|
||
|
கமால் - குதிரை - இளம்கொடி அவுஸ்திரேலியாவில், மிருக வைத்திய தொழிலை ஆரம்பித்த காலத்தில் நிரந்தரமான தொழில் கிடைக்காத காரணத்தினால் சிறிது காலம் Locum ஆக வேலை செய்தேன். மற்றத் துறைகளில் Casual Labour எனக் கூறுவார்கள். மருத்துவ, மிருக வைத்திய துறைகளில் நாகரீகமாக டழஉரஅ எனக் கூறப்படும். இந்தக் காலகட்டத்தில் பல இடங்களில் Locum ஆக வேலை செய்ய சந்தர்ப்பதம் கிடைத்தது. சில சமயம் வேலைக்காக பல மணி நேரங்கள் பயணம் செய்யவும் வேண்டியிருந்தது. 1990 ஆம் ஆண்டில் Border Town என்ற இடத்துக்கு வேலை செய்ய அழைக்கப்பட்டேன். விக்ரோறிய - தென் அவுஸ்திரேலிய மாநிலங்களின் எல்லையை அண்டிய ஒரு சிறு நகரம் Border Town ஆகும். முன்பு தெரியாத இடமாக இருந்ததால், முதல் நாளே வேலை நிலையத்துக்குச் சென்று விட்டேன். வைத்திய சாலையின் பின் பகுதி எனது தங்குமிடமாகத் தரப்பட்டது. கட்டில் எனக்குத் தரப்பட்டிருந்தாலும், பகலில் அக் கட்டிலை வீட்டுச் சொந்தக்காரியின் ப?னை ஆக்கிரமிக்கத் தவறுவதில்லை. முதல் நாள் அவ்வளவு வேலை இருக்கவில்லை. இரண்டாம் நாள், பல நாய்களும் ப?னைகளும் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்டன. அத்துடன் Cockatoo என்ற பறவையும் கொண்டுவரப்பட்டது. அப் பறவை பல கெட்ட வார்த்தைகளைக் கூறியது. அதன் சிறகுகளையும், அலகுகளையும், மிகவும் சந்தோஷமாகக் கத்தரித்தேன். இரவு வந்ததும், அருகிலுள்ள Pub க்குச் சென்று, உணவை அருந்திவிட்டு, எனது அறைக்கு வந்து அங்கு படுத்திருந்த ப?னையைத் துரத்திவிட்டு, கட்டிலில் ஓர் புத்தகத்துடன் சாய்ந்தேன். சுமார் பத்து மணியளவில் தொலைபேசியின் கிரீங் கிரீங் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். இந்த அகால நேரத்தில் எனக்கு யார் தொலைபேசியில் அழைப்புத் தரப்போகிறார்கள் என யோசித்தேன். தொலைபேசியை எடுத்தபோது ஓர் நடுத்தர வயது பெண்ணின் குரல் கேட்டது. வழமைபோல் எனது மிருகவைத்திய நிலையத்தின் பெயரைக் கூறி, What can I do for you? எனக் கேட்டேன். மிருக வைத்தியருடன் அவசரமாகக் கதைக்க வேண்டும் என அப் பெண் கூறினார். மிருக வைத்தியர் விடுமுறையில் சென்று விட்டார். நான் அவருக்காக டழஉரஅ கடமை புரிகிறேன் என ஆங்கிலத்தில் பதில் கொடுத்தேன். "எனது குதிரை குட்டி போட்டு சில மணிநேரம் சென்றுவிட்டது. தாயும், குட்டியும் சுகமாக உள்ளன. ஆயினும் இளம் கொடி வரவில்லை. உடனே எனது பண்ணைக்கு வரமுடியுமா?" என வினவினார். விலாசத்தை ஓரு Notebook ல் எழுதிவிட்டு, வரைபடத்தைப் பார்த்தேன். மெல்பேர்ண், சிட்னி நகரங்களையும் அதன் சுற்றுப்புறத்து இடங்களின் வரைபடங்களைப் போலல்லாது, Border Town வரைபடத்தில் ஒவ்வொரு பண்ணையும் இலக்கங்களால் குறிக்கப்பட்டிருந்தன. முக்கிய திருப்பங்களை Notebook ல் குறித்து, காரில் ஒரு மணித்தியால ஓட்டத்தின் பின் அப்பண்ணையைச் சென்றடைந்தேன். கதவைத் தட்டியபோது ஆன் (Ann) என்று தன்னை ஓர் பெண் அறிமுகம் செய்து என்னை வரவேற்றார். இடத்தைக் கண்டு பிடிப்பதற்காக நேரம் எடுத்ததா எனக் குசலம் விசாரித்தார். புது இடமாக இருந்தபடியால், மெதுவாகக் காரை ஓட்டி வந்தேன் எனக் கூறினேன். குதிரை இருக்கும் லாயத்துக்குச் சென்றோம். ஐந்தரை அடி உயரமுள்ள சிவப்பு நிறக் குதிரை. சகல லட்சணமும் கொண்டு கம்பீரமாக நின்றது. குட்டி பிறந்து நாலு மணிநேரம் கூடச் செல்லவில்லை. துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. குதிரையின் சனனவாயிலிருந்து இளம்கொடி தூங்கிக் கொண்டிருந்தது. குதிரையின் முன்காலைத் தூக்கும்படி ஆனிடம் கூறினேன். முன் காலைத் தூக்கி வைத்திருந்தால், பின் கால்களால் எனக்கு உதைக்க முடியாது. முன்னம் காலைத் தூக்குவது, மன்னாரில் முத்துக் குளிப்பவர்கள், மண்டைக் கயிறை மச்சானிடம் கொடுப்பது போன்ற செயலைப் போன்றதாகும். ஆன், குதிரையின் முன் காலை நிலத்தில் இருக்கவிட்டால், எனது உடலின் சில பகுதிகளை நிலத்திலிருந்து எடுக்க வேண்டிய சந்தாப்பம் ஏற்படலாம். கை உறையைப் போட்டு, இளம் கொடியை எடுக்க முயற்சி செய்தேன்.. முடியவில்லை. ஊசி மருந்தைச் செலுத்திவிட்டு, பதினைந்து நிமிடத்தின் பின் இளம் கொடி தானாகவே விழும் என ஆனிடம் கூறினேன். வீட்டுக்கு என்னை அழைத்து, குவளையில் வைன் (Wine) தந்தார். எந்த நாட்டைச் சேர்ந்தவன் என வினவினார். இலங்கை எனக் கூறினேன். உங்கள் கமால் எனது பெரும் அபிமானத்துக்குரியவர் எனக் கூறினார். நடிகர் கமலஹாசனின் புகழ் அவுஸ்திரேலிய நாட்டின் ஓர் சிறு நகரத்துக்கும் பரந்துவிட்டதா என யோசித்தேன். அப்பெண், கமாலின் பாட்டுக் கசெட்டுகளை மேசையில் வைத்துவிட்டு ஒன்றைத் தனது Cassett Player ல் போட்டு, Player ஐ இயக்கிவிட்டார். அப்போதுதான் எனக்கு, ஆன் கூறியது நடிகர் கமலஹாசன் அல்ல, பாடகர் கந்தையா கமலேஸ்வரனாகும் எனப் புரிந்தது. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டு, பின் மலேசியாவில் வளாந்து, தற்போது அவுஸ்திரேலியாவை வசிக்கும் நாடாக்கியுள்ள பிரபல பாடகராகிய கமால், ஆனின் அபிமான பாடகராகும் என உணர்ந்தேன். எனக்கும் ஆங்கிலப் பாடல்களுக்கும் அதிக தூரம் இருந்தாலும், கமாலின் பாடல்களை ரசிக்கும் ஆன் என்ற ரசிகையின் ரசனையை ரசித்தேன். நான் கூறியதுபோல் பதினைந்து நிமிடத்தின் பின் இளம்கொடி விழுந்துவிட்டது. எங்கள் ஊர் என்றால் ஆல மரத்தைத் தேடுவார்கள். இங்கோ அச் சிரமங்கள் இல்லை என யோசித்தபடி காரில் ஏறி எனது இருப்பிடத்துக்கு வந்தேன். |
||
|
|
||
|
|