பிரபாகரனுக்கு ஒரு முடிவுகட்டி எனது மக்களைக் காப்பாற்றியதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்


கலாநிதி: நோயல் நடேசன்

கோரிக்கைகளையும் காலக்கெடுவையும் முன்வைத்து அரசாங்கத்தை அச்சுறுத்துவதன் மூலம் தமிழ் தலைவர்கள் மீண்டும் ஒருமுறை பழைய தந்திரோபாயங்களில் ஈடுபடுகிறார்கள் போலத் தெரிகிறது.புதிதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.அது மூன்று நிபந்தனைகளை முன்வைத்திருப்பது மாத்திரமல்ல அரசாங்கம் அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலமாகிய 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்ற காலக்கெடுவையும் விதித்துள்ளது.

அது பேச்சு நடத்திய அரசாங்க தூதுக்குழுவிடம் முன்வைத்திருப்பது, அவர்கள், ரி.என்.ஏ யிடம் கீழ்காணும் விடயங்களுக்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எழுத்து மூலம் அளிக்க வேண்டும் என்று. அவையாவன:

(1)ஆட்சியின் கட்டமைப்பு

(2)மத்திய அரசாங்கத்தக்கும் மாகாண அரசாங்கத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் செயற்பாடுகள்

(3)வரிவிதிப்பு மற்றும் நிதியியல் அதிகாரப்பகிர்வு தொடர்பான சிக்கல்கள்

என்பனவாகும்.

இவைகள் பல சர்வதேச நாடுகளின் தலைநகரங்களில் நடந்த பேச்சுவார்த்தை பேரங்களில் எல்.ரீ.ரீ.ஈ யினர் பின்பற்றி தோற்றுப்போன திமிர்பிடித்த தந்திரங்கள். அது அவர்களை எங்கு கொண்டு சென்றது? மேலும் நான் கேட்க விரும்புவது, அரசாங்கம் ரி.என்.ஏயின் கோரிக்கைகளையும் காலக்கெடுவையும் பின்பற்ற மறுத்தால் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அவர்களிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கின்றனவா? அவர்கள் இந்தியாவுக்கு ஓடப் போகிறார்களா? 1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியதைப்போல மீண்டும் ஒருமுறை தமிழ் இளைஞர்கள் முதுகில் ஏறிச் சவாரி செய்யப் போகிறார்களா? அல்லது 60மற்றும் 70களில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் செய்ததைப்போல சத்தியாக்கிரகத்தை மேடையேற்ற திட்டம் தீட்டுகிறார்களா?

தனது சமூகத்தின் அனைத்து நலன்களிலும் அக்கறையுள்ள எந்தப் பொறுப்புள்ள தலைமைத்துவத்தின் கடமையானது, முன்யோசனையின்றி முட்டாள்தனமாக ஒரு செயலை செய்வதற்கு அவசரம் காட்டுவதற்கு முதல் கடந்த காலத்தை பின்திரும்பிப் பார்த்து அதில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுதந்திரம் பெற்ற காலம் முதற்கொண்டே தமிழ் அரசியல்வாதிகள் முன்யோசனையின்றி அதீத ஆர்வத்துடன் ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு நெருக்கடிக்குள் தலையை நுழைத்து தமிழ் சமூகத்தை பாரிய விலை கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளார்கள். நான் ஒருபோதும் சந்தித்திராத மோசமான சூதாட்டக்காரர்கள் இவர்கள்தான். இந்துமத இதிகாசமான மகாபாரதத்தில்கூட, தருமர் தனது மனைவி திரௌபதியை மட்டும்தான் பணயம் வைத்து சூதாடினார், ஆனால்  எங்களின் இந்த அரசியல்வாதிகளோ ஒவ்வொரு தமிழனின் உயிரையும்  பணயம் வைத்து சூதாடுகிறார்கள். அவர்களின் தவறான அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கை 1920ம் காலகட்டத்துக்கு பின்தள்ளியுள்ளது.

எங்கள் அரசியல்வாதிகளை மகிழ்வடையச் செய்ய முயன்று தமிழ்மக்கள் பட்ட அவலங்கள் போதாதா? பாராளுமன்ற அங்கத்தவர்களாகவும்,அமைச்சர்களாகவும்,மற்றும் பல்வேறு சிறிய நிருவாகங்களிலும் இருந்துகொண்டு அவர்கள் கொழுத்த காசோலைகளைப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்களை எமது மக்கள் பெறும் அதே வாய்ப்பை வழங்காமல் தங்களை விடுதலை வீரர்கள் எனப்பாசாங்கு செய்துகொண்டு நாளுக்குநாள் அவைகளை கண்டனம் செய்து வருகிறார்கள்.தமிழ்மக்களின் விடுதலையாளர் எனப் பறைசாற்றிக்கொண்டு பிரபாகரன் செய்ததையே சரியாக இவர்களும் செய்கிறார்கள்.

எந்த விடயமானாலும் சரி,வேலுப்பிள்ளை பிரபாகரனால் வழிநடத்தப்பட்ட  சிறப்பாக உருவாக்கப்பட்ட தமிழர்களின் முன்னணி எங்களை எங்கே கொண்டு சென்றது? அவரது கொடிய இராணுவ இயந்திரம்கூட தோல்வியடைந்தது என்றால் தமிழ்மக்களுக்கு ரி.என்.ஏ யினால் எதனை வினியோகிக்க முடியும்? ரி.என்.ஏயின் தலைமைப்பீடம் மற்றவர்களைக் காட்டிலும் இதனை நன்கறிந்திருக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ எனும் கொலை இயந்திரத்தின் பகுதியாகவும் பங்காகவும் இருந்து தமிழர்களின் ஏகப் பிரதிநிதியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலகளுக்கு கீழ்படிந்து நடந்தவர்கள்.

அவர்களது செயற்பாடுகள் சுட்டிக்காட்டுவது,தோற்றுப்போன கடந்தகால நிகழ்வுகளை விளங்கிக்கொள்ளும் அறிவு அவர்களுக்கு இல்லை என்பதையா அல்லது அவர்களும் பிரபாகரனைப்போல இதயமற்ற கொடியவர்கள் என்பதையா?

நான் ஒரு தமிழன் என்கிற வகையில் எருது எங்களது புனித சின்னம் என்பதை நானறிவேன். ஆனால் அதற்காக நாங்கள் எருதுகளைப்போல பழகிக்கொண்டு ஒரு  சீனப் பொருட்கள் விற்கும் கடைக்குள் வெறிகொண்டு ஓடி அங்குள்ள பொருட்களை அழித்து நாசமாக்கலாம் என்று கருத முடியாது. அரச எதிர்ப்பு கொள்கைகளாலோ அல்லது வன்முறைகளாலோ வெற்றிக்கான உத்தரவாதம் கிட்டாது என்கிற நிச்சயமற்றதான எதிர்காலத்தை நோக்கி விரைவதற்கு முன்னர், நாங்கள் ஆர அமர்ந்து எங்கள் கடந்தகாலத்தைப்பற்றி அசைபோடுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது.

கடந்த இரண்டு வருடமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எந்தவொரு உறுதியான அரசியல் தீர்வு யோசனையையும் முன்வைக்கவில்லை என்பது உண்மை. ஆனால் பொருளாதார முன்னேற்றத்தில் – இப்போது நாதியற்றிருக்கும் எமது மக்களுக்கு உண்மையாகவே வேண்டப்பட்ட முன்னேற்றம் – அவரும் அவரது அரசாங்கமும் மக்கள் தங்கள் அடிகளை மீண்டும் வேகமாக முன்னெடுத்து வைக்கத்தக்கதான வரலாற்று விகிதாசாரப்படியான பாரிய மறுவாழ்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீலங்காவுக்கு வருகைதரும் எந்தவொரு நபரும் நடைபெற்றுவரும் உட்கட்டமைப்பு வேலைகளின் அளவை தாங்களே காணமுடியும்.

