சிட்னியின் மேற்குப்பகுதியில் இருக்கும் அந்த பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் உயர் கல்விக்கூடமாக இருந்தது. இங்கு விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சி கிடைக்கும். அந்த இடத்தில் ஆறு ஓடுவதால் பல கால்நடைப் பண்ணைகள் இருந்தன. சிட்னியின் சனத்தொகை பெருகி மேற்குப்புறமாக வீடுகள் கட்டப்பட்டதால் விவசாய பண்ணை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. ஜனத்தொகை வளர்ச்சியுடன் இந்த கல்வி நிலையம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. மற்றைய பல்கலைக் கழகங்களைப் போல் கொங்கிறீட் மாடிக்கட்டடங்கள் கட்டப்படவில்லை. மரங்களுக்கு இடையில் தனிகட்டடங்கள் இயற்கைசூழலின் தன்மையை இழக்காமல் அமைந்தன.
நுழைவாசலின் வலப் பக்கத்தில் அமைந்த நீளமான கட்டடத்தில் உணவு விஞ்ஞானப்பகுதியும், சுற்றுச்சூழல் விஞ்ஞான கூடமும் உள்ளன. நடுப்பகுதியில் விஞ்ஞான ஆய்வுக்கூடமும் இரண்டு கரைப்பகுதியில் விரிவரையாளர்களது அறைகளும், விரிவுரைக் கூடங்களும் உள்ளதுன.
ஆய்வுக் கூடத்தில் தனது மேசையில் அன்று இரவு சிறிய மணித்துளிகளாக பூத்திருந்த ஈகோலை பக்டீரியா குடும்பங்களை எண்ணிக் கொண்டிருந்தான். கழிவுநீரில் வாழும் இந்த நுண்ணுயிர்கள் ஒவ்வொன்றும் இருபது நிமிடங்களில் இரண்டாக பெருகி மென்மையான செந்நிற குடும்பமாக கண்ணுக்கு தெரிகிறது. மனிதர்களின் கண்ணுக்கு தெரியும்போது மட்டும் ஒரு அந்தஸ்து கிடைக்கிறது. இதனால் இவை சந்திரனில் ஆராய்ச்சியில் பங்கு பெறுகிறது.
சிட்னிக்கு வடக்கே சில நூறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள உல்லாச பிரயாணிகள் செல்லும் நகரம் கொஸ்காபர். இந்த நகரத்தில் வெளியேறும் மனித கழிவுகளின் திண்ணப்பகுதி வடிகட்டப்பட்டாலும் திரவப்பகுதி போசாக்குள்ளது. இந்த திரவம் கடலில் கலக்கும் இடத்தில் கடல்பாசிகள் பெருகிவிடும். இந்தபாசிகளால்; கடற்கரைக்கு நீந்திக் குளிக்கவரும் உல்லாச பிரயாணிகளுக்கு இடைஞ்சலாகிறது. இந்தக்கழிவு நீரை மீண்டும் வாழைத்தோட்டங்களுக்கு பீச்சி அடித்து பசளையாக்குவது விவசாயத்துக்குப் பயனள்ளது.. இந்தக்கழிவு நீரினால் ஏற்படும் மொத்தமான பாதிப்பு பற்றி ஆராய்ச்சி செய்வது சந்திரனது பொறுப்பு. இதில் வாழைமரங்களில் ஏதாவது தொற்றுகிருமிகள் செல்கிறதா. இதில் இந்த மனிதருக்கு கடத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி தரவுகளுடன் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும். வாழைமரத்தின் பகுதிகள் வாரத்தில் ஒருநாள் குளிர்பதனப் பெட்டியில் சந்திரனுக்கு வந்து சேரும். இந்த பகுதிகளில் உள்ள நுண்ணுயிர்களை அறிவதே தற்போதைய ஆராய்வாக அமைந்தது
“ஏய் சந்திரன், உனது பரிசுப்பெட்டி வந்திருக்கு” எனக் கூறியபடி சிவப்பு நிறமான குளிர்பதன பெட்டியை சந்திரனின் மேசையில் வைத்தாள் சின்டி.
அவளது கைகள் சந்திரனின் தோளில் கைவைத்து உலுக்கிவிட்டு “அழகான பக்டீரியல் வளர்ச்சி” என கூறிவிட்டு எதுவித பதிலுக்கும் காத்திராமல் சென்றுவிட்டாள்.
எப்படித்தான் இவளால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதோ என் சந்திரன் வியப்பது உண்டு.
மீண்டும் சிலநிமிடங்களில், “சோபாவிடமிருந்து ரெலிபோன் வந்தது” எனத் தகவல் தந்து சென்றாள்.
“எதுவும் கூறினாளா.?”
“இல்லை. ஆனால் குரல் நல்லாக இல்லை. நேரத்துடன் வீட்டுக்கு வரும்படி கூறினாள்”
இரண்டு வருடங்களாக சிண்டியும் சந்திரனும் இந்த ஆய்வுக்கூடத்தில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். சிறு தடுப்பால் இருவர் பகுதியும் பிரிக்கப்பட்டிருந்தாலும் தொலைபேசி, போட்டோ கொப்பி மெசின் இருவருக்கும் பொதுவானது. பால்பதனிடும் துறையில் கலாநிதிப் பட்டத்துக்கு ஆராய்ச்சி செய்யும் சிண்டி சுற்றுசூழலில் மிகவும் அக்கறை கொண்டவள். அவுஸ்திரேலிய கிறீன் கட்சியில் அவள் போய்பிரெண்டும் இவளும் அங்கத்தவர்கள்.
இவளிடம் இருந்து சந்திரன் அணுவாயுத எதிர்ப்பு, சுற்றுச்சூழல், அவுஸ்திரேலிய அபரோஜினல் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளும் போது இவளும் இலங்கையில் நடக்கும் அரசியல் ஆயுத போராட்டங்கள் பற்றிச் சந்திரன் மூலம் அறிந்திருந்தாள்.. சிண்டியிடம் பேசுவது மனதுக்கு ஒத்தணம் கொடுப்பது போல் இருக்கும்.
சந்திரனது குடும்ப விடயங்களையும் சிறிதளவு தெரிந்து வைத்திருந்தாள். இலங்கையில் இருந்து ஸ்பொன்சர் பண்ணி சோபாவை அவுஸ்திரேலியாவுக்கு வரவழைத்துத் திருமணம் செய்தது, குழந்தை பிறந்த பின்னர் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் என்பவற்றை பாதி சந்திரன் சொல்லியும் மீதி யூகித்தும் அறிந்து கொண்டாள். எட்டுமணி நேரம் ஒன்றாக வேலை செய்யும் போது பிரத்தியேக விடயங்கள் பரிமாறப்படும்;. சிண்டி மற்றவர்கள் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதில் திறமையும் பொறுமையும் கொண்டவள் என்பதை ஆரம்பத்திலே சந்திரன் புரிந்து கொண்டான்.
“நன்றி உனது தகவலுக்கு”, என கூறிவிட்டு கொண்டுவரப்பட்ட குளிர்சாதன பெட்டியை திறந்து அவற்றில் உள்ள வாழைக்காய், இலை, தண்டு என பிரித்தான். ஏற்கனவே இருபத்திநாலு மணி;த்தியாலம் ஆகிவிட்டதால் உடனே அவற்றை தயார் படுத்;த வேண்டும். அவற்றைச் செய்தபின்னரே தொலைபேசியை எடுத்தான்.
சோபாவின் குரல் மறுமுனையில் வந்ததும்
“ஏன் போன் பண்ணினாய்?” என சந்திரன் கேட்டான்.
“சுமன் தொடர்ந்து அழுகிறான். டொக்டரிடம் கொண்டு செல்லவேண்டும். அதுதான் உங்களைக் கெதியாக வரச்சொன்னேன்.”
“சரி நான் வருகிறேன்.”
சோபாவின் பரபரப்பில் உண்மை இருக்கலாம். சின்ன விடயங்கள் கூட பெரிதாக்குவது இவளது இயல்பு. குழந்தை விடயமாக இருப்பதால் தட்டிகக்கழிக்க முடியாது என நினைத்து உடன் போகத் தீர்மானித்தான்.
கடந்த கிழமை கிடைத்த தரவுகளை கம்பியூட்டரில் பதிந்துவிட்டுஇ சிண்டியிடம் கூறிவிட்டு வெளியேறினான்.
சிட்னியின் மாலை நேரத்து போக்குவரத்து நெரிசல் மூன்று மணிக்கே ஆரம்பித்து விடுவதால் மனஓட்டத்திற்கு ஏதுவாக கார் ஓடவில்லை. கண்கள் தெருவிலும், கைகள் ஸ்டீயரிங் வீலிலும் இருந்தாலும் மனம் பல நாடுகளை கடந்து, சமுத்திரங்களைக் கடந்து சென்றது. காசோ, பணமோ ஏன் விசாவோ, பாஸ்போடடோ கூட தேவையில்லை. இலங்கை சென்று திரும்புவதற்கு. இலங்கையில் இருந்து அரசியல் அகதியாக வந்தவன் அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பி போகமுடியாது எனக் கூறி வதிவிடம் எடுத்தவன்கூட நனவோடையில் போய்வரும்போது மாணவன் என மேற்படிப்புக்கு வந்தவன் ஏன் போகமுடியாது?.
ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வந்த தமிழர்கள் அவுஸ்திரேலிய வதிவிடம் பெற உதவினார்கள். பின்பு அவர்களது அரசியலுக்கு இவனால் ஒத்துப்போக முடியவில்லை. இலங்கையில் நடக்கும் சண்டை ஏதோ இவர்களது காசில் தான்நடப்பது போலவும்இ அரசியலில் அக்கறை இல்லாதவர்களை துரோகிகள் என வசைபாடுவது இவனுக்கு ஒத்து வரவில்லை. சிட்னி வாழ் இலங்கைத்தமிழரிடம் இருந்து அந்நியமாக வாழ்ந்தான். இவனது சொந்தப்பிரச்சனை இலங்கையின் அரசியல் இனபிரச்சனை போல் சிக்கலாக இருக்கும்போது இவன் என்ன செய்ய முடியும்?
கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தில் விவசாய பீட மாணவனாக படித்துக்கொண்டிருந்த போது சிறந்த முறையில் தேர்வு எழுதி அந்த பல்கலைக்கழகத்திலே உதவி விரிவுரையாளராக வரும் கனவு கண்டான். கல்வியில் திறமை மட்டும் இவன் கனவுகளை மெய்படுத்த போதாமல் இருந்தது. விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு பந்தம் பிடிக்க வேண்டும். படிப்பில் அக்கறை காட்டுவது போல் நடிக்கவேண்டும். இப்படி பல போலித்தனங்களுடன் வாழும் காலத்தில் தமிழ் சிங்கள இன மோதல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி வந்தது.
நான் தமிழன் என்ற தாழ்வுணர்வுடன் போட்டியிடுதல் சாக்கில் ஒரு காலை விட்டு கொண்டு நூறுமீற்றர் பந்தயம் ஓடுவது போன்றது.
இந்த காலகட்டத்தில் இப்படியான பிரச்சனைகள் களப்பலி கேட்பது இளமையில் முகிழும் காதல் உணர்வாகும். சிரமப்பட்டு படித்து முடித்த இளைஞனை விலைபேசும் தனவந்தர்கள், பழைய பாரம்பரிய பணக்காரர்களோhடு ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பிப் பணம் சேர்த்தவர்களும், கள்ள கடத்தலில் சம்பாதித்த புதிய பணணக்காரர்களுமாக திருமண ஏலச் சந்தையில் நிறையவே வந்திருந்தார்கள்.
சந்திரனுக்கும் மஞ்சுளாவுக்கும் ஏற்பட்ட காதல் ஆரம்பத்தில் சில பக்கம் மட்டும் படித்துவிட்டு பின்பு தொலைந்து போன சுவையான நாவல் போன்றது. எப்பொழுது மனசோர்வு ஏற்படும்போது திரும்பி பார்க்கும் வேதாகமம் போன்றது. மிஷனரி ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களின் கட்டிலுக்கு பக்கத்தில் உள்ள சிறிய மேசையில் இருக்கும் அந்த தடிமனான தோல் அட்டை போட்ட வேதப்புத்தகம்.
வீட்டை அடைந்த சந்திரன் சோபாவின் முகத்தில் பார்த்த ஆத்திரமும் அவசரமும் அவனது வாயை அடைத்தது.
கையில் உள்ள சிறிய சூட்கேசை உள்ளே வைத்து விட்டு “ஏறு டொக்டரிடம் போவோம்” என்றான். குழந்தைக்கான விசேட இருக்கையை தூக்கிக் கொண்டு குழந்தையுடன் பின் தொடர்ந்தாள்.
சந்திரன் பேசவில்லை. குழந்தையும் அழவில்லை. சோபாவோடு சேர்ந்து மௌனமாகக் காரில் ஏறி அமர்ந்து கொண்டது.
சோபாவுக்கு அவ்விடமிருந்த மௌனம் பொறுக்க முடியவில்லை. நிலை குலைந்து தவித்தாள். கடைசியாக வாயை திறந்து “ஏன் இவ்வளவு லேட் உங்களுக்கு” என வெடித்தாள்.
“சிட்னி ரோடுகள் இந்த நேரத்தில் எவ்வளவு பிசி என்று உனக்கு தெரியாதா?”
எதிர்க்கேள்வி அவளுக்கு திருப்தி அளிக்கவில்லை.
“உங்களுக்கு பிள்ளையில் அக்கறை இல்லை”.
“அக்கறை இல்லாமலா இப்ப டொக்டரிடம் கூட்டிக்கொண்டு போகிறேன?;.”
“அப்ப என்னை பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்லுங்கோ”.
“சோபா எங்கள் கதையை ஆறுதலாக பேசுவோம். இப்பொழுது டாக்டரிடம் பிள்ளையை காட்டுவோம்”; எனக் கூறியபடி கிளினிக்கின் கார்ப்பார்க்pல் காரை நிறுத்தினான்.
நல்லவேளையாக காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நேரடியாக டாக்டரின் அறைக்கு செல்லமுடிந்தது.
டொக்டர் வயிற்றை அழுத்தியும், ஸ்தெரஸ்கோப்பால் வயிற்றைப் பார்த்துவிட்டு, “இது சாதாரண வயிற்றுவலி. குழந்தைகள் பால் குடிக்கும்போது சிலவேளை காற்று தடைப்பட்டு நோ ஏற்படும்” எனக் கூறி மருந்து சீட்டைக் கொடுத்தார்.
டொக்டரிடம் இருந்து வெளிவந்தபோது சோபா சந்திரனின் முகத்தை பார்க்கவில்லை.
சந்திரன் தனது கோபத்தினை கட்டுப்படுத்திக் கொண்டான். சோபாவை திட்டுவதன் மூலம் எதுவித பலனும் ஏற்பட போவதில்லை. திருமணம் நடந்து பல மாதங்கள் நல்லாத்தான் இருந்தாள். சுமன் பிறப்பதற்கு சிலமாதங்கள் முன்பு சோபாவி;ன பெற்றோரை சிட்னிக்கு வரவழைப்பதில் இருந்து ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக பல பிரச்சனைகள் உருவாகியது. பெற்றோரின் வரவு இவளது மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியதா? குழந்தை பிறந்தபின் போஸ்ட் நேற்றல் டிப்பிரசன் என மன அழுத்தம் ஏற்பட்டு மனதை மாறியதா?’
வீட்டுக்கு வந்ததும் ஏதும் நடக்காதது போல் இருவரும் நடந்து கொண்டனர்.
மறுநாள் சந்திரன் காலையில் பல்கலைக் கழகத்திற்கு போனதும் சுமனோடு கட்டிலில் படுத்திருந்தாள் சோபா. “அப்பனை போல் குத்தியன் படுத்திருக்கிறான் “ என கறுவிக்கொண்டு இருந்தபோது தொலைபேசி அடித்தது.
“என்ன சுமனுக்கு? டொக்டர் என்ன சொன்னார்.? “ என்று அவசரமாக இராசம்மா.
“ஒரு வருத்தமும் இல்லை. நீதான் பெரிசாக்கி அவருக்கு போன் பண்ண சொன்னது. உன்னால் நான் மாட்டுப்பட்டிருக்கிறேன் “;. என தாயுடன் புகைந்தாள்.
“தொடர்ந்து பிள்ளை அழுகிறான் என நீதான் எனக்கு சொல்லி அழுதாய். அப்ப நான் சொன்னேன். இப்ப என்னில் பழிபோடுகின்றாய். சரி சாப்பிட்டியா”?
“இல்லை.”
“பிள்ளை பெத்த உடம்பு வெறுவயிறில் இருக்கக் கூடாது.”
“நான் சாப்பிடுவன்” எனக் கூறி சோபா போனை வைத்தாள்.
சுமன் உண்டாகியவுடன் வெள்ளவத்தையில் இருந்த அம்மாவை ஸ்பொன்சர் பண்ண வேண்டும் என நான் பிடிவாதம் பிடித்தது தவறோ என கணம் யோசித்தாள். ஒரே மகள் வெளிநாட்டுக்கு போய் நன்றாக வாழவேண்டும் என அனுப்பியபின் மகள் சிட்னியில் வாழ்வதும், அவள் கர்ப்பமாக இருப்பதும் இராசம்மாவின் வாழ்ககையில் முக்கிய விடயங்கள். கணவர் இராசநாயகத்தார் வீட்டுவிடயங்களில் இராசம்மாவை எதிர்த்து எதுவும் கூறுவதில்லை. மனைவியின் முடிவுகளை எதுவித திருத்தமுமின்றி ஏற்றுக்கொள்ளுதல் அவர் சுபாவம். இவர்களின் செல்வமகளை தூரத்து உறவினரான சந்திரனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவுசெய்ததும் இராசம்மாதான்.
கொழும்பில் கொன்வென்ற் ஒன்றில் படித்த சோபா இராசகுமாரி போல் வளர்க்கப்பட்டாள்.
அவர்களது வாழ்;க்கை எதுவித சலனமும் இன்றி; 83ஆம் ஆண்டு இனக்கலவரம் வரை திவ்வியமாக நடந்தது. கலவரத்தில் வீடு எரிக்கப்பட்டு குடும்பம் கொழும்பில் அகதி முகாமல் தங்கியிருந்து, யாழ்ப்பாணம் போய் சேர்ந்தனர். யாழ்ப்பாணத்தில் சுண்டிக்குளியில் பெண்கள் பாடசாலையில் சோபா தனது படிப்பை தொடர்ந்தாள் சோபா. யாழ்ப்பாணத்தில் அவள் குடும்பத்தில் நடந்த சம்பவங்களால் மீண்டும் குடும்பமாக கொழும்பில் குடியேற நேர்ந்தது.
பழைய நினைவுகளி;ல் மூழ்கி இருந்த சோபாவை கதவில் யாரோ தட்டிய சத்தம் இந்த உலகத்திற்கு மீளஅழைத்து வந்தது. முகத்தைத் துடைத்து உடையைச் சரி செய்து கொண்டு கதவை திறந்தவளுக்கு வாசலில் நின்ற தாயும் தந்தையும் ஆச்சரியத்தை கொடுத்தனர்.
“என்ன இப்போதுதான் போனில் கதைத்தேன். உடனேயே வந்துவிட்டீர்களே.. .”
“மனம் கேட்கவில்லை. மகள். உன்னையும் பிள்ளையையும் பார்த்துவிட்டு போகலாம் எண்டுதான். . . என்று இராசம்மா வார்த்தைகளை மென்றவாறே உள்ளே வந்தாள்.
“உங்கம்மாவின் குணம் தெரியும்தானே? முருகன் கோயிலுக்கு வெளிக்கிட்ட என்னையும் இழுத்துக்கொண்டு இங்கே வந்துவிட்டாள். “
பட்டும் படாமலும் பேசுவது இராசநாயகத்தாரின் வழக்கம். கிளாக்காக வேலையில் சேர்ந்து முப்பந்தைந்து வருடங்களாக எதுவித பிரச்சனையிலும் சிக்காமல் பொறுப்பு அதிகாரியாக உயர்வு பெற்று பென்சன் எடுத்தவர். எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கியவர்.
எதுவும் பேசாமல் தாயைத் தொடர்ந்தாள் சோபா.
“ இப்ப எப்படி இருக்கிறாய் என்ர குஞ்சு” என செல்லம் கொஞ்சிய படி சுமனை தூக்கி தன் தோளில் வளர்த்தினாள்.
“அம்மா ஏன் கஸ்டப்பட்டு வந்தனி? சின்ன விடயங்களை பெரிதுபடுத்துவதே உனது வழக்கமாகப் போச்சுது.”
“உன்னை எப்படி வளர்த்தன் தெரியுமா? பேரப்பிள்ளைளை பார்க்க நான் வரக்கூடாதா? உன்ரை புரிசன் எங்களை வெளியே போக சொன்னான் என்று நீயும் அப்பிடியே சொல்கிறாய்”;?”
“நீ வந்து என் ரென்சனை கூட்டுகிறாய.; அவரது பிரச்சனையை அவரோடு பேசு.”
“சரிசரி ஏதாவது சமைத்தாயா? “
“இல்லை நான் சமைக்க நினைத்தபோதுதான் நீ வந்தாய்.”
“நாங்கள் வரும்போது சுப்பர் மார்க்கெட்டில் இறைச்சி வாங்கி வந்தம். நான் கறி வைக்கட்டுமா? “
“ஏன் நான் சமைப்பன் தானே “, என்று கூறிய படி கையில் இருந்த பொட்டலத்தை வாங்க முனைந்தாள்.
“எனக்கு பேரனைத் தந்துவிட்டு தாயும் மகளும் சண்டை போடுங்கோ”, என்றார் இராசநாயகம்.
பேரனை வாங்கிய இராசநாயகம் ரெலிவிசன் முன்பு இருக்க சமையல் அறையில் வைத்து இராசம்மா இறைச்சியை வெட்ட துவங்கினாள்.
இறைச்சி வெட்டுவதை சில நேரம் பார்த்துக் கொண்டிருந்த சோபா திடீரென “இந்த ஆடு எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கும் தனது உயிரை பாதுகாக்க.. “ என்றாள்
“இதையெல்லாம் பார்த்தால் எப்படி சாப்பிட முடியும். பி;ள்ளை பெத்த உடம்புக்கு இரத்தம் ஏற வேண்டும். அதுதான் இறைச்சி வேண்டி வந்தன்.”
மௌனமாகப் பார்த்ததுக் கொண்டிருந்தவளது மனஉலகத்தில் வேறொரு காட்சி வேறு விரிகிறது.
அகண்ட புல்வெளியில் புல்லுகள் அரை அடி உயரத்திற்கு செழிப்பாக வளர்ந்திருக்கிறது. அங்கு பல செம்மறியாடுகள் கூட்டமாக மேய்கின்றன. அந்தக்கூட்டத்தை விட்டு ஒரு குட்டியாடு பி;ன்தங்கி விடுகிறது. அந்த குட்டி ஆட்டின் கால்கள் தள்ளாடுகிறது. குழம்புகள் நிலத்தில் பதிய மறுக்கிறது. தொண்டையை கனைத்தபடியே தனது நிலையை மற்ற ஆடுகளுக்கு தெரியப்படுத்த அந்த குட்டியாடு முனைகிறது. கழுத்தை ஆட்டுகிறது. தொண்டையில் இருநு;து மட்டும் சத்தம் வர மறுக்கிறது காலை வேகமாக வைத்து முன்னேற முயல்கிறது. இந்த நேரத்தில் சிறிய சத்தம் ஒன்று அந்த குட்டியாட்டின் கவனத்தை ஈர்க்கிறது. நரியொன்று புல்லுக்கு மேல் தனது தலையை தூக்கி கபடக்கண்களால் பார்க்க்pறது. குட்டியால் முன்னேற முடியவில்லை. நரி முன்னங்காலை நிலத்தில் பதித்து பின்னங்கால்களை நீட்டி ஆட்டுக்குட்டியின் மேல் பாய முனைகிறது.
“அம்மா நிற்பாட்டு” என்று கூச்சலிட்டாள் சோபா.
“ஏன் கத்துகிறாய். இறைச்சி வேண்டாம் என்றால் மெதுவாக சொல்ல வேண்டியது தானே’.
சோபா தன்னை சுதாரித்துக்கொண்டு முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்தபடி படுக்கை அறைக்கு சென்றாள்.
தொடரும்
மறுமொழியொன்றை இடுங்கள்