
சிறு வயதில் நயினாதீவில் படிக்கும் போது அப்புவின் உடன் பிறந்த சகோதரிகளான இரு மாமிகள் வீட்டில் இருந்தேன். இதில் பெரிய மாமி சாது. மரியாதை உண்டு. ஆனால் சின்னமாமி மேல் அதிகமாக பிடிக்கும். வெள்ளை நிறமும் உயரமான தோற்றமும் கொண்டவர். நிலத்தை கூட்டும் போது கூட எனது மாமி தலை குனிந்து பார்த்ததில்லை. எவரோடும் எடுத்தெறிந்து பேசும் தன்மையும் நடக்கும் போது நிமிர்ந்து பார்த்தபடி தான் நடப்பது வழக்கம். அக்காலத்தில் மாமிக்கு பக்கத்தில் செல்வது பெருமையான விடயம். ஒரு பட்டாளம் பாதுகாப்புக்கு வருவது போன்ற உணர்வு எனக்குள் ஏற்படும். ஊரில் எவரும் மாமியோடு எதிர்த்து பேச துணிவதில்லை யாரோ பலகாலத்துக்கு முன்பு பேசிய போது மாமி இனிமேல் ஒரு வார்தை பேசினால் உனது வாயை கிழிப்பேன் எனக் கூறி இருந்தார் அந்த எச்சரிக்கையை சட்டை செய்யாத ஒரு பெண்ணி;ன் வாயை வெத்திலை போடாமலே மாமி சிவக்க வைத்தது பலர் சொல்லி கேட்டுள்ளேன்.
இவ்வளவு பெருமை கொண்ட மாமி நயினாதீவில் ஒரு சீட்டு முதலாளியாக இருந்தார். இந்த சீட்டு விடயத்தை நான் கேள்விப்பட்டதே அக்காலத்தால்தான். மாத இறுதியில் எல்வோரும் காசு கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். தவணை தவறுவது கிடையாது . மாமி இதே வேளையில் சதத்தில் கூட கணக்கு தவறாமல் சீட்டை எடுப்பவர்களுக்கு கொடுத்துவிடுவார். நான் பெரியவனாகி பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த போது ஒரு முறை மாமி இந்த சீட்டு விவகாரம் இன்னும் செய்கிறீர்களா என்று கேட்போது மாமி சொன்ன வசனம் இன்னமும் நினைவிருக்கிறது.
“உன்ர மாமனின் உழைப்பை நம்பி இருந்தால் மாத்தி கட்ட சீலை இருந்திராதடா”
மாமியை எந்த நிலை இந்த சீட்டு விடயத்தில் தள்ளியது என புரிந்து கொண்டேன்
இந்த சீட்டு விடயத்தை நான் இலங்கையின் சிங்களப் பகுதிகளிலோ தமிழ் நாட்டிலோ கேள்விப்பட்டதில்லை. அத்துடன் எனக்கு புரியாத விடயங்களில் ஒன்றாக நினைத்து விட்டுவிட்டேன்.
பின்பு கனடாவுக்கு சென்ற போது யாழ்ப்பாணத்தில் எங்களுகு;கு அயல் வீட்டில் இருந்த ரீச்சர் ரொரண்ரோவில் சீட்டு முதலாளியாக இருந்ததாகவும் அவரது வீட்டில் பல்லாயிரக்கணக்கான பணத்தை யாரோ கொள்ளை அடித்ததாகவும் கேள்விப்பட்டேன். அப்ப நினைத்தேன் யாழ் மண்ணின் விழுமியாமான இந்த சீட்டு விடயமும் புலம் பெயர்ந்து விட்டது என்று.
நான் வவுனியாவில் வேலைசெய்த காலத்தில் கேள்விப்பட்ட தமிழ் சொல் மீட்டர் வட்டி.
நீங்கள் சொல்லலாம் மீட்டர் ஆங்கில சொல் என்று. உண்மைதான். ஆங்கிலமும் தமிழும் செய்த உடல் உறவில் பிறந்தாலும் இது தமிழ் சொல்லாகவே வவுனியா வர்த்தகர்கள் மத்தியில் வாழ்ந்து வந்தது. எங்கட இலங்கையில் பறங்கியர் பலர் கொழும்பில் சிங்களவராகவும் மட்டக்களப்பு யாழ்ப்பாணத்தில் தமிழராகவும் வாழந்தது போல.
இந்த மீட்டர் ரக்சியின் மீட்டரை குறிப்பதாகும். பணத்தை 20-30 வீதத்தில் வட்டிக்கு தானியங்களையோ மற்றும் உணவுப் பொருட்களை லொரிக்கணக்கில் வாங்கி சில நாட்களில் உடனே மற்ற வர்த்தகர்களுக்கு விற்று கடனை அடைப்பது. ஒரு சில நாட்களில் இந்த கடன் அடைக்கப்படுவதால் வட்டி வீதம் வாங்குபவருக்கு பாதிப்பதில்லை. இதே வேளையில் உணவுதானியங்கள் உடனுக்குடன் விற்பனைக்கு போவதால் இந்த மீட்டர் வட்டியை முதல் இல்லாத தரகு வியாபாரிகள் பாவித்து இலாபம் அடைவார்கள். இலங்கையை போன்ற நாட்டில் பணத்தை வங்கிகளில் பெற முடியாத காரணத்தால் இந்த முறை நியாயப்படுத்தப்படுகிறது.
தற்போதைய தகவலின் படி இந்த மீட்டர் வட்டியும் சீட்டோடு புலம் பெயர்ந்து விட்டது. மெல்பனில் இதில் பலர் பாதிக்கப்பட்டு மனம் வருந்துகிறார்கள்
இந்த அவுஸ்திரேலியாவில் எந்த பெரிய கொம்பனியும் பத்து வீதம்தான் வருமானத்தில் இலாபம் சம்பாதிக்கும் . அதுவும் வங்கிகளும் இன்சூரன்ஸ் கொம்பனிகளும் மட்டுமே. அவுஸ்த்ரேலியவில் வெற்றிகரமாக இயங்கும் வூல்வேத் கம்பனியின் வருட வருமானம் 27 பில்லியன் ஆனால் இலாபம் 1 பில்லியன்( இவர்கள்தான் அவுஸ்திரேலியாவில் 35 வீத உணவு மற்றும் மளிகைப்பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதாவது வருமானத்தில் 4 வீதம் மட்டுமே இந்த வருடம் இலாபம் கிடைத்தது. இதேவேளையில் சொந்தமாக தொழில் நடத்தும் வைத்தியர்கள் கூட ஆகக்கூடியது 25-28 வீதம் தான் இலாபம் பெறமுடியும்.
இந்த நிலையில் 30 வீதம் கடனை பெற்று எந்த தொழில் நடத்த முடியும்? இப்படி பணம் வாங்குபவர்களு;ம் சரி பணம் கொடுக்கிவர்களும் சரி மூளையை வேறு ஏதாவது இடத்தில் அடைவு வைத்து இருக்கவேண்டு;ம்;. இப்பொழுது இருக்கும் வட்டி வீதத்தை இன்னும் இரண்டு வீதத்தால உயர்த்தினல் ஆவஸ்திரேலிய அரசாங்கம் கவிழ்ந்து விடும். இப்படி 1-2 வீதத்திலே நிலைமை இருக்கும் போது 30 வீதத்திற்கு நிலைமை எப்படி இருக்கும்?
எமது சமூகம் அரசியல் பாடத்தில் வாங்கிய மார்க்குகள் கூழ் முட்டைக்கு சமானம். பொருளாதாரத்திலும் இதே முட்டைதானா?
—
கடந்த கிழமை ( 1-11-22) சிட்னி சென்றபோது புதிதான ஒரு மோசடியைக் கேள்விப்பட்டேன் . ஒருவர் ஏராளமான விமான சீட்டுகளை வாங்கி குறைந்த விலையில் விற்றார். பலர் மலிவு விலையென ஏராளமாக வாங்கியிருந்தனர் : ஆரம்பத்தில் மலிவு விலையாகப் பயணமும் செய்தார்கள். ஆனால் இறுதியில் அவர் பணத்தோடு கம்பி நீட்டி விட்டார். இதேபோல் வாகனம் விற்பனையிலும் ஈடுபட்டார். ஜெர்மன் வாகனங்களை மலிவு விலையில் பலருக்கு வாங்கி கொடுத்தார். பலர் நம்பி 50000 டாலர்கள் கொடுத்து 100000 டாலர் விலையான வாகனங்களை வாங்கக் காத்திருந்தார்கள். இறுதியில் அவர்களுக்கு நாமம்தான்.
உண்டியலுக்குள் சிறு தொகையைப் போட்டு விட்டு பெரிய தொகையை லாட்டரி பரிசுத்தொகையை எதிர்பார்க்கும் சாதாரணமான மக்களல்ல இவர்கள். இதில் ஏமாந்தவர்கள் படித்தவர்கள் : வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள் போன்றவர்களே இதில் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடவேண்டும்.
இவை எல்லாம் பண நோட்டானதால்( கறுப்புப் பணம்) பொலிசைக்குப் போகமுடியாது என்பதும் பரிதாபம்.
மறுமொழியொன்றை இடுங்கள்