தற்கொலைக்கு போராடும் பூனை

( இது ஒரு அனுபவ பகிர்வு) – நடேசன்

“மூன்று நாட்களாக விஸ்கி ஒன்றும் சாப்பிடவில்லை” என எழுபது வயதான கொலின் தனது கறுப்பு வெள்ளைப் பூனையை மார்பில் அணைத்தபடி கூறினார். அவரது பிரித்தானிய உச்சரிப்பு இரசிக்கக் கூடியதாக இருந்தது. அவரது பூனைக்குப் பெயர்தான் விஸ்கி.

“மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருப்பது சீரியசான விடயம். இதை விட வேறு குணக்குறைகள் உள்ளதா” எனக்கேட்டபடி பூனையை பரிசோதித்தேன்.

பசி, காமம்,  மரணம் …இந்த உலகத்தில் நித்தியமானவை. அவுஸ்திரேலியாவில் உள்ளவர்கள் வருமான வரியையும் இத்துடன் சேர்க்கவேண்டும் என்பார்கள் இவற்றில் பசியை புத்தபகவானாலும் வெல்ல முடியாமல் இருந்தது. அவரது முதன்மைச் சீடரான ஆனந்தாவுக்கு அளிக்கப்பட்ட நஞ்சு கலந்த உணவைத் தான் உண்டு ஆனந்தாவை காப்பாற்றியதன் மூலம் புத்தரின் போதனைகள் காப்பாற்றப்பட்டதாக புதிய தகவல்கள் கூறுகின்றன. பலர் காமத்தை வென்றதாகக் கூறினாலும் இவர்கள் கூறும் காமம் ஆண்-பெண் உடல் உறவு மட்டுமே.

ஓரின சேர்க்கை. சுயஇன்பம் ஏன் தொடுதல் பார்வையால் ஏற்படும் காம உணர்வுகள் என்பனவும் ,காமத்தில் பல கிளைகளாகும். இந்தக் கிளைகளை வீழ்த்தியவர்கள் சரித்திரத்தில் குறிக்கப்படவில்லை. இதே போல் சகல உயிர்களும் மரணத்திடம் தோற்றுப் போய்விடுகின்றன. மரணத்தை வெல்ல முடியாத போதிலும் பின் போடுவது அல்லது முடியாத பட்சத்தில் நோயின் வேதனையை குறைப்பதே வைத்தியத்துறையின் தாரக மந்திரம்.

சாவை விரும்பும் நோயாளியை எந்த வைத்தியத்தாலும் காப்பாற்ற முடியாது என வைத்தியர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். நோயில் இருந்து வெளிவர விரும்பும் எண்ணம் வேண்டும். இல்லாவிடில் நோயை தீர்க்க முடியாது. இதேபோல் மிருகவைத்தியர்களான எங்களுக்கு குணப்படுத்த முடியாத நோயினால் வளர்ப்பு பிராணியின் உரிமையாளரின் கவலை நீடிக்கிறது. பணம் விரயமாகிறது. அத்துடன் அந்த நோயினால் வளர்ப்பு பிராணி துன்பம் அடைகிறது எனும் போது உரிமையாளரின் சம்மதத்துடன் கருணைக்கொலை (Euthanasia) செய்வோம். இது மிருக வைத்தியர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் என பல தடவை நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.

மிருக வைத்தியராகத் தொழில் பார்த்த கடந்த இருபத்து ஏழு வருடத்தில் விஸ்கி போன்ற ஒரு பிராணியை சந்திக்கவில்லை. மிருகங்கள் சாப்பிடாத காரணத்தைப் பரிசோதித்தால் ஏதாவது ஒரு நோய் இருக்கும். அவை மனிதர்கள் போல் வீம்புக்கு பட்டினி கிடப்பதில்லை. நோயை தீர்க்க முடிந்தால் அவைகள் குணமடைந்து உணவை உண்ணும். தங்கள் உடல் நிலையை மனிதர் போல வாயால் கூறாத போது மிருகங்களின் உடல் நலக்குறைவை உரிமையாளர்கள் புரிந்துகொள்வது உணiவு உண்ணாததைப் பார்த்த பின்புதான். இதை வைத்துதான் எமது வைத்திய பரிசோதனை தொடங்கும். பசி என்பது உடலாலும் உணர்வுகளாலும் கட்டுப்படுத்தப்படும். நரம்பு மையத்தால் (Appetite Centre) இரசாயன பொருட்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. உடல் உள நோய்களின் போது இந்தத் திரவங்கள் வயிறு நிரம்பியது போன்ற உணர்வைக் கொடுப்பதால் பசி ஏற்படுவதும் இல்லை. இதைவிட வற்புறுத்தி சாப்பிடும்போது வாந்தி (Vomiting Centre)எடுப்பதற்களான ஒரு நரம்பு மையம் ஓவர்ரைம் வேலை செய்து வெளிக்கொணர்கிறது.

விஸ்கி எனும் 13 வயதுப்பெண் பூனை உண்ணவில்லை. விஸ்கியை பரிசோதித்த போது எதுவித நோய்க்கான அறிகுறியும் தென்படவில்லை. இரத்தத்தை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியபின் எனது கிளினிக்கில் வைத்து விற்றமின்களையும் மற்றும் திரவ ஊட்டங்களையும் இரத்த நாளத்தினால் செலுத்தினேன்.இரத்த பரிசோதனையில் எதுவித வித்தியாசமும் இருக்கவில்லை. பலவிதமான பூனை உணவுகளை கொடுத்துப்பார்த்தாள் எனது நர்ஸ். இரண்டு நாட்கள் எங்களது சகல முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

திருமதி கொலினை அழைத்து எங்களது இயலாமையை சொன்னோம். “நீங்கள் விஸ்கியை வீட்டுககு எடுத்து செல்லலாம். அல்லது ஸ்பெசலிஸ்ட் ஒருவருக்கு அறிமுக கடிதம் தருகிறோம்.”என்றேன்

‘நான் கற் விஸ்பரர்( Cat whisperer) இடம் கொண்டு போய் காட்டுகிறேன்’ என்று விஸ்கியை எடுத்து சென்றார கொலின்;. மனிதர்களுக்கு மனதை அறிந்து கொள்ளும் சைகோலஜிஸ்ட் இருப்பதுபோல் மிருகங்களுக்கும் இப்போது உண்டு. இவர்களை அனிமல் பிகேவியறிலிஸ்ட்(Animal Behaviorist) என்போம். இவர்கள் அறிமுகமாவதற்கு முன்னர் கற் விஸ்பரர்,  டோக் விஸ்பரர்கள் (Dog whisperer) மற்றும் ஹோர்ஸ் விஸ்பரர்(Horse whisperer) என இருந்தார்கள். இவர்கள் இக்காலத்திலும் இருக்கிறார்கள்.

திருமதி கொலின் நான் விரும்பிய எந்த ஸ்பெசலிஸ்ட்டிடமும் செல்லாமல் கற் விஸ்பெரர் இடம் செல்ல விரும்பியது எனக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அவரது செயலில் ஒரு காரணம் இருந்ததை உணர்ந்தேன். ஸ்பெசலிஸ்ட்களை பார்ப்பதற்கு அதிக பணம் செலவாகும். இந்த கற் விஸ்பரர்கள் டோக் விஸ்பரர்கள் குதிரை விஸ்பரர்கள் போன்றவர்கள். மிருகங்களின் நடத்தையை புரிந்து கொள்வதன் மூலம் அவற்றை பழக்குபவர்கள். குதிரைகளுக்கு வலியை உருவாக்கி பணிய வைப்பதைத் தவிர்த்து அவைகளின் உடல் மொழியை புரிந்து கொண்டு அவற்றை பழக்கும் முறையை இந்த குதிரை விஸ்பரர்கள் செய்யத்தொடங்கினார்கள். பழைய காலத்தில் இந்த முறை இருந்தாலும் அது பரம்பரையாக வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது புத்தகங்களில் எழுதப்பட்டு நூல் வழிக் கல்வியாக வந்தது. இந்தக் குதிரை விஸ்பரர்களைத் தொடர்ந்து நாய்கள் பூனைகளின் உடல் மொழிகளை புரிந்துகொளப்வர்கள் டோக் விஸ்பரர்கள் கற் விஸ்பரர்கள். இவர்கள் துன்புறுத்தப்பட்ட பூனைகள், அடிவாங்கிய நாய்களின் உடல் மொழிகளைப் புரிந்து கொண்டு அவற்றிற்கு இனிமேல் இப்படியான ஒரு துன்பம் வரமாட்டாது என அவற்றிற்கு புரியப் பண்ணி புதிய வழியில் பழக்கத்தை உருவாக்குவது இவர்களின் வழியாகும். மனோதத்துவ மருத்துவத்தில் சொல்லப்படும் Cognitive therapy .

இரண்டு கிழமைகளின் பினனர் தமது மகனுடன் வந்த திருமதி கொலின், விஸ்கியை கருணைக் கொலை செய்வதற்கான பத்திரத்தை எனது நர்சிடம் வாங்கி நிரப்பினார்.

‘கற் விஸ்பரர் என்ன சொன்னார்?’ என விடயத்தை அறிவதற்குக் கேட்டேன்.

‘இந்த விஸ்கி மரணத்தை விரும்புகிறதாம். காலம் தாழ்த்;தாமல் கருணைக்கொலை செய்யுங்கள்’- திருமதி கொலினின் இரு கண்களிலும்; கண்ணீர் வழிந்தது.

“அம்மா இதை இரண்டு கிழமைக்கு முன்பு செய்திருக்க வேண்டும்’ என மகன் தனது கருத்தை வெளிப்படுத்தினான்.

“விஸ்கியை கருணைக்கொலை செய்வது எனக்கு இலேசான விடயம் அல்ல” என்று திருமதி கொலின் கூறியபோது நான் எதுவும் பேசாமல் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு எனது வேலையை முடித்தேன்.

திருமதி கொலினும் மகனும் போன பின்பு “விஸ்கியும் மனிதர்கள் போல் தற்கொலைக்கு இரண்டு கிழமையாக முயன்றிருக்கிறது.” என எனது நர்சுக்கு கூறினேன்.

ஆனால் அவளுக்கு அந்த வார்த்தைகள் பிடிக்க வில்லை என்பது அவளது முகத்தில் தெரிந்தது. –

–0–

“தற்கொலைக்கு போராடும் பூனை” மீது ஒரு மறுமொழி

  1. மு. வேல்முருகன் Avatar
    மு. வேல்முருகன்

    உங்கள் கதைகள் ஒவ்வொன்றும் புதிய தகவல்களைத் தருகின்றன. அருமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: