Vaalum Suvaduhal

திரும்பிய காசோலை திடீர் மரணம்

புதிய 'துன்பக்கேணி'


மதிய நேரம். சிறிது நேரம் ஓய்வாக இருந்தபோது, முப்பது வயது மதிக்கத்தக்க மனிதன் எனது மிருக சிகிச்சை நிலையத்தினுள் பரபரப்பாக வந்து தனது நாயின் வாலில் கட்டி இருப்பதாக, அக்கட்டியைக் காட்டினான். வழமைபோல் அவனின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களைப் பதிவுசெய்துவிட்டு, அக்கட்டியைப் பரிசோதித்தேன்.

பின் அவனிடம் அக்கட்டி தௌ;ளுக்கடியினால் ஏற்பட்டதெனவும், அதற்கும் புற்றுநோய்க்கும் ஒருவித தொடர்புமில்லை என விளங்கப்படுத்தினேன். எதற்கும் புதிதாக பாவனைக்கு வந்துள்ள தௌ;ளுக்கடி மருந்தை ஒரு மாதம் உபயோகித்தால் அக் கட்டி குணமாகிவிடும் எனக் கூறினேன்.

அப்போது அவன், நாய்க்கு மூட்டு வாதம் (Arthritis) இருப்பதாகவும், காலையில் நடப்பதற்கு சிரமப்படுவதாகவும் கூறினான். இடுப்பு மூட்டுக்களை சோதனை செய்துவிட்டு, X-Ray எடுக்காமல் என்னால் உறுதியாக ஒன்றும் சொல்ல முடியாதெனவும் ஓ - சுயல எடுப்பதற்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டும் எனப் பதிலளித்தேன்.

அடுத்த கிழமை, ஒரு காலையில் உணவு கொடுக்காமல் எனது நிலையத்துக்கு நாயைக் கொண்டுவந்தால் X-Ray எடுத்து எதையும் உறுதியாகக் கூறமுடியும் என அவனுக்குக் கூறினேன்.

பின்னர் அவன் தனது வாழ்க்கைப் பிரச்சினையை எனக்குக் கூறினான். தான் மூன்று நாள்களாக நித்திரை கொள்ளவில்லை எனக் கூறினான். ஏன் என வினவியபோது, வேலையின் பின் வீட்டுக்கு வந்து தனது இரு குழந்தைகளைப் பராமரிப்பதில் தனது நேரம் போவதாகப் பதிலளித்தான். மூத்த பிள்ளையின் வயது ஒன்றரை வயது என்றும், இளம் பிள்ளையோ பிறந்து ஆறுமாதம் எனக் கூறினான். அப்பிள்ளைகளின் வயது காரணமாகத் தான் சிரமப்படுவதாக எனக்கு விளங்கப்படுத்தினான்.

அவனின் துன்ப வாழ்க்கை விபரங்களை மேலும் கேட்க விரும்பாமல் எனது தலையை மறுபக்கம் திருப்பினேன். நாய், ப?னைகளின் நோய்களைக் கேட்டறிவது மட்டுமல்லாமல், அவற்றின் சொந்தக்காரர்களின் துன்ப விபரங்களைக் கேட்டு சஞ்சலப்படுவதை நான் விரும்புவதில்லை. ஆனால் பல சந்தர்ப்பங்களில் அப்படியான விபரங்களைக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.

ஆனால் அவனோ விடுவதாக இல்லை. தன் இளம் மனiவி புற்றுநோயால் பீடிக்கப்பட்டு Monash வைத்தியசாலையில் இருப்பதாகக் கூறினான்.
'Sorry' எனக் கூறிவிட்டு இருவரும் பரிசோதனை அறையிலிருந்து வெளியே வந்தோம்.

பின் மருந்துக்கான பணத்தை காசோலை (Cheque) மூலம் செலுத்திவிட்டுச் சென்றான். இரு கிழமைகளின் பின், அக்காசோலை வங்கிக் கணக்கில் காசில்லை என்ற குறிப்புடன் திரும்பி வந்தது. இது தொடர்பாக, அவனிடம் தொலைபேசியில் விசாரிக்குமாறு எனது உதவியாளரிடம் கூறிவிட்டு மதிய உணவுக்குச் சென்றேன்.

பின்பு எனது Clinic க்கு வந்தபோது எனது உதவியாளர் கொடுத்த செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது. அதாவது அம்மனிதனின் மனைவி, தன் கணவன் மாரடைப்பால் சில நாட்களின் முன் இறந்ததாகக் கூறினார். அவன் இறந்தபடியால் சட்டத்தின் பிரகாரம் அவன் வங்கிக் கணக்கு மூடப்பட்டது. அதன் காரணமாக அவன் எனக்குக் கொடுத்த காசோலை எனக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. எனது உதவியாளரும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை அவனின் மனைவிக்குக் கூறிவிட்டு தொலைபேசியை வைத்துள்ளார்.

இக்கதையைக் கேட்டபோது, எழுத்தாளர் செக்கோவின் சிறுகதை ஒன்று எனது ஞாபகத்துக்கு வந்தது. அதில் வரும் கதாநாயகன் ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல துன்பங்களை சந்திக்கின்றான். ஆயினும் அக்கதையை முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இம் மனிதனின் கதையும் செக்கோவின் கதையைப் போன்றது.

ஓர்; இறந்த மனிதரிடமிருந்து கடன் வசூலிக்க வேண்டிய சந்தர்ப்பம் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென நினைத்தேன்.


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.