என்னால் துணிகரமாச் சொல்லக்கூடியது, அது முன்னெப்போதுமிலாதளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது, மற்றும் எங்களது முதற்கடமை எங்கள் கடந்தகால மற்றும் நிகழ்காலத் தலைவர்களின் மடமையின் விளைவாக  அதளபாதாளத்தில் விழுந்து கிடக்கும் எமது மக்களை தூக்கி நிறுத்துவதற்காக அபிவிருத்தி மற்றும் மறுவாழ்வு வேலைகளுடன் ஒருமித்துச் செல்ல வேண்டியதே.எங்களின் பசிக்கு வேண்டிய சோறு கறிக்கு, முன்னே அரசியலை வைப்பதுதான் எங்களின் தோல்விக்கு காரணம்.

மகிந்த ராஜபக்ஸ தனது மரபுவழிச் சொத்தாக  60 வருட இனப்பிரச்சினையையும்,இரு பகுதியினரையும் திகில் மற்றும் பேரழிவிற்கு உள்ளாக்கிய 30 வருட பயங்கரவாதத்தையும் பெற்றுள்ளார். தவிரவும் தன்னுடன் பணியாற்றுவதற்காக மதிப்பு வாய்ந்த தமிழ் தலைவர் எவரையும் அவர் கொண்டிருக்கவில்லை. வன்முறையற்ற அரசியல் நீரோட்டத்தில் கலந்து நின்ற அனைத்து தமிழ் தலைவர்களையும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அழித்தொழித்து விட்டார்.கண்டிப்பாக தலைவர்கள் ஒரே இரவில் உருவாகிவிட மாட்டார்கள்.அவர்கள் மக்களின் விருப்பத்தின் மூலமாக வெளிப்படுவதற்கு,ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவர்கள் மக்களால் பரீட்சிக்ப்பட்டு மற்றும் முயற்சிக்கப்பட்டு வெளிவர வேண்டியுள்ளது.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ரி.என்.ஏ மற்றும் ஈபிடிபி உட்டபட தமிழ் அரசியலின் மாபெரும் தோல்வியையே வெளிக்காட்டியுள்ளது. தமிழ் தேசியத்தை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் நிலைநாட்டுவதன் மூலம் தமிழ்மக்கள் எதை அடையப் போகிறார்கள்? ரி.என்.ஏ மற்றும் ஈபிடிபி இடையிலான தெரிவானது இருமல் பெண்ணிற்கும் தும்மல் பெண்ணிற்கும் இடையே ஒரு பெண்ணைத் தெரிவு செய்வதைப் போல ஒன்று.

மானிட கௌரவமும் மற்றும் சுயமரியாதையும் உருவாவது வேலையின் மூலமாகவே ஆனால் பெரும்பாலான தமிழர்கள் வேலையற்று இருக்கிறார்கள்.அரசாங்கத்துடன் இணைவது மூலமாக தமிழ்மக்களுக்கு பலனுள்ள வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பு ரி.என்.ஏக்கு கிட்டியிருந்தது. வேலைகள், வீடுகள், உணவு, சுகாதாரம், கல்வி, என்பவைகள்தான் அவர்களது கௌரவத்தை நிலைநிறுத்துவதற்கு அவசியமான சில விடயங்கள். அரசியல் முக்கியத்துவம் அவர்களின் உயிர்களை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது.

மோதல் போக்கு மற்றும் இனவாத அரசியலை வெளிக்காட்டுவதற்கு வேண்டிய போதுமான விவேகத்தையும் முதிர்ச்சியையும் ரி.என்.ஏ யும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். சிங்களத் தலைமைத்துவங்களால் வழங்கப்பட்ட சகல வாய்ப்புகளையும் நாம் தவற விட்டிருக்கிறோம்.தமிழர்களுக்கு ஈழத்துக்கு சமமான ஒன்றை வழங்கிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கொன்றது யார்? எங்கள் தோல்விகளை – எங்கள் முட்டாள்தனமான தோல்விகளை – ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக  நாங்கள் தொடர்ந்தும் சிங்களத் தலைமைகளுடன் மோதல் போக்கினையும் மற்றும் குற்றச்சாட்டு கூறுவதையும் மேற்கொண்டு வருகிறோம். இது எங்களை எங்கு கொண்டுபோய் சேர்க்கும்?

மற்றைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதைப்பற்றி வாதாடுபவர்களையும் மற்றும் அரசாங்கத்தின் பரந்த முன்னேற்றமான பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு நல்குபவர்களையும் அரசாங்கத்தின் கைக்கூலிகள் எனக் குற்றம் சுமத்திக் கட்டிப் போடப்படுகிறது.அரசாங்கத்துடன் கைகோர்ப்பது மூலமாக எமது மக்களுக்கு நல்விளைவுகபை; பெறலாம் என நம்புபவர்களில் நானும் ஒருவன். இப்போது கிடைக்கக்கூடிய சாத்தியமான மாற்றீடு என்ன? எமது மக்களுக்கு உதவி செய்ய வேறுயார்தான் இருக்கிறார்கள்? எவ்வளவு தொகையான அரசியலால் அவர்கள் தினசரி தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ள முடியும்? ஜேன் வார இதழ் தெரிவித்திருப்பது,வருடம்தோறும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேகரித்திருப்பதாக.அந்தப் பணத்தைக்கொண்டு எமது மக்கள் தமிழ் பகுதிகளில் ஒரு சொர்க்கத்தையே நிருமாணித்திருக்கலாம். இந்தப் பணம் முழுவதும் எங்கே போனது? இப்போது ஏன் அந்தப் பணம் வருவதில்லை?

அவுஸ்திரேலியன் தமிழ் காங்கிரஸ் தனது 2010ம் வருட ஆண்டறிக்கையில் பொதுசனத் தொடர்புக்காக அது 86,000 டொலர்களைச் செலவிட்டதாக அறிவித்துள்ளது? எனவே அந்தச் செலவினால் அடைந்த பயன்தான் என்ன? ஒரு கடற்படைத் தளபதியை தூதுவராக நியமித்ததை அவர்கள் தடுத்து நிறுத்தினார்களா? அவுஸ்திரேலிய கிரிக்கட் குழுவினர் ஸ்ரீலங்காவில் விளையாடுவதை அவர்கள் தடுத்து நிறுத்தினாhகளா?

நான் தெரிந்து கொண்டது மிகவும் ஆக்கபூர்வமான வழியில் எமது மக்களுக்கு உதவக்கூடியது அரசாங்கத்தால் வழங்கப்படும் வசதிகள் ஊடாகவே என்று. போரினால் சோர்வடைந்து சகலதையும் இழந்துள்ள மக்களுக்கு உதவுவதற்காக எந்தப் பகுதியினரினதும் பின்துணையை பெறுவதற்காக எவ்வளவு தூரத்திற்கு இறங்கிச் செல்வதற்கும் நான் வெட்கப்படவில்லை. கவனிக்கப்படாத அரசியல் வாக்குறுதிகளால் விரக்தி அடைந்துள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக ஈழம் வரும்வரை காத்திருப்பதற்கு நான் ஒரு முட்டாளோ அல்லது கடின இதயம் கொண்டவனோ அல்ல. பிரபாகரன் திரும்பி வருவார் என்று பேசப்படும் இந்தக் கதைகள் யாவும் உருப்படியான விளைவுகள் எதுவுமின்றி உலகத்தை சுற்றிவரும் பிதா.எஸ.ஜே. இம்மானுவலை ஒரு வேலையில் வைத்திருக்க மட்டுமே உதவ முடியும்.

நடைமுறைக்கு உதவாத தமிழீழ நாடுகடந்த அரசாங்கம் மேற்கத்தைய தளங்களில் உள்ள வசதியான தமிழர்களுக்கு ஏராளமான வேலைகளையும் பணத்தையும் வழங்கி வருவது உண்மை. ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள ஏழை மக்களுக்கு அது எந்த வகையில் உதவியிருக்கிறது? மேற்கில் பரப்புரை நிகழ்த்தி வரும் புலிகள் சார்பான முகவர்கள் எங்கள் மக்களின் வயிற்றுக்கு உணவு போடுவதற்கு எவ்வளவு உதவிகளைச் செய்துள்ளார்கள்?

பிரபாகரனையும் அவரது புலிப் போராளிகளையும் இவ்வளவு சீக்கிரமாக தோல்வியடைய வைத்தது தவறு என்று எனது சிங்கள நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள். அரசாங்கம் போரை இவ்வளவு சீக்கிரமாக முடித்து வைத்திருக்கக்கூடாது என்றும் அவரைப் பின்தொடர்வதற்கு  ஒற்றைத் தமிழன்கூட இல்லாதவரை மேலும் மேலும் தமிழர்களை கொன்று குவித்தபடி இன்னுமொரு பத்து வருடங்களுக்கு தொடர அவரை அனுமதித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அவரை நீண்டகாலம் உயிர்வாழ விட்டிருந்தால் பிரச்சினை தன்னாலேயே தீர்ந்திருக்கும் ஏனெனில் தான் உயிர் பிழைப்பதற்காக இதர தமிழர்களின் உயிரைத் தியாகம் செய்யும்படி அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய அவரது கொடூரமான தந்திர உபாயமே அதை வெளிக்காட்டுகிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

அதற்கு எதிராக என்னால் வாதிக்க முடியாது ஏனென்றால் அதுதான் உண்மை. தவிரவும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் அவர்களின் சொந்தக் கணக்குகளின்படி பசுமையான வாழ்விடங்ளைத்தேடி மேற்குக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். மத்திய தர வகுப்பைச்சேர்ந்த தமிழர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஸ்ரீலங்காவைவிட்டு வெளியேறிவிட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈயும் மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இன்னும் 10 வருடங்களுக்கு உயிரோடிருந்தால் மீதியாக இருக்கும் மத்திய தர வகுப்பைச்சேர்ந்த தமிழர்களுக்கு என்ன நடந்திருக்கும்? யாழ்ப்பாண சமூகத்தினதும் மற்றும் கலாச்சாரத்தினதும் முதுகெலும்பாக அவர்கள்தான் இருந்து வந்துள்ளார்கள். அவர்கள் போனால் சமூகத்தின் அடித்தளமும் அவர்களோடு போய்விடும்.

சிங்கள இனம் சிறுபான்மை இனங்களை உள்வாங்கியிருப்பதற்காக அறியப்பட்ட திறந்த வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன.வரலாற்றின் உள்நோக்கி நீண்டதூரம் செல்ல நான் விரும்பவில்லை. சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் கோட்டே அரசன் தென்னிந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து அநேக வில்லாளர்களை நியமனம் செய்திருந்தான். அவர்கள் ஸ்ரீலங்காவின் தென்பகுதிக் கரையோரமாக குடியேறியிருந்தார்கள். நாளடைவில் அவர்கள் சிங்களப் பெண்களை விவாகம் செய்து இங்கேயே தங்கிவிட்டார்கள்.

தூத்துக்குடிப் பகுதியைச் சேர்ந்த பரவ இன மக்களும் நீர்கொழும்பு பகுதிக்கு 100 வருடங்களுக்கு முன்புதான் செட்டிமார்களுடன் சேர்ந்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் சிங்கள சமூகத்தின் ஒரு பகுதியாகி விட்டார்கள்.ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அது வித்தியாசமானது ஏனெனில் பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களுடன் ஒருங்கிணைவதற்கு அவர்களின் மதம் அவர்களைத் தடுக்கிறது. இதர சிறுபான்மையினரை உள்வாங்கி சிங்கள மக்கள் எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டு போகிறார்கள்.

பல – இன, பல – மொழி, பல – மத கலாச்சாரமுள்ள ஸ்ரீலங்காவையே நான் விரும்புகிறேன். பிரபாகரன் உயிரோடிருப்பாரானால் தமிழர்கள் நிலைத்திருக்கச் சாத்தியமான ஒரு சமூகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் பூச்சியமாகக் குறைந்திருக்கும்.ஒன்றில் அவர் தமிழ் இளைஞர்களை தன்னால் வெல்ல முடியாத ஒரு போருக்கு அனுப்பியிருப்பார் அல்லது அவர்களைத் தானே கொன்றிருப்பார்.

ஆகவே நான் இதை முடிக்கு முன்னர் சொல்ல விரும்புவது, பிரபாகரனுக்கு ஒரு முடிவுகட்டி எனது மக்களைக் காப்பாற்றியதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று.எங்கள் தமிழ்மக்கள் தாங்கள் உயிர்வாழ்வாழ்வதற்காக எந்த விலை கொடுத்தாவது சமாதானத்தைப் பெறவேண்டியுள்ளது.

தமிழில்:எஸ்.குமார் Courtesy-Thenee

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: