Vaalum Suvaduhal

என்னை விட்டு ஓடிப் போக முடியுமா?

என் வீட்டில் வளரும் நாயின் கதை சுவாரஸ்யமானது.

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நான் பணியாற்றிய மிருக மருத்துவமனையில் -பரபரப்பான பகல் பொழுது. Preston பகுதியிலிருந்த அம்புலன்ஸ் மூலமாக வந்து சேர்ந்தது அந்த நாய்.

பொன்நிறம், நாலுமாத வயது. Labrador இனம். எனது சோதனை மேசையில் ஏறி வாலை ஆட்டி என் முகத்தை நக்கித் தடவ முயன்றது. உடலில் எந்தவிதமான கோளாறும் இல்லை. என்னையும் அது கவர்ந்தது. இந்த அழகிய நாய்க்குட்டி எப்படி வீதிக்கு வந்தது? இதன் எஜமான் அல்லது எஜமானி யாராக இருக்கும். அநாதரவாக வீதியில் கண்டெடுக்கப்பட்டு வந்து சேர்ந்த அந்தக் குட்டியை, எவரும் உரிமைகோரி வந்து பெற்றுச் செல்லாவிட்டால், அதனை நானே எடுத்துக் கொள்வேன் - என்று கூறி மருத்துவமனையில் என் பெயரை பதிவு செய்துகொண்டேன்.

என்னைப்போன்றே இங்கு பணிபுரிந்த வேறு சிலரும் அதனை ''கவர்ந்து கொள்வதற்காக"" தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர் என்ற விபரம் பின்னர் அறிய முடிந்தது. ஐந்தாம் நாளன்று நாயைக் காணவில்லை. ஒரு பெண் வந்து அடையாளம் கூறி அது தனது நாய்தான் என்று உரிமை கொண்டாடி எடுத்துச் சென்றதாக கூறினார்கள்.

''சரி போகட்டும் - எனக்கு அவ்வளவுதான் அதிர்ஷ்டம்"" - என்று மனதிற்குள் என்னை நானே தேற்றிக்கொண்டேன். அத்துடன் அந்த நாயை மறந்தேவிட்டேன். ''கிட்டாதாயின் வெட்டென மற"" - என்று சொல்லுவார்களே!

நாட்கள் ஓடி மறைந்தன. மூன்று மாதங்களாகியிருக்கும். எனது பரிசோதனை அறையிலிருந்து கொண்டு - அடுத்த சோதனைக்காக - Mrs.Barns என்று பெயர் சொல்லி அழைத்தேன். ஒரு முப்பது வயதுப் பெண் தனது நாயுடன் உள்ளே வந்தாள். சற்று வளர்ந்த Labrador இனத்து நாய் கவனத்தை ஊன்றிப் பார்த்தபோது என் நினைவிலிருந்து மறைந்த அதே நாய்தான் என்பதை உணர அதிக நேரம் பிடிக்கவில்லை.

எனது பழைய அந்த எதிர்பார்ப்புக்களை புறம் ஒதுக்கிக்கொண்டு - ''நாய்க்கு என்ன?"" எனக் கேட்டேன்.

''இது எனது நாய். தற்போதைய சூழ்நிலையில் இதனை நான் பராமரிக்க முடியாதுள்ளது. எங்காவது ஒரு நல்ல குடும்பத்தில் இது வளரவேண்டும் அதற்கு உதவி செய்வீர்களா?"" - எனக் கேட்டாள்.

பெயரைக் கேட்டேன்.

''சண்டி"".

''ஏதாவது கூடாத பழக்கம் உண்டா?"". ''அப்படி ஒன்றும் இல்லை. கதவு திறந்திருந்தால் வெளியே ஓடிவிடும். பின்பு தேடிப் பிடிப்பது சற்றுச் சிரமம். மூன்றுமாதங்களுக்கு முன்பும் காணாமல் போனது. உங்கள் மருத்துவ மனையில்தான் பின்பு விசாரித்துக் கண்டெடுத்தேன்.""

இப்படி அவள் சொன்னதும் எனது 'உணர்வு" ஊர்ஜிதமானது.

''சரி...இவ்வளவு காலமும் உங்களிடம் வளர்ந்த நாயை இப்போது ஏன் எவருக்கேனும் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறீர்கள்?"" - எனக் கேட்டேன்.

''டொக்டர்... நானும் கணவனும் பத்துவருடகாலமாக ஒன்றாகத்தான் வாழ்ந்தோம். எமக்கு பிள்ளைகள் இல்லை. இதனால் 'சண்டியை' எடுத்து வளர்த்தோம். என்ன துன்பமோ - எங்கள் வாழ்வில் சோதனை வந்துவிட்டது. என் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு ஏற்பட்டுவிட்டது. இதனால் - இப்போது விவாகரத்துக்கு தயாராகிவிட்டோம். வீடும் விற்கும் நிலையில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நாயை வளர்ப்பது சிரமம்."" அவள் கண்கலங்கினாள்.

நாயைத் தாரை வார்த்துக் கொடுப்பதன் பின்னணியில் ஒரு சோகமான கதையே இருந்தது. அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் வார்த்தை கூறித் தேற்றினேன். அவளது கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டேன்.

''கவலைப்படாதீர்கள். உங்கள் நாய் நல்ல பராமரிப்புடன் வளரும் முடிந்தால் நானே எடுத்து வளர்ப்பேன்.""
''மிக்க நன்றி டொக்டர்"". - அவள் நா தழுதழுத்த நிலையில் விடைபெற்றாள்.

அவளுடைய 'சண்டி" - அதே பெயருடன் இப்போது எங்கள் வீட்டில்.


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.