|
||
|
பிரசவ வேளையில் அந்த நாள் ஞாபகம் மேற்கு விக்டோரியாவில் Shorsham என்ற இடம், Beef Cattle
எனப்படும் மாடுகள் வளரும் பண்ணைகள் இங்குண்டு. ஒருநாள் எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்ட இனத்து பசுமாடு தனது கன்றை பிரசவிப்பதில் சிரமப்படுவதாகத் தகவல் வந்தது. சென்றேன். எனது இருப்பிடத்திலிருந்த குறிப்பிட்ட பண்ணை சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரம். அங்கு போய்ச் சேருவதற்குள் மாலை ஆறு மணியாகிவிட்டது. கதிரவன் ஓய்வெடுக்கும் நேரம். இருள் கவியத் தொடங்கிவிட்டது.
அந்தப்பண்ணை சேர்ந்த ஜக,; ஜேம்ஸ் என்ற இரு முதியவர்கள்
பிரசவத்திற்குச் சிரமப்படும் பசுமாட்டைக் காண்பித்தார்கள். தனது
கன்றை பிரசவிக்க இயலாமல் அது சுற்றிச் சுழன்று வந்து
அவஸ்தைப்பட்டது. பார்க்கப் பரிதாபமாகவும் இருந்தது. மாட்டின் முதுகெலும்பில் விறைப்பு மருந்தை ஊசிமூலம் எற்றியதையடுத்து அது நிலத்தில் சரிந்தது. அரைமணிநேர போராட்டத்தின் பின்பு பார்த்தபொழுது கன்று உள்ளே தலை
திரும்பிய நிலையில் இறந்துதிருந்தது. தரையில் வைக்கோல் பரப்பி
சத்திர சிகிச்சையின் மூலம் இறந்த கன்றை வெளியே எடுத்தேன். இந்த
சத்திர சிகிச்சையை நேரில் பார்த்துக்கொண்டிருந்த ஜக்-ஜேம்ஸ்
இருவருக்கும் கடந்த காலம் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். இறைச்சியை பிரதான உணவாக உண்டு பழக்கப்பட்டு எண்பது கிலோ எடையிலிருந்த தான் ஜப்பானியரிடம் சிக்குண்டு வெறும் சோற்றை மாத்திரம் உண்டு நாற்பத்திரண்டு கிலோ வாக உடல் இளைத்துப்போன கொடுமையைச் சொன்னான். நாம் 'POW' ஆக நடத்தப்படவில்லை. சித்திரவதைக்குள்ளானோம். இரவில் தூங்கவிடாமல் தொடர்ச்சியாக நிற்கவைப்பார்கள். இது போதாதென்று அடி, உதை, ஆண் உறுப்பில் தாக்குதல். எதிர்த்து ஏதும் சொன்னால் மரணதண்டனைதான். POW என்றால் Prisonor of War. பசிக்கொடுமை தாங்கமுடியாமல் சாக்கடையில் ஓடிய எலிகளை பிடித்து தின்ற துயர அநுபவத்தையும் ஜேம்ஸ் சொன்னான். கேட்கும்போது திகைப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. 3வது உலக யுத்த சித்திரவதைகளை அவன் சொன்னபோது எனக்கு எனது தாய்நாட்டின் யுத்தக் கொடுமைகளும் கைதாவோர் மீது மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளும் நினைவுக்கு வந்தன. எனது நாடு Sri Lanka என்று அறிந்ததும் - அங்கு தொடரும் யுத்தம் காரணமாக அந்த நாட்டையும் அவன் அறிந்திருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஜேம்ஸிடம் குடும்பம் பற்றி விசாரித்தேன். ஜப்பானியரின் சித்திரவதைகளினால் தான் ஆண்மை இழந்துவிட்ட துயரத்தை வேதனையுடன் கூறினான். திருமணம் செய்யும் தகுதியை தான் இழந்துவிட்டதனால் பிரமச்சாரியம் தொடருவதாக சொன்னார். தனக்கு துணையாக சகோதரன் ஜக் இருக்கிறார். அவருக்கும் குடும்பம் இல்லை. 'எனது குடும்பம் இப்போது இந்த மாட்டுப் பண்ணைதான். இந்த மாடுகள்தான் எமது குடும்ப அங்கத்தவர்கள். அது பிரசவ வேதனையால் துடிப்பதைப் பார்த்துவிட்டுத்தான் உங்களுக்கு அழைப்பு விடுத்தோம்." ஜேம்ஸ் - ஜக்- சகோதரர்களின் அந்த மிருகங்களின் மீதான பாசத்திற்கு அவர்கள் அந்த 'பிரசவ' வேளையில் துரிதமாக இயங்கியமை அடையாளம். மனித சித்திரவதையின் கொடுமையை தாங்கிய ஜேம்ஸ் - அந்த வாய்பேசா மிருகத்தின் அவஸ்தையை தாங்கிக் கொள்ள சிரமப்பட்டார். |
||
|
|
||
|
|