சிறுகதை: சலனங்களுக்கு வயதில்லை

காலை எட்டு மணியளவில் ஜெனிவாவில் ஒரு குறுக்குத் தெருவில் சம்பந்த மூர்த்தி நின்றுகொண்டிருந்தார். அந்தத் தெருவின் ஒரு மூலையில் ரூரிஸ்ட் ஆபீஸ் இருந்தது. அங்கே நின்றால் ‘நீங்கள் அல்ப்ஸ் மலைகளுக்கு செல்லும் வாகனத்தை பிடிக்கலாம்’ என ஏற்கனவே பஸ் ஸ்ராண்டில் இருந்த பெண் அரைகுறை ஆங்கிலத்தில் கூறி இருந்தாள். பிரான்ஸ்சும் ஆங்கிலமும் கலந்த அந்த பதிலில் சம்பந்த மூர்த்தி முடிந்தவரை ஆங்கிலத்தை பிரித்து எடுத்து புரிந்து கொண்டு தெருவைக் கண்டு பிடித்தது தன்னை ஒரு சாதனையாளனாக தனக்குள் மெச்சிக்கொண்டார். அவர் மட்டும்தான் அந்த இடத்தில் தனியாக நின்றுகொண்டிருந்தார். அந்த இடத்துக்கு முன்பாக உள்ள இத்தாலிய ரெஸ்ரோரண்டில் இரண்டு பெரிய மீசையுள்ளவர்கள் காலை உணவுக்காக கதவுகளை திறந்து கதிரைகளை தூக்கி அடுக்கிக் கொண்டிருந்தாரர்கள். அவர்களிடம் சென்று பேச முயற்சித்தாலும் அங்கும் சம்பந்த மூர்த்தியின் ஆங்கிலம் அவருக்கு கை கொடுத்தவில்லை.

சிறு வயதில் யாழ்பாணத்தில் பிரன்சிய மொழி படிக்க அலயனஸ் பிரான்ஸ் என்ற நிறுவனத்திற்கு ஒரு நாள் மட்டும் போய் விட்டு நிறுத்த்pக்கொணட தவறை நிதைது சம்பந்த மூர்த்தி கவலைப் பட்டுக்கொண்டார். ஐம்பது வயதுக்கு மேல் கவலைப்பட்டு என்னசெய்யமுடியும்? இலங்கையில் எஞ்ஜினியராக இருந்து ஆங்கிலம் பேசும் நாட்டுக்கு போகவேண்டும் என பிடிவாதமாக ஆவுஸ்திரேலியா வந்தாலும் இப்பொழுது வேலைசெய்யும் எஞ்ஜினியரிங் கம்பனி இருந்து சோலர் ரெக்னோலஜி சம்பந்தமான மகாநாட்டுக்கு ஜெனிவா வந்துள்ளார். மகாநாடு நேற்று முடிந்ததால் இன்று சனிக்கிழமை அல்ப்ஸ் மலைக்கு சுற்றுப்பயணம் போய் வந்து விடலாம் என நினைத்து ஏற்கனவே ரிக்கட்டைப் பெற்றுக்கொண்டு காத்து நிற்கிறார். இன்று இரவு அவுஸ்திரேலியாவில் நாளை இவரதுமனைவி வந்ததும் நாளை பாரிசுக்கு பிரயாணம் செய்வதற்குள் இந்த ஒரு நாள் பிரயாணம் அவசரமாக ஒழுங்கு செய்யப்பட்டது. ‘இந்த இடத்துக்கு அல்ப்ஸ் செல்லும் வான் வருகிறதா’ என அழகியஆங்கிலத்தில் வந்த குரலுக்குரியவரைத் திரும்பிப் பார்த்தார் சம்பந்த மூர்த்தி முப்பத்தைந்துக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட வயதான பெண் ஐரோப்பிய கோடைகால உடையில் சிறுகைப்பையை சுழற்றிபடி நின்று கொண்டிருந்தாள்

‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன’;.

‘நன்றி’

‘ரிக்கட் வாங்கிவிட்டீர்களா’

‘இல்லை’

‘சிறிது தூரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் ரிக்கட்டை வாங்குங்கள்.’

‘நான் வாங்கிவருகிறேன். என்னை விட்டு போய்விடாதீர்கள்? எனக் கூறிவிட்டு சம்பந்த மூர்த்தி தோளில் தனது கையால் சிறிது தட்டிவிட்டு ரூரிஸ்ட் பஸ் நிலயத்தை நோக்கி அவசரமாக நடந்ததாள்.

இவ்வளவு நேரமும் அவளை சாதாரணமாக பார்த்துக்கொண்டிருந்த சம்பந்தமூர்த்தியின் கவனத்தை தூண்டிவிட்டாள். ஐந்தரை அடிக்குமேல் உயரத்துடன் தலைமயிர் மங்கிய பொன்னிறம் அல்லது தாமிர நிறத்துடன் சில வெள்ளைமயிர்கள் சேர்ந்து இருந்தது.

தலைமயிர் பின் கழுத்துக்கு மேல் வெட்டப்பட்டு கழுத்தை மேலும் நீளமாக காட்டியது . மேக்கப் அற்று ஐரோப்பிய சம்மருக்கு உரிய இறுக்கமற்ற மேல்சட்டையுடன் முழங்கால் வரையான கீழ்பாவாடை. அலட்சியமான உடையலங்காரத்தை மீறி இயற்கையான உடலமைப்பு அவளை அழகியாக காட்டியது. காலில் போட்டிருந்த காலணி சாதாரணமாக தெருவில் நடப்பதற்கு போடுவது. அதிலும் குதிக்கால் சிறிது உயர்ந்து இருந்தது. அதிக கவனம் எடுக்காத உடை அலங்காரம் ஏதாவது பெரிய பதவி வகிப்பவளாக இருக்கலாம்.

ஆனால் எப்படி அல்ப்ஸ் மலைக்கு இந்த உடுப்புபில் வருகிறாள். நிச்சயமாக குதிக்கால் உயர்ந்த பாத அணி பொருத்தமில்லாதது. கையில் ஒரு சிறு கை பை மட்டும் இருந்ததால் இவளிடம் வேறு உடுப்பு இருக்கவில்லை. ஏதோ ஹோட்டலில் இருந்து கடைவீதிக்கு வருபவள் போல் அல்லவா வந்திருக்கிறாள்?.

இப்படி சம்பந்த மூர்த்தி நினைத்துக்கொண்டிருக்கும் போது ஒரு இந்தியர் வந்து சேர்ந்தார். அவரும் டெல்லியில் இருந்து ஏதோ சேர்ச்சுகளின் மகாநாட்டுக்கு வந்திருந்தவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது இந்த பெண் ரிக்கட்டை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்திருந்தாள். இதே நேரத்தில் வான் சாரதியும் வந்து விட்டார். இப்பொழுது மொத்தமாக ஐந்து பேர் அல்ப்ஸ் மலைக்கு அந்த வானில் பிரயாணத்துக்கு பதிவு செய்திருந்தார்கள். மற்றய இருவரில் ஒருவர் அமரிக்கர் மற்றவர் ஈரானை சேரந்தவர். நான்கு ஆண்களுடன் ஒரு பெண் ஏறுங்கள் என கூறினதும் சம்பந்த மூர்த்தி தனக்கு பக்கத்தில் நின்ற பெண் முதலாவதாக ஏறட்டும் என நினைத்து தயங்கினார்.

அந்தப்பெண் வண்டியின் பின் சீட்டில் ஏறிவிட்டு கையை நீட்டி சம்பந்த மூர்த்தியின் பையை வாங்கிய படி தனது அருகில் இருக்கும்படி அழைத்தாள். வண்டியின் பின்சீட்டுகள் சம்பந்த மூர்த்திக்கு பிடிப்பதில்லை. தலையை சுற்றும், அதுவும் மலையை நோக்கி செல்வது இந்தப் பிரயாணத்தில் வாந்தி வரக்கூடும் எனப் பயந்தாலும் பெண் ஒருத்தி தன் அருகில் வந்து உட்காரும்படி அழைப்பதை எப்படி மறுப்பது என்பதால் அவள் அருகே உட்காந்தார். முன்பாக உள்ள சீட்டுகளில் அமரிக்கரும் ஈரானியரும் அமர்ந்தனர். சாரதித்கு பக்கத்தில் இந்தியர் அமர்ந்து கொண்டார்.

எனது பெயர் நிக்கி. தென் ஆபிரிக்கா என்று தன்னை அறிமுகப்படுத்திவிட்டு தனது பையில் இருந்து விலைகூடிய லென்ஸ்சுகளுடன் நிக்கோன் கமராவை எடுத்தாள்.

‘நான் சம்பந்த மூர்த்தி. எஞ்ஜினியர். ஆவுஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறேன். நீங்கள் படம் எடுப்பவரா?’

‘இல்லை. நான் தொழில்சங்கத்தில் மருத்துவ பகுதியில் வேலை செய்கிறேன். பொழுது போக்காக படம் எடுக்கும் வேலையை செய்கிறேன’

‘இல்லை நான் ஒரு சிறிய நிக்கோன் வைத்திருக்கிறேன். அதை வெளியில் எடுக்க வெட்கமாக இருக்கிது’

‘சின்ன கமாராக்களால் நல்ல படம் எடுக்கலாம். எனது படங்களை நான் உங்களுக்கு ஈ மெயிலில் அனுப்புகிறேன்’;.

இந்த வேளையில் ஜெனிவா இருந்த பள்ளத்தாக்கை விட்டு வான் மலை அடிவாரத்தில் செல்லத் தொடங்கியது. அழகான பகுதிகளை சாரதி விபரிக்க தொடங்கினார். நிக்கியின் கமராவால் வானுக்குள் இருந்த படி கண்ணாடி வழியாக இயற்கை அன்னை தாராளமாக அள்ளித் தெளித்திருக்கும் கண்களை பறிக்கும் காட்சிகளை படம் எடுக்க தொடங்கியபோது பெரும்பாலான தடவைகள் சம்பந்த மூர்த்தியைத்தாண்டித்தான் எடுத்தாள். சம்பந்த மூர்த்தி ஒதுங்கி படமெடுக்கு வசதியாக இருந்தார். பலமுறை அவரது தோள்களில் கமராவை நிலைப்படுத்தி படங்கள் எடுத்தாள்.

உயரமான மலைகளின் அடிவாரத்துக்கு வந்ததும் வாகனம் நிறுத்தப்பட்டது. இயற்கையின் உபாதையை தணிப்பவர்களும் கால்களை நீட்டவிரும்புவர்களும் இறங்கினார்கள். சம்பந்த மூர்த்தி இறங்கி சில பழங்களை வேண்டிவந்து நிக்கியிடம் கொடுதுவிட்டு அருகில் நின்ற சாரதியிடம் ‘மலையின் உச்சியில் என்ன வெப்ப நிலையாக இருக்கும்?’

‘2-4 சென்ரிகிறேட்க்கு இடையில் இருக்கலாம்’

நிக்கி உங்கள் உடைகள் இந்தக் குளிரைத்தாங்கும் என நினைக்கிறீர்களா?’

