Vannathikkulam

டாக்டர் என்.நடேசனின் 'வண்ணாத்திக்குளம்' மித்ரா பதிப்பகத்தினரால் அழகாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. . நாவலில் அங்காங்கே வண்ணத்திக்குளம் என்றே விபரிக்கப்படுகிறது. அதுவே நல்ல பெயராகவுமிருக்கிறது. இந்நிலையில் எதற்காக வண்ணாத்திக்குளம் என்று நூலின் பெயரை வைக்க வேண்டுமென்பதன் காரணம்தான் புரியவில்லை. சுவையான நடையில் நகரும் நாவலின் களம் புதிது. வெகு சில படைப்பாளிகளே கைவைத்த கரு. இலங்கை சுந்திரம் பெற்ற காலத்திலிருந்து நாட்டை ஆண்டு வரும் சிங்கள, பௌத்த அரசுகளால் திட்டமிட்ட முறையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு தன் தனித்துவத்தை இழந்த பிரதேசம்தான் வண்ணத்திக்குளமென்று ஒருபோதில் அழைக்கப்பட்ட பதவியாப் பிரதேசம். அத்தகையதொரு பகுதியில் வாழுமொரு சிங்களப் பெண்ணான சித்ராவுடன் நாயகன் சூரியனுக்குக் காதல் அரும்புகிறது. நாவலொரு காதல் கதையாகவிருந்தாலும், மிகவும் நிதானமாக நகர்கிறது. அரசியல் பின்னணியில் நாவல் கூறப்பட்டிருக்கிறது. கதை சொல்லியின் பார்வையில், மற்றவர் பார்வையிலெனப் பல்வேறு பார்வைகள். நாவல் நடைபெறும் காலத்தில் நடைபெறும் இயக்கமொன்றின் மூன்று தாக்குதல்கள் விபரிக்கப்பட்டுள்ளன. அதனத்தொடர்ந்து இடம்பெற்ற ஜூலை 1983 இனக்கலவவரம். இருவேறு இனங்களைச் சேர்ந்த காதல் ஜோடி நாட்டில் வாழ முடியாத நிலையில், அழகான தீவை விட்டே அந்நியதேசத்துக்குப் புறப்படுவதுடன் கதை முடிவுறுகிறது.

இந்நாவலை ஒரு காதல் கதையென்று கூறலாமா? அல்லது அரசியல் நாவலென்று கூறலாமா? அல்லது அரசியல் கலந்த காதல் கதையென்று கூறலாமா?

ஒவ்வொருவர் பார்வையும், முடிவுகளும் வேறு வேறானவையாகவிருந்த போதிலும், இந்நாவல் இலங்கைத் தீவின் அரசியல் சூழல் பற்றி, அச்சூழல் அத்தீவின் மக்களைப் பாதிப்பது பற்றி விபரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தின் அரசியல் நிகழ்வுகளை ஓரளவு ஆவணப்படுத்துகிறது.

கதை சொல்லியான சூரியன் ஒரு மிருக வைத்தியர். அவரது பார்வையில் ஆங்காங்கே தீவின் அரசியல் அலசப்படுகிறது. விரிவாகவல்லஇ சுருக்கமாக. அதே சமயம் கதை சொல்லி மிருக வைத்தியராகவிருப்பதால் சில சம்பவங்கள் வாசகர்களுக்குப் புதுமையாகவும், சுவையாகவுமிருக்கின்றன. குறிப்பாக யானையொன்றுக்கு மரணபரிசோதனை செய்த அனுபவம். இதனை அவர் ஏற்கனவே சிரியர் தனது 'வாழும் சுவடுகள்' நூலிலும் வணப்படுத்தியுள்ளதாக ஞாபகம். அதிலிருந்து நாவல் சிரியரின் சொந்த அனுபவங்களையே சிறிது கற்பனை கலந்து விபரிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆசிரியரின் நடை சரளமானது. சில சம்பவங்கள் நெஞ்சை அள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பின்வரும் சம்பவம். வவுனியாவில் விமானப்படையினர் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து படைவீரர்கள் தமிழர்களைத் தாக்கத் தொடங்கி விடுகின்றார்கள். அச்சமயம் அந்தக் கலவரச் சூழலில் தமிழனான கதைசொல்லியும், சிங்களப் பெண்ணான அவனது காதலி சித்ராவும் அகப்பட்டு விடுகின்றார்கள். அப்பொழுது நிகழ்ந்த உரையாடலினை ஆசிரியர் பின்வருமாறு விபரிக்கின்றார்: 'மற்றைய படைவீரர் எங்களை நோக்கி வந்தபடி "எங்கே போகிறாய்?" "யாழ்ப்பாணம்" "தெமிலயோ" என்றபடி நெஞ்சில் சப்மெஷின் துப்பாக்கி அழுத்தப்பட்டது. அப்போது நான் எதிர்பார்க்காமல் சப்மெஷின் துப்பாக்கியை கையால் பிடித்தபடி "மகே சுவாமி புருஷய" என கூறினாள் சித்ரா....' மேற்படி உரையாலில் வரும் 'மகே சுவாமி புருஷய' என்னும் தலைப்பில், அக்கூற்றினை முடிவாக அவைத்து அருமையான சிறுகதையொன்றினைப் படைத்திருக்க முடியும். அந்த அளவுக்கு நெஞ்சைத் தொடும் வகையில் அந்தச் சொற்பதம் அமைந்துள்ளது. அந்தப் பெண்ணின் இனம், மதம் கடந்த காதலை அந்த வார்த்தைகள் அப்படியே உணர்த்திவிடுகின்றன. நடை ஆசிரியரின் பலங்களிலொன்று. மேற்படி நடையில் அதிகமான விபரித்தலுடன், சிந்தனையோட்டத்துடன் கதை நகர்ந்திருக்குமாயின் அது நாவலின் கனத்தினைச் செறிவினை அதிகரித்திருக்கும்.

இந்நாவல் தீவின் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி ஆங்காங்கே விபரிக்கிறது. ஜே.வி.பியின் நடவடிக்கைகளை ஓரளவு விமரிசனம் செய்கிறது. கதை சொல்லியின் காதலியின் சகோதரன் ஒரு ஜே.வி.பி உறுப்பினன். இலங்கை அரசின் அடக்குமுறைக்குள் ஜே.வி.பியினரும் ஆட்படுவது நாவலில் கோடிட்டுக் காட்டப்படுகிறது. ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு வாதம், மலையகத் தமிழர்கள் மீதான நிலைப்பாடுகள், தோட்டத் தொழிலாளர்களின் மீதான வடகிழக்குத் தமிழர்களின் நிலைப்பாடு என்பவை கதை சொல்லியினால் விமரிசனத்துள்ளாக்கப்படுகின்றன. "உங்கள் அடிப்படை கொள்கையில் மாற்றம் வேண்டும். அந்த தொழிலாளர்களுக்கு பிரசாஉரிமை வேண்டும் என்றபோது எவரும் வாய் திறக்கவில்லை. எல்லோருமாக சேர்ந்து இந்தியாவுக்கு அனுப்பப் பார்த்தார்கள். சிங்கள இடது சாரிகள் மட்டுமல்ல, இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களும் ஈடுபட்டார்கள். இதன் மூலம் இலங்கையின் சிங்களத் தொழிலாளர்கள் தங்களது சகோதர தொழிலாளர்களின் பலத்தை இழந்தார்கள். வட, கிழக்கு தமிழர்கள் தமிழ் பேசும் சகோதரகளை இழந்தார்கள்." (கதை சொல்லி; பக்கம் 85)

கதைசொல்லி ஜே.வி.பியின் தலைவர் ரோகண விஜேவீராவைச் சந்திக்கும் சந்தர்ப்பமொன்று நாவலில் வருகிறது. அதில் அவர் ஜே.வி.பியின் இந்திய எதிர்ப்பு வாதம், இனவாத நிலைப்பாடு ஆகியவற்றை விமரிசனத்துக்குள்ளாக்குவார். டொன் நந்தசிறி விஜயவீர என்னும் தனது இயற்பெயரை ரோகண விஜயவீர என மாற்றியதனைக் கதைசொல்லி ' மார்க்சீச கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இயக்கத்தை வழி நடத்தும் விஜயவீர அந்தக்கால சிங்கள மன்னர்களின் கீர்த்தனைகளை உயர்த்தி பேசியது அவரது அரசியல் தன்மையை காட்டியது' என விபரிப்பார். அன்று இந்திய எதிர்ப்பு வாதம் போதித்த ஜே.வி.பி இன்று இந்தியாவின் செல்லப்பிள்ளையாகவும், இனவாதம் அதிகம் மிகுந்ததொரு கட்சியாகவும் மாறியிருக்கிறது காலத்தின் கோலங்களிலொன்று.

நாவலில் தமிழீழ விடுதலை அமைப்பொன்றின் மூன்று தாக்குதல்கள் விபரிக்கப்பட்டுள்ளன. வவுனியா விமானப்படை வீரர்கள் மீதான தாக்குதல், யாழ் நாச்சிமார் கோயிலடியில் தேர்தல் கூட்டமொன்றில் நிகழ்ந்த தாக்குதல் மற்றும் னைக்கோட்டைப் பொலிஸ் நிலயம் மீதான தாக்குதல் ஆகியவற்றைக் கூறும் நாவல் அவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட படையினரின் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களையும் கூறும். வரலாற்றில் பதிந்து விட்ட யாழ்நூலக எரிப்பு பற்றியும், அதற்குக் காரணமாக அன்றைய ஐக்கியதேசியக் கட்சியின் அமைச்சர்களான காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ போன்றவர்கள் அச்சமயம் யாழ்நகரில் இருந்ததையும் நாவல் பதிவு செய்யும்.

தனிநாடு கோரிக்கை பற்றிக் கதை சொல்லி 'தமிழ் அரசியல்வாதிகள் அவசரப்பட்டு விட்டார்கள்' என்கின்றார் (பக்கம் 128). யாழ்நகரில் 1983இல் பல தமிழர்கள் துரோகிகளாகக் கொல்லப்பட்டதையும் குறிப்பிடுகிறார். (பக்கம் 129). மிகவும் பெரிதான, சர்ச்சைக்குரிய விடயங்களை ஓரிரு வரிகளில் கூறிவிட்டுக் கதை சொல்லி நகர்ந்து விடுகின்றார். தனிநாட்டுக் கோரிக்கை விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் அவசரப்பட்டு விட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், சிங்களப் பெரும்பான்மை அரசுகளுக்கும் இடையில் நிகழ்ந்த தோல்வியுற்ற பேச்சு வார்த்தைகளும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும், தரபப்டுத்தல் போன்ற பாரபட்சமான கொள்கைகளும்.. இவ்விதமாகப் பல காரணங்களும், நீண்டதொரு வரலாறுமிருக்கையில் தமிழ் அரசியல்வாதிகள் அவசரப்பட்டு விட்டார்களென்று, தன் பக்க நியாயத்தினை மிகவும் தர்க்கபூர்வமாக நிறுவாமல் முடிவாகக் கூறுவது, மற்றும் இது போன்ற கூற்றுக்கள் இந்நாவலையொரு தீவிரமான அரசியல் நாவலென்ற பிரிவுக்குள் அடக்குவதைத் தவிர்த்து விடுகின்றன. ஒரு தீவிரமான அரசியல் நாவலொன்றில் இது போன்ற பிரச்சினைகள் அதிக அளவில் ஆழமாக விபரிக்கப்படவேண்டும் அல்லது பாத்திரங்களின் அன்றாட வாழ்க்கையினூடு புலப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் துரோகிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதைக் குறிப்பிடும் கதைசொல்லி சிங்களப் படையினர் தமிழ்ப்பகுதிகளில் நடாத்திய படுகொலைகளை, நிலவிய அரசியல் சூழலை, அதன் தீவிரத்தினை விபரிக்கத் தவறிவிட்டார். மேலும் துரோகிகளெனப் பொதுவாகக் கூறுவதன் மூலம் சிரியர் துரோகிகள் பற்றிய விரிவான விளக்கத்தைப் பதிவு செய்யும் சந்தர்ப்பத்தினை இழந்து விட்டார். பலர் அரசியல் ரீதியில் படுகொலை செய்யப்பட்டாலும், சாதாரண களவு போன்ற சமூகவிரோதச் செயல்களை, ஏற்றத்தாழ்வுமிக்க சமுதாய அமைப்பு காரணமாகப் புரிந்த பலர், துரோகிகளாகக் கொல்லப்பட்டதை விரிவாக விபரிக்கும் சந்தர்ப்பத்தினை இதன் மூலம் ஆசிரியர் இழந்து விடுகின்றார்.

ஆனாலும் நாவல் நடையில், கதைக்களனில் , குறிப்பிட்டகாலச் சம்பங்களை ஆவணப்படுத்தலில் குறிப்பிட்டு விளங்குகின்றது. தீவின் முரண்பட்டு நிற்கும் இரு இனங்களைச் சேர்ந்த காதலர்கள், சொந்த மண்ணில் வாழமுடியாத நிலையில் அந்நிய மண்ணை நாடிப் பறப்பதுடன் கதை முடிகிறது. வண்ணத்திக்குளத்தின் உறவுகள் இலங்கை முழுவதும் விரியுமானால்.. எனக் கதை சொல்லி ஏங்குகிறார். தீவின் முக்கியமான பிரச்சினைகளிலொன்று திட்டமிட்ட குடியேற்றங்கள். அக்குடியேற்றங்களிலொன்றான பதவியாவைக் களமாகக் கொண்டு விரியும் நாவலில் வரும் பல்வேறு இன மாந்தர்கள அனைவரும் பரஸ்பரம் அன்பு கொண்டவர்களாகவும், தீவிரமான பிரச்சினைகளை இனங்கண்டு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அங்கு வாழும் சிங்கள மக்களுக்கே தாங்கள் அத்து மீறிக் குடியேற்றப்பட்டிருந்த விடயம் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. ஒரு காலத்தில் அப்பகுதிக்கு வண்ணத்திக்குளம் என்றொரு பெயர் நிலவியதை அறிந்து வைத்திருக்கின்றார்கள். யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைக் கேட்டு அங்குள்ள சிங்கள மக்கள் கவலைப்படுகின்றார்கள். இத்தகைய வண்ணத்திக்குளத்தில் வாழும் இரு வேறு சமூகங்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வும், நம்பிக்கையும், அன்பும் 'இலங்கை முழுவதும் விரியுமானல்...' என்று ஏங்கிக்கொண்டே கதை சொல்லி தன் துணையுடன் நாட்டை விட்டே பறக்கின்றார். ஆனால் அவரது ஏக்கம் நிறைவேறுவது அவ்வளவு சுலபமல்ல என்பதைத்தான் 1983இலிருந்து இன்றுவரையிலான காலகட்டம் புலப்படுத்தி நிற்கிறது.


Copyright 2001-2008 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.