Vaalum Suvaduhal

ராணியின் மறைவு

இது ஒரு ராணியின் கதை.

இவள் எந்தவொரு நாட்டையும் ஆளவில்லை. இவளுக்கென்று பிறந்தநாள் விடுமுறை பிரகடணப்படுத்தவும் இல்லை. அவளின் பெயர் 'ராணி" - என்பது அவளை அவ்வாறு நான் அழைக்கும் போதுதான் தெரியும். மற்றவர்களுக்கு அவள் ஒரு 'பிராணி", எனக்கோ - அந்த 'பி' - எழுத்தை நீ;க்கித்தான் பார்க்க முடியும்.

ஒரு குளிர்கால இரவில் அவள் என்னிடம் அழைத்துவரப்பட்டவேளை - நாம் மருத்துவமனையை மூடிவிட்டு வீடுகளுக்கு புறப்படும் நடுச்சாமம்.

அம்புலன்ஸ் வண்டியில் ஒரு சிறிய கூண்டிலே அடைக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட கர்ப்பிணியான ப?னையே இந்த ராணி.

பிரசவத்துக்கு இடம்தேடி அலைந்து ஒரு வீட்டின் அருகே ஓய்வெடுத்து பதுங்கியிருந்த அனாதைதான் இந்த பிராணி.

அதன் கழுத்தில் நகரசபையின் அடையாளம் பொறிக்கப்பட்ட பட்டியும் இல்லை.

முதுமையை அடைந்துள்ள அந்தப்ப?னையை கர்ப்பிணியாக்கிய மற்றப்ப?னைக்கு என்ன நேர்ந்திருக்கும்? தனது இச்சை தீர்ந்தபின்பு "ஓடி"ப்போயிருக்கலாம். ஜெயகாந்தன் எழுதிய வேசியின் தாலாட்டு என்ற கவிதைதான் எனக்கு நினைவுக்கு வந்தது.

தனது பிள்ளையைப் பார்த்து அவள் தாலாட்டு பாடுகிறாள் இவ்வாறு: ''கடவுளைப் போன்று உனக்கும் தந்தை இல்லை''.

இந்தப் ப?னையை தாயாக்கிய ப?னையை மறந்துவிடுவோம்.""

இவ்வாறு அனாதரவாக அலையும் வயோதிப ப?னைகளை தத்து எடுத்து வளர்ப்பதற்கு எவரும் முன்வருவது இல்லை.

தெருவில் கண்டுபிடித்து அழைத்து வந்த அம்புலன்ஸ் எங்கள் மருத்துவமனையில் அதனை ஒப்படைத்துவிட்டு போய்விட்டது.

இந்த நிலைமையில் வரும் பிராணிகள் கருணைக் கொலையின் மூலம் பரலோகம் அனுப்பப்படுவதே நடைமுறை. எனது நர்ஸ் மரிக்கா, எனது ஆழ்ந்த யோசனையை பார்த்துவிட்டு, ''முதலில் பரிசோதனை செய்வோம், பிறகு முடிவு செய்வோம்'' - என்றாள்.

அந்த நர்ஸ் மிகவும் மென்மையான உணர்வு கொண்டவள். ஒரு மனிதாபிமானி மாத்திரமல்ல, ஜீவராசிகளையும் நேசிக்கும் இயல்பு கொண்டவள்.

அநாதரவான பல ப?னை நாய்களைத் தனது வீட்டில் வளர்த்து பாதுகாத்து பராமரிப்பவள். வீட்டுக்கு வருபவர்கள் விரும்பும்போது வளர்ப்பதற்காக கொடுத்தனுப்புவாள். வாய் பேசாத இந்த ஜீவன்களுக்காக அவள் காட்டும் கருணைக்காகவே அவளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கலாம்.

ப?னையைப் பரிசோதித்தபோது, ஒரு குட்டி தனது தலையை வெளியே நீட்டி இந்த 'அழகான உலகத்தை" தரிசிக்க தயார் நிலையில் இருந்தது. ஆனால் அதன் கழுத்து மடங்கியிருந்தது.

தாய்ப் ப?னைக்கோ பிரசவவேதனை.

இத்தகு சந்தர்ப்பத்தில் 'சிசேரியன்'தான் சிறந்த வழி.

நேரமோ-நடுச்சாமம். மருத்துவமனையை மூடிவிட்டு நாம் புறப்படவேண்டிய நேரம்.

மனிதாபிமான உணர்வுகள் எம்மை இழுத்துப்பிடித்து நிற்கவைத்தன. பொக்கட்டினுள் சாவியை எடுக்க வேண்டிய கைகள் - சத்திரசிகிச்சைக்கான கருவிகளை எடுக்க எழுந்தன. மேலதிக உழைப்பு (overtime) ஊதியத்தை தியாகம் செய்துவிட்டு அதற்கு சிகிச்சை அளிக்க தயாரானோம்.

இரண்டு குட்டிகள் உயிர் தப்பின. ஒன்று இறந்த நிலையில் பிறந்தது,

நானும் - மரிக்காவும் எமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம்.

தாய்ப்ப?னையை - எனது பொறுப்பில் மருத்துவமனையில் ஒரு வாரகாலம் வைத்திருப்பது என்றும,; பின்பு கொடுப்பது என்றும் - குட்டிகளை நர்ஸ் மரிக்கா தன்னோடு கொண்டு சென்று வளர்ப்பது என்பதுவே எமது புரிந்துணர்வு ஒப்பந்தம்.

அவ்வாறே செய்தோம். தந்தை யார் என்று தெரியாத அந்தக் குட்டிகள் தாயும் இன்றி மரிக்கா வீட்டில் வசிக்கப் புறப்பட்டன.

எனது வீட்டில் என் மனைவிக்குப் ப?னையைப் பிடிக்காது. வீட்டில் உதிரும் ப?னைமயிர்களால் 'ஆஸ்த்மா" போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு என்பது டொக்டரான அவளது வாதம். ப?னையை வீட்டுக்கு அழைப்பதற்கு தடை உத்தரவு பிறப்பித்தாள் இல்லத்தரசி.

'ராணி' - என்று நான் பெயர் சூட்டிய இந்த ப?னையை - 'இல்லத்துராணி' ஏற்கவே மாட்டாள். ஒரு வாரகாலம் மருத்துவமனையில் பராமரித்தேன். எதிர்பார்த்த பிரகாரம், எவரும் அதனை தத்து எடுத்து வளர்க்க வரவில்லை. ராணியை - எனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல தருணம் பார்த்திருந்தேன். தருணத்திற்காக காத்திருப்பதும் ஒருவகையில் கொடுமைதான்.

அந்த நல்லநேரம் - மனைவி, பிள்ளைகளுடன் அவளது பெற்றோரைப் பார்ப்பதற்கு சிட்னிக்கு புறப்பட்டவேளையில்தான் வந்தது.

இல்லத்தரசி புறப்பட்டாள்.
இதயராணி வீட்டுக்கு வந்தாள்.

இல்லத்தரசிக்கு என் நினைவும் - இல்லத்தின் ஞாபகமும் வந்ததும் - வருகை தந்தாள். நான் வளர்க்கும் ராணியைக் கண்டதும் - 'ஓஸாமா பின்லேடனின் படத்தைப் பார்க்கும் ஜோர்ஜ் புஷ்'' போன்று முகத்தை நீட்டி முழக்கினாள்.

ஏற்கனவே - எங்கள் வீட்டில் ஒரு நாய் - சுதந்திரமாக வளர்கிறது. அதற்கு ப?னையின் வருகை, தலிபானின் வருகைக்கு ஒப்பானது.

நாயும் ப?னையும் வீட்டினுள் யுத்தம் பிரகடனப்படுத்தி ஓய்ந்தன. இறுதியில் அவை தமக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். நாய் - வீட்டின் பின்கட்டிலிலும், ப?னை முன்புறத்திலும் வாழத் தலைப்பட்டன. எல்லை பிரித்துச் சண்டை பிடிப்பவர்கள் இந்தப் பிராணிகளிடம் பாடம் கேட்டுப் படிக்கலாம்.

கிணற்றில் விழுந்த சிறுகல் வளையங்களை தோற்றுவித்து ஓய்வது போன்று - என் மனைவியும் ப?னை எதிர்பலைகளில் ஓய்ந்தாள்.

பசித்தபோது ராணி வந்து எமது கால்களை உராய்வாள். மடியில் ஏறி விளையாடி தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பாள். ப?னைகளை வெறுக்கும் இல்லத்தரசிக்கு ஆதிகால எகிப்தியர் முதல் - அழகழகான கதைகள் சொன்ன எங்கள் பாட்டிவரையில் பல சுவாரஸ்ய விசயங்களை சொன்னேன்.

எகிப்தியர்கள் ஆதிகாலத்தில் ப?னைகளைத்தான் தெய்வமாக வழிபட்டார்கள். ப?னைகளுக்கு கெடுதல் செய்தல் அந்தணர்களுக்கு கேடு விளைவிப்பதற்கு ஒப்பானது என்பது எனது பாட்டியின் கதையளப்பு.

ப?னைகள் இயல்பில் மென்மையானவை. அதே சமயம் தனது உணவுத் தேவைக்கு வேட்டையாடும்போது கொடூரமாகவும் நடந்து கொள்ளும். எங்கள்; வீட்டு ராணியும் அப்படித்தான்.

சிறிய பறவைகளைக் கண்டால் மிகவும் தந்திரமாக அருகே சென்று கவ்விப்பிடித்து சாப்பிட்டுவிடும். அதன் கழுத்தில் மணி இருந்தது. எனினும் அந்தமணி நாதமெழுப்பாமல் - பவ்வியமாக பதுங்கிச் சென்று வேட்டையாடும் கலையில் கைதேர்ந்தவள் இந்த ராணி.

ஒருநாள் - நான் வேலைமுடிந்து திரும்பிய நேரம். வீட்டு வாசலில் ராணியின் வாயில் ஒரு சிறு குருவி ஜீவமரணப் போராட்டத்தில் சிக்குண்டிருந்தது. என்கையில் எந்த ஆயுதமும் இல்லை. அந்தக் குருவியை ப?னையிடம் இருந்து பாதுகாப்பதற்கு! பத்திரிகையை சுருட்டி ப?னையின் தலையில் அடித்தேன். குருவி உயிர் பிழைத்தது.

ஆனால் அன்றுமுதல் - ப?னைக்கு என்மீது வெறுப்புத் தோன்றியிருக்க வேண்டும். வேட்டையை முறியடித்த எதிரியாகிவிட்டதனால் இருக்க வேண்டும். முன்னரைப் போன்று அடிக்கடி அருகே வருவதும் குறைந்து இடைவெளி அகலித்தது.

கோடைவிடுமுறையில் குடும்பமாக வெளியே சென்றிருந்தோம். புத்தாண்டு பிறக்கும் வேளையில் வீடு திரும்பினோம். இரவு பன்னிரண்டுமணிக்குத் தொலைக்காட்சியில் புத்தாண்டு பிறக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க, அதன் முன்பாக அமர்ந்தபோது - நீண்ட இடைவெளிக்குப் பின்பு - ராணி ஓடிவந்து என் மடியில் தாவியது.

தொலைக்காட்சியை ரசிக்கும் ஆர்வத்தில் ராணியை வெளியே தள்ளிவிட்டு கதவைச் சாத்தினேன். தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிய அதனை நான் உள்ளே அழைத்திருக்க வேண்டும்;. நித்திராதேவி அழைத்தமையால் உறங்கிவிட்டேன். ராணியையும் மறந்துவிட்டேன்.

முதலாம் திகதி விடிந்தது.

ராணியைத் தேடினேன். காணவில்லை. வீதிகளிலும் அயல் வீடுகளிலும் தேடி அலைந்தேன். காணவே இல்லை. முதல்நாள் இரவு - பிரியாவிடை சொல்லத்தான் மடியில் தாவி ஏறினாளா?

ராணியைக் கண்டுபிடித்தவர்கள் ஒப்படைத்தால் சன்மானம் தரப்படும் என்று சுவரொட்டிகள் மூலமும் விளம்பரம் செய்தேன்.

ராணி கிடைக்கவேயில்லை.

ஒருநாள் நடு இரவில் பிரசவத்திற்காக வந்தவள் - இன்னுமொரு நடுஇரவில் விடைபெற்றாள். ராணியின் நினைவுகள் மட்டும்தான் எஞ்சியிருக்கின்றன.


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.