அதைப்பற்றி நான் நினைக்கவில்லை. நேற்று முழுவதும் கொன்பரன்ஸ். எதுவும் யோசிக்காமல் படுத்தது விட்டு;. அவசரத்தில் எழும்பிவந்துவிட்டேன். மலை உச்சியில் உடுப்புகள் வாடகைக்கு எடுக்க முடியுமா? என திரும்பி சாரதியை கேட்டாள்

‘உடைகள் மற்றும பனி சப்பாத்துகளை வாடகைக்கு எடுக்கவேண்டிவரும். உங்கள் காலணி மலையேற உதவாது’ என கூறியபடி சிரித்தான்

‘நிக்கி என்னிடம் ஒரு காஸ்மீர் சுவட்டர் உள்ளது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லாவிடில் அதைத் தரமுடியும்’என்றார் சம்பந்த மூர்த்தி

‘நான் சந்தோசப்படுவேன்.’ என வாங்கி அணிந்து கொண்டாள்.

மீண்டும் வான் ஏறி மலையை நோக்கி பயணித்தது.வளைவானபாதை பச்சைபசேலென்று இருந்தது. இடைக்கிடைய அரிவிகளும்; குடி இருப்புகளும் அந்த பிரதேசத்தின் கண்ணுக்கும் கமராவுக்கும் காட்சி வடிவங்களாக்கியது. சம்பந்த மூர்த்தி பக்கம் பள்ளத்தாக்கானபடியால் நிக்கி சம்பந்த மூர்த்தியில் சாய்ந்தபடி படங்களாக எடுத்துக் கொண்டிருந்தாள்.பெண் உடலின் நெருக்கமான நிலையை உணரத் தொடங்கியபோது மலைப்பாதையின் வளைவுகள் சம்பந்த மூர்த்தி தலையை சுற்றத் தொடங்கியது.

‘நிக்கி எனக்கு தலை சுற்றுகிறது. இந்த வளைவுகளால் எதற்கும் கவனமாக இரு. சிலவேளை வாந்தி வரக்கூடும்’என்றார் சம்பந்த மூர்த்தி.

‘அதற்கென்ன இப்படியே குனிந்திரு’.என்று சொல்விட்டு சம்பந்த மூர்த்தி மேலாக படத்தை எடுத்துககொண்டிருந்தாள். இப்பொழுது அவளது முழங்கைகளை சம்பந்த மூர்த்தி முதுகில் பதித்து படத்தை எடுத்துக்கொண்டிருந்தாள்.

சம்பந்த மூர்த்திக்கு அவளுடன் அன்னியோன்னியமாக இருந்தது இன்பமான குறுகுறுப்பை அளித்த நேரத்தில் ஒருவித கூச்சத்தையும் அளித்ததுத்தது.

வாகனம் மலை அடிவாரத்தில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து மலை உச்சிக்கு கேபிள் காரில் சென்றார்கள். கேபிள்காரில் சிறிது விலகி நின்றார் சம்பந்த மூர்த்தி; ஆனால் நிக்கி தனது கைப்பையை சம்பந்த மூர்த்தியிடம் கொடுத்து விட்டு தூரத்தில் தெரிந்த பனிபடர்நத மலைசிகரங்களை படம் எடுததுக்கொண்டிருந்தாள. மலை உச்சிக்கு சென்றதும் சம்பந்த மூர்த்தியை காத்திருக்க சொல்லிவிட்டு பனிசப்பாத்துகளை வாடகைக்கு எடுக்கும் இடத்தில் மறைந்து திரும்பிய போது மற்றய மூவரும் சாரதியுடன் முன்னே சென்றுவிட்டனர்.

இப்பொழுது மலையேறும் இடத்தில் திடீரென வீசிய பனிப்புகாரால் மிகவும் சிறிய தூரம்தான் கண்களுக்க புலப்பட்டது. சம்பந்த மூர்த்திக்கு சாரதியின் பச்சை மேல்சட்டை அடையாளமாக இருந்தது. சம்பந்த மூர்த்தியின் கையை இறுக்கமாக பிடித்தபடி நிக்கி வந்தபோது ‘ஏதாவது பிரச்சனையா? நிக்கி என்றார்

‘இல்லை எனது கண்ணாடி மேல் பனிபடர்ந்து மறைக்கிறது. கண்களுக்கு போடும் லென்சை ஹோட்டலில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.’

‘மலையேற எந்த ஆயுத்தமும் இல்லாமல் வந்திருக்கிறீர்கள’;

‘நல்லவேளை உங்கள் உதவி கிடைத்து.’

‘நான் இல்லாமல் விட்டாலும் எந்த ஆணும் உங்களுக்கு உதவி செய்திருப்பார்கள்.’

சடப் நான் மேக்கப் கூடபோடாமல் வந்தாதீருக்கிறேன். இரண்டு ரீன் ஏஜ் பிள்ளைகளைப் பெற்றுள்ளேன். அப்படி இருந்தும் நீங்கள் சொல்வது இந்த குளிரைவிட புல்லரிக்க வைக்கிறது.

‘ நான் உங்கள்ளோடு தென் ஆபிரிக்கா வருவதாக தீர்மானித்துள்ளேன்’

‘ஆகா, ஆகா இப்படி பொய்கள் இந்த இடத்தில் சொல்வது எனக்கு பிடித்திருக்கு.’

இருவரும் மலையின் உச்சிக்கு வந்த போது எங்களை பார்த்தபடி மற்றயோர் சாரதியுடன்; நின்றார்கள்

சாரதி நகைசுவையாக ‘இருவரும் எங்களைவிட்டு பிரிந்து வீட்டீர்கள் என நினைத்துக்கொண்டு தென் ஆபிரிக்கா துரதராலயத்துக்கா இல்லை ஆவுஸ்திரேலியாவுக்கா அறிவிப்பது என யோசித்துக் கொண்டிருந்தோம்.

‘நிக்கியின் கண்களுக்கு லென்சு இல்லாத படியால் நான் நின்று கூட்டி வரவேண்டி இருந்தது.’

‘நான் எந்த ஆயுத்தமும் இல்லாது வந்து இவருக்கு பிரச்சனை கெர்டுக்கிறேன் என்றாள் நிக்கி

‘எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’

‘இங்கே வந்து பாருங்கள்’

சிறுகுழந்தைபோல் கைகளை ஆட்டி எல்லோரையும் அந்த இடத்துக்கு அழைத்தாள். நாங்கள் எல்லாரும் அந்த இடத்தை எட்டி பாரத்த போது அந்த பனிபடர்ந்த உச்சியில் சரிவாக ஒரு கருங்கல்லுப் பாறை நீட்சியாக இருந்தது. அதன் கூர்மையான முனையில உறை பனி படரமுடியவில்லை. வழுவழுப்பான பாறையாதலால் அதில் பனி தேங்கி நிற்க முடியவில்லை. அந்த முனையின பக்க வாட்டில் சிறு வெடிப்பு இருந்தது.அந்த வெடிப்பில் மலர்ச் செடி படர்ந்து அழகான ஊதா நிற மலர்களை ப+த்த படி அந்த பாறையின் முனையை ஆக்கிரமித்தபடி இருந்தது. எங்கும் உறைபனிபடர்ந்து வெண்மையான எந்த உயிரினமும் உறைந்து போகும் குளிரில் விடாப்பிடியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மலர் செடி வாழ்க்கைகையின் பிடிப்புக்கு ஒரு முன்னுதாரணமாக பாறை முனையில் வாழ்ந்து காட்டியது.

‘இது ஒரு வாழ்கையின் தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது’ என கூறி நானும் எனது சிறிய கமராவால் படம் எடுத்தார் சம்பந்த மூர்த்தி.

‘ஓவ்வொரு தற்கொலைப் போராளிகளையும் இங்கே கொண்டுவந்து இந்த மலர்செடியை காட்டவேண்டும’; என்றான் அந்த ஈரானியர்

‘நானும் அதைத்தான் நினைத்தேன் நண்பரே. அதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்றார் சம்பந்த மூர்த்தி.

‘இப்படியான வாழ்வுக்காகத்தான் நானும் இந்த பனிக்காலத்தில் ஒவ்வொரு நாளும் இந்த மலைக்கு வந்து போகிறேன்.வெயில்காலம் நான் மகனிடம் பிரேசில் சென்று விடுவேன். இப்பொழுது இந்த மலை உச்சியில் உள்ள இந்திய உணவுச்சாலைக்கு போவோம்’

மலைக்கு ஏறிப்போகும் போதே இந்திய உணவு பனிப்புகாரில் தவழ்ந்து எல்லோரினதும் மூக்கில் நூழைந்தது.

‘தண்டூரீ சிக்கினின் மணம்’ என்றான் எமது டெல்லிக்காரர். அமைதியாக வந்த கொண்டிருந்தவரது முகத்தில் சிரிப்பும் நடையில் உற்சாகமும் தெரிந்தது.

உணவுச்சாலை உச்சியில் இருந்தாலும் சகல வசதிகளுடனும் இருந்தது. இந்திய உணவுவகைகளுடன் ஐரோப்பிய உணவுகளும் இருந்தது. ஒவ்வொருவரும்; தங்களுக்கு பிடிதத்மான உணவுகளை தட்டில் போட்டுக்கொண்வந்ததும் மீண்டும் தற்கொலை போராளிகள் பற்றிய பேச்சு வந்தது.

‘எமது நாட்டில் முல்லாக்கள்தான் இதற்கு காரணம். மதத்தின் பெயரால் இது நடக்கிறது’ என்றார் ஈரானியர்.

மதம் மடடுமல்ல எங்கள் நாட்டில் இன விடுதலை என்று சொல்லிக்கொண்டு தற்கொலைப்போராளிகள் ஆகிறார்கள். தீவிரமான கோட்பாடுகள் கருத்தியல்கள் மனத்தில் புகுத்தப்படும் போது மனிதர்கள் வெறும் புள்ளிகளாக ஆக்கப்படுகிறார்கள்.தேசியவாதம் மார்க்சியம் மற்றும் மதங்கள் முக்கியத்துவப்படும்போது இந்த நிலை ஏற்படுகிறது.இந்தியாவில் சாதிக்காக அமரிக்காலில் நிறத்துக்காகவும் உயிர் கொடுக்கும் நிலை இருக்கிறது.’ என்றார் சம்பந்த மூர்த்தி

‘அமரிக்கா போன்ற நாடுகள் மற்றய சிறிய நாடுகளுடன் நடந்து கொள்ளும் முறைகளும் இதற்கு காரணம்’ என்றார் அமரிக்கர்

‘அரசியல் பேசி பிரயோசனம் இல்லை. எமது நாட்டில் எயிட்சைபற்றி நான் தொழிலாளர்களுடன் பேசினாலும் அரசியலாக்கப்படும்’ என விரக்தியுடன் சொன்னாள் நிக்கி

தென்னாபிரிக்காவில் எயிட்ஸ் அரசியலாக்கப்படுவதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன என்றார்; அமரிக்கர்.

‘உலக காற்பந்து போட்டி தென்னாபிரிக்காவில் நடந்ததால் எயிட்ஸ் கூடி இருக்குமா?’ என்றார் ஈரானியர்

‘நீங்களே அனுமானித்துக்கொள்ளுங்கள்’ என கண்ணை சுழட்டினாள்

மலையின் கீழே இறங்கி வரும்போது பனிச்சரிவில் சறுக்கும் இடம்வந்தது பிளாஸ்ரிக்போட்டை எடுத்துக்கொண்டு சிறு குழந்தைகள் போல் எல்லேரும் சறுக்கினர்கள் . நாய்கள் இழுக்கும் பனிசறுக்கு வண்டியில் சம்பந்த மூர்த்தி நிக்கியுடம் சென்றார். ‘பலநாட்களுக்கு பிறகு இன்றுதான் சந்தோசமாக இருக்கிறேன் என நிக்கி சொன்னதும் திடுக்கிட்டு திரும்பினார் சம்பந்த மூர்த்தி.

‘என்ன இப்படிச்சொல்கிறீர்கள்’

‘நான் அதை பேசி இந்த அழகிய சூழலை பாதிப்படைய விரும்பவில்லை.’

நாய் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டியின் பயணம் முடிவுக்கு வந்தது.நாய்களுடன் சிறிது பேசிவிட்டு வந்தாள். வண்டி இழுத்த களைப்பில்அந்த நாய்கள் எவரையும் பொருட்படுத்தவில்லை. ஒரு கடுவன் எல்லோரையும் பார்த்து முறுகியது

மலைப்பிரயாணம் முடிவுக்கு வந்து வானில் ஏறியதும் மீண்டும் ஜெனிவா நோக்கி பிரயாணம் தொடங்கியது. எதுவும் பேசாத நிக்கி தனது காமராவுககு ஓய்வுகொடுத்து விட்டு தனது போனில் சிறு தகவலை அனுப்பிக்கொhண்டிருந்தாள்.

‘இன்று எனது மூத்த மகனுக்கு பரீச்சை இருக்கிறது. கவனமாக செய்யும்படி தகவல் அனுப்பினேன்.’

அப்பொழுது தான் சம்பந்த மூர்த்திக்கு வீட்டுக்கு தகவலை அனுப்புவதற்கு நினைவு வந்தது. அவரது மனைவி இன்று இரவு ஜெனிவா ஏர் போட் வர இருப்பதும் நினைவுக்கு வந்துது.

‘நீங்கள் சொல்லியதும்தான் எனக்கு செய்யவேண்டிய விடயம் நினைவுக்கு வந்தது. இன்று நள்ளிரவுக்கு எனது மனைவியை ஏர் போட்டில் சந்திக்கவேண்டும்.’

‘ஆண்களே இப்படித்தான்’ என சிரித்தாள்

சம்பந்த மூர்த்தி சிரித்து விட்டு எதுவும் பேசவில்லை.

மிகுதிப் பிரயாணம். அமைதியாக தொடர்ந்து றைவர் மட்டும் சுவிட்சலாந்தைப் பற்றிய விபரங்களை சொல்லிக்கொண்டுவந்தார்

இறங்கியதும் ஒவ்வொருவரும் விடைகொடுத்து பிரியும் போது நிக்கி சம்பந்த மூர்த்தியின் சுவட்டருக்கு ‘நன்றி’ என கொண்டு வந்து தந்தாள். அப்பொழுது பக்கத்தில் உள்ள கபேயில் ‘காப்பி குடிப்போமா’ என கேட்டுவிட்டு அவளது அனுமதியை எதிர்பார்காமல் பக்கதிலே இருந்த கபேயில் சென்று சம்பந்த மூர்த்தி அமர்ந்தார்.

‘நான் சொன்ன ஒரு வார்தையால் திரும்பி வரும் பயணம் உங்களுக்கு உற்;சாகம் இல்லாமல் போய்விட்டது. எனது பிழை. நீங்கள் மிகவும் மென்மையானவர் போல் இருக்கிறது.’

‘எதைச் சொல்கிறீர்கள்.’

‘ஆண்கள் எல்லாரும் அப்படித்தான் என்றதை’

‘அந்த வசனம் என்னை பாதிக்கவில்லை.’

‘’பின்பு என்ன?’

‘நீங்கள் பலகாலத்துக்கப் பிறகு சந்தோசமாக இருக்கிறேன் என்றதுதான் என்னைப்பாதித்தது.’

வந்த காபியை எடுக்கப்போன நிக்கியின் முகத்தில் இருள் கவிந்தது

‘மன்னிக்கவேண்டும. நீங்கள் கேட்டதால் சொன்னேன்.’

‘அது பற்றியென்ன. என்னை அறிந்திராத ஒர் மனிதரான நீங்கள் எனக்கு இன்று சகல உதவியும் செய்தீர்கள். அதை மதித்து நான் கூறியவிடயம்.’எனக் கூறும்போது கணகள் கலங்கியது.

‘பிளீஸ்’

‘நான் ஏன் உங்களுக்கு பொய் சொல்ல வேண்டும். எனது கதை ஒரு சோகக் கதை. அதை சொல்லி உங்களை பாதிக்க வேண்டாமென நினைத்தேன். ஆனாலும் சொல்லுவது எனக்கு ஆறுதல். எனது கணவர் தென் ஆபிரிக்க விமானத்தில் பைலட்டாக வேலை செய்கிறார்.
இரண்டு பையன்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடன் கட்டிலில் படுப்பதை தவிர்த்துக்கொண்டுவந்தார். இதைப் பொறுக்கமுடியாமல் நான் அவரை எதிர்வு கொண்டபோது தனக்கு AIDS இருப்பதாக கூறினார்.

இது எப்படி வந்தது எனக்கேட்டபோது ஆண் தொடர்பால் வந்ததாக கூறினார். எனக்கு இதைக்தாங்க முடியவில்லை. என் பாதிப்பு இரண்டுவிதமானது.நான் காதலித்து மணந்தவர் ஆண்களுடன் படுப்பவர் இத்துடன் நான் எயிட்ஸ பரவலை தொழிலாளர் மத்தியில் பரவாமல் திட்ங்கள் போடும் திணைக்களத்து உயர் அதிகாரி. நான் விவாக விடுப்பு எடுக்கும் போது இவைகளை வெளிப்படையாக சொல்லவேண்டும். இதனால் மனத்தில் ஒரு பூகம்பத்தை அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறேன். அல்ப்ஸ மலையில் இந்தவிடயத்தை சொல்லி இருந்தால் அந்த வெப்பம் பனியை உருக்கி பாரிய பனிசரிவை உருவாக்கிவிட்டிருக்கும்.’

‘உனது நிலையை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.’

‘நீங்கள் அருமையான மனிதர். நான் போகவேண்டும.’;

‘என்னுடன் உணவை அருந்தி விட்டு சென்றால் என்ன நிக்கி?

‘அது அபாயமானது. ஏற்கனவே உங்களை நான் விரும்பத் தொடங்கிவிட்டேன். இதை தொடரக்கூடாது என்பது எனது விருப்பம்’

எழுந்து கட்டியணைத்து கன்னத்தில் முத்தத்தை கொடுத்து விட்டு உதடுகளை விரலால் தொட்டு ‘ இந்த உதடுகளை இன்று வரும் உங்கள் மனைவிக்காக ஈரமாக வைத்திருங்கள்’ என அணைப்பில் பிரிந்து சென்றாள்

‘நிக்கி உன்னை வாழ்க்கையில் மறக்க முடியாது.’

‘உங்களையும்தான. ஏன் தெரியாமா?’

‘இல்லை’

‘எல்லா போட்டோக்களிலும் உங்கள் சுவட்டரைத்தான் அணிந்திருகிறேன்’ எனக் கூறிவிட்டு அந்த தெருவில் இருந்து காலையில் வந்த மதிரி மறைந்தாள்.

சம்பந்தமூர்த்தியின் சலனங்கள் அல்ப்ஸ் மலையில் உச்சியில் சந்தித்த பனிப்புகாரைப்போல் மெதுவாக விலகியது.

நன்றி -முகங்கள்- புலம்பெயர்ந்தோர் சிறுகதைத்தொகுப்பு- சர்வதேச எழுத்தாளர் மகாநாடு

uthayam@optusnet.com.au

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.