நடேசன்
எழுத்தாளர்களை மேற்கு நாடுகள் எப்படி கொண்டாடுகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு அந்த நாடுகளுக்கு போகத் தேவையில்லை. புத்தகங்கள் பத்திரிகைள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் முக்கிய எழுத்தாளரான சார்ள்ஸ் டிக்கின்சன் வாழ்ந்த இடத்தையும் அவரது வீட்டையும் அவர் பாவித்த பொருட்களையும் KENTஎன்ற பகுதியில் சென்று பார்த்தேன். இதன் பின்னர் என்னோடு வந்த நண்பன், சில கிலோ மீட்டர் துரத்தில் சாஸ்ஸ் டிக்கின்சன் மது அருந்தும் மதுச்சாலை உள்ளது என்ற தகவலைச்சொன்னதும் அங்கு சென்று பார்த்தேன் கிராமிய சூழ்நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த மாதிரியான ஒரு தோற்றத்தை தந்தது. இருளடைந்து, காதைத் துளைக்கும் இசையில்லாமல் அந்த இடம் அமைதியான தியான நிலையம் போன்று இருந்தது அங்கு இருப்பவர்களும் தங்களுக்கிடையே மெதுவான குரலில் உரையாடிக்கொண்டிருந்தார்கள் . அந்த மதுச் சாலை எனக்கும் பிடித்திருந்தது. ஆங்கிலப் புனைகதைகளுக்கு சார்ள்ஸ் டிக்கின்சன் போன்று ,அரசியல் இலக்கிய எழுத்தில் ஜாம்பவான் ஜோர்ச் ஓர்வெல். இவரின் எழுத்துகள் என்னை ஒவ்வொரு நாளும் இவரை நினைக்கப்பண்ணும். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாடுகள் கொண்டாடும் பல எழுத்தாளர்கள் உள்ளனர். இந்த மனிதர்கள் தங்கள் கற்பனைப் படைப்புகள் மூலம் மட்டும் உயர்ந்த இடம் பெறவில்லை. இவர்கள் தங்கள் நாட்டு மனிதர்களை பாத்திரமாக்கி, சம்பவங்களை புனைந்து சரித்திரமாக்கி, அந்தச் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் வெளியுலகத்திற்கும் அறிமுகப்படுத்துகிறார்கள். இவர்கள் காட்டிய சமூகங்கள் உன்னதமானவை அல்ல. ஹெஸ்ரேவ் ஃபுலுவேட் ( Gustave Flaubert) மாடம் பொவரியில் காட்டியதோ கிரைம் அன்ட் பணிஸ்மென்டில் டொஸ்ரொஸ்கி (Dostoyevsky காட்டியதோ சாதாரண ஆசையும் பொறாமையும் நிறைந்த மனிதர்களைத்தான். இவை சாகாவரம் கொண்ட இலக்கியமாகின. இதேவேளையில் ஜோர்ச் ஓர்வெல் நைன்ரீன் எயிட்ரி(Nineteen Eighty) போரிலும் அனிமல் பாமிலும்(Animal Farm) ஒருகட்சி அரசியலையும் சர்வாதிகார அமைப்புகள், எப்படி சமூகத்தையும் தனிமனிதர்களையும் தன்வயப்படுத்துகிறார்கள் என்பதையும் படம் போட்டுக்காட்டினார். சாதாரணமான மனிதர்கள் கேட்கக் கூடும். “எழுத்தாளர் பத்திரிகையாளர்களை எதற்காக மற்றவர்களிலிருந்து வேறுபடுத்த வேண்டும்”என்று. அத்துடன் இவர்களும் மற்றவர்கள் போல்தானே என்பார்கள். இது நியாயமான கேள்வியாகப் படலாம். ஒருவரை வைத்தியராக்கும் போது அவரிடத்தில் தனிமனிதரின், சமுகத்தின் உடல் ஆரோக்கியத்தில் அவரது அறிவு பயன் படவேண்டும் என நினைப்புது போல் எழுத்தாளர், பத்திரிகையாளர்களிடம் சமூகம் எதிர்பார்ப்பது சமூக அழிவுகள் இடர்கள் வரும்போது தொலைநோக்குப் பார்வையில் உண்மையை கூறவேண்டும் என எதிர்பார்க்கிறது. இவைகளை கட்டாயமாக செய்யவேண்டுமா? என ஒருவர் கேட்டால் நான் சொல்வேன். திருமணமாகிய பின் ஆணும் பெண்ணும் விசுவாசமாக இருப்பது அல்லது எங்கள் குழந்தைகளை பெற்றோரை முதுமையில் பாதுகாப்பது என்பது போல இவை மனத்தில் வரித்துக்கொண்ட ஒரு சமுதாய ஒப்பந்தம். இப்படியான ஒப்பந்தங்கள் எல்லா சமூகத்திலும் உள்ளன. ஒரு சமூகம் தன்னை ஆள விரும்பி போராடிய போது இந்தப் போராட்டத்தின் தன்மைகள், உள்ளமைப்புகள் இதன் விளைவுகளை சீர்தூக்கி அலச வேண்டிய கடமை தமிழ் எழுத்தாளர் பத்திரிகையாளர்கள் மற்றும் சிந்தனை வாதிகளுக்கு இருந்தது. இந்தக் கடமையை எத்தனை பேர் உணர்ந்து செயல்பட்டார்கள் என்ற கேள்வி இப்போதாவது கேட்கப்பட வேண்டியது. ரஷ்யாவில் கம்யூனிச அடக்குமுறையை எதிர்த்து நாட்டை விட்டு வெளியேறியவர் அலக்சாண்டர் சொல்ஸனிட்சின் ( Alexzander Solzhenitsyn ) அதேபோல் செக்கோஸ்லவேக்கியாவில் வர்லாவ் ஹாவல் (Varlav Havel) எழுத்தாளராக இருந்து அரசை எதிர்த்ததனால் சிறையிலடைக்கப்பட்டார். அறுபது வருட ஈழத் தமிழ் அரசியல் வரலாற்றில் உணர்வு ரீதியாகப் பேசி சிறைக்குச் சென்றவர் கவிஞர் காசி. ஆனந்தன். இதன்பின்னர் மற்றைய இயக்கங்களிலும் இப்படியானவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் பெரிதாகி மாற்று இயக்கங்களை அழிக்கவும் தமது அரசியல் எதிர்ப்பாளர்களை கொலை செய்யவும் தொடங்கியபோது சில விரல் விட்டு எண்ணக் கூடிய எழுத்தாளர்களைத் தவிர மற்றவர்கள் மக்களையோ, ஜனநாயகத்தையோ பற்றிச் சிந்திக்காது இனத்தின் பெயரால் விடுதலைபுலிகளுக்கும் அதன் தலைவருக்கும் புகழ் பாடும் சரித்திரப் புலவர்கள் ஆக மாறினர். பல்கலைக்கழகத்தினர் மிகவும் கீழ்தரத்தில் இறங்கி சேவகர்கள் ஆகினர். இந்த நடைமுறையினை எதிர்த்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இரண்டுபக்கத்துக்கும் அஞ்ஞாது மனித உரிமைகளை பதிவாக்கியவர் பேராசிரியர் இராஜன் கூல். என்னைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர் சரித்திரத்தில் இவர் ஒரு முக்கிய புருஷர். இவருடன் உறுதுணையாக பலர் இருந்தார்கள். உயிர் நீத்த ரஜினி போன்ற எழுத்தாளர்கள், விடுதலைப் புலிகள் இப்படித்தான் இருப்பார்கள் என எமது சமூகத்திற்கு எடுத்துக் காட்டினார்கள். இதனை எமது அரசியல் வாதிகள் சிந்தனை வாதிகள் புத்திஜீவிகள் கண்டுகொள்ள மறுத்தார்கள். உயிர்ப்பயத்தால் கண்டுகொள்ள பயந்தவர்களை மன்னிக்கலாம். ஆனால் பாசிசத்தை வடிவமைத்து அதற்கு போர்க்கால இலக்கியம் எனப் புதுப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர்களை என்ன செய்வது? இப்படியானவர்கள் மட்டும் இன்றி, பரந்த தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கூட இலங்கையில் அழிவைத் தேடி நடத்திய அதிதீவிரவாதிகளின் விளையாட்டை இக்கால புறநானுறாகப் பார்த்து மகிழ்ந்தார்கள். அதி தீவிர திராவிடம் பேசுபவர்கள் இத்தீவிரவாதிகளின் இந்திய விரோத நடவடிக்கைகளை இந்திய பேரரசை எதிர்க்கும் தமிழ் வீரமாகவும் போற்றி, அவர்களது அழிவைத் துரிதப்படுத்தினார்கள். தமிழ் நாட்டில் எழுத்தாளர் ஜெயகாந்தன் பத்திரிகையாளர் சோ ஆகிய இருவரும் மாத்திரமே மிக ஆரம்பத்திலேயே இந்த அதிதீவிரவாதத்தைச் சரியாக அடையாளம் கண்டவர்கள். “ இத்தீவிரவாதிகள் இந்தியாவுக்கும் நண்பர்கள் அல்ல. தமிழர்களுக்கும் நண்பர்கள் அல்ல. இவர்கள் இலங்கைத்தமிழர்களுக்கும் நண்பர்கள் அல்ல. ஏன் இவர்கள் தங்களுக்கே நண்பர்கள் அல்ல” இவ்வாறு, ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஈழ விடுதலை இயக்கத் தலைவர் பத்மனாபாவின் இரங்கற் கூட்டத்தில் பேசியபோதுகூறினார். என்ன தீர்க்கதரிசனம்? வெளிநாடுகளில் அதிதீவிரவாதங்களை விமர்சிக்க, அதன் தவறுகளைக் கண்டிக்க முற்றாக சுதந்திரம் இல்லாவிடிலும் தேவைக்கு மேல் சுதந்திரம் இருந்தது. குறைந்த பட்சம் அந்ததந்த நாடுகளின் அரசாங்கங்களின் பாதுகாப்பும் கிடைத்திருக்கும். இதைச் செய்யவும் பெரும்பாலான புலம் பெயர்ந்த சிந்தனையாளர்கள் தவறிவிட்டார்கள். தவறுகள் நடந்து விட்டன. இதன் விளைவாக எமது சமூகம் நடுத் தெருவில் வந்து விட்டது. இனிமேலாவது இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் கருத்துகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள் நேர்மையாக சுதந்திரமாக சிந்தித்து செயல் பட்டால்தான் எமது சமூகம் முன்னேற வாய்ப்புண்டு. ஈழத்தமிழ் இலக்கியம்,புலம் பெயர்ந்த இலக்கியம் போர்க்கால இலக்கியம் என பெருமை பேசிக்கொண்டு திரிந்தால் மட்டும் அறிவார்ந்த இலக்கியம் வளர்ந்துவிடாது. எத்தரப்பில் வன்கொடுமை நிகழ்ந்தாலும் அதனை அறிவார்ந்த சிந்தனையுடன் இலக்கியமாகப் படைக்கும்போது அதன் தரம் உயரும். எமது சகோதர இனமான சிங்கள இனத்தவர்களிடம் அவர்களுக்கே உரிய தனித்துவமான இயல் இசை நாடக சினிமா மரபு உள்ளது. நாம் தமிழ்நாட்டின் தொங்கு தசையாக இருக்கும் நிலை மாறி எமக்கான புது வடிவங்கள் உருவாக வேண்டும். அதற்குப் புலம் பெயர்ந்தவர்கள் அறிவுபூர்வமாக உதவ வேண்டும். நன்றி பூமராங் (ஆவுஸ்திரேலியா 24/5/2010) |
மறுமொழியொன்றை இடுங்கள்