|
||
|
வாழ நினைத்தால் வாழலாம் (மெக்சிக்கோ ஏரியில் இருந்து 250 மில்லியன் வயதான நீர்வாழ் பக்ரிரியா கண்டுபிடிப்பு என்ற செய்திக் குறிப்பும், மனிதனுக்கு மட்டும் ஆன்மா சொந்தமல்ல என்ற ஒரு நம்பிக்கையின் விளைவும், சிறுவயதில் என்னை மிகவும் பாதித்த எழுத்தாளர் ஜெயகாந்தனது ஒரு படைப்பில் சீமை நாயினதும், உள்ளுர் நாயினதும் கள்ளக்காதல் விவரிப்பு முறையில் ஏற்பட்ட பிடிப்பும், தற்காலத்தில் விடுதலைப் புலிகள் சயனைட்டை பாவித்து தற்கொலை செய்வதால் ஏற்பட்ட மனப்பாதிப்பும், மனிதருக்கு மட்டுமல்ல சகல ஜீவராசிகளுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற (பைத்தியக்கார) எதிர்பார்ப்பின் விளைவுமே இச் சிறுபடைப்பு.)
இந்த கதையில் வரும் ஹரியும் ஒரு விசித்திரப் பிறவி. நமது கதாநாயகன் மெக்சிக்கோவில் ஓர் ஏரியில் பிறந்தான். அதுவும் 250 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அவதரித்தவன். இந்தக் காலத்தில் மனிதர்கள் தோன்றவில்லை. ஏன் டைனேசர் கூட தோன்றவில்லை. தற்போது காணப்படும் தாவர வகைகள் கூட தோன்றவில்லை. ஆண்டவன் இருந்தானோ எனக்குத் தெரியாது. ஆனால் எந்தச் சமயமும் அந்தக் காலத்தில் இருக்கவில்லை. மனிதன் தோன்றாமல் மதம் எப்படித் தோன்றியிருக்க முடியும்? ''சக்தி ஓரு நீர் வாழும் பாக்ரீரியா, ஏரியில் தனிமையாக வாழ்ந்தாள். உறவினர் ஒருவருமில்லை. எல்லாரும் இறந்துவிட்டார்கள். சக்தியின் சகோதரியும் கடைசியில் இயற்கை எய்திவிட்டாள். இக் காலம் போல் இனகலவரத்திலோ அல்லது அணுக்குண்டுக்கோ இரையாகி அவர்கள் இறக்கவில்லை. இயற்கையின் அகோரத்தால் அவர்கள் அழிக்கப்பட்டவர்கள். மழைவெள்ளத்தால் ஏரி நிரம்பும் போது பல மடங்கான உப்புகளை வெள்ளம் கொண்டு வந்து சேர்த்தது. தொடர்ச்சியாக வந்த உப்பினால் எந்த ஜீவராசிகளும் சுவாசிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் கடலை விட பலமடங்கு அதிகமாக இருந்த உப்பு, கடைசியாக பளிங்காக மாறியது. வாழ்வதற்குத் தண்ணீர் கிடைக்காமல் உப்புத் தண்ணீரில் வாழும் பக்ரீரியாக்களும் மரணத்தை தழுவின. இயற்கை மாதா இருகட்டளைகளை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவாக
இட்டாள். எல்லாரும் வாழவேண்டும் அத்துடன் தங்கள் வாரிசுகளையும்
உருவாக்க வேண்டும். இந்த கட்டளையை சிரமேற்கொண்டு வாழும்
உயிரினங்களில் பக்ரீரியாக்கள் முதன்மையானவை. இவை இரண்டாக பிறந்து
தமது வாரிசுகளை உருவாக்கும். இந்த ஜந்துகளுக்கு பெரும்பாலும் கலவி
சுகம் கிடைப்பதில்லை. சில இடர்பாடுகள் வரும்போது கலவி செய்து
பரம்பரை அலகை (Gene) மாற்றும் இதன் வழிமுறையில் தான் மனிதன்
இப்பொழுது Genetic Engineering என புதிய பெயர் கொடுத்தான். மீண்டும் எமது ஹரியை சந்திப்போம். மனிதரைப் போலல்லாது பக்ரீரியாக்கள் இருபது நிமிட நேரம்தான் வாழமுடியும். இதற்கும் வாழ்க்கையில் கடைசித்துளியையும் அநுபவித்துவிட்டு வாரிசை உருவாக்கிவிட வேண்டும். ஹரனதும், ஹரியினதும் சம்பாஷனையைக் கேட்போம். இருவருக்கும் பளிங்கில் வாழ முடியவில்லை. நடுங்கிய படியே சம்பாஷிக்கிறார்கள். ஹரி: உடம்பெல்லாம் வலிக்கிறது. வாழ்க்கையே வெறுக்கிறது;. ஹரி: டேய் தற்கொலை செய்வது கோழைத்தனம். ஹரன்: தற்கொலை செய்வது வீரமாகும். தன்உயிரை எடுப்பதற்குத் துணிவு வேண்டும்;. வீரம் வேண்டும் கடைசிவரையும் இருந்து இழுத்துச் சுருங்கி இறப்பது எனக்குப் பிடிக்கவில்லை. ஹரி: எம் தாயும் உன்னைப் போல் நினைத்திருந்தால் நாங்கள் உருவாகி இருப்போமா? மேலும் போராடி வாழ்வதே வாழ்க்கை அதுதான் எனக்குப் பிடிக்கும். ஹரன்: எனது உடல் பாதி சுருங்கிவிட்டது. மறுபாதி உப்புப் பளிங்காகிவிட்டது. இந்தநிலையில் நீ வாழும் சந்ததியைப் பற்றிப் பேசிக்கொண்டிருகிறாய். ஹரி: உன்னைத் திருத்த முடியாது. நான் எங்கள் இனத்துக்கே உரிய கடைசி ஆயுதமாக Spore (விதை) ஆகப்போகிறேன். ஹரன்: உப்புப்பளிங்கில் விதையாகி என்ன செய்யப்போகிறாய்? எப்பொழுது மீண்டும் உயிர்;ப்பெற்று வாழமுடியும். பல மில்லியன் காலங்கள் ஆகலாம். அக்காலத்தில் நீ வாழும் சூழல் இருக்குமா? என் வழிக்கு வரச் சொல்லவில்லை. ஆனால் உனது வாழ்க்கை நிரந்தரமான கேள்விக்குறியாக மாறும் என எச்சரிக்கிறேன். ஹரி: நம்பிக்கை இருந்தால் மில்லியன் அல்ல, பில்லியன்
வருடங்களானாலும் உயிர் வாழலாம். உன்னைப் போல் நான் தற்கொலை செய்யப்
போவதில்லை. ஹரி: தனது உடலைப் போர்வை மூடுவது போல் ஒரு ஆடையை உருவாக்க, விதை (Spore) ஆகியது. சில நிமிட நேரத்தில் ஹரியைச் சுற்றி உப்புப் பளிங்கு உருவாகியது மட்டுமல்லாமல் முழு ஏரியும் பளிங்குப் பாறையாகியது. இந்தச் சம்பவம் நடந்து இருநூற்றைம்பது மில்லியன் வருடங்கள் ஆகிவிட்டது. புதிய மிருகங்கள் உருவாகின. வூலிமமத் போன்ற மிருகங்கள் அழிந்துவிட்டன. நதிகள் பல தோன்றின, சில நதிகள் வற்றிப் போயின. டைனோசர் உருவாகிப் பின் அழிந்துவிட்டது. மனிதன் என்னும் புதிய இருகால் விலங்கு உருவாகி நூறாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. சமயங்கள் உருவாகின. ஆண்டவனுக்குப் பல பெயர்கள் சூட்டி மகிழ்ந்தார்கள். யேசு கிறிஸ்துநாதர் பிறந்து இரண்டாயிரம் வருடத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் அகழ் வராச்சியில் பாறைகளை உடைக்கும் போது பாறைகளுக்கு இடையில் உப்புப் பளிங்கைக் கண்டார்கள். உப்பை உருக்கி ஆராய்ச்சி செய்த போது நமது கதாநாயகனாகிய ஹரியைக் கண்டார்கள். ஆனந்தக் கூத்தாடினார்கள். துள்ளிக் குதித்தார்கள். ஹரியின் வயதைக் கணித்தபோது 250மில்லியன் என அவர்களது கணனி காட்டியது. ஹரியின் கனவு நினைவேறியது. இருபது நிமிடம் வாழத் துடித்த கதாநாயகன் இருநூற்றைம்பது மில்லியன் வருடம் வாழ்;ந்து விட்டுத் தனது வாரிசாக இரு நீர்வாழும் பக்ரீரியாக்களைத் தந்துவிட்டு மறைந்தான். இருபத்தைந்து வருடத்துக்கு மேல் தென்னாபிரிக்கச் சிறையில் வாழ்ந்த நெல்சன் மண்டேலோவையும், இருபத்திரண்டு வருடம் இந்தோனிசிய சர்வாதிகாரி சுகட்டோவினால் சிறை வைக்கப்பட்ட சுபந்தியோவைப் போல் மனிதரால் போற்றப்படாவிட்டாலும், விஞ்ஞானச் சரித்திரத்தில் தன் பெயரைப் பொறித்துவிட்டுத் தன்தாய் சென்ற இடத்துக்கு எமது ஹரியும் சென்றான். |
||
|
|
||
|
|