|
||
|
இப்படியும் ஒரு தியாகம் 'பமலா' என்ற சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் கவச குண்டலங்களுடன் பிறந்த கர்ணன்தான் எனக்கு நினைவுக்கு வரும். இந்த 'மனுஷி' அந்த உடையை மாற்றவே மாற்றாதா? பாண்டல் மணத்துடன் அதே உடையில் அந்த மிருக மருத்துவமனைக்கு அவள் வரும்போதெல்லாம் ஏனைய டாக்டர்களும் தாதிகளும் மூக்கைப் பொத்திக் கொண்டு அகன்று செல்வதையும் கவனித்துள்ளேன். எனினும் தனது செல்ல நாயுடன் அதன் சிகிச்சைக்காக வரும் அப்பெண்மீது எனக்கு ஒருவகை அநுதாபம் உண்டு. அதற்கு காரணங்களும் உண்டு. தாய் தந்தையற்ற அனாதைகளுடன் ஒரு அனாதையாக இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின்பு இங்கிலாந்து அனுப்பிய கப்பலில் இங்கு வந்து சேர்ந்தவள்தான் இந்த பமலா. இப்படி வந்தவர்கள் பலர் கிறிஸ்தவ அனாதை இல்லங்களில் வளர்ந்தவர்கள். சிலர் நன்றாக வளர்ந்தார்கள். சிலர் சமுதாயத்திற்கு பாரமாக வாழ்ந்தார்கள். திருமணமே இவளுக்கு நடக்கவில்லை. ஒரு தொடர்மாடிக்குடியிருப்பில் அரசின் நிதிஉதவியை ஆதாரமாகக் கொண்டு வாழ்கிறாள் பமலா. இந்த அனாதைப் பெண்ணுக்கு துணை லசி, ரிக்கி என இரு நாய்கள். அவளது வாழ்வின் நம்பிக்கையே இந்த நாய்கள்தான். இந்தப் பெண் தனது நாய்களுக்காக சிகிச்சைக்கு என்னிடம் வரும்போது அவளைத் தவிர்த்துக் கொள்வதற்காக ஓடி மறையும் மற்றவர்கள் 'ஏக குரலில்" சொல்வார்கள் 'அதோ உனது 'girl friend' வருகிறாள்....போய் கவனி"" நான் சிரித்துக்கொண்டே அவளை சாதாரணமாக அழைப்பேன். பமலாமீது எனக்கு மேலும் அநுதாபம் தோன்றக் காரணம், அவள் தனது ஆதாரங்கள் என்று நினைத்து வாழ்ந்தவற்றில் ஒன்றைப் பறிகொடுத்துவிட்டாள். அவளது வளர்ப்பு நாய்களில் ஒள்றான ரிக்கி கல்லீரல் புற்றுநாயினால் பாதிப்புற்றிருந்தது. 'கருணைக்கொலை' புரிந்து அதனை மேல் உலகம் அனுப்பியாயிற்று. இப்போது பமலாவுடன் இருப்பது லசி மட்டும்தான். மீண்டும் ஒருநாள் 'லசி'யுடன் பமலா வந்தாள். நாயை சோதித்தேன். நாய் ஆரோக்கியமாகத்தான் இருந்தது. ஆனால் அது சுவாசிக்கும்போது மட்டும் 'ஆஸ்துமா" அறிகுறி தென்பட்டது. X-Ray எடுத்துப் பார்த்தேன். சுவாசப்பை சுருங்கியிருந்தது. நாய்களுக்கு மனிதர்கள் போன்று ஆஸ்த்துமா வர வாய்ப்பில்லை. 'அன்ரிபயற்றிக்' கொடுத்து அனுப்பினேன். ஆயினும் அது குணமடையவில்லை. தொடர்ந்து அதற்கு இருமல். விசேட வைத்திய நிபுணரிடம் நாயைக்கொண்டு சென்று காட்டுவதற்கும் அவளுக்கு பணவசதிகுறைவு. நாயின் சுவாசக்குழாயைக் கழுவிப் பரிசோதித்த பொழுது அலர்ஜியால் அது பாதிப்படைந்திருப்பது தெரிந்தது. எமது மருத்துவமனை அம்புலன்ஜ் சாரதி நாயை அவளது வீட்டில் விட்டுத் திரும்பியதும் என்னிடம் வந்து சொன்னான். 'பமலாவின் flat அவளைப் போலவே நாறுகிறது ஒரே சிகரட் மணம்தான். வயிற்றை குமட்டுகிறது" என்றான். அப்பொழுதுதான் அந்த நாயின் இருமலுக்கான காரணம் எனக்குத் தெரிந்தது. பின்பு அவளைத் தொலைபேசியில் அழைத்து விசாரித்தேன். தனது தொடர்ச்சியான சிகரட் பாவனையை ஒப்புக்கொண்டாள். "உனது சிகரட் புகைதான் இந்த நாய்க்கு அலர்ஜியாகி இருமல் விட்டபாடில்லை" என்றேன். ""சிகரட் புகை குடிப்பதாயின் வெளியே போய் இருந்து குடி"" என்றேன். ""இந்தக் குளிரில் எப்படி டாக்டர் வெளியே போயிருந்து சிகரட் புகைப்பது... ஒரே வழி ..... எனது 'லசி ' க்காக இனிமேல் சிகரட்டையே தொடாமல் இருக்கிறேன்"". அவள் சொன்னபடி செய்தாள். பமலாவுக்கு இனி சிகரட் இல்லை. லசிக்கு இருமலும் இல்லை. Pram இல் குழந்தையை வைத்துத் தள்ளிக்கொண்டே வளையம் வளையமாக சிகரட் புகையை ஊதித்தள்ளும் தாய்மார்தான் பமலாவை நினைக்கும் பொழுது என் மனசில் மிதக்கிறார்கள். |
||
|
|
||
|
|