பறவைகள் பலவிதம்

நடேசன்

 

அவுஸ்திரேலியாவிற்கு வந்த பின்னர் பறவைகளுக்கு வைத்தியம் செய்வதற்கு தயங்கியதற்கு பல காரணங்கள் இருந்தன.

இலங்கையில் கோழிப்பண்ணையில் நோய் வந்தால் நோயுற்ற கோழியை கருணைக்கொலை செய்து அதனை போஸ்மோட்டம் பண்ணியதும் நோயை புரிந்து கொள்வதால் மற்றைய கோழிகளுக்கு வைத்தியம் பண்ண முடியும். தடைமருந்து ஏற்றிவிடலாம். போஸ்மோட்டத்தில் நோய் தெரிந்து கொள்ளப்படாத போது பரிசோதிப்பதற்கு லாபோரட்டரிக்கு அனுப்பிட்டால் நோயைத் தெரிந்துகொள்ளமுடியும்.

இங்கு செல்லமாக பறவை வளர்ப்பவர்களின் பறவைககளுக்கு நோய் பீடித்து என்னிடம் கொண்டு வருபவர்களிடம் பறவை வைத்தியம் செய்யமுடியாது எனச்சொல்லிவிடுவேன். பெரும்பாலும் நோய்கள் அதிகமாக தாக்கிய பின்பே பறவைகள் எமது கவனத்திற்கு வரும்;. பறவைகளை வைத்து பார்ப்பதற்கு விசேடமாக நாய் பூனைகள் அற்ற சூழலை வைத்திய சாலையில் ஏற்படுத்தி இருக்கவேண்டம்.  இக்காரணங்களால் பறவைகளை பார்ப்பதை தவிர்த்துவிட்டு அதற்கான விசேட ஸ்பெசலிஸ்ட்டுகளிடம் அனுப்பிவிடுவேன்.

சிறிய குருவியொன்று கால் முறிந்தது என அவசரமாக கொண்டு வந்தபோது அதை சோதித்து பார்த்தேன். அதன் இடது கால் முறிந்திருந்தது. ஆனால் துண்டாகவில்லை. நான் பறவையை பிடித்தபடி எனது நேர்சிடம் அந்த முறிந்த காலில் நெருப்பு குச்சியை இரண்டாக பிளந்து சிறிய செலோ ரேப்பினால் வைத்து கட்டும்படி சொன்னேன் . கட்டி முடிந்தபோது அந்தக்கால் உறுதியாக நேராக இருந்தது ஆனால் அந்தக் குருவி இறந்து விட்டது. கையில் பிடித்திருந்த போது கொஞ்சம் இறுக்கமாக பிடித்திருக்கவேண்டும். அந்த குருவியின் சொந்தக்காரர் பெருந்தன்மையாக மன்னித்து விட்டார். ஆனாலும் இந்த சம்பவமும் சேர்ந்து வளர்ப்பு பறவைகளிடம் இருந்து என்னை அந்நியமாக்கியது.

என்னால் அவுஸ்திரேலியாவில் இயற்கையாக காணப்படும் பறவைகளில் இருந்து ஒதுங்க முடியாது. பல வழிகளில் காயப்பட்டு துன்புறும் பறவைகள் பொது மக்களால் மிருகவைத்தியரிடம் கொண்டுவரப்படும் போது முதல் உதவி செய்து அந்தப் பறவைகளை காப்பாற்றவேண்டும். அப்படி காப்பாற்ற முடியாதவைகளைக் கருணைக்கொலை செய்வதின் மூலம் அவற்றின் துன்பத்தில் இருந்து அவை விடுவிக்கப்படவேண்டும் என்ற அறம் சார்ந்த கட்டுப்பாடு எமது தொழிலில் உள்ளது. இயற்கையில் மரங்களுக்கும் பறவைகளுக்கும் இருக்கும் உறவு அன்னியோன்னியமானது. ஒரு தாம்பத்திய உறவில் ஆண் பெண் போன்று,  ஒன்றை ஒன்று ஒட்டிவாழ்வது போன்றதாகும்.

காடுகள் அழிக்கப்படும் போது பறவைகள் அழிகின்றன். மரங்களில உள்ள பூக்களில் இருந்து தேனை உணவாக பெறுவதற்கு பிரதி பலனாக மரங்களின் பரம்பலுக்கு உதவுகிறது. அவுஸ்திரேலியாவில் செறிந்து வாழும் ஹணிசக்கர் என்ற பறவை என் கண்ணில் படும்போதெல்லாம் ஒரு சமூக சேவகரை பார்க்கும் போது ஏற்படும் மரியாதை எனக்கு மனதில் ஏற்படும்.

சாம்பல் கலந்த கருப்பு நிறத்தில் இறகுகளை கொண்ட இந்தப் பறவையின் கூரான சொண்டின் நுனியில் தூரிகை அமைப்பு உள்ளது. இவை பூக்களின் உள்ளே சொண்டை புகுத்தி தேனையும் மகரந்தத்தையும் சிலவேளையில் பூவுக்குள் இருக்கும் பூச்சிகளையும் உண்டு வாழ்பவை. இந்த பறவைகள் ஒவ்வொரு பூக்கொம்பாக அடிக்கடி தாவுவதால் இவற்றின் சொண்டுகளில் இருக்கும் மகரந்த மணிகள் இடம் பெயர்ந்து இனப்பெருக்கம் நடக்கிறது.

எனது கிளினிக்கின் முன்னால் இருக்கும் பொட்டில் பிரஸ் என்ற மரத்தில் பூங்கொத்தை கொத்திக்கொண்டு இருப்பதை பார்த்தால் சில கணங்கள் தயங்கி அந்த இடத்தில் நின்று பார்ப்பேன். எல்லாவற்றிற்கும் பொருளாரத்தால் விலைமதிக்கும் அவுஸ்திரேலியாவில் நிலத்தில் இருந்து அகழ்ந்து பெற்றவைக்கு அடுத்தபடியாக உணவுப்பொருட்களின் ஏற்றுமதி அன்னிய செலாவணியை பெற உதவுகிறது. இந்தப் பறவைகள் எவ்வளவு மில்லியன் டாலர்கள் உணவு உற்பத்தியாக்க உதவுகின்றன என்பதை எவரும் கணக்கிட்டதாக நான் அறியவில்லை.

இப்படியாக இந்த நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு உதவும் இந்த ஹணிசக்கர் ஒன்று எனக்கு புது வைத்திய வாகடத்தை புரியவைத்தது. ஒரு நாள் நான் காரில் வீட்டை நோக்கி வந்தபோது வீட்டின் முன்பாக இருந்த பூமரத்தில் ஒரு ஹணிசக்கர் இருந்தது. கார் வீட்டை நெருங்கியதும்,  வெருண்டபடி கார் கராஜின் உள்ளே பறந்து சென்றது. கராஜூக்கு சென்றது திரும்பி பறக்காமல் தொடர்ச்சியாக முன்பக்கத்தை நோக்கி பறந்து சுவரில் பல தடவை மோதியது. நான் அறிந்தவரை இந்தப் பறவை மட்டும்தான் பின்னால் பறக்கக் கூடியது. காரைவிட்டு இறங்கியதும் கராஜின் எதிர்ப்பக்கத்தில் இருக்கும் சிறு ரோலர் கதவை மெதுவாக தூக்கினேன். அந்த வழியால் அது பறக்கட்டும் என நினைத்தேன். எனது நினைப்பிற்கு எதிர் மாறாக அந்தப் பறவை பறந்து வந்து ரோலர் கதவின் சுருள்களுக்குள் புகுந்து கொண்டது.

அதிர்ச்சியுடன் எனது முட்டாள்தனமான செயலுக்கு என்னையே நொந்து கொண்டு கதவின் இரும்புச் சுருளை விரித்தபோது ஹணி சக்கர் பறவை பல இறகுகளை இழந்து மயக்கமாக இருந்தது. ஆனால் சிறகுகள் இரண்டும் கால்களும் நல்லவேளையாக முறிந்துவிடவில்லை. எனது கையில் பறவையை வைத்துக் கொண்டு எதுவும் செய்யத் தெரியாமல் யோசித்துக்கொண்டு நின்றேன்.

நீந்தத் தெரிந்த என்னை நண்பன் ஒருவன் கீரிமலையில் வள்ளத்தில் இருந்து தள்ளிவிட்டபோது நான் மூழ்கி விட்டேன். வள்ளத்தை செலுத்திய வல்வெட்டிகாரர் என்னை மீட்டது போல் அவசரத்தில் பயின்றவை உதவிக்கு வரவில்லை. ஐந்து வருட கால படிப்பறிவு கால் நூற்றாண்டு மிருக வைத்திய அனுபவம் ஆவிபோல் மறைந்து விட்டதாக உணர்ந்தேன். நாய் பூனையாக இருந்தால் கிளினிக்கு கொண்டு சென்று மருந்தை ஏற்றி இருப்பேன். மேலும் காட்டு பறவைகள் பெரும்பாலும் கூண்டில் பிடித்து வைத்திருக்கும் போது உணவு அருந்தாமல் இறந்திருப்பதை பார்த்திருக்கிறேன்.

சிறிது நேரத்தில் வீட்டுக்குள் சென்று சிறிதளவு சீனியை எடுத்து தண்ணீரில் கரைத்து மெதுவாக ஊசியில் எடுத்து சொட்டுகளாக அதனது சொண்டில் விட்டேன். தொடர்ந்து மயக்கத்தில் இருந்து விடுபடவில்லை. மீண்டும் ஒரு மணிநேரத்தின் பின்பு சீனித்தண்ணீரபருக்கியபோது போது தலையை நிமிர்த்தியது இதன்பின் பூனைக் கூட்டில் வைத்து அந்த ஹணிசக்கருக்கு பருக்கிய போது தானாக குடிக்க தொடங்கியது. அடுத்த நாள் மிகவும் ஆரோக்கியமாக எதுவும் நடக்காதது போல் காட்சியளித்தது. நான் சரியாக இருபத்தி நாலுமணி நேரத்தில் கூட்டை திறந்து விட்டதும் பறந்து சென்றது. பறவைகள் ஒரு மரத்தில் இருந்த மறுமரத்துக்கு பறக்கும் போது ஏற்படும் காயங்கள் மனிதர்களுக்கு நடக்கும் தெருவிபத்து போன்றது. இப்படியாக காயமடைந்த பறவைகளுக்கு ஜென்ம விரோதி பூனைகள். பூனைகளின் வாயில் அகப்படாமல் தப்பி எனது கிளினிக்குக்கு பொது மக்களால் கொண்டுவரப்படும் காயமடைந்து வரும் பறவைகளை பெரும்பாலும் சீனித்தண்ணீர் சிகிச்சையும ஒரு நாள் இரவு ஓய்வும் குணப்படுத்துகின்றது.

மேற்குலகத்தில் எவ்வளவு விஞ்ஞான வைத்திய முறைகள் உருவாக்கப்பட்டாலும் ஒருவர் பெயர் உலகெங்கும் உள்ள மிருக வைத்தியர்களால் நினைவு கூரப்படும். புத்த மதத்தின் தாக்கத்தில் சக்கரவர்த்தி அசோகன் இந்தியாவில் முதல் முறையாக மிருகங்களுக்கு வைத்தியம் செய்வதற்காக மிருக வைத்திய சாலைகளை உருவாக்கி இரண்டாயிரத்து முன்னூறு வருடங்கள் கடந்து விட்டாலும் அவரது பாதச் சுவடுகளில்தான் இன்றும் பயணம் செய்கிறேம்.

—0—

 

“பறவைகள் பலவிதம்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. சில நாட்களுக்கு முன் சாலையில் எதன் காரணமாகவோ காயமடைந்து துடித்துக் கொண்டிருந்த சிறு குருவியை, காகங்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றி எடுத்துக் கொண்டு, அதற்கு தண்ணீர் கொடுத்து எனது இருசக்கர வாகனத்தின் முன்புறம் உள்ள பேக்கில் வைத்துக் கொண்டு, இரண்டு கிலோமீட்டர் பயணித்து வீட்டிற்கு வந்து பார்த்தேன். பறவை இறந்திருந்தது. கடந்த சில நாட்களாக என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது இந்த நிகழ்வு. தங்கள் பதிவை பார்த்தவுடன் இதை பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. மனசும் சற்றே லேசாகியுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: