சிலுவை சுமந்த மரியா

நடேசன்

தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை விருத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஓட்டிசம் என்ற நோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூன்று வயதின் பின்னரே குழந்தைகளில் நோயின் அறிகுறியை பெற்றோரால் புரிந்து கொள்ளமுடிகிறது. குழந்தைக்கு ,குழந்தை நோயின் குணங்கள் வித்தியாசப்படும். சிறுவயதில் குழந்தைகள் தனது சூழ்நிலையை பரிந்து கொள்ளாமலும் பொருட்படுத்தாமலும் இருப்பதில் இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம்.  டெலிவிசனுக்கு முன்னால் இருந்த போதும் அதை பார்க்காமல் இருப்பதும் விளையாட்டுப் பொருட்களையும்; சக சிறுவர்களையும் அலட்சியம் செய்வதிலும் இருந்து கூர்மையான அறிவுள்ள பெற்றோரால் மூன்று அல்லது நான்கு வயதில் குழந்தையில் ஏதோ குறை தெரிகிறது என மனத்தில் சந்தேகம்; ஏற்படும் . ஆறு அல்லது ஏழு வயதாகும் போது சிறு செயல்களான சட்டையை போடுதல், காலணியை கட்டுதல் போன்ற செயல்களை செய்வதற்கான திறமை இல்லை என தெரியவரும் போது இந்த நோய் உறுதியாக்கப்படுகிறது. ஓட்டிசம் உள்ள குழந்தைக்கு தனது தேவைகளை மொழி மூலம் வெளிப்படுத்த முடியாது போகிறது. இந்த இயலாமையால் மனதில் ஏற்பட்ட கோபத்தால் வெளியே ஓடுதல்’ பொருட்களை போட்டு உடைத்தல், பெற்றோர்களை அடித்தல் என தொடரும் இந்த வியாதிக்கு மருத்துவ உலகில் மருந்து இல்லை . ஆனால் அவர்களுக்கான விசேட பாடசாலைகளில் இவர்களது செயல்களை மேம்படுத்த முடியும். நிறமூர்த்தங்களின் தாக்கத்தால் ஏற்படும் இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களிலும் பார்க்க இவர்களை பராமரிக்கும் பெற்றார்களே பரிதாபத்துக்கு உரியவர்கள். இப்படியான பெற்றோரில் ஒருத்திதான் மரியா. இவளும் பலவருடங்களாக துன்ப சிலுவையை சுமக்கிறாள். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் துன்பக் கதையை கேட்டறிந்தாலும் மரியாவின் கதை என் மனதில் நிற்கிறது.

எகிப்தை பூர்வீகமாக கொண்ட ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் மரியா எனது கிளினிக்குக்கு பலவருடங்களாக ஏமி என்ற பத்து கிலோ எடையுள்ள பூனையை கொண்டு வருவார்;. மரியா எகிப்தில் சிறுபான்மை இனமாக வாழும் ஓதோடக்ஸ் கிறீஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர். உயரமாகவும் ஓலிவ் நிற சருமமும்;  கொண்டு அழகான தோற்றமும் உடையவர்.; இளமைக்காலத்தில் மொடல் அழகியாக இருந்திருக்கவேண்டியவர் என எண்ணத்தோன்றும் . இவ்வளவு அழகான இந்தப் பெண்ணின் முகத்தில் புன்னகையை கடந்த பதின்மூன்று வருடங்களாக நான் பார்க்கவில்லை. இவருக்கு சிரிப்பு வரண்டு போனதற்கு காரணம் இருக்கலாம. அதைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. மிருகங்களுக்கு வரும் நோயையும் அதன் மூலங்களையும் பற்றி புரிந்து கொள்ளவும் அதைத் தீர்க்கவும் பணம் பெறுவதால் அவர்களின் செல்லப்பிராணியே எனது முழுக்கவனம்  பெறுகிறது.  ஏமிக்கு வரும் நோய்களுக்கு காரணம் அதனது உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பே. எனது பரிசோதனை மேசையில் சிறிய புளி மூட்டை வைத்தது போல படுத்திருக்கும். பல தடவை பலவகையான எடையை குறைக்கும் உணவு வகைகளை கொடுத்திருக்கிறேன். ஏமி அதை  உண்ணவில்லை என சிறிது புளகாங்கிதமாக மரியா சொல்லுவர். அதிக அளவு உணவு கொடுக்கும் தங்களது செயலை பலவிதமாக கூறி சமாளிப்பார்கள். இதனால் இவர்கள் மேல் எனக்கு ஏற்பட்ட அதிருப்தியை மரியா புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு நாள் கிளினிக்குக்கு வரும் பூனைகளில் உங்களது ஏமிதான் குண்டுப் பூனை’ என சொன்னேன்.  அவளுக்கும் எனது மனநிலை புரிந்தது. இடையில் என்னை விட்டு வேறு மிருகவைத்தியரிடம் சென்றார். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. சில வருடங்களுக்கு முன் மகளுடன் ஏமியை கொண்டு வந்து மகள் மருத்துவம் படிப்பதாக கூறிய போது வாழ்த்திவிட்டு ஏமியின் உடல் பருமன் குறையாவிட்டால் நீரிழிவு நோய் ஏற்படும் என்ற தகவலை மகளிடம் கூறினேன். சிலமாதங்களின் முன்பு மரியாவிடம் இருந்து தொலைபேசி வந்தது.

‘ஏமி அதிக அளவு தண்ணீர் குடிக்கிறது. நீரழிவு வியாதி வந்திருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்’

‘காலையில் உணவு கொடுக்காமல் கொண்டு வாருங்கள். இரத்தத்தை பரிசோதிப்போம்’

அடுத்த நாள் ஏமியை மரியா கொண்டுவந்தார். இரத்தத்தை கழுத்தில் இருக்கும் யுகிலர் நாளத்தில் இருந்து எடுக்கவேண்டும். ஏமியின் கழுத்தை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருந்தது. இதில் இரத்த நாளத்தை கண்டு பிடிப்பது முடியாத காரியமாக இருந்தது.  சில தடவைகள் தவறான இடத்தில்  ஊசியை ஏற்றி முயற்சி பண்ணியபோதெல்லாம் புன்னகையற்ற மரியாவின் முகம் இறுகியது. கழுத்தற்ற ஏமியையும் சிரிப்பற்ற மரியாவையும் மாறி மாறி பார்த்தபடி இரத்தத்தை எடுக்க முயற்சித்தேன். நானும் களைத்து ஏமியும் களைத்ததால் ஒரு இடைவெளி விட்டேன்.ஏமி குண்டாக இருப்பதுதான் காரணமா என மரியா அப்பாவியான கேள்வியை கேட்டபோது எனக்கு எரிச்சல் வந்தாலும் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லவில்லை.

‘உலக மிருகவைத்தியர்களால் இதுவரையில் குண்டான பூனை என கணிக்கப்பட்டது ஸ்கொட்லாந்தில் வசித்த 32 கிலோ எடையுள்ள பூனை. அந்தப் பூனையின் சொந்தக்காரர் இறைச்சிக்கடை வைத்திருப்பவர்.’’

‘ஏமி அதில் மூன்றில் ஒன்று கூட இல்லையே’ என சிறிய கவலை தொனிக்க கேட்டார் மரியா.

அது உண்மைதான் என கூறிய படி மீண்டும் இரத்தத்தை எடுக்க ஊ சியை விட்டு முயற்சித்தபோது இரத்தம் வந்தது. அப்போது மரியாவின் முகத்தில் சிறிய புன்முறுவல் தெரிந்தது.எனது அறையை விட்டு மரியா வெளியே சென்றதும் நான் எனது அறைக்குச் சென்று விட்டாலும் வெளியே எனது நர்சுக்கும் மரியாவுக்கும நடந்த உரையாடலை கேட்கக் கூடியதாக இருந்தது.

மரியாவின் இரண்டு பிள்ளைகளில் மூத்த மகனுக்கு சிறுவயதில் இருந்தே ஓட்டிசம் இருந்தது. இதனால் வேலைக்குச் செல்லாமல் மகனை பராமரித்து வந்தாள். இந்த வியாதியில் மிகவும் வன்முறையான வெளிப்பாடும் உண்டு. தனக்குப் பிடிக்காதது நடந்தால் அப்பொழுது பக்கத்தில் உள்ளவரை தாக்குவது, வெளியே ஓடுவது, வீட்டில் உள்ளவற்றை நிலத்தில் போட்டு உடைப்பது போன்ற செயல்கள். சிறுவயதில் இதை செய்யும் போது தன்னால் தாங்க கூடியததாக இருந்தது. இரண்டாவது மகள் பிறந்து சிலகாலத்தில் கணவன் பிரிந்து சென்று விட்டார். மகளை வளர்ப்பதும் ஓட்டிசம் வந்த மகனை பராமரிப்பதும்தான் எனது வேலையாகிவிட்டது. இதனை கடந்த இருபத்து எட்டு வருடங்களாக செய்து வருகிறேன். எனது வாழ்க்கையில் நடந்த ஒரே நல்ல சம்பவம் எனது மகளுக்கு மருத்துவராக பயில பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்ததுதான்.. தற்பொழுது அவள் எனது வீட்டில் இல்லை. இந்த உரையாடல் அந்த பெண்ணுக்கும் எனது நர்சுக்கும் இடையில் நடந்ததால் அதனைக் குலைக்க விரும்பாமல் அதேநேரம் அறைக்கு வெளியே செல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுதுதான் மரியாவின் புன்னகை காணாமல் போனதன் காரணம் புரிந்தது.

சமீபத்தில் தொலைபேசியில் ‘வீட்டுக்கு வந்து ஏமியை பார்க்கமுடியுமா? தோளில் ஏற்பட்ட நோவால் ஏமியை தூக்கி கொண்டுவர முடியாது இருக்கிறது. வீட்டுக்கு வந்து பார்க்க முடியுமா’ எனக் கேட்டபோது மறுப்பு சொல்லாமல் உடனே சென்றேன். வீடுகளுக்கு செல்வதை முடிந்த வரையில் தவிர்ப்பேன். காரணம் மிருகங்களை வீட்டு சூழ்நிலையில் திருப்தியாக பரிசோதிப்பது கடினம்.  எனது கிளினிக்குக்கு வெகு சமீபமான வீடானபடியாலும், மரியா மேல் அனுதாபம் ஏற்பட்டதாலும் சென்றேன்.மரியாவின் வீடு மதில் அடைத்து அதன் மேல் இரும்பு கம்பிகளுடன் இரும்பு கேட்டுடன் இருந்தது . சாதாரண வீடுகள் இப்படி இருப்பது குறைவு . இது நிச்சயமாக ஓட்டிசம் வியாதி கொண்ட பிள்ளைகளை பராமரிப்பதற்கு உகந்ததுதான் என நினைத்துக்கொண்டேன். இடது தோளை சரித்தவாறு நின்று கொண்டு, வீட்டிற்கு வந்ததற்கு நன்றியை தெரிவித்தாள்

‘ தோளில் என்ன நடந்தது?

’அண்ருவை நான் நேற்று காப்பகத்திற்கு அனுப்பிவிட்டேன். அதன் பின் வீட்டை சுத்தப்படுத்தியதால் கையை பிடித்து விட்டது

‘அப்படியா’ என்று சொல்லிவிட்டு மேலும் கதையை வளர்க்கவில்லை.

‘இந்தக் கையை பாருங்கள்’ என காட்டினாள்.  முழங்கைக்கு கீழ் பெரிய காயம். நாய்கடித்தது போல் இருந்தது.

‘என்ன நடந்தது?’

‘ஆன்ரு கடித்துவிட்டான். அவனது மேசையில் கோப்பி கப்பை வைத்துவிட்டேன் என்பதுதான் காரணம். என்னால் தாங்க முடியவில்லை. இருபத்தெட்டுவயதிலும் மலம் துடைத்து குளிப்பாட்டிக்கொணடிருந்தேன் . அவன் மிகவும் பலமானவன். அடிப்பது உதைப்பது தாங்க முடியவில்லை. அவனை சுற்றியுள்ள எந்த இடமும் சுத்தமாக இருக்கவேண்டும். அதுவம் உடனடியாக செய்யவேண்டும்.   பொறுமை இல்லாது பொருட்களை உடைப்பதுதான் அவனது முக்கிய பிரச்சினை.’

‘மிகவும் மனவருத்தப்படுகிறேன்’.

‘ ஏமியை பாருங்கள்’

ஏமி சோபாவில் படுத்திருந்தது என்ன பிரச்சினை கால் நொண்டுகிறதுஅழுத்திப் பார்த்தேன்.தசை நோவு போல் இருக்கிறது. பயப்படத் தேவையில்லைவீட்டைச்சுற்றிப்பார்த்தேன் .

‘வீடு அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது’ என்றேன்.

‘ அன்ருவால் இப்படி வைத்திருக்க பழகிவிட்டேன்’

‘இப்பொழுது வீடு வெறுமையாக இருக்குமே?’

‘ஆன்ருவுக்காக இருபத்தி எட்டு வருடமும் வாழ்ந்த நான் எனக்காக சிறிது காலம் வாழவிரும்புகிறேன். நான் தனிமையாக சிலகாலமாவது இருக்க விரும்புகிறேன் என சிறிய புன்னகையுடன் வழி அனுப்பினாள் மரியா.                     –0–

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.