|
||
|
உயிரில் நிறமா? குணமா? கலப்பு உறவுகள்
கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பச்சைக் கம்பளம் போர்த்தியது போன்ற காட்சி. இயற்கை அன்னை தனது பனிப்போர்வையால் அந்தத் தேயிலைச் செடிகளை போர்த்தியிருந்தாலும் காலையில் ஆதவன், தனது கதிர்கரங்களினால் அந்தப் போர்வையை விலக்கும் காட்சியைச் சித்திரிக்க வார்த்தைகள் தேடவேண்டும். எனது மிருக வைத்தியசாலை அந்தத் தோட்டம் அமைந்த மலை உச்சியில் இருப்பதனால், அதனைச் சுற்றி வளர்ந்துள்ள செடிகளை மட்டுமல்ல, அங்கு கொழுந்து பறிக்கும் பெண்களையும், கவ்வாத்து வெட்டும் தொழிலாளர்களையும் பார்க்க முடியும். இக்கால கட்டத்தில் அங்கு சில தோட்டத் துரைமார்கள் எனக்கு அறிமுகமானார்கள். இலங்கை சுதந்திரமடைந்த பின்பு வெள்ளைத்துரைமாரினால் ஏற்பட்ட இடைவெளியை கறுப்புத்துரைமார் நிரப்பினார்கள். நிறத்தில்தான் வேறுபாடு. நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்களில் மாற்றமில்லை. இவர்களில் வித்தியாசமானவர் கோல்டன் தோட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழர்களே அப்போது தோட்டத் துரைமார்களாக இருந்தார்கள். கந்தசாமியின் கோல்டன் தோட்டத்தில் அவரது அல்ஷேசன் நாய் அங்கு வளரும் ஆடு, மாடுகளை பரிசோதிக்கச் செல்லும்போது அவரது அன்பான விருந்தோம்பலிலும் பங்கு கொள்ளவேண்டும். சில சமயங்களில் அவரது பெரிய பங்களாவில் தங்கியிருந்து, திரும்ப நேரிடுவது உண்டு. அங்கு தங்குவதில் ஒரே ஒரு சிரமம் பல அறைகளையும் பல கதவுகளையும் கொண்ட அந்தப் பெரிய பங்களாவில் எந்தக் கதவு toilet அறைக்குரியது என்பதைத் தேடுவதுதான். இதுவிடயத்தில் நான் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடுதான் இருப்பேன். காரணம் toilet கதவைத் திறப்பதற்குப் பதிலாக அவரது bedroom கதவைத் திறந்துவிடக்கூடாது அல்லவா? அதனால் இரவில் தங்குமுன்பு அந்த பங்களாவின் அமைப்பை ஓரளவு படித்துக் கொள்வேன். ஒருநாள் இவ்விதம் தங்க நேர்ந்தபொழுது, இரண்டு வெள்ளையர்கள், "தொரை" - என அழைத்துக்கொண்டு வந்தார்கள். செம்பட்டைத் தலை, வெளிர்நிறம், ஆனால் சாரம் அணிந்திருந்தனர். வெள்ளைக்காரர்கள் எம்மைப் போன்று சாரம் அணிவார்களா? அந்த இருவரும் எனக்கு விநோதமாகக் காட்சி அளித்தனர். எனினும், அதற்கு விடைதேடும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். அந்த இரண்டு வெள்ளைத் தோல்களும் சரளமாகத் தமிழ் பேசினார்கள். கந்தசாமி இருவரையும் ராமு, பாலு என அறிமுகப்படுத்தினார். எனக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. அங்கு வந்த ராமுவும்-பாலுவும் சொன்ன தகவலினால் நான், கந்தசாமியுடன் எனது மருந்துப் பெட்டி சகிதம் தொழுவம் பக்கம் செல்ல நேர்ந்தது. தகவல் இதுதான்:- தொழுவத்தில் பொன்னி பசுமாடு கன்று போடுகிறது. ஆனால் தலை முதலில் வராமல் கால்கள் மாத்திரம் வெளியே தெரிகின்றன. பிரசவம் சிரமமாக இருக்கும். தொழுவத்தில் பொன்னி நிலத்தில் கிடந்தவாறு முனகிக் கொண்டிருக்கிறது. கால்கள் மட்டும் வெளியே தெரிகிறது. தாயையும் கன்றையும் காப்பாற்ற வேண்டும். பன்னீர்க்குடம் உடைந்து ஐந்து நிமிடம்தான் இருக்கும். இரவு நேரமானபடியாலும் அந்தத் தொழுவத்தில் மின்சாரமும் இல்லாதமையாலும் ஒரு பெட்ரோமாக்சையும் சுடுநீரையும் கேட்டேன். வந்தது. மணிக்கயிறும் கேட்டேன். தந்தார்கள். எனது உடைமாற்றி சாரம் அணிந்து கொண்டு பொன்னியின் முள்ளந்தண்டில் விறைப்பு ஊசி மருந்தை ஏற்றினேன். இதுதான் Breech நிலைப்பாடு என கூறியபடி சவர்க்காரம் கலந்த தண்ணீரை பொன்னியின் சனன துவாரத்தின் ஊடாக தொடர்ந்து செலுத்தி கன்றின் வாலை வெளியே கொண்டு வந்தேன். மணிக்கயிறை கன்றின் இருகால்களிலும் கட்டி ராமு பாலுவிடம் கொடுத்து மெதுவாக இழுக்கச் சொல்லிவிட்டு, தொடர்ந்து பொன்னியின் சனன துவாரம் ஊடாகச் சவர்க்காரத் தண்ணீரைத் தொடர்ந்து செலுத்திக் கைகளினால் கன்றை மெதுவாக அசைத்து வெளியே கொண்டு வந்தேன். சுமார் 15-20 நிமிட போராட்டத்தின் பின்பு கறுப்பு -வெள்ளை ஆண் கன்று வெளியே வந்தது. கன்றின் பின்னங்கால்களைப் பிடித்துச் சுற்றியபடியே, பொன்னி போன்ற சிறிய பசுவுக்கு ஏன் கசநளாயைn இனப் பெரிய காளையைச் சினைப்படுத்தப் பாவித்தீர்கள்? எனக் கேட்டேன். தோட்டத்துரை கந்தசாமி என் முகத்தை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, இந்த ராமுவும், பாலுவும்தான் இதற்குக் காரணம். கலப்பு இனவிருத்தி செய்வதாக சொல்லிப் பக்கத்துத் தோட்டத்திலிருந்த ஒரு காளை மாட்டை முன்பு பிடித்து வந்தார்கள். தமது தவறை ராமுவும் பாலுவும் ஒப்புக் கொண்டனர். பொன்னி எழுந்து நின்று சலம்விட்டு இளங்கொடியையும் போட்டது. இனி பிரச்சினை இல்லையென்று, சொல்லிவிட்டு, பங்களாவினுள் சென்று அந்த வெள்ளைத்தோல், ராமு, பாலுவின் கதையைச் சொல்லுமாறு கந்தசாமியிடம் கேட்டேன். முப்பது ஆண்டுகளின் முன்பு - Scotland ஐ சேர்ந்த ஒருவர் இந்தத் தோட்டத்துக்குச் சுப்பிரிண்டனாக வந்தபொழுது இங்கு கொழுந்து பறித்துக்கொண்டிருந்த மாரியம்மா என்ற பெண்ணுடன் உறவுவைத்து அவளை தமது சொந்த மனைவியாகப் பராமரித்தார். அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்களே இந்த இரட்டைப் பிள்ளைகள். இவர்களுக்கு நான்கு வயதிருக்கும்போது அந்த ஸ்கொட்லாண்ட் வாசி விடுமுறையில் இங்கிலாந்து சென்ற சமயம் அங்கு வாகன விபத்தில் இறந்துவிட்டார். மாரியம்மா இந்தத் தோட்டத்தில் தோட்டத்தின் கொழுந்து பறித்து இவர்களை வளர்த்து ஆளாக்கினா. கந்தசாமி கதையை சொல்லிமுடித்தார். கலப்பு இன விருத்தியில் பிறந்த ராமுவும், பாலுவும் பொன்னி மூலம் ஒரு கன்றை கலப்பு இனவிருத்தியில் பெற்றுக்கொள்ள முயன்றமை வியப்பல்ல. |
||
|
|
||
|
|