Vaalum Suvaduhal

கண்ணீர் அஞ்சலி கதை சொல்லும்

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மார்கோஸ் பிரபலமானவர். அவர் மட்டுமல்ல அவரது ப?தவுடலான சடலமும் பிரபலமானதுதான்.

காரணம் - அவர் ஹவாயில் இறந்தார். ஆனால் அவரது நடவடிக்கைகளினால் அதிருப்தியுற்ற பிலிப்பைன்ஸ் மக்கள் அச்சடலத்தை வரவேற்கத் தயாராகவிருக்கவில்லை. பல சிரமங்களுக்கு மத்தியில் பிலிப்பைன்ஸிற்குள் பிரவேசித்த மார்கோஸின் சடலம் ஊர் - கிராமம், நகரம் என்று சுற்றி வந்து சில வருடங்களின் பின்பே இறுதிக்கிரியைகளுக்கு முகம் கொடுத்தது.

இங்கு கூறப்போகும் கதையின் நாயகன் கில்பேட் என்ற அவுஸ்திரேலிய Terrior இனத்தைச் சேர்ந்த நாயின் சடலத்திற்கும் - மாகோஸின் சடலத்திற்கு நேர்ந்த கதி நேராது போனாலும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பலதடவை வெளியே எடுத்துக் காண்பிக்க வேண்டிய கதிக்காளாகியது.

இந்த ஏழுவயது நாய்க்கு Paul என்ற எஜமான். Paul காலையில் ஐந்துமணிக்கு வேலைக்குச் சென்று மாலை நாலு மணிக்குத் திரும்புவார்.

காலையில் அவர் புறப்படு முன்னரே எழுந்து அவரைத் துயில் எழுப்பி அனுப்பும் கில்பேட் - மாலையில் அவரது வரவுக்காக வாசலிலே காத்திருக்கும் விசுவாசம் மிக்க நாய்.

ஆனால் அதே வீட்டில் Paul மனைவியும், மகனும் வளர்க்கும் ஏனைய இரண்டு நாய்களும் கில்பேட் போன்று சுறுசுறுப்பானவை அல்ல.

இது இப்படி இருக்க - ஒருநாள் எனது கிளினிக் அருகில் வாகனம் ஒன்றால் மோதுண்டு குற்றுயிராகக் கிடந்த கில்பேட்டை ஒரு மனிதாபிமானம் அல்ல, மிருகாபிமானம் உள்ள பெண் எடுத்துவந்து காப்பாற்றுமாறு கேட்டாள்.

நான், நாயைப் பார்க்கும் போது அதன் உயிர் அதனைவிட்டுப் பிரிந்திருந்தது.

நாயை - உரியவர் வந்து கேட்கும் வரையில் அதனைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தேன். மறுநாள், கவுன்ஸிலுக்கு அறிவித்து அதன் 'இறுதிக் கிரியைக்கு" ஏற்பாடு செய்யவிருந்தேன்.

அன்றுமாலை ஆறு மணியளவில் Mr.Paul வந்து நாயை விசாரித்தார். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து காண்பித்தேன். சில நிமிடங்கள் கண்ணீர்விட்டு அழுதுவிட்டு - தாம் வேலையால் வரத்தாமதமாகியமையால் தன்னைத்தேடி Freeway க்கு ஓடியிருக்க வேண்டும.;

'யாரோ பாவி அடித்துவிட்டுப் போய்விட்டான். விசுவாசம் மிக்க நாய்" - எனச் சொல்லி சில சம்பவங்களை நினைவுபடுத்திக் கூறிவிட்டுச் சென்றார்.

அதன்பின்பு - Paul இன் மனைவி நாயைப்பார்க்க வந்தாள். அவளுக்கும் அதனைக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்துக் காண்பிக்க நேர்ந்தது.

''நாயை தகனம் செய்து அதன் அஸ்தியை தரவேண்டும்'' - என்ற கோரிக்கையையும் விடுத்துச் சென்றாள் Paul இன் மனைவி.

பின்பு இரவு ஏழரை மணியளவில் Paul இன் மகன் வந்தான். அவனும் நாயைப் பார்க்க வேண்டும் என்றான். உயிரற்ற உடலுக்குத்தான் எத்தனை 'மவுசு'. அவனுக்கும் அதனைக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்துக் காண்பித்தேன்.

''இன்னும் யாரும் வர இருக்கிறார்களா?'' என்ற கேள்வியையும் கேட்டு வைத்தேன். அவன் சங்கடத்துடன் மன்னிப்புக் கேட்டான். நாய்க்காக கண்ணீர்விட்டான்.

எனக்கு ஒரு உண்மை புரிந்தது. ஒரே வீட்டில் தாய் - தகப்பன் - மகன் வாழந்தாலும் அவர்களுக்குள் சுமுகமான உறவு இல்லை. அதனால் தனித்தனியாக வந்து தமது வீட்டு நாய்க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மார்க்கோஸின் கதை மட்டுமல்ல - விக்கிரமாதித்தன் கதையும் எனக்கு ஞாபகம் வந்தது. சலிப்புடன் அந்த நாயை மீண்டும் குளிர் சாதனப்பெட்டியில் வைத்தேன்.


Copyright 2006 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.