத்துக்கு யாசிக்கும் யாசகர்கள் ஆக்கப்பட்டார்கள். பணம் இல்லாத ஈழத்து இலக்கியத்தில் இந்த அங்கீகாரம் இராஜமுத்திரையாகியது.

எனக்கு எந்த பேராசிரியர்களிடமும் காழ்ப்புணர்வு இல்லை. ஆனால் ஆலமரம், யூகலிப்ரஸ் மரங்களின் கீழ் புல் கூட வளர கஷ்டப்படும்.

அடுத்த முப்பது வருடங்கள் தமிழ் தேசிய கோட்பாடு ஈழத்தமிழ் இலக்கிய விதையை இடுக்கியாக நசுக்கியது. தமிழ் தேசியத்துக்காக எழுதாதவர்கள் எழுத்தாளர்கள் இல்லை என புறக்கணிக்கப்பட்டார்கள். .உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். அச்சத்துக்குள்ளானார்கள். இந்த நிலை வெளிநாடுகளில் கூட இருந்தது.

தமிழ் இலக்கியத்தின் மேல் தமிழ் தேசியம், செலுத்திய கட்டுப்பாடு இப் போது மறைந்தாலும் இதே போல் முற்போக்கு, மாக்சிசம் உலகத்தை விட்டு அகன்றாலும்  பேராசிரியர்களாலும் அவர்களது சீடர்களாலும் நிறுவனப் படுத்தப்பட்டு விட்டது போன்ற உணர்வு இந்த மாநாட்டில் எனக்கு ஏற்பட்டது.

மாநாட்டை எதிர்த்து அறிக்கை விட்ட பேராசிரியரே வாழ்த்து தெரிவிக்க அழைக்கப்பட்டதில்  இருந்து  ஒரு சில கல்விமான்கள் கோடு கிழிக்கும் செயலை இன்னமும் செய்யத் துடிப்பது தெரிகிறது.

நான் அவர்களுக்கு கூறுவது இலக்கியவாதிகளே இலக்கியத்தின் பிரம்மாக்கள். இலக்கியத்தின் மொழி, இலக்கணம் மற்றும் பிரதேச வழக்கு என்பதை அவர்களே தெரிவு செய்கிறார்கள். இலக்கியம் கோடுகள் ,கோட்பாடுகள் அற்ற வெளியில் படைக்கும் போதுதான் உச்சம் அடைகிறது.

படைப்பாளியின் படைப்பை விமர்சியுங்கள். ஆனால் இப்படித்தான் படைப்பு இருக்க வேண்டுமென்பது அதி பிரசங்கித்தனமானது மட்டுமல்ல படைப்பாளியின் மீது பிரயோகிக்கப்படும் கண்ணுக்குத் தெரியாத பாசிசக்கயிறுமாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: