– நடேசன்
நான் அறிந்தவரை காட்டு விலங்குகள் மூன்று விதமாக இரை தேடும்
ஒன்று: மந்தையாக இரை தேடிச் செல்பவை. அவற்றுக்கு பாதுகாப்பு தேவையானது. . அத்துடன் அவை இரையாகும் இனத்தை சேர்ந்தவை. மான் மரை மற்றும் காட்டெருமை போன்றவை ஒன்றைத்தொடர்ந்து மற்றொன்றாக பாரிய மந்தைகளாகச் செல்லும்.
இரண்டாவது: சிறு கூட்டமாக சென்று வேட்டையாடுபவை. நாய்கள் மற்றும் கழுதைப்புலிகள் இந்த ரகம்.
மூன்றாவது: தனி ஒரு மிருகமாகச் சென்று இரை தேடும் புலி , சிங்கம் ஆகிய விலங்குகள்.
இப்படியான மூன்று இயல்புகளையும் கொண்ட மனிதர்களும் நம்மில் இருக்கிறார்கள்..
சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் எட்டாயிரம்பேர் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இது கிட்டத்தட்ட இலங்கைத்தமிழரில். ஒரு முப்பத்து ஐந்து வீதமாக இருக்கலாம். அதேசமயம் இலங்கைத்தமிழரில் அக்கறை கொண்டவர்களில் இவர்கள் எண்பது வீதமாக இருக்கலாம். ஏனென்றால் பலவருடகாலத்தின் முன்பு இலங்கையில் இருந்து வெளியேறியவர்களுக்கு ஊரில் உறவினர்கள் இல்லை. அதனால் அக்கறையும் இல்லை. இதை விட வேறுபலவிடயங்கள் அவர்களுக்கு முக்கியமாக இருக்கலாம். அத்துடன் இந்த வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லாதவர்களும் இங்கு இருக்கிறார்கள்
இந்த வாக்கெடுப்புக்கு ஆவுஸ்த்திரேலிய டாலரில் எண்பதினாயிரம் (80,000) . இலங்கைப் பணத்தில் 8 மில்லியன் ரூபா. ஒரு அவுஸ்திரேலியத்தமிழரின் வாக்கின் விலை – 1000 இலங்கை ரூபா கனடாவில் வட்டுக்கோட்டை வாக்கெடுப்புக்கு 300000 கனேடியன் டாலர்கள். மீண்டும் நாடு கடந்த ஈழத்திற்கு அதே அளவு பணம் விரயமாகும். இந்தப் பணத்தில் எத்தனை குடும்பங்களை வாழவைக்கலாம்?
இப்பொழுது நாடுகடந்த தமிழ் ஈழம் திருவிழா ஆவஸ்திரேலியாவில் துவங்கிவிட்டது. சிட்னி வாமன ஊடகர்கள் தங்கள் வாய்த்திறனை காட்டிக்கொள்கிறார்கள் வட்டுக்கோட்டைத்தீர்மானம் மற்றும் நாடுகடந்த தமிழ் ஈழம் ஆகிய கோஷங்களினால் இலங்கையில் தமிழ்மக்கள் பயனடையாவிட்டாலும் இதில் பங்குபெறுவோரின் மெய்க்கீர்திகள் தமிழ்நெற் போன்ற ஊடகங்கள் மூலம் தமிழ் பேசும் நல்லுலகம் எங்கும் செல்லும்.
இது உடலை புல்லரிக்கும் விடயம் அல்லவா? உண்மையில் இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை.
2003இற்குப் பின்பு விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பை தன் கையில் எடுத்துக்கொண்ட காஸ்ரோ பல நாடுகளிலும் கே பத்மநாதனால்வால் முன்பு ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்ட பணச்சேகரிப்பை, சிறு ஒப்பந்த முறையில் முகவர்களை வெளிநாடுகளில் நியமித்தது மட்டுமல்லாமல், ஏற்கனவே அந்தந்த நாடுகளில் இருந்தவர்களை நீக்கிவிட்டு, வன்னியில் இருந்து இளையவர்களையும் புதியவர்களையும் அனுப்பி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இந்த முறை அதிகமாக ஐரோப்பாவில் நடந்தது. சமாதான காலத்தில் பலராலும் நோர்வேயை நோக்கி அகதியாகவும் மாணவர்களாகவும் போக முடிந்ததும் இதற்கு அனுகூலமாக இருந்தது. இப்படியானவர்களால் முற்றாக ஐரோப்பிய பணவிடயங்கள் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் இவர்களால் ஆயுதக்கொள்வனவில் திறமையாக செயல்படமுடியவில்லை. அமெரிக்காவில் இவர்கள் பிடிபட்டது மற்றும் இவர்களது கப்பல்கள் இலங்கைக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டது என்பன பழைய கதை.
இவர்களின் தலைவரான காஸ்ரோ இறந்தாலும் இவரால் அனுப்பப்பட்ட நெடியவன் குழுவினரும் அவரைச் சேர்ந்த சிறு தொகையினரும் தற்பொழுது வெளிநாட்டில் பெரும் பணத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். முக்கியமாக சுவிட்சர்லாந்து நோர்வே போன்ற நாடுகளில் இவர்கள் பலமாக இருக்கிறார்கள். இவர்களால் எடுத்துவரப்பட்டதுதான் இந்த வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு. இதன்மூலம் வெளிநாட்டுத் தமிழர்கள் தங்கள் ஒருங்கிணைப்பின் கீழ் இருககிறார்கள் என்ற எண்ணத்தை தமிழர் மத்தியில் விதைக்க முயலுகிறார்கள்.
இவர்களுக்கு இப்பொழுது யார் எதிரி? இலங்கை அரசாங்கமா? அல்லது ராஜபக்ஷாக்களா? இல்லை.
இவர்களின் எதிரி கேபி என்ற பத்மநாதனும், அவரால் முன்மொழிந்து விடப்பட்ட உருத்திர குமாரும் அவரது குழுவான நாடுகடந்த தமிழ் ஈழக்காரரும்தான். நாடு கடந்த தமிழ் ஈழக்காரர் தமிழ்ச் சமூகத்தில் படித்த உயர்மட்டத்தவர்கள். இவர்கள் எக்காலத்திலும் போராட்டத்திற்காக வீடு வீடாகச் சென்று பணம் சேர்த்தவர்கள் அல்ல. தமிழ்தேசியத்தின் மேல் பற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே. இவர்கள், தமிழ் தேசியத்துக்காக அறிக்கை விட்டு உணர்ச்சியோடு பேசிவிட்டு போகும் ஊரில் உள்ள தமிழ் தேசிய அணிக்கு இணையானவர்கள். இவர்களின் இலட்சியம் உள்ளுரில் தமிழ் தேசிய அணி போல், வெளிநாட்டு அரசாங்கங்களுடன் இலங்கைத்தமிழர் உரிமைக்காக கோட்டு சூட்டும் அணிந்து பேசவேண்டும் என்பதே. இவர்களை உருவாக்கிவிட்டு விட்டு கேபி பத்மநாதன் சென்றதன் பின்பு இவர்கள் புலி வாலைப் பிடித்தது போன்று முன்னாலேயே சென்றாக வேண்டும், வேறுவழியில்லை.
வட்டுக்கோட்டை தீர்மானக்காரர் பணத்தை வைத்திருப்பவர்கள். இவர்கள் மேல் தற்போது பல ஐரோப்பிய நாடுகள் கண் வைத்திருக்கின்றன. கடந்த மாதங்களில் ஜெர்மனியில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதைவிட நெதர்லாந்தில்; தமிழ்மக்களின் பேரில் சேர்க்கப்பட்ட 42,000 யுரோக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதும் செய்திகளில் வந்தது. இந்த நிலையில் 99 வீதமான வெளிநாட்டுத் தமிழர்கள், இந்த சூக்குமம் தெரியாமல் சிங்களவர்கள் மீதும் இலங்கை அரசாங்கத்தின் மீதும் உள்ள கசப்பினால் வட்டுக்கோட்டைதீர்மானக்காரரும் நாடுகடந்த தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்களும் ஒன்றுதான் என நினைத்து இலங்கை அரசுக்கு மேலும் சகுனப்பிழையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இலங்கை வாழ் தமிழர்களுக்கு மண்டைபிளந்தாலும் இவர்களுக்குப்பரவாயில்லை
விடுதலைப்புலிகளின் தலைவர் இருக்கும் வரை அவர் ஏகத்தலைவராக இருந்ததால் மற்றவர்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரும் வெளிநாட்டு புலி ஆதரவுத்தமிழர் மற்றும் விடுதலைப்புலிப் போராளிகள் அனைவரும் சேர்ந்து பூச்சியங்களாகி வலிமை சேர்த்தார்கள். இப்பொழுது அந்த ஒன்று அதாவது அந்த ஏகம் நந்திக்கடலில் மறைந்த பின்பு மற்றவர்கள் எல்லாம் பூச்சியமாகிவிட்டார்கள். நெல்லிக்காய் மூட்டையாக சிதறிப்போனார்கள்.
இவர்களுக்கு நான் நினைவூட்ட விரும்புவது என்னவென்றால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், கேபி பத்மநாதனை வாரிசாக நியமிக்கும் போது சொன்னதைத்தான் ” எமது போராட்டம் சமாதானமாக இருக்கவேண்டும். கஷ்டப்படும் மக்களை துன்பத்தில் இருந்து மீட்கவேண்டும். போராளி இளைஞர்களை காப்பாற்றவேண்டும்” இந்த வார்த்;தைகள் மிக மிக இறுதி காலத்தில் பிரபாகரனிடம் இருந்து வந்தாலும், சுடலை ஞனம் என கூறத் தோன்றினாலும் தற்போதைய காலத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்தவை. இவ்வளவு காலமும் ஆயுதத்திற்குப் பணம் கொடுத்த வெளிநாட்டு தமிழர்கள் தமிழ் ஈழம் தாயகம் என்ற கோட்பாடுகளிலிருந்து வெளிவந்து சாதாரமான மக்களை உயிரும் உடலும் சதையும் இரத்தமும்கொண்டவர்களாக பார்க்கவேண்டும்.
மார்க்சிசம் தேசியம் ஏன் சமய சித்தாந்த கோட்பாடுகள் கூட புத்திசாலிகளால் சாதாரண மக்களை உணர்வுகள் மூலம் கட்டுப்பாட்டில் கைப்பொம்மையாக வைத்திருக்க உருவானவைதான். எந்தக் கோட்பாடும் மனித உயிர் போல் புனிதமானவை இல்லை.
இப்பொழுது ஆரம்பத்தில் கூறப்பட்ட மூன்று வகை மனிதர்களில் யாராக இருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யவேண்டும்.
இந்த கடடுரையின் கருத்துகளை அனுப்பவதற்கு uthayam12@gmail.com
மறுமொழியொன்றை இடுங்கள்