சுகு-ஸ்ரீதரன்

சுகு சிறிதரன்

திருநிலை- புனிதப்படுத்தப்பட்டவை மீதான தீவிரமான கேள்விகள்

நடேசனின் எக்சைல் மற்றும் கானல் தேசம் இரண்டு நூல்களும் சமகால கவனத்திற்குரியன.
படைப்பு சுதந்திரம் ஒரு சமூகத்தின் சுயவிசாரணை தொடர்பாக அவை முக்கியத்தும் வாய்ந்தன.
எக்ஸைல்

“முறிந்த பனை” 1990 களின் முற்பகுதியில் பரவலாக பேசப்பட்டது. அக்காலத்தில் அது தமிழ் “புனிதங்களை” பற்றி கேள்வி எழுப்பியதால் பூசிப்பவர்களின் கடும் சினத்திற்குள்ளானது.

அதனை வாசிப்பவர்களும் அதனை வினியோகிப்பவர்களும் உயிராபத்தை எதிர் கொள்ளும் நிலை நிலவியது.
இலங்கையின் எந்த தமிழ் புத்தக கடையிலும் அதனை காண முடியவில்லை, இன்றளவில்! நீண்டகாலத்திற்கு பின் சென்னை புத்தக கண்காட்சி ஒன்றில்.

நடேசன் யுத்தம் முடிந்து 9 ஆண்டுகளின் பின் எக்சைல், கானல்தேசம் ஆகிய படைப்புக்களை தந்துள்ளார்.
எக்ஸைல் அவரது சிறு பராய நினைவுகளில் இருந்து ஆரம்பித்தாலும் 1980களில் இருந்து ,
இன சமூக உறவுகளின் சிதைவையும் தனது சொந்த வாழ்க்கையின் அனுபவக் கூறுகள் சிலவற்றையும் பதிவு செய்கிறார்.
குறிப்பாக 1983 இலிருந்து 87 இலங்கை இந்திய- ஒப்பந்தம் வரை.
சமூகங்கள் மனிதர்களிடையே உறவின் சிதைவின் வேதனை அனுபவங்களில் தொனிக்கிறது.
இன-மதரீதியில் பிளவுண்டு போகையில் மனித உறவுகளின் உயிர் ஊசலாட்டத்தை,
அடிப்படையில் ஒரே மாதிரி இதயம் கொண்டவை இந்த கற்பிதங்களின் கருஞ்சுழியில் எவ்வாறு சிக்கி திணறுகின்றன.

வடமத்திய மாகாண கிராமங்களில் சூழலில் மிருகவைத்திய தொழிலை செய்தவருக்கு அங்கு நிலவிய நட்பான சூழல் வெள்ளாந்தியான மனிதர்கள்

1983 இன் மனங்கசந்து போகச் செய்த நிகழ்வுகள்

யாழ்ப்பாணத்திலும் வாழ்வதற்கான இடைவெளி குறைந்ததன் அனுபவங்கள் யாழ் ஆஸ்பத்திரிவீதியிலும்,
எங்கே செல்லும் இந்த பாதை என்பதுபோல் மன்னாரில் கப்பல் ஏறியது.

ராகுல்ஜி சங்கிருத்தியன் தனது தரிசனங்களை ஓயாத இந்திய ரயில் பயணிகளிடையே மேற் கொண்டார்.
கோர்க்கி தனது நாடோடி போன்ற வாழ்க்கையில் பல தரிசனங்களை கண்டார்.

நடேசனும் பயணங்களும் தேடல்களும் கொண்டவர்.

அனுரதபுரமாவட்ட கிராமங்கள்- ராமநாதபுரம்- புயல் பாதுகாப்பு மையங்களில் அகதிளாக வந்திருந்த மக்கள்
நைல் நதி தீரத்தின் வரலாறும் வாழ்க்கையும் பண்பாடும்,

தென்னமெரிக்க பூர்வகுடிகள்

கம்பூச்சியா இந்தோ சீனம் என பரந்த தேடல்.

பள்ளிக் கால நண்பர்கள் சிலர் இயக்கத்திற்கு போனபின் எவ்வாறு அந்நியமனிதர்கள் ஆனார்கள்.
அகதிகளுக்கான மருத்துவசேவை மீது திணிக்கப்பட்ட இயக்க அரசியல் பின்னர் நேர இருந்த விபரீதங்களுக்கான அறிகுறிகளாக இருந்ததை சென்னையின் அராஜகமான வாழ்க்கையும்- தட்ப வெப்பமுமான நிலையில் தடைகளை தாண்டி அகதிகளான மக்களுக்கு மாத்திரமல்ல காயமடைந்த போராளிகளுக்கு சேவை செய்வதில் இருந்த பிரம்ம பிரயத்தனங்கள்,
சமூக நலன் என்று கருதி ஒற்றுமையாக செயற்படுவதில் அந்த நாட்களிலேயே இருந்த இழுபறி,
இவற்றுக்கும் மேலாக கிடைத்த உதவிகள் -தன்னலமற்ற மனிதர்கள் -ஜெய்பூர் கால்கள்
பற்றாக்குறைகள் கெடுபிடிகள் மத்தியில் அர்ப்பணத்துடன் செயற்பட தயாராயிருந்த சகமனிதர்கள், இயக்கங்களிடையே சென்னையில் நிலவிய உரசல்களும்- உறவும் -சமூக அக்கறையும் மானிட நேயம் கொண்ட தலைவர்களும- பெரியவர்களும்.

சமூக உறவின் மீதான நெருடல்களும்- அனுராதபுரம் போதிமரத்தின் கீழ் நடத்தப்பட்ட படுகொலைகள் போன்றவை, சென்னையில் வசித்த தென்னிலங்கை முற்போக்காளர்களிடையே உருவாக்கிய அதிர்ச்சியளிப்பதும் சங்கடமான மனநிலையையும்
1980 களின் நடுப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் உறவுகள் சிதைவடைந்தபோது போராட்டதில் பங்குபற்ற வந்த

முஸ்லீம் இளைஞருக்கு ஏற்பட்ட சங்கடமான நிலையையும் அதனை புரிந்து கொண்டு நடந்த இயக்க தலைவரையும்,
எழுத்தாளரான தனது கணவரைத் தேடி தோளில் குழந்தையை சாய்த்தபடி இயக்கவாசலில் நின்றவரின் அலநிலையையும்,
இயக்க சமூக ஒற்றுமைக்காக பிரயாசையுடன் உழைத்த தலைவர்களையும் ,இயக்கங்களின் பொதுவான போக்காக ஜனநாயக மறுப்பு ,அராஜகம் ,அர்ப்பணம் ,மெலிந்த தோற்றமுடைய இயக்காரர்கள்.

இயக்காரியாலயம் ஒன்றில் மார்க்ஸ்லெனின் ஏங்கல்ஸ் படங்கள்
அங்கு வந்து சென்ற வடஅமெரிக்காவுக்கு புலம்பெயசந்த உறவினரின் பிரதிபலிப்பு.
குடும்பங்களின் சிதறுண்டநிலை.
சென்னையின் தகிக்கும் வெயில் வசதி குறைந்த இருப்பிடம்
சென்னை சில அரசியல்வாதிகளின் நிலப்பிரபுத்துவபாணி உறவு நிலை
ஈழப்போராடத்தின் ஆராஜக நிலையின் சாரம்சமாக நடேசனின் அனுபவங்கள்
சூழைமேடு, ராமநாதபுரம் நாகபட்டினம் காரைக்கால் எழிலகம் ஒபர் சக்காரியா காலனி
சாலிக்கிராமம்

ஜெய்பூர் டெல்லி என மருத்துவ சேவைக்கான அலைச்சல்

சாந்தி ராஜசுந்தரம், சிவனாதன், ஜெயகுலராசா ,வாசுதேவா, சந்ததியார் ,டேவிட் ஐயா ,தமிழக அமைச்சர் அரங்க நாயகம் சந்திரகாசன் ,அரிச்சந்திரா , யோகி, குணசேகரம் ,விசாகன் தேவானந்தா, பத்மநாபா, ஸ்ரீசாபாரத்தனம,; உமாமகேஸ்வரன், கிருபாகரன், கும்பகோணம் ஸ்ராலின் அண்ணா, டொக்டர் பிரமோத்கரன் சேத்தி என சந்தித்த மனிதர்கள்

அகதிகளான மக்களுக்கும் காயமடைந்த போராளிகளுக்கும் மருத்துவபணி செய்வதில் இருந்த அராஜகசூழலில் சவால் மிக்க பணியாக அது அமைந்ததையும் பின்னர் நிகழவிருந்த ஜனநாயகவிரோத விபரீதங்களுக்கான குணங்குறிகள் மருத்துவசேவை செய்யும் சூழலிலேயே வெளிப்படத்தொடங்கியதையும் அவரின் அனுபவம் பதிவு செய்கிறது.

அண்மைய வழமையாக ஏதோ ஒன்றை புனிதமாக ஏற்றுக் கொண்டு எழுதவேண்டும் பேச வேண்டும் என்பது தமிழர் தரப்பில் எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. இந்த விதிக்கு கட்டுப்படாதவர்கள் அவர்கள் அரசியல் சமூகம் பத்திரிகை இலக்கியம் எத்துறையினராக இருந்தாலும் துரோகிகள்- அந்த விதி மெல்ல அழிவடைந்து வருகிறது.

நாவலும் அனுபவமும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற போக்கில் எமது சூழலில் ஒரு ஜனநாக விரோத உள்ளடக்கம் ஒழிந்துகொண்டிருக்கிறது. அது தகர வேண்டும்.

வரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ

கருணாகரன்.

கவிஞர் கருணாகரன்

“வரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ” என்ற எண்ணமே பலரையும் அரசியல் குறித்துச் சிந்திக்க வைக்கிறது. சிந்திக்க மட்டுமல்ல, அரசியலில் செயற்படவும் வைக்கிறது. அது நேரடியான பங்கேற்பாகவும் இருக்கலாம். சற்று இடைவெளி கொண்ட ஆதரவாகவும் இருக்கலாம்.

அதுவும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் நிகழ்கின்ற காலத்தில் அல்லது இன ரீதியான அரசியல் விவகாரம் என்று வந்து விட்டால் இதைச் சொல்லவே தேவையில்லை. இந்த உணர்வு ஒரு உந்துதலாக அல்லது ஈர்ப்பாக மாறி எங்கெங்கோ கொண்டு சென்று விட்டு விடும். அன்றைய விடுதலைப்போராட்ட காலத்திலும் சரி, அதற்கு முன்பின்னான காலத்திலும் சரி இது ஒரு பொதுக்குணமாகியுள்ளது.

நடேசனும் ஒரு காலத்தில் இப்படித்தான் சிந்தித்திருக்கிறார். அதனால் கஸ்ரப்பட்டுப் படித்துக் கிடைத்த வைத்தியத்தொழிலையும் விட்டு விட்டுக் கடல் கடந்து தமிழ்நாட்டுக்குச் சென்று, அங்கே ஈழப்போராட்டத்துக்குத் தன்னால் முடிந்த எதையாவது செய்யலாம் என்று முயற்சித்திருக்கிறார். நடேசனின் துணைவியும் தன்னுடைய மருத்துவர் தொழிலை விட்டு விட்டுக் கணவனோடு சென்று அங்கே ஈழ ஆதரவுப் பணியாற்றினார்.

அது 1980 களின் முற்பகுதி.

நடேசனையும் அவருடைய மனைவியையும் போலப் பலர் தங்களுடைய தொழில், வாழ்க்கை எல்லாவற்றையும் புறமொதுக்கி விட்டு ஈழப்போராட்டத்துக்காக, இன விடுதலைக்காகச் செயற்பட்டிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் பட்ட சிரமங்கள், ஏற்றுக்கொண்ட துயரங்கள் கொஞ்சமல்ல.

டொக்ரர் ராஜசுந்தரம், டேவிற் ஐயா, டொக்ரர் ஜெயகுலராஜா, டொக்ரர் சிவநாதன், நடேசன், சியாமளா நடேசன், கேதீஸ், மனோ ராஜசிங்கம், சாந்தி சச்சிதானந்தம் என்று ஏராளம் பேர்.

இவர்களெல்லாம் போராளிகளல்ல. ஆனால், போராளிகளுக்குச் சற்றும் குறைவானவர்களுமல்ல. இப்படிச் செயற்பட்டவர்களின் உணர்வுகளையும் அர்ப்பணிப்பான வாழ்க்கையையும் இன்று நாம் திரும்பிப் பார்க்கும்போது இவற்றுக்கு இந்தப் போராட்டம் எத்தகைய பெறுமானத்தை வழங்கியது என்ற கேள்வி எழுகிறது.

டொக்ரர் நடேசன் இதற்குத் தன்னுடைய அனுபவங்களைச் சாட்சியாக வைத்து ஒரு மீள் பார்வையைத் தன்னோக்கில் செய்திருக்கிறார். “எக்ஸைல் – 84” என்ற தலைப்பில் இந்த அனுபவங்களின் தொகுப்பு இப்பொழுது நமக்கு நூலாகவும் கிடைக்கிறது. இதைப் படிக்கும்போது நமக்குப் பல உண்மைகள் புலனாகின்றன. புதிய தரிசனங்கள் கிடைக்கின்றன. அதேவேளை நம்முள் எழுகின்ற கேள்விகளுக்குப் பதிலாகவும் உள்ளன. பதிலாகக் கேள்விகளையுப்புகின்றன.

அனுபவமும் வரலாறும் தருகின்ற கொடை இதுதான். அதிலும் அரசியலுடன் தொடர்புடைய வரலாறு என்பது ஏராளம் சிக்கல்கள், சிடுக்குகள் நிறைந்தது. அதே அளவுக்குச் சுவாரசியமும் துக்கமும் நிரம்பியது.

அரசியல் வரலாற்றுக்கு எப்போதும் மூன்று பக்கமுண்டு. ஒன்று நிகழ்காலம். மற்றைய இரண்டும் எதிர்காலம், கடந்த காலம் என்பதாகும். இந்த மூன்று காலத்திற்கும் இடையில் ஊடாட்டமாக அமைவது நமது படிப்பினைகளே. கடந்த காலப் படிப்பினைகளே (அனுபவங்களே) நிகழ்காலத்தில் செயற்படுவதற்கான பாடங்களையும் புதிய சிந்தனைகளையும் தருகிறது. இதைப் பயன்படுத்தி நிகழ்காலத்தைச் சரியாகச் செயற்படுத்தும்போதே எதிர்காலம் சிறப்பாக உருவாக்கப்படும்.

ஆகவே நடேசனின் “எக்ஸைல் 84” நமது கடந்த காலத்தின் கனவையும் அந்தக் கனவின் யதார்த்தத்தையும் துல்லியப்படுத்திக் காண்பிக்கிறது. நம்பிக்கையளித்த போராட்டம் எப்படி நம்பிக்கையீனமாக மாறியது?. அந்தக் கால கட்டத்திலேயே போராட்ட இயக்களிலும் இயக்கங்களுக்குள்ளும் இருந்த உள் விடயங்கள். வெட்டியோடுதல்கள். முதன்மைப்பாடுகள். இயக்கங்களில் இருந்த முக்கியமான ஆளுமைகள். அவர்களின் குணாதிசயங்கள் எனப் பலதை எக்ஸைல் வெளிப்படுத்துகிறது. தன்வரலாறு அல்லது ஒரு காலப் பதிலாக வரும் எழுத்துகள், திரைப்படங்களில் இத்தகைய சுவாரசியமான அம்சங்கள் இருப்பதுண்டு.

ஏற்கனவே தோழர் சி புஸ்பராசாவின் ”ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்”, செழியனின் “வானத்தைப் பிளந்த நாட்கள்” புஸ்பராணியின் “அகாலம்” கணேசன் ஐயரின் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்” எனப் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளன. இதை விட வெவ்வேறு நபர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள், பதிவுகள், நினைவு மீட்டல்கள் எனப் பலவும் உண்டு.

இவை நமக்களித்தவை ஏராளம். முக்கியமாகப் படிக்க வேண்டிய பாடங்கள். மீள் பரிசீலனைக்கும் விவாதத்துக்குமுரிய அடிப்படைகள்.

நடேசனின் “எக்ஸைல்” 1984 – 1987 வரைக்குமான காலப்பகுதியில் நடேசன் ஊடாடிய சூழலை மையமாக வைத்து நம்முடன் உரையாடுகிறது.

முதல் அத்தியாயம் இலங்கையிலிருந்து தமிழ் நாட்டுக்குச் செல்வது, அதற்கான சூழல் பற்றிய விவரிப்பு. இது நிகழ்வது 1984 இல்.

இறுதி அத்தியாயம் தமிழ் நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி விமானம் ஏறுவது. இது நிகழ்வது 1987 இல்.

இடைப்பட்ட நான்கு ஆண்டுகால நிகழ்வுகளே இந்தப்பதிவுகள் அல்லது வெளிப்படுத்தல்கள், அல்லது பகிர்வுகள்.

இதை நாங்கள் மூன்று வகையாகவும் பொருள் கொள்வது அவசியம். ஒன்று பதிவு என்ற அடிப்படையில். இதைப் பதிவு என்று கொண்டால், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த விடுதலைப்போராட்டச் சூழல் எப்படியாக இருந்தது என்பதை அறியலாம். இன்றைய அரசியலுக்கும் அது அவசியமானது.

இதனை இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தும் குறிப்பொன்று கீழ்வருமாறு துலக்கப்படுத்துகிறது. “ஈழத்துக்கான ஆயுதப்போராட்டம் அதன் ஆரம்ப எத்தனிப்புகளுடன் தீவிரமடைந்த 80 களின் முற்பகுதியில் பிரதானமாகச் செயற்பட்ட ஐந்து இயக்கங்களினதும் தலைவர்கள், தளபதிகளுடன் ஊடாடிய அனுபவங்களின் வழியாக ஆயுதப்போராட்டத்தின் முடிவு வந்தடைந்த விதத்திற்கான காரணங்களை இன்று நாம் உய்த்தறிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்தப் பதிவுகள் வழங்குகின்றன” என்பதாகும்.

இதைப்போல இதை நடேசன் வெளிப்படுத்தல்களாகச் செய்திருக்கிறார் என்றால், ஈழப்போராட்டம் என்பதை ஒற்றைப் பரிமாணமாகப் புலிகளோடு சுருக்கிப் பார்க்கும் இன்றைய நிலைக்கு இந்த வெளிப்படுத்தல்கள் முக்கியமானவை. கூடவே சவாலை உருவாக்குபவையாகவும் உள்ளன. இந்த வகையில் நடேசனின் இந்த வெளிப்படுத்தல்கள் மறைக்கப்படுவதற்காக எழுப்பப்படும் சுவரைத் தகர்க்கும் முயற்சி. உண்மையின் ஒளியை அதன் இயல்பான ரூபத்தில் வரலாற்றின் முன்னே வைக்கும் பணியும் எனலாம்.

இது பகிர்வு எனக் கொண்டால், ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றில் தானும் ஒரு சக பயணியாக இருந்ததன் விளைவாக ஏற்பட்ட பொறுப்பு, தோழமை, சாட்சியம் ஆகியவற்றின் நிமித்தமாக, தன் சாட்சியத்தை – தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாகும். இது அடுத்தடுத்த தலைமுறைகளிடத்திலும் தன்னைப் பகிர்வதன் மூலமாக அவர்களுக்கும் இந்தக் கால கட்டத்தின் வரலாற்று நிகழ்ச்சிகளை விரித்துக் காட்டுவதாக அமைகிறது. அதன் சாட்சிகளில் ஒருவர் இவற்றை நேர் நின்று பகிர்ந்து கொள்வதாகும்.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை அல்லது இலங்கையில் நிலவிய இன ஒடுக்குமுறை ஈழ விடுதலைப் போராட்டமாக மேற்கிளம்பிய 1970 களில் இருந்து தொடங்கும் இந்தப் பதிவானது (பகிர்வு அல்லது வெளிப்படுத்தல்) இன்றைய அரசியல் வரையிலான கால நிகழ்ச்சிகளின் ஊடே தமிழ் அரசியல் சிந்தனையையும் செயற்பாட்டையும் ஒரு குறுக்கு விசாரணைக்குட்படுத்துகிறது.

1983 வன்முறைக்குப் பிறகு உருவான இன நெருக்கடி அரசியற் சூழலில் தென்பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் இள வயது மருத்துவரான நடேசனின் மனதில் ஒரு கேள்வி எழுகிறது.

“வரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ” என்ற கேள்வி.

அன்று இயக்கங்களை நோக்கி விடுதலைப்போராட்டத்துக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்று கொண்டிருக்கும்போது இந்தக் கேள்வி, நடேசனின் மனதில் எழுந்திருப்பது இயல்பானது. பொது நிலையில் சிந்திக்கும் எவரிடத்திலும் இத்தகைய கேள்விகள் எழுவே செய்யும். அன்று எங்களிடம் எழுந்த கேள்வியும் இதுதான்.

இந்தக் கேள்வியினால் உந்தப்பட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட அரசியலில் கலந்தனர். ஆனால், அந்தப் போராட்ட அரசியலானது பல முதிராத்தன்மைகளையும் தன்னிலை, முன்னிலைகளையும் தனக்குள் கொள்ளத் தொடங்கியதால் போராட்டம் பெரு வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனை நடேசன் அதனோடிணைந்து பயணித்த சக பயணியாக அப்போதே அவதானித்துணர்ந்திருக்கிறார்.

இத்தகைய உணர்நிலைகள் அந்தக் காலத்தில் இருந்த பலருக்கும் மனதில் ஏற்பட்டதுண்டு. ஆனால், யதார்த்தச் சூழல் அவர்களால் சுயாதீனமாக முடிவெடுக்கவும் முடியாது. சுதந்திரமாகச் செயற்படவும் முடியாது. அப்பச் செயற்பட முயன்றால் அவர்கள் தமது சகபாடிகளால் – இயக்கத்தவர்களால் – சுட்டுக் கொல்லப்படுவர் என்ற அச்சம் இருந்தது.

இந்த நிலையில்தான் பெரும்பாலான இயக்கங்களின் உட்கட்டமைப்புக் காணப்பட்டது. சில இயக்கங்கள் மட்டும் சற்று விலக்கு.

இந்த நிலையில் தன்னுடைய தொழிலையும் விட்டு, குடும்பத்தின் எதிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் போராட்டத்துக்கு ஆதரவாகச் சென்ற நடேசன் பலருக்கு ஒரு அடையாளம். அவருடைய அனுபவங்களும் வெற்றி தோல்விகளும் ஈழ அரசியலுக்கான முதலீடு.

இன்றைய தமிழ் அரசியல் இன்னும் சுழிக்குள்ளேயே சுழன்று கொண்டிருப்பது. ஓட்டியில்லாத படகைப் போன்றது. அதில் ஒரு சிறிய சுடரை ஏற்றுவதற்கும் சிறிய கை ஒன்றினால் சுக்கானின் கை பிடிக்கவும் தூண்டலை ஏற்படுத்துவதற்கு எக்ஸைல் என்ற இந்த அனுபவப் பகிர்வுகள் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. சரியான வெளிப்படுத்தல்களே சரியான வழிகாட்கள் என்பது இங்கே மனதில் கொள்ளத் தக்க ஒன்று.

நடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி

மகேந்திரன் திருவரங்கன்

இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகி விடும். இந்த யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுகின்ற நிலையில் வாழும் சமூகங்களாகவே நாம் இன்னமும் இருந்து வருகிறோம். யுத்தத்துக்குக் காரணமான அடிப்படை அரசியற் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு தொடர்ந்தும் தீர்வுகளை வழங்காது தமிழர்களையும், ஏனைய சிறுபான்மை இனங்களையும் இழுத்தடித்தும், ஏமாற்றியும் வருகிறது. இந்த யுத்தம் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் குறிப்பாக வடக்குக் கிழக்கிலே வாழும் சமூகங்களை மோசமாகப் பாதித்திருக்கிறது. மண் மீட்பு என்ற கோசத்துடனும், தேசிய விடுதலை என்ற வேட்கையுடன் ஆரம்பித்த போராட்டத்தின் துர்பாக்கியமான விளைவுகளிலே சிலவாக மக்கள் ஏற்கனவே தம்மிடம் இருந்த காணிகளை சிங்கள தேசியவாத அரசியலுக்கு அரணாக அமையும் இலங்கை இராணுவத்திடம் பறிகொடுத்ததும், தமிழ் மக்களின் மத்தியிலே கருத்துக்களை வெளியிடுவது தொடர்பிலே உளவியல் ரீதியிலான ஒரு சமூக அச்சம் உருவாகியமையும், இன முரண்கள் மேலும் கூர்மையடைந்தமையும், பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பும் அமைந்தன. போராட்டத்துக்கு முன்பிருந்த சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. வடக்கில் போருக்குப் பின்னர் இடம்பெற்று வரும் அரச ஆதரவுடனான வலிந்த‌ பௌத்த மயமாக்கம் சில வகைகளில் அதனது கோரத் தன்மை மேலும் அதிகரித்தும் இருக்கிறதனையே எமக்குக் காட்டுகிறது.

தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்துடன் இணைந்த வகையில் விடுதலை கோரி இயங்கிய இயக்கங்களினால் உருவாக்கப்பட்ட இராணுவமயமாக்கமும், அது ஏற்படுத்திய ஜனநாயக மறுப்பும், சமூகத்தின் சிந்தனைப் போக்கினைப் பொது வெளியிலே உறைந்து போகச் செய்துள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக போரினை நேரடியாக எதிர்கொண்ட சமூகங்கள் கடுமையான பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அரசினது மீள்கட்டுமாணப் பணிகளின் தோல்வியும், என். ஜீ. ஓக்களினை மையமாகக் கொண்ட அபிவிருத்தி முயற்சிகளின் தொலைநோக்கற்ற, கட்டமைப்பு சார் மாற்றங்களை ஏற்படுத்த முடியாத பார்வையும், இன்று போரினால் பாதிப்புற்ற சமூகங்கள் நுண் நிதிக் கம்பனிகளின் பிடியில் அகப்பட்டுப் போவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. இந்த ரீதியிலே போருக்குப் பின் உருவாகும் எழுத்துக்களின் பணி என்னவாக இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த எழுத்துக்கள் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் மற்றவர்களுக்கும் சொல்ல வரும் செய்தி என்ன? இவற்றின் வரலாற்றுப் பங்கு எத்தகையது? கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் இடையில் இவை எவ்வாறான ஊடாட்டங்களை ஏற்படுத்துகின்றன?

போருக்குப் பின்னைய காலத்திலே வடக்குக் கிழக்கிலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்கள் போரின் போது தாம் அடைந்த இழப்புக்களையும் அடக்கு முறைகளையும் பற்றித் தமது நாளாந்த வாழ்க்கையில் பன்மையான முறைகளிலே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உரையாடல்கள் புலிகள் உள்ளடங்கலாக எல்லா விதமான அதிகார மையங்களினாலும் இழைக்கப்பட்ட ஜனநாயக விரோத, விடுதலை விரோதச் செயற்பாடுகளைக் கேள்விக்குட்படுத்துவனவாகவே அமைகின்றன. ஆனால் பொதுவெளியில் தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் உரையாடல்களிலும், நினைவுகூரல்களிலும், வரலாற்று உருவாக்கச் செயன்முறைகளிலும் சமூகத்தின் கீழ் மட்டங்களில் அவதானிக்கப்படும் நுணுக்கமான வெளிப்பாடுகளுக்கும், பன்மைத்துவக் குரல்கள்களுக்கும் உரிய இடம் கிடைப்பதில்லை. அரசியற் கட்சிகளாக இருந்தாலும் சரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த‌ ஆசிரியர்கள், மாணவர்கள் சார்ந்த அமைப்புக்களும் சரி, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலான மத மற்றும் சமூகத் தலைவர்களையும், பல்துறைகளிலும் பணியாற்றுவோரினையும் உள்ளடக்கிய சிவில் சமூகக் குழுக்களும் சரி, தொழிற்சங்கங்களாக இருந்தாலும் சரி, வடக்குக் கிழக்கின் தமிழ்ப் பொது வெளியில் செயற்படும் முக்கியமான தரப்புக்களிலே, ஒரு சில தனித்த குரல்களைத் தவிர, கடந்த காலம் பற்றிய உரையாடல்களைத் திறந்த மனத்துடன் உரையாடுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே தொடர்ந்தும் இருக்கின்றன‌. ஆதிக்கத் தமிழ்த் தேசியவாத நிலைக்கு மாற்றாகவும், புலிகளின் அரசியலில் அவதானிக்கப்பட்ட பாசிசக் கூறுகளை விமர்சிப்பனவாகவும் அமையும் கலை, இலக்கியப் படைப்புக்களினைத் தடை செய்வதிலும், அவற்றுக்கு எதிராக வன்மம் மிக்க பிரசாரங்களை மேற்கொள்வதிலுமே எமது புத்திஜீவிகளிலே பெரும்பாலானோர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டிலே இடம்பெற்ற யாழ்ப்பாணத் திரைப்பட விழாவிலே ஜூட் இரத்தினத்தின் டீமன்ஸ் இன் பரடைஸ் (Demons in Paradise) என்ற படத்தினை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவு சமூகப் பொதுவெளிகளைத் தமது கட்டுப்பாட்டிலே வைத்திருக்கும் புலமைசார் மற்றும் மேற்தட்டு வர்க்கத்தினரின் ஆதிக்க அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

வெவ்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களின் ஒத்துழைப்பின் மூலமாகத் தமிழ்நாட்டிலே உருவாகிய‌ தமிழர் மருத்துவ நிலையத்திலே தான் பணிபுரிந்த நாட்களிலே இடம்பெற்ற சம்பவங்களினதும், அந்த நாட்களிலே தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களினதும் அடிப்படையில் எழுதப்பட்ட நினைவு மீட்டல் புத்தகமாக அண்மையில் வெளிவந்த‌ நோயல் நடேசனின் எக்ஸைல் என்ற நூல் அமைகிறது. இயக்கங்களினது ஜனநாயக மறுப்பு அரசியல் காரணமாக‌ அவற்றுடன் பொது நோக்கங்களுக்காகவும், சமூக மாற்றத்துக்காகவும், அரசியல் விடுதலையின் பொருட்டும் இணைந்து செயற்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட‌ நம்பிக்கையீனத்தினையும், விரக்தியினையும் இந்த நூல் உணர்வு பூர்வமாக வெளிக்கொண்டு வருகிறது. இது சிவில் யுத்தம் தொடர்பாகத் தமிழர் தரப்பின் மத்தியில் பெரிதும் பேசப்படாத சில பக்கங்களைப் பேசும் ஒரு நூல். செய்திப் பத்திரிகைகளிலும், தமிழ்த் தேசிய கருத்துருவாக்கிகளின் பத்திகளிலும் வெளிவராத சில‌ உண்மைகளையும், நினைவுகளையும், சம்பவங்களையும் இந்தப் புத்தகத்தில் இருந்து நாம் வாசித்தறியக் கூடியதாக இருந்தது. ஆயுதப் போராட்ட காலங்களில் நாடு கடந்த நிலையில் இடம்பெற்ற வன்முறைகள் பற்றி இந்த நூல் பல செய்திகளையும், குறிப்புக்களையும் தாங்கியதாக உள்ளது. தமிழ்த் தேசத்தினை மையமாகக் கொண்ட வன்முறைக்குத் தேசங்கடந்த ஒரு பரிமாணமும் இருக்கிறது என்பதனைச் சொல்லும் ஒரு நூலாக எக்ஸைல் அமைகிறது.

தேசம் கதை சொல்லுதலிலே வாழ்வதாக ஹோமி பாபா என்ற பின்காலனிய சிந்தனையாளர் குறிப்பிடுவார். தேசத்தின் கதைகளினைக் குறுகிய தேசியவாதம் எப்போதுமே தூய்மைப்படுத்தித் தனக்கு அசௌகரியமானவற்றினை பிரித்து நீக்கியே பெரும்பாலும் சொல்ல முற்படுகிறது. அவ்வாறு தேசியவாதம் தன்னை வெளிப்படுத்தும் போது ஏற்படும் அறிவு சார் வன்முறை சமூகத்தின் அரசியல் பிரக்ஞையின் மீதான ஒரு வன்முறையாகவும், பன்மைத்துவம், விடுதலை மற்றும் நீதிக்கான குரல்களின் மீதான ஒரு வன்முறையாகவும் அமைகிறது. தேசத்தின் உள்ளிருக்கும் முரண்கள், அதன் மையத்துக்கும், விளிம்புக்கும் இடையில் இருக்கும் உறவுகள், தேசத்தின் எல்லைக்கோட்டின் வெளியில் இருப்போருக்கும் அதன் உள்ளிருப்போருக்கும் இடையிலான கதைகள் போன்றன‌ வெளிக்கிளம்பும் போதே தேசியவாதத்தின், தேசத்தின் பேரில் இடம்பெறும் வன்முறைகள் வெளிவருகின்றன. இதுவே விடுதலை பற்றி நாம் மீளவும் புதிய முறையில் சிந்திக்க எம்மைத் தூண்டும். நோயல் நடேசனின் நினைவுப் பதிவுகள் தனியே அவரினது ஞாபகங்களின் தொகுப்பல்ல; அவை தேசத்தினைப் பற்றிய பதிவுகள்; எம்மத்தியிலே இருக்கும் தேசச் சிந்தனையின் போதாமைகளை வெளிக்கொண்டு வரும் விளிம்பில் இருந்து, அல்லது தேசத்தின் வெளியில் இருந்து தேசத்தினை நோக்கும் வகையிலாக‌, எம்மைச் சிந்திக்கத் தூண்டும் பதிவுகள். நாம் எமது வேறுபட்ட அனுபவங்களுடன், வேறுபட்ட நினைவுகளுடன், பன்மைத்துவத்தினை சிதைக்காத முறையில் நீதிக்காகவும், விடுதலைக்காகவும் மக்கள் மைய அரசியல் ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு எக்ஸைல் போன்ற பதிவுகளின் வாயிலாக வெளிப்படும் உண்மைகளும், உரையாடல்களும் முக்கியமானவை. இவை உண்மை, நீதி, நல்லிணக்கம் போன்ற செயன்முறைகள் வெவ்வேறு இனங்களுக்கு இடையில் மாத்திரமல்ல, கடந்த கால உள்ளக வன்முறையினால் பிளவுற்றுப் போயிருக்கும் தமிழ் மக்கள் மத்தியிலும் கூட இடம்பெற வேண்டும் என்பதனை அடிக்கோடிட்டுச் சொல்லுகின்றன.

விடுதலைப் போராட்ட இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட‌ படுகொலைகள் பற்றி எழுதும் நடேசன் உண்மைக்கான தேடல் என்பதனை நாம் கொலையாளிக்கும் அவர் சார்ந்த அமைப்புக்கும் தண்டனை வழங்குவதற்கான ஒரு செயன்முறையாகக் குறுக்கிவிடக் கூடாது என்பதனை வலியுறுத்துகிறார்; மாறாக இதனை பொறுப்புக் கூறலுடன் தொடர்பான செயன்முறையாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையினை அறிவதற்கான ஒரு சந்தர்ப்ப‌மாகவும், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு முயற்சியாகவும் நடேசன் காண்கிறார்.

ஈ-பி-ஆர்-எல்-எஃப் உள்ளடங்கலாக வெவ்வேறு இயக்கங்களில் அவதானிக்கப்பட்ட இனவெறி உணர்வுகளை இந்த நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்திலே மலையாளி ஒருவரினை ஈ-பி-ஆர்-எல்-எஃப் இயக்கத்தினர் சிங்களவர் எனக் கருதி எவ்வாறு தாக்கினர் என்பதனை நடேசன் வேதனையுடன் விபரிக்கிறார். இவ்வாறான‌ இனவெறி இயக்கங்களில் இருந்து வெளிப்பட்ட அவற்றுக்கே உரித்தான‌ ஒரு அகவயமான‌ வெறி அல்ல; இந்த இனவெறிக்கான‌ சமூகப் பொருளாதாரத் தளம் ஒன்று இருக்கின்றது என்பதனை நூல் எடுத்துக்காட்டுகிறது. வட அமெரிக்காவில் இருந்து வந்த சில புலம்பெயர் தமிழர்கள் தாம் ஒரு தொகைப் பணத்தினை வைத்திருப்பதாகவும், எந்த இயக்கம் கொழும்பிலே ஒரு குண்டுத் தாக்குதலினை மேற்கொள்வார்களோ அவர்களுக்கே அந்தப் பணத்தினைத் தாம் வழங்குவோம் என சென்னையிலே வைத்துத் தம்மைச் சந்தித்தோரிடம் அவர்கள் சொன்ன விடயத்தினையும் வாசிக்கும் போது எமது விடுதலையின் இலக்குகள் எவ்வாறு சமூகத்தினைச் சேர்ந்த பணபலம் மிக்கவர்களினால் மாற்றியமைக்கப்பட்டன என்பதனை நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. ஏனைய இனத்தவர் மத்தியிலே எமது போராட்டம் பற்றிய நம்பிக்கையினை நாம் கட்டியெழுப்புவதற்கு எமது சமூகத்திலே பலம் படைத்தவர்கள் எவ்வாறு இயக்கங்களைத் தடுத்திருக்கிறார்கள் என்பதனை நாம் இங்கு அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அதேவேளையிலே புலம்பெயர் சமூகங்களினைச் சேர்ந்தவர்களிடம் அவதானிக்கப்படும் இனவாதத்துக்கு அவர்கள் முன்னர் இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட முறைகளும், வன்முறைகளும் கூடக் காரணங்களாக அமைகின்றன என்பதனையும் நடேசன் மற்றொரு இடத்திலே சுட்டிக்காட்டுகிறார்.

இடதுசாரி நிலைப்பாடிலான தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்கள் அடிக்கடி கதைத்து வேதனைப்படும் ஒரு விடயம் சிங்கள இடதுசாரிகள் எவ்வாறு பேரினவாதத்தினைத் தழுவி சிறுபான்மையினரையும், அவர்களது நீதிக்கான போராட்டங்களினையும் கைவிட்டார்கள் என்பது. இந்த நூலிலே ஒரு பகுதியிலே நூல் ஆசிரியர் நடேசனுக்கும் சிங்கள இடதுசாரி செயற்பாட்டாளர் ஒருவருக்கும் இடையில் 1980களில் அநுராதபுரத்திலே சிங்களவர் மீது புலிகள் மேற்கொண்ட இனவெறித் தாக்குதல் பற்றிய ஒரு சம்பாசணை இடம்பெறுகிறது. இந்தச் சம்பாசணையில் இருந்து நான் விளங்கிக்கொள்வது யாதெனில் 1980களிலும் அதற்குப் பின்னரும் சிங்களவர்களின் மத்தியில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளைப் பற்றிப் பேசிய ஒரு சில சிங்கள இடதுசாரிகளையும் தமிழ் மக்களும், தமிழ் மக்களின் சார்பிலே போராடியவர்களும் எவ்வாறு கைவிட்டோம் என்பதனை; நாம் எவ்வாறு சிங்கள் இடதுசாரிகளை எமது வன்மம் மிக்கப் பதிலடிச் செயற்பாடுகளின் மூலமாக சிங்கள‌ சமூகத்தினை எதிர்கொள்ள முடியாது செய்தோம் என்பதனைப் பற்றியும், அவர்கள் தொடர்ந்தும் எமது போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைப்பதற்கு முட்டுக்கட்டையாகச் செயற்பட்டோம் என்பதனையும் போருக்குப் பிந்தைய காலத்திலே சிந்திக்க வேண்டியதன் அவசியத்தினை இந்த நூல் உணர வைக்கிறது. அநுராதபுரப் படுகொலைகள் நோயல்

நடேசன் தமிழ் இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்திலே நம்பிக்கை இழப்பதற்கும் காரணமாக அமைந்தன.

நடேசனின் அனுபவங்கள் தென்னிந்தியா தவிர இலங்கையில் அதிலும் தென்னிலங்கையிலே அவர் வாழ்ந்த காலத்திலே அவர் எதிர்கொண்ட சிங்கள‌ இனவாத நிகழ்ச்சிகள் பற்றியதாகவும் அமைகிறது. வடக்குக் கிழக்குக்கு வெளியிலே வாழும் தமிழர்கள் பற்றி எமது தமிழ்த் தேசியவாத அரசியல் பெரிதாகச் சிந்தித்தது கிடையாது. சர்வதேசத்திடம் எமக்கு நீதி கேட்கும் போது நாம் எமது நீதிக்கான கோரிக்கைக்களுக்கு வலுச் சேர்க்கும் கறிவேப்பிலைகளாகவே நாம் தென்னிலங்கையில் வாழும் தமிழர்களையும், அவர்கள் எதிர்கொண்ட இனவாதத்தினையும் பல சமயங்களிலே பயன்படுத்தி இருக்கிறோம். வடக்குக் கிழக்கினை மையமாகக் கொண்டு நாம் முன்வைக்கும் அரசியற் தீர்வுகளினால் வடக்குக் கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழருக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது என்பது பற்றித் தேசியவாதம் பேசும் பெரும்பாலானோர் சிந்திப்பதில்லை. சிங்கள-பௌத்தத் தேசியவாதிகள் தீவு முழுவதும் தமது சமூகத்துக்கே உரியது என்ற மனநிலையிலே செயற்படுகிறார்கள். தமிழ்த் தேசியவாதிகளிலே பலர் வடக்குக் கிழக்கிலே தமிழ்த் தேசத்துக்கு மாத்திரமே சுயநிர்ணய உரிமை இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். இந்த இரண்டு தரப்புக்களுமே வடக்குக் கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரசைகளாக‌ இருப்பதற்கு உரிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுவதற்குச் சார்பாகவே தமது கருத்துக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்வைத்து வருகிறார்கள். தனது அடையாளத்தினை மாற்றினால் ஒழியத் தென்னிலங்கையிலே நடேசனுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமையினைச் சிங்களத் தேசியவாதம் உருவாக்குகிறது எனில், வடக்குக் கிழக்கினை மையமாகக் கொண்ட‌ தமிழ்த் தேசியவாதம் தென்னிலங்கையினைச் சிங்கள தேசம் எனச் சொல்லிச் சொல்லியே அந்த நிலைமை நீடிப்பதற்கு வழிசெய்கிறது என்பத‌னை நாம் நினைவில் நிறுத்துவது நல்லது. ஒவ்வொரு பிரதேசத்திலும் சிறுபான்மையாக வாழும் மக்கள் பற்றி எமக்கு இருக்கும் கரிசனையின்மை காரணமாகவே வடக்கிலே இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதனையும் இங்கு மீட்டிப் பார்ப்பது பொருத்தமானது.

ஆயுதப் போராட்டத்தின் வரலாறு தவிர, சிலோனினைச் சேர்ந்தவர் என்ற அடையாளத்துடன் சென்னையில் நடேசன் எதிர்கொண்ட அனுபவங்களினையும் சுவாரஸ்யமான முறையிலே எக்ஸைல் பதிவிடுகிறது. நடேசனின் நூலிலே தென்னிந்தியாவுக்கும், வட இலங்கைக்கும் இடையில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளிலே இருந்த தொடர்புகள் குறித்தும், அரசுகளின் கண்காணிப்புக்களையும் மீறி மக்கள் வியாபார நிமித்தமும், தொழில் தேடியும் எவ்வாறு இரு இடங்களுக்கும் பயணம் செய்தார்கள் என்பது பற்றியும் விபரணம் மிக்க‌ முறையிலே சொல்லப்பட்டிருக்கிறது. காசியானந்தன் பிரபாகரன் மீது வைத்திருந்த அபரிமிதமான‌ ‘விசுவாசத்தினை’ நடேசன் நகைச்சுவை மிக்க முறையில் கூர்மையாக‌ விமர்சிக்கிறார். ரெலோ இயக்கத்தினர் தம்மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் இருந்து தமக்குப் பாதுகாப்பு வழங்குமாறு இந்தியாவினைக் கோரிய போதும், அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பினையும் இந்தியா வழங்காமையினைச் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் அவ்வாறான ஒரு நிலையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிலே சிலர் புலிகளையும் மக்களையும் 2009இல் இந்தியா காப்பாற்றும் என நினைத்தமை ஒரு முரண்நகை என எழுதுகிறார். பிராந்திய வல்லரசு எமது போராட்டத்திலே ஏற்படுத்திய அழிவுகளையும், குழப்பங்களையும் விமர்சிக்க நடேசன் தவறவில்லை.

நடேசனின் “எக்ஸைல்” குறித்து ஒரு பார்வை

சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்

— முருகபூபதி

—–

” ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்”

இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன.

அவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை – இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் – பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன. நீடித்த உள்நாட்டுப்போரின் பெறுபேறாகவும் இவற்றை ஏற்கலாம்!

அவ்வாறு எழுதியவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் நடேசன். இவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.

இவரது அத்தகைய படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. வடக்கில் சப்த தீவுகளில் ஒன்றென அழைக்கப்பட்ட எழுவை தீவில் பிறந்து, அங்கு ஆரம்பக்கல்வியைக்கற்று, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பை தொடர்ந்த காலத்தில் இலங்கை அரசியலின் அரிச்சுவடியும் தெரியாமல், அங்கு 1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கச்சென்றவர்.

அவர் தனது வாழ்நாளில் முதல் தடவையாக துர்மரணங்களை பார்த்து திகைத்துப்போனதும் அவ்வேளையில்தான். தமிழராய்ச்சி கண்காட்சி ஊர்தியால் மின்சார வயர் அறுந்துவிழுந்து அதன் தாக்கத்தினால் துடிதுடித்து இறந்தவர்களைப்பார்த்த திகைத்துப்போன ஒரு நேரடி சாட்சிதான் நடேசன்.

இவரது அந்த மாணவப்பருவம், அன்றைய அரசின் கல்வி மீதான தரப்படுத்தலையும் எதிர்கொண்டது. அக்காலப்பகுதியில் வடபகுதி மாணவர்களை அரசியல் எவ்வாறு ஆட்கொண்டது என்பதை இந்த நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார்.

” எனது வயதையொத்த இளைஞர்கள் அரசியல் சாயம் படாமல் தப்பமுடியாது. ஹோலி பண்டிகை காலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடாதவனும் வர்ணத்தை பூசிக்கொள்வதுபோல் அரசியல் வாடை என்னைத் தழுவியது.”

பாடசாலைக்கு கல்லெறியத்தொடங்கிய மாணவர்கள் எவ்வாறு இ.போ. ச. பஸ்ஸிற்கு கல்லெறிந்து பிரச்சினையை மேலும் கூர்மையாக்கினார்கள் என்பதிலிருந்து தமிழ்த்தலைவர்கள் தொடங்கிய சிங்கள ஶ்ரீ கார் இலக்கத்தகடுகளுக்கு தார் பூசும் இயக்கம், மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் நினைவுபடுத்தியவாறு, தமிழகத்திற்கு தப்பிச்செல்லும் இரண்டு குழந்தைகளின் தந்தையான ஒரு இளம் குடும்பஸ்தன், எதிர்நோக்கும் சம்பவங்கள், அவலங்கள், சந்திக்கும் நபர்கள், அவர்களின் குணவியல்புகள் முதலான பல்வேறு தகவல்களை இந்த எக்ஸைல் பதிவுசெய்துள்ளது.

நடேசன், ஆயுதம் ஏந்திய எந்தவொரு தமிழ் இயக்கத்திலும் இணைந்திராதுவிட்டாலும், அவற்றின் தலைவர்கள், தளபதிகள், மற்றும் போராளிகளுடன் உறவைப்பேணியிருப்பதும் தெரிகிறது.

இந்த நூலில் ஒவ்வொரு அங்கத்தையும் இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்டவர்களை சுயவிமர்சனம் செய்யத்தூண்டும் விதமாகவே எழுதியிருப்பதுடன் எமது சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்கு நீரிணை பிரித்தாலும் சினிமாவும், கடத்தல் சாமான்களும் எவ்வாறு நிரந்தரமாக இணைத்துவைத்தன என்பதை மிகவும் சுவாரஸ்யமாக ஒரு கதை சொல்லியாக பகிர்ந்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் இந்தியக்கரையில் இறங்கும்போது,கையில் பணம் இருந்தாலும் அதனை செலவிடாமல், எடுத்துச்சென்ற சிங்கப்பூர் குடை, லக்ஸ் சோப் முதலானவற்றைக்கொடுத்து சமாளிக்கும் காட்சியை அக்காலப்பகுதியில் இராமானுஜம் கப்பலில் பயணித்தவர்களுக்கு நினைவூட்டுகின்றார்.

பல இடங்களில் நடேசன், படிம உத்தியோடும், உவமான உவமேயங்களுடனும், அங்கதமாகவும் காட்சிகளை சித்திரிப்பதனால், இந்த நூலை வாசகர்கள் புன்னகையுடன் நகர்ந்து செல்ல முடியும்.

இராமேஸ்வரத்தில் இறங்கியதும் ரயில் ஏறி சென்னை செல்லாமல் அந்த ஊரைச்சுற்றிப்பார்க்கும் காட்சி ஒரு உதாரணம். காவி உடுத்த சந்நியாசி கோலத்தில் ஒருவர், இவர் சிலோன்காரன் என்பதை தெரிந்துகொண்டு அட்டையாக ஒட்டிக்கொள்கிறார். ஒரு கமண்டலத்தில் கிணற்று நீரை வைத்துக்கொண்டு கங்கா தீர்த்தம் என்று சொல்லிச்சொல்லியே இவரை வலம் வருகிறார். இவரும் அந்த நபரின் ஆக்கினை பொறுக்கமுடியாமல் அந்த ” தீர்த்தத்தை” பருகுகிறார். இவரிடமிருந்து அதற்கு பணம் கறப்பதுதான் அந்த நபரின் நோக்கம். அந்தக்காட்சியை இவ்வாறு சித்திரிக்கின்றார்: “பருத்தித்துணியில் பட்ட மசாலா குழம்பின் மஞ்சள் கறையாக தீர்த்தம் தந்தவர் ஒட்டிக்கொண்டார்”

நடேசனுடைய ஏழுவயது பருவத்தில் இவரது வீட்டுக்கு வாக்குக்கேட்டுவருகிறார் தமிழரசுக்கட்சி தலைவர் தந்தை செல்வநாயகம். அவரிடம், ” ஏனைய்யா இவ்வளவு தூரம் படகேறி வந்தீர்கள். ஒரு கங்குமட்டையை தமிழரசுக்கட்சி என்று நிறுத்தினாலும் ஊர்ச்சனம் அதற்கு புள்ளிடி போடும்” என்கிறார் நடேசனின் தாய் மாமனார் நமசிவாயம்.

இதிலிருக்கும் அங்கதம் இற்றைவரையில் தொடருகிறது. அந்த பெடறல் கட்சியை எதிர்த்து நிற்கும் தமிழ்க்காங்கிரஸ் வேட்பாளருக்கான கூட்டம், அக்காலத்தில் அந்தக்கிராமத்தில் மின்சாரம் இல்லாதமையினால் ஒரு பெட்ரோ மக்ஸ் வெளிச்சத்தில் நடக்கிறது. வந்தவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவு. அந்த பெட்ரோ மக்ஸ்ஸிற்கு கல்லெறிந்து குழப்புகிறது ஒரு இளம் தலைமுறை.

அன்று நிகழ்ந்த கல்லெறிதல்தான், காலப்போக்கில் துப்பாக்கி வேட்டுக்கள் என்று சொல்லவரும் நடேசன், “புடையன் பாம்பு அக்காலத்தில் குட்டியாக இருந்தது” எனச்சொல்லிவிட்டு அந்த அங்கத்தை கடந்து செல்கிறார்.

இவ்வாறு ஒவ்வொரு அங்கத்திலும் பல துல்லியமான காட்சிகள் வருகின்றன.

மதவாச்சியா, அநுராதபுரம் பிரதேசங்களில் மிருக வைத்திய பணிநிமித்தம் வாழ்ந்த காலத்தில் அமைச்சர் தொண்டமான் உட்பட பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பழகியிருப்பவர் நடேசன். அவர்களுடன் உறவாடிய பாணியிலேயே சென்னையில் கல்வி அமைச்சர் அரங்கநாயகத்துடனும் உரையாடும்போது, தமிழக திராவிட கலாசாரத்தின் பிரகாரம் வணக்கம் சொல்லாதமையினால், அமைச்சரின் அடியாளிடம் வாங்கிக்கட்டிக்கொள்கிறார்.

இரண்டு நாடுகளின் அரசியல்வாதிகளிடத்திலும் அடியாள்களிடத்திலும் நிலவும் வேறுபாடு இங்கு அம்பலமாகின்றது.

அத்துடன் கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் ஆசான்களை சேர் என விளித்துப்பழகியிருக்கும் இவரை சென்னையில் ஒரு ஓட்டோ சாரதி, ” சார், சார் ” என்று அழைத்தது திகைப்பையூட்டுகிறது.

இந்தக்காட்சிகளை வாசிப்பில் தரிசிக்கும் வாசகர்களும் குறிப்பாக இலங்கையர்கள் தங்கள் கடந்த கால நினைவுகளுக்குள் மூழ்கிவிடுவார்கள்.

இலங்கையில் இனமுறுகள் தோன்றிய காலத்தில் , தமிழர் தரப்பு நியாயங்களை ஏற்கும் நடேசனுக்கு, , மதவாச்சியில் முன்னர் பணியாற்றும்போது தன்மீதே ஒரு சந்தேகம் வருகிறது. ” எதிர்கால சரித்திரத்தில் பிழையான இடத்தில் நின்றுவிடுவேனோ” என்ற பயம் இவருக்கு வருகிறது.

இந்த இரண்டக வாழ்விலிருந்து விடைபெற்று தமிழகம் சென்று, மூன்று வருடங்களும் இரண்டு மாதங்களும் செலவிட்டவர், அக்காலப்பகுதியில் இணைந்திருந்த தமிழர் மருத்துவ நிலையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் மேற்கொண்ட பணிகளையும் ஆயுதம் ஏந்திய இயக்கங்களின் மத்தியில் குறைந்த பட்ச கருத்தொற்றுமையையாவது ஏற்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் ஆவணமாகவே பதிவுசெய்கிறார்.

இலங்கை – தமிழக, தமிழ் அரசியல் தலைவர்கள் ஆயுத இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் தொண்டில் ஆர்வம் காண்பித்த மருத்துவர்கள், ஆயுதத் தரகர்கள், இந்திய மத்திய உளவுப்பிரிவைச்சேர்ந்தவர்கள், காணமலாக்கப்பட்டவர்கள் என பலரும் இந்த எக்ஸைலில் வருகிறார்கள்.

எழுத்தாளர் காவலூர் ஜெகநாதன், வாழ்நாள் பூராவும் துறவியாகவே வாழ்ந்து ஈழத்தமிழர்களின் உரிமைக்கும் நலன்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்த டேவிட் அய்யா பற்றியும், வெலிக்கடை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள், மட்டக்களப்பு சிறை உடைப்பில் தப்பியவர்கள், இயக்கங்களுக்குள் நிகழ்ந்த துரோகங்கள், காட்டிக்கொடுப்புகள் பற்றியெல்லாம் விவரிக்கிறது இந்த நூல்.

ஈழப்போராட்டத்திற்கு ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டவர் சிங்கப்பூரில் கைதாகி மரணதண்டனைக் குற்றவாளியாகி, இறுதிநேரத்தில் அங்கு நேர்ந்த அரசியல் மாற்றத்தினால் தப்பிவந்து சென்னையில் அடைக்கலமாகின்றார்.

அவருடைய அடுத்த எதிர்காலத்திட்டம் என்ன தெரியுமா…? சென்னையில் ஒரு தோசைக்கடை வைத்து பிழைப்பது! இந்தக்காட்சி ஈழப்போராட்டத்தின் மொத்த வடிவத்தையே கேள்விக்குட்படுத்துகிறது. நல்லவேளை புலம்பெயர்ந்து சென்று, கடன் அட்டை மோசடியில் அவர் ஈடுபடவிரும்பவில்லை.

தமிழகத்தின் சாராயத்தையும் இலங்கை தென்பகுதி வடிசாரயத்தையும் ஒப்பிடும் காட்சிகளும் இந்த நூலில் வருகின்றன.

ஈழப்போராட்டத்தில் ஆயுதக்கலாசாரத்திற்கு பலியாகாமல், ஆயுதங்களை நேசித்தவர்களுடனெல்லாம் நெருங்கிப்பழகியிருக்கும் நடேசன், தனது இந்துக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழக வாழ்க்கை, வட மத்திய மாகாணத்தில் விலங்கு மருத்துவ பணி, தென்னிந்தியாவில் மருத்துவ நிலையத்தில் மேற்கொண்ட தன்னார்வத்தொண்டு, போரில் கால் ஊனமுற்றவர்களுக்காக ஜெய்ப்பூர் வரையும் சென்ற அனுபவங்கள் என்பனவற்றை விரிவாக நினைவுக்குறிப்புகளாக பதிவுசெய்துள்ளார்.

இந்த அனுபவங்களின் திரட்சியாக இவர் மெல்பன் வந்து இறங்கியதும் நடக்கும் சந்திப்பில், தனது கைக்குட்டையை எடுத்துக்காண்பித்து, “போரில் துன்புற்ற மக்களின் கண்ணீரைத்துடைப்பதற்கு இனியாவது பயன்படுங்கள்” என்ற வேண்டுகோளை விடுக்கின்றார்.

இந்த வார்த்தைக்குள்தான் சுயவிமர்சனம் மறைபொருளாகியிருக்கிறது.

போர் முடிவடைந்த பின்னர் வெளிவந்த பல நூல்கள், அதனை நியாயப்படுத்தியும் கேள்விக்குட்படுத்தியும் பூகோள அரசியலை முதன்மைப்படுத்தியும், தவறவிட்ட இராஜதந்திரங்களை சித்திரித்தும் வெளியாகியிருக்கும் பின்னணியில், எந்தப்பக்கமும் சாராத ஒரு மனிதநேய வாதியின் தார்மீகக்குரலாக நடேசனின் எக்ஸைல் ஒலிக்கிறது.

நனவிடை தோய்தல் உத்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் எமது வாசகர்களுக்கு புதிய வரவு. அவர்கள் இதுவரையில் பார்க்கத்தவறிய பக்கங்களை இந்த நூலில் தரிசிக்கலாம். எக்ஸைல் – இலங்கையில் மகிழ் பதிப்பகத்தின் புதிய வெளியீடு. நடேசனுக்கு எமது வாழ்த்துக்கள்.

அறிமுகம் “எக்ஸைல்”  எனது நோக்கு.

கலாநிதி மு. ஸ்ரீகௌரிசங்கர்

எக்ஸ்ஸைல் என்றால் என்ன? ஆங்கிலத்தில் பின்வருமாறு விளங்கப்படுத்தியுள்ளார்கள்.

Exile: the state of being barred from one’s native country, typically for political or punitive reasons.

அதாவது ஒருவர் தேசத்தினின்று அகற்றப்படுதல் அல்லது வேறு நாட்டில் தலைமறைவு வாழ்வு வாழுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.

இது ஏன் நடைபெறுகிறது என்பதிற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்படமுடியும் என்றாலும் நடேசன் அவர்கள் இங்கு தனது அனுபவம் மூலம் வித்தியாசமான ஓர் உணர்வை பதிவுசெய்துள்ளார்.

“84 ஏப்பிரலில் எனக்கு குருட்டு பூனை இருட்டில் பாய்வது போன்றது இந்தப்பயணம். நாட்டைவிட்டு வெளியேறும் பலர் வியாபாரம், உல்லாசப்பயணம், முதலான காரணங்களினால் பிரியும் போது அந்தப்பயணம் உணர்வு கலந்தது அல்ல. ஆனால் நான் இப்போது வெளியேறும்போது எனது நாடு, மக்கள், உறவினர் முதலான பந்தங்கள் அறுபடுகிறது. எட்டு மாத கர்ப்பிணியான மனைவியையும் இரண்டு வயதே நிரம்பாத மகனையும் விட்டு எதற்கு பிரதேசம் போகிறோம் என்பது தெரியாமல் எனது பயணம் தொடங்குகிறது.” என்று நடேசன் தனது எக்ஸயில் அனுபவத்தை ஆரம்பிக்கிறார்.

நனவிடை தோய்தல் உத்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் எமது வாசகர்களுக்கு புதிய வரவு. அவர்கள் இதுவரையில் தங்கள் வாழ்க்கையில் பார்க்கத்தவறிய பக்கங்களை இந்த நூலின் மூலம் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புக்களை டாக்டர் நடேசன் அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்.

இந்நூலை அறிமுகம் செய்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேனென்று கூறினால் அது மிகையாகாது. அதற்குமுன் யார் இந்த நடேசன் மற்றும் அவரின் பின்புலம் என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

இவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.

இவரது அத்தகைய படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. வடக்கில் எழுவை தீவில் பிறந்து, அங்கு ஆரம்பக்கல்வியைக்கற்று, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பை தொடர்ந்த காலத்தில் இலங்கை அரசியலின் அரிச்சுவடியும் தெரியாமல், அங்கு 1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கச்சென்றவர்.

அதிலிருந்து அவரின் அரசியல் சார்ந்த பயணம் அவரை அறியாமலே அவருடன் ஒட்டிக்கொண்டது.

அங்கு நடந்த நிகழ்வுகள் மற்றும் அநியாயச்ச்சாவுகள் என்பவற்றை தன கண் முன் கண்ட நடேசன் அதிலிருந்து மீண்டு வருவதற்குள் இவரது அந்த மாணவப்பருவம், அன்றைய அரசின் கல்வி மீதான தரப்படுத்தலையும் எதிர்கொண்டது. அக்காலப்பகுதியில் வடபகுதி மாணவர்களை அரசியல் எவ்வாறு ஆட்கொண்டது என்பதை இந்த நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார்.

” எனது வயதையொத்த இளைஞர்கள் அரசியல் சாயம் படாமல் தப்பமுடியாது. ஹோலி பண்டிகை காலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடாதவனும் வர்ணத்தை பூசிக்கொள்வதுபோல் அரசியல் வாடை என்னைத் தழுவியது.”

மேலும் பல சுவாரசியமான சம்பவங்களையும் இந்நூலில் டாக்டர் நடேசன் அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

அந்தக்காலத்தில் பிரபலமான “கல்லெறி” கலாச்சாரத்தையும் அதனை தொடர்ந்து வந்த கார் இலக்கத்தகடுகளில் உள்ள சிங்கள ஸ்ரீ அளிக்கும் போராட்டம் என்பவற்றையும் இதில் பதிவுசெய்துள்ளார். அன்று நிகழ்ந்த கல்லெறிதல்தான், காலப்போக்கில் துப்பாக்கி வேட்டுக்கள் என்று சொல்லவரும் நடேசன், “புடையன் பாம்பு அக்காலத்தில் குட்டியாக இருந்தது” எனச்சொல்லிவிட்டு அந்த அங்கத்தை கடந்து செல்கிறார். இதில் எவ்வளவு உண்மை புதைந்துள்ளது என்பதை நீங்கள் வாசிக்கும் போது புரிந்துகொள்வீர்கள்.

டாக்டர் நடேசன் அவர்கள் ஒரு ஆயுதம் ஏந்திய போராளியா? அல்லது இயக்கங்களின் அரசியல் ஆலோசகரா ? அல்லது அரசியல் கட்சி தலைவரா ? இல்லவேயில்லை. அப்படியென்றால் அவரால் எவ்வாறு இப்படி ஒரு போராட்டகால நிகழ்வுகளின் உண்மையை பதிவுசெய்ய முடிந்தது?

டாக்டர் நடேசன், ஆயுதம் ஏந்திய எந்தவொரு தமிழ் இயக்கத்திலும் இணைந்திராதுவிட்டாலும், அவற்றின் தலைவர்கள், தளபதிகள், மற்றும் போராளிகளுடன் உறவைப்பேணியிருப்பதும் தெரிகிறது. அவரின் இந்த உறவின் பகிர்வே இந்நூல் என்றால் அது மிகையாகாது.

இந்த நூலில் ஒவ்வொரு அங்கத்தையும் இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்டவர்களை சுயவிமர்சனம் செய்யத்தூண்டும் விதமாகவே எழுதியிருப்பதுடன் எமது சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார்.

அதுமட்டுமல்ல, ஈழத்துக்கான ஆயுதப்போராட்டம் அதன் ஆரம்ப எத்தனிப்புகளுடன் தீவிரமடைந்து 1980 களில் இயக்கங்கள் சேர்ந்து தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அமைப்புக்கள் சேர்ந்து உருவாக்கிய தமிழர் மருத்துவ நிறுவனத்தின் செயலாளராக இருந்தவர் இந்த நடேசன் அவர்கள். அவ்வேளையில் அந்தஅமைப்பில் இருந்த 5 பிரதான இயங்கங்களின் தலைவர்களோடு இருந்த நட்பு மற்றும் அவர்களுடன் சேர்ந்து செயற்பட்ட மற்றும் முரண்பட்ட நிகழ்வுகள் மூலம் பெற்ற அனுபவங்களின் தொகுப்பே இந்த நூலாகும்.

இலங்கை – தமிழக, தமிழ் அரசியல் தலைவர்கள் ஆயுதம் ஏந்திய இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் தொண்டில் ஆர்வம் காண்பித்த மருத்துவர்கள், ஆயுதத் தரகர்கள், இந்திய மத்திய உளவுப்பிரிவைச்சேர்ந்தவர்கள், காணமலாக்கப்பட்டவர்கள் என பலரும் இந்த எக்ஸைலில் வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, சில பல சிரிக்கவைக்கும் நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார். உதாரணமாக இலங்கையிலிருந்து தமிழ்நாடு சென்ற நடேசன் இராமேஸ்வரத்தில் இந்தியக்கரையில் இறங்கும்போது,கையில் பணம் இருந்தாலும் அதனை செலவிடாமல், எடுத்துச்சென்ற சிங்கப்பூர் குடை, லக்ஸ் சோப் முதலானவற்றைக்கொடுத்து சமாளிக்கும் காட்சி, இராமேஸ்வரத்தில் இறங்கியதும் ரயில் ஏறி சென்னை செல்லாமல் அந்த ஊரைச்சுற்றிப்பார்க்கும் போது சந்நியாசி ஒருவரினால் “கங்காதீர்த்தம் ” பருகும் காட்சி என்று பல இடங்களில் நடேசன், படிம உத்தியோடும், உவமான உவமேயங்களுடனும், அங்கதமாகவும் காட்சிகளை சித்திரிப்பதனால், இந்த நூலை வாசகர்கள் மிகவும் சுவாரசியமாக அனுபவிக்கமுடியும்.

இவ்வாறு ஒவ்வொரு அங்கத்திலும் பல துல்லியமான காட்சிகள் வருகின்றன.

மதவாச்சியா, அநுராதபுரம் பிரதேசங்களில் மிருக வைத்திய பணிநிமித்தம் வாழ்ந்த காலத்தில் அமைச்சர் தொண்டமான் உட்பட பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பழகியிருப்பவர் நடேசன். அவர்களுடன் உறவாடிய பாணியிலேயே சென்னையில் அக்கால கல்வி அமைச்சர் அரங்கநாயகத்துடனும் உரையாடும்போது, தமிழக திராவிட கலாசாரத்தின் பிரகாரம் வணக்கம் சொல்லாதமையினால், அமைச்சரின் அடியாளிடம் வாங்கிக்கட்டிக்கொள்கிறார்.

இரண்டு நாடுகளின் அரசியல்வாதிகளிடத்திலும் அடியாள்களிடத்திலும் நிலவும் வேறுபாடு இங்கு அம்பலமாகின்றது.

மேலும் ஒரு சுவாரசியமான ஆனால் கனமான செய்தியாக ஆயுத போராட்டத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டவர் சிங்கப்பூரில் கைதாகி மரணதண்டனைக்குற்றவாளியாகி, இறுதிநேரத்தில் அங்கு நேர்ந்த அரசியல் மாற்றத்தினால் தப்பிவந்து சென்னையில் அடைக்கலமாகின்றார்.

அவருடைய அடுத்த எதிர்காலத்திட்டம் என்ன தெரியுமா…? சென்னையில் ஒரு தோசைக்கடை வைத்து பிழைப்பது! இந்தக்காட்சி ஈழப்போராட்டத்தின் மொத்த வடிவத்தையே கேள்விக்குட்படுத்துகிறது. அதுமட்டுமல்ல இதன்மூலம் ஒரு போராளி எவ்வளவுதூரம் நொந்துபோயுள்ளான் என்பதையும் அறிய முடிகிறது.

இன்றும் இந்த அவலநிலை ஈழத்தில் தொடர்வது மிகவும் கவலையான ஒரு நிகழ்வாகும்.

இயக்கங்கள் கூட்டணியாக இருந்தபோதும் அவர்களிற்கு இடையில் இருந்த நம்பிக்கையின்ன்மையையும் எதிர்காலத்தில் இக்கூட்டணியின் நிலைமை குறித்த தனது அவநம்பிக்கையையும் நாசூக்காக குறித்துள்ளார்.

ஈழப்போராட்டத்தில் ஆயுதக்கலாசாரத்திற்கு பலியாகாமல், ஆயுதங்களை நேசித்தவர்களுடனெல்லாம் நெருங்கிப்பழகியிருக்கும் நடேசன், தனது இந்துக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழக வாழ்க்கை, வட மத்திய மாகாணத்தில் விலங்கு மருத்துவ பணி, தென்னிந்தியாவில் மருத்துவ நிலையத்தில் மேற்கொண்ட தன்னார்வத்தொண்டு, போரில் கால் ஊனமுற்றவர்களுக்காக ஜெய்ப்பூர் வரையும் சென்ற அனுபவங்கள் என்பனவற்றை விரிவாக நினைவுக்குறிப்புகளாக பதிவுசெய்துள்ளார். இந்த அனுபவங்களின் திரட்சியாக நடேசன் மெல்பேண் வந்து இறங்கியதும் நடக்கும் சந்திப்பில் தனது கைக்குட்டையை எடுத்து காண்பித்து, “போரில் துன்புற்ற மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இனியாவது பயன்படுங்கள்” என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் என்பவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை – இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் – பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன.

போர் முடிவடைந்த பின்னர் வெளிவந்த பல நூல்கள், அதனை நியாயப்படுத்தியும் கேள்விக்குட்படுத்தியும் பூகோள அரசியலை முதன்மைப்படுத்தியும், தவறவிட்ட இராஜதந்திரங்களை சித்திரித்தும் வெளியாகியிருக்கும் பின்னணியில், எந்தப்பக்கமும் சாராத ஒரு மனிதநேய வாதியின் தார்மீகக்குரலாக நடேசனின் எக்ஸைல் ஒலிக்கிறது.

எக்ஸைல் – இலங்கையில் மகிழ் பதிப்பகத்தின் புதிய வெளியீடு. நடேசனுக்கு எமது வாழ்த்துக்கள்.

 சிதம்பரப்பிள்ளை சிவகுமார். 

இந்தியாவில் தமிழ்நாட்டில்  வாழ்ந்த காலத்தில் தோழர் அமீன் எனச் சந்தித்தும்,  பல முறை கேள்விப்பட்டேன். ஆனால் பல காலமாகத் தொடர்பற்றுவிட்டது . பிற்காலத்தில் ஒருவர்,   எனது முகநூலில் இலக்கிய குறிப்புகளை அடிக்கடி  எழுதுவதையிட்டு  வியந்தேன். மிகவும் தீவிரவாசகனாக  மட்டுமல்ல,  இலக்கியத்தின் புதிய பக்கங்கள் அங்கு   விரிந்தன.

பத்திரிகையாளராகவும் இருந்த சிவகுமாரே அந்த முகநூல் நண்பர் எனக் கவிஞர்  கருணாகரன் மூலமறிந்தேன்.  பிற்காலத்தில் அவர் முகநூலிலிருந்து  விலகிவிட்டபோது அவரது வெற்றிடத்தை உணர்ந்தேன்.

எனது நூல்களில் எக்ஸைல் (எனது தென்னிந்திய அனுபவங்கள் 84-87) மட்டுமே  இலங்கையில்  பதிப்பித்தேன்.   அதைக் கருணாகரன் வடிவமைக்க சிவகுமாரிடம்  கொடுத்திருப்பதாகச் சொன்னார்.  பின்பு புத்தத்தைப்  பார்த்தபோது அக்காலத்திற்கு முக்கியமான படங்களுடன் தரமாக  வெளிவந்திருந்தது.

எனது மகிழ்ச்சியையும்  வியப்பையும்  வெளியிட்டபோது   சிவகுமார்தான் அமின் தோழர் அவருக்குக் கும்பகோணம்  மற்றும்  சென்னையில் உங்களைத் தெரியும் என்றபோதே  எனக்கு அமீன் தோழரையும் பத்திரிகையாளர் சிவகுமாரையும் ஒரே கோட்டில் இணைக்கமுடிந்தது.

கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள உணவுக்கடையிலில்  தோழர் கமலாகரனுடன் சந்தித்தபோது  ‘எனது கானல் தேசம் படித்தீர்களா? ‘ என்று கேட்டேன் .  அப்பொழுது சிவகுமார் ஒரு சிரிப்புடன்  ‘எங்களுக்கு நாவல்   நன்றாக இருந்தது ஆனால் அடுத்த பக்கமாக இராணுவத்தின் கொடுமைகளை சோபா சக்திபோல் காட்டியிருக்கவேண்டும் ‘ என்றார் .எனது பதில் “அதற்குப் பலர் இருக்கிறார்களே!  அவர்களில் ஒருவராக நான் விரும்பவில்லை’ என்று  சொன்னேன்மிகவும் குறைவான சந்தர்ப்பங்கள் சிவகுமாருடன்  பழகுவதற்குக் கிடைத்தபோதும் இறுதியாக  எழுத்தாளர் மக்கத்துச்சால்வை  ‘ எஸ். எல். எம். ஹனீபாவுடைய அரசியல் , சமூகப்பணி சார்ந்து நிகழ்ந்த உரையாடலில் தமிழ்- இஸ்லாமிய அரசியல் சார்ந்து பேசக் கேட்டபோது,  எஸ். எல். எம். ஹனீபா  சிவகுமாரின் பெயரை எனக்குத் தந்தார் .

நான் சிவகுமாரைத் தொடர்பு கொண்டு பேசச் சம்மதித்தபின்பு அவரது படத்தைக் கேட்டேன் .  ‘படம்,  ஏன் பெயரை மட்டும் போடுங்கள்’  என்றார். அந்த ஒரு விடயத்திலே சிவகுமாரைப் புரிந்து கொண்டேன்.

பொதுவாழ்விலும்  இலக்கியத்திலும்  பல வருடங்கள் உழைத்தாலும்,  அவசரமாகவே சென்று விட்ட சிவகுமாரின்  நினைவாக அவர் வடிவமைத்த இந்த புத்தகம்,  அவரை – எனக்கு உங்களுக்கும் என்றும் நினைவில் நிறுத்தும் .

%d bloggers like this: