முதுமையின் எல்லை

நடேசன்

‘அம்மாவுக்கு அல்சைம்மேர் வியாதி வந்து விட்டது. நானும் எனது சகோதரியும் மாறி மாறி இரவில் அவரது வீட்டில் தங்கி இருக்கிறோம்.’
‘நான் இரண்டு கிழமைக்கு முன்பாகத்தானே ‘ஒலி’யை பார்க்க வீட்டுக்கு சென்றேன். என்னால் எதையும் கண்டு கொள்ள முடியவில்லை.

அம்மாவை எனக்கு எட்டு வருடங்களாக தெரியும்

‘அம்மா தன்னை வயோதிபர் இல்லத்துக்கு அனுப்பிவிடுவோம் என்ற பயத்தில் நோயை மறைப்பதில் கெட்டிக்காரி.’
எண்பது வயதான போலின் சான்லியின் இரண்டாவது மகள் லீசா. தாயின் நாயான ஒலியை என்னிடம் கொண்டுவந்தபோது எங்களுக்கு இடையில் நடைபெற்ற சம்பாசணை.

செல்லப்பிராணிகளை கொண்டு வருபவர்களின் சுக துக்கங்கள் எனது மனதிலும் கிணற்றில் சிறுகல்லை எறிந்தால் தோன்றும் நீர் வட்டம் போல் எண்ண அலைகளை ஏற்படுத்திவிடும். போலின் சான்னிலியைவிட தாக்கமான அலையை ஏற்படுத்தியது சிமித் குடும்பத்தின் கதை


ஏதாவது காரணத்தால் மூளையின் தொழிற்பாடு நின்றுவிட்டால் ஆரோக்கியமான உடலாக இருந்தாலும் எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போய்விடுகிறத. இந்த நிலை மிகவும் பரிதாபகரமானது. ஏனெனில் இவர்களில் பலர் இந்த காலகட்டத்தில் தங்கள் வாழ்க்கைத் துணைகளை இழந்து விடுகிறார்கள். அத்துடன் தங்களது சுதந்திரத்தை இழந்து உறவினர் நண்பர்கள் மற்றும் சமுகத்தின் ஆதரவில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள்

சோகிரடீஸ்(Socrates) இளைஞனாக இருக்கும் போது செபலஸ்(Cephalus) என்ற முதியவருடன் உரையாடியது ரிப்பபிளிக்கில்(The Repulic By PLATO) ) தரப்பட்டுள்ளது
செபலஸ்
~எனது உடலால் ஏற்படும் இன்ப உணர்வுகள்; குறைந்து போகும் இத்தருணத்தில் நான் உரையாடுவதற்கு ஆசைப்படுகிறேன்.|
சோக்கிரடீஸ்.

~நான் வயதானவர்களுடன் உரையாட ஆவலாக இருக்கிறேன். அவர்கள் நான் கடக்கப் போகும் பாதையை அவர்கள் ஏற்கனவே கடந்து வந்தவர்கள். அந்தப் பாதைகள் கரடு முரடானதா அல்லது இலகுவானதா என்பதை நான் அறிய விரும்புகிறேன். முதிர்வடைந்த நிலையில் இருப்பதால் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். முதுமை துன்பகரமானதா?|
சேபலஸ்

~வயதானவர்கள் ஒன்று கூடியதும் தங்களது இளமையின் நினைவுகளை சொல்லி ஏங்குகிறார்கள். தங்களது உறவினர்களைப் பற்றி ஏசுகிறார்கள்.; உண்மையில் நானும் அதையே செய்யவேண்டும்.. ஆனால் எனது அனுபவம் வித்தியாசமானது. முதுமையை அனுபவிப்பது. மனிதர்களின் தன்மையை பொறுத்தது. அது சுமையாக இருந்தாலும் அமைதியாக அனுபவிக்கக்கூடியது.
செபலஸ்ஸின் வார்த்தைகளில் உண்மை இருந்தாலும் பலருக்கு அமைதியாக அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பதில்லை.
—-

‘பெரிசுக்கு அறளை பேந்து விட்டது. அதுதான் அப்படி பேசுது’ என எங்கள் ஊரில் அடிக்கடி பேசக் கேட்டிருக்கிறேன். இந்த அறளையின் சரியான ஆங்கிலச் சொல் அல்லது நோயின்தன்மை என்ன என்பது பல்கலைக்கழகம் சென்ற பின்தான் தெரிய வந்தது. டிமென்சியா(Dementia) என்பது முளை சரியில்லை என்பதன் இலத்தீன் சொல்லாகும். இந்த டிமென்சியாவின் ஒருபகுதிதான் அல்சைமேர்(Alzheimer’s desease)) வியாதியாகும் . இந்த அல்சைமேரை பிரசித்தப் படுத்திய பெண் ஜனட் அர்கின்ஸ் (Janet Atkins)இவர் அமெரிக்காவில் டொக்டர் ஜக் கேர்வோகினின் (Dr. Jack Kevorkian) அனுசரணையில் தன்னை கருணைக்கொலை செய்து கொண்டவராவார்.

மூளையின் மேற்புறத்தில் ஏற்படும் படிவுகளால் மூளை நரம்புகள் இறந்து விடுவதால் இந்த அல்சைமர் நோய் ஏற்படுகிறது
—–
நான் கோப்பி லாற்றேயை அந்த சொப்பிங் சென்ரரில் உள்ள கோப்பிக்கடையில் வாங்கிக்கொண்டிருந்த போது ~இப்பொழுது ஒரு சிறிய நாயொன்றை வளர்க்க இருக்கிறோம்’ என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்த போது எனக்கு பரிச்சயமான திருமதி சிமித் நின்றார். மீண்டும் அவர் ~இனிமேல் எங்களுக்கு பெரிய நாய் கூடாது. சிறிய நாய்தான் வெளியே நடக்க கூட்டி செல்லும் போது இலகுவாக இருக்கும்.’ – என்றார்.

நான் அதை ஆமோதித்து ~உண்மைதான்’ என்றேன்.
எழுபது வயதான சிமித் தம்பதிகளிடம் பன்னிரண்டு வருடங்களாக ஒரு ஜிம்மி என்ற ஜெர்மன் செப்பேட் நாய் இருந்தது. ஆரம்பத்தில் அது என்னிடம் வரும் போது இடுப்புப் பகுதி முற்றாக விருத்தியடையாததால் ஏற்படும் HIP DISPLASIA நோயினால் பாதிப்படைந்திருந்தது. இந்த நோய் பல ஜெர்மன் செப்பேட் இனத்து நாய்களுக்கு உண்டு. இதற்கு இரண்டு வயதிலேயே வந்துவிட்டது. மற்ற நாய்களுக்கு பத்து வயதுக்கு மேல் வரும் மூட்டுவாதம் எனும் ஆத்திரயிற்றிஸ் இரண்டு வயதிலேயே வந்து விடும்.

இந்த சிமித் தம்பதிகள் விக்டோரியாவின் வங்கரட்டா விவசாய பிரதேசத்தில் இருந்து மெல்பனுக்கு குடிவந்தவர்கள் என்பதை அவர்கள் கொண்டு வந்த கோப்பில் இருந்து தெரிந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தில் அந்தக் காலத்தில் தம்பி எந்தப் பக்கம் என்பது போல் இந்த ஊரில் கேட்க முடியாது. அவர்கள் இருவருக்கும் எழுபது வயது இருக்கும். இருவரும் சாதாரண வெள்ளைக்கார அவுஸ்திரேலியர்களிலும் உயரம் குறைந்தவர்கள்.
இருவரும் கடந்த பத்து வருடங்களாக ஒன்றாகத்தான் அவர்களது நாயை கொண்டு வருவார்கள். இவர்களில் ஒரு விசித்திரம் என்னவென்றால் திருமதி சிமித் சரளமாக பேசுவார். ஆனால் திரு சிமித் சிரிப்புடன் நிறுத்திக்கொள்வார். தலை மொட்டையான சிறிய மனிதரான அவரது சிரிப்பில் ஒரு கவர்ச்சி இருந்தது. இந்த கவர்ச்சிதான் பலவருடங்களுக்கு முன் திருமதி சிமித் பால் ஈர்த்திருக்கலாம். அடிக்கடி தனது தலையை தடவிவிடும் மனரிசம் இவரிடம் இருந்தது.

கடந்த பத்து வருடங்களாக இந்த நாயின் முடக்குவாதம் வடக்கு நோக்கிச் சென்றது. என்னால் முடிந்தவரை மருத்துவம் செய்து பத்து வருடங்கள் வாழ்ந்தது பெரிய விடயம் என நினைக்கிறேன்
ஒரு நாள் காலையில் தொலைபேசி அழைப்பு வந்தது. ‘ஜிம்மி விழுந்து விட்டது. அதனால் எழும்ப முடியாது. வரமுடியுமா?”
நான் மதியம் அவர்களது வீட்டுக்குச் சென்ற போது வீட்டின் பின்பகுதியில் உள்ள தாழ்வாரத்தில் படுத்துக் கிடந்தது. பரிசோதித்தபோது கால்களை இழுத்து உடலை புரட்டி பார்க்கவேண்டியிருந்தது நாற்பத்திஐந்து கிலோ எடையுள்ள ஜிம்மியை புரட்டுவது சிரமமாக இருந்தது. எனது சிரமத்தைக் கண்டு, திருமதி சிமித் வந்து உதவி செய்தது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக என்னிடம் கேள்வியும் கேட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது எந்த உதவியும் செய்யாமல்; ஜிம்மியின் முகத்தை தடவியபடி கண்ணீர் விட்டார் திரு சிமித். நான் நின்ற அந்த பதினைந்து நிமிட நேரத்தில் எதுவித வார்த்தையும் அவரது வாயில் இருந்து வரவில்லை. குறைந்த பட்சம் அவரது கவர்ச்சியான சிரிப்பைக்கூட உதிர்க்க மறுத்துவிட்டார். இது ஒரு விதத்தில் எனக்கு புதினமாக இருந்தது. அதே நேரத்தில் அவர் விட்ட கண்ணீர்த் துளிகள் அந்த நாயின் முகத்தை நனைத்தன. ஜிம்மியின் மீது அவரது பாசத்தை பார்த்தபோது எனக்கு அனுதாபமாகவும் இருந்தது.

ஜிம்மிக்கு வழமையான முடக்கு வாதம். அதனால் எழும்ப முடியவில்லை எனக்கூறிவிட்டு ஒரு ஊசி மருந்தை செலுத்தினேன்.
இந்த ஊசி மருந்துக்கு இன்று இரவு எழும்பி நடந்தால் நாளை எனக்கு தகவல் கொடுங்கள். எழும்பாவிட்டால் இதற்கு மேல் நான் ஒன்றும் செய்யமுடியாது. ஜிம்மியை நாய்களின் சொர்க்கத்துக்கு அனுப்ப தயாராகவேண்டும் எனக் கூறிவிட்டு இப்படி சொன்னதற்கு என்னை மன்னிக்கவேண்டும்:  இதற்கு மேல் என்னால் எதுவும் செய்யமுடியாது என சொல்லியவாறு ஜிம்மியின் முகத்தில் ஆதரவாக தடவி விட்டு வெளியேறினேன்..
அடுத்த நாள் ஜிம்மி எழுந்து நடப்பதாக எனக்குத் தகவல் வந்தது.
—-
மூன்று மாதம் கடந்தபின்னர், நான் விடுமுறையில் சென்ற போது எனக்குப் பதிலாக வேலை செய்த எனது நண்பன் சிமித் குடும்பத்தினரது வீட்டுக்குச் சென்று ஜிம்மியை கருணைக் கொலை செய்ததாக எனது நர்ஸ் மூலம் அறிந்தேன். நான் எதிர்பாராத தகவலையும் அவளிடம் இருந்து அறிந்து கொண்டேன் அது என்னைத் திடுக்கிட வைத்தது.

கடந்த பதினைந்து வருடங்களாக அல்சைமர் நோயால் திரு. சிமித் பாதிக்கப்பட்டு சில வருடங்களாக அவரால் பேச முடியாது இருப்பதே அந்தத் தகவல்.

 

—